ஆட்டோ ஃபோகஸ்!
 ##~##

ண்பர்களே... 'போட்டோ எடுங்கள். ஆனால், கையில் கேமரா இல்லாமல்’ என கடந்த இதழில் சொல்லி இருந்தேன். உங்கள் கண்களால் வெவ்வேறு லைட்டிங்கில் படம் எடுத்து இருப்பீர்கள். இப்போது எந்த வகை கேமராவில், எந்த லென்ஸில் படம் எடுக்கலாம் என்று பார்ப்பதற்கு முன்பு, போட்டோகிராஃபியின் அடிப்படை விஷயமான லைட்டிங் பற்றிப் பேசலாம். 

ஆட்டோமொபைல் போட்டோகிராஃபியைப் பொறுத்தவரை, லைட்டிங்தான் ஹீரோ. லைட்டிங்தான் வில்லன். நான் முன்பு சொன்னது போல, கார் நான்கு பக்கமும் கண்ணாடி மற்றும் மெட்டல் பாகங்களால் ஆனது என்பதால், ஒளி பிரதிபலிக்கும். ஒரு வாகனத்தை எந்தக் கோணத்தில், எந்த நேரத்தில், எந்த லைட்டிங்கில், எப்படி எடுத்தால் படம் சிறப்பாக இருக்கும் என்று கண்டுபிடிப்பது... அவ்வளவு சுலபமான காரியம் அல்ல! லைட்டிங், கொஞ்சம் தவறாக அமைந்தாலும் லம்போகினியாகவே இருந்தாலும், உங்கள் படம் அம்போவாகிவிடும்.

ஆட்டோ ஃபோகஸ்!

அழகான புகைப்படம் எடுக்கத் தேவை ஹை-ஃபை கேமராவோ, மெகா சைஸ் லைட்டுகளோ, செம ஸ்டைல் ஸ்டுடியோவோ அல்ல; இயற்கையான ஒளியில் அதாவது, அதிகாலை மற்றும் மாலை நேர சூரிய வெளிச்சமே சூப்பர் படங்கள் எடுக்கப் போதுமானவை. சூரிய வெளிச்சம், காரை மிகவும் அழகாகக் காட்டும். காரின் சரியான நிறத்தையும் காட்டும். ஆனால், பளபளப்போ, கவர்ச்சியோ இருக்காது. கார் படங்கள் பளபளப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதே சமயம், காரின் உண்மையான நிறமும் தெரிய வேண்டும். மேலும் ஃப்ரெஷ் ஃபீலிங் அந்தப் படத்தில் இருக்க வேண்டும். அதற்கு, கேமராவின் கோணத்தை மற்றும் மாற்றினால் போதாது; காரின் கோணத்தையும் மாற்ற வேண்டும்.

ஆட்டோ ஃபோகஸ்!

லைட்டிங்கைப் பற்றிப் புரிந்துகொள்ள முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, காரையோ அல்லது பைக்கையோ கொண்டுபோய் வெட்ட வெளியில், சூரிய வெளிச்சத்தில் நிறுத்துங்கள். காலையில் இருந்து மாலை வரை ஒரே கோணத்தில் படம் எடுத்துக்கொண்டே இருங்கள். சூரிய வெளிச்சத்துக்கு ஏற்ப உங்கள் கேமராவில் பதிந்து இருக்கும் வாகனத்தின் படங்களின் தன்மை மாறிக்கொண்டே இருக்கும். அதாவது, வெளிச்சத்துக்கு ஏற்ப படங்களின் 'மூட்’ அல்லது 'ஃபீல்’ மாறிக்கொண்டே இருக்கும். படத்தைப் பார்க்கும்போது நீங்கள் எந்த 'ஃபீலை’ உருவாக்க விரும்புகிறீர்கள் என்பது, இந்தப் பயிற்சியில் தெரிந்துவிடும்.

ஆட்டோ ஃபோகஸ்!
ஆட்டோ ஃபோகஸ்!

சூரிய வெளிச்சத்தில் படம் எடுப்பதைப் பொறுத்தவரை, குறுக்கு வழியே கிடையாது. ரொம்பவும் பொறுமை தேவை. காலை மற்றும் மாலை நேரங்களில் அதாவது, சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் சமயங்களில், கேமராவின் கோணத்தை மாற்றாமல், காரை வெவ்வேறு திசைகளில் நிற்க வைத்துப் படம் எடுத்துப் பாருங்கள். எந்தத் திசையில் நிறுத்தும்போது சூரிய வெளிச்சமும், காரின் பளபளப்பும் ஒரு சேரக் கிடைக்கிறது என உங்களுக்குப் புலப்படும். காலை மற்றும் மாலை நேர சூரிய வெளிச்சம், காருக்குக் கலசம் போல இருந்து படங்களை அழகாக்கும். சூரிய ஒளியில் படம் எடுக்கும்போது, அருகில் மரங்கள், கட்டிடங்கள் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இவை வாகனத்தில் எதிரொளிக்கும்.

கறுப்பு மற்றும் அடர் வண்ண கார்களைப் படம் எடுப்பது பெரிய சவாலான காரியம். காரணம், இந்த நிற கார்கள் அதிகமாக வெளிச்சத்தை எதிரொலிக்கும். இதனால் லைட்டிங்கை ரொம்பவும் கவனமாக அமைக்க வேண்டும். அதற்கு, காரை எந்தக் கோணத்தில் நிறுத்தினால், 'ரிஃப்ளெக்ஷன்’ பாதிப்பு இல்லாமல் படம் அழகாக இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்.

அதற்கு காரை வெவ்வேறு கோணங்களில் நிறுத்திப் படம் எடுத்துப் பார்க்க வேண்டியது அவசியம். சிலர், லென்ஸுகளை நம்பி படம் எடுப்பார்கள். லென்ஸுகள் ஃபோகஸ் ஏரியாவை அதிகப்படுத்தும் அல்லது குறைக்குமே தவிர, படங்களை அழகாக ஆக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

(படம் பேசும்)