Published:Updated:

விபத்துகளிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி!

டிஃபென்ஸிவ் டிரைவிங்

 ##~##

டந்த 2011-ம் ஆண்டில் மட்டும் நடந்த 4,97,686 சாலை விபத்துகளில், 1,42,485 உயிர்கள் பலியாகி இருக்கின்றன. 5,11,394 பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். பெரும்பாலும் 15 முதல் 40 வயதுக்கு உட்பட்டோர்தான் இந்த விபத்துகளில் உயிரிழந்து இருக்கிறார்கள். தமிழகத்தை மட்டும் கணக்கில் எடுத்துப் பார்த்தால், 2011-ம் ஆண்டில் மட்டும் 65,873 விபத்துகள் நடந்துள்ளன. இது, 2010-ம் ஆண்டைவிட அதிகம். 

இந்த விபத்துகளுக்கு இரண்டு முக்கியமான காரணங்களைச் சொல்லலாம். முதலாவது மோசமான சாலைகள்; இரண்டாவது ஓட்டுனர்களின் அஜாக்கிரதை.

விபத்துகளிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி!
விபத்துகளிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி!

சாலை விதிகளின்படி நீங்கள் வாகனத்தை ஓட்டினாலும்கூட, நீங்கள் சற்றும் எதிர்பாராத வகையில் சாலையின் குறுக்கே ஒரு பெரிய பள்ளம் எதிர்ப்படக்கூடும். அல்லது  பைக்கோ, காரோ, ஒரு சைக்கிளோ  திடீரெனக் குறுக்கே வரக்கூடும். எனவே, பாதுகாப்பாக ஓட்டுவது உங்கள் கையில் மட்டுமே இருக்கிறது. இதற்கு உதவுவதுதான் டிஃபென்ஸிவ் டிரைவிங்.

ஏன் - டிஃபென்ஸிவ் டிரைவிங்?

டிஃபென்ஸிவ் டிரைவிங் என்பது சாலைக்கு ஏற்றவாறும், மற்றவர்கள் எப்படி மோசமாக ஓட்டி வந்தாலும், அதை உணர்ந்து உங்களையும் தற்காத்துக்கொண்டும், மற்றவர்களையும் பாதிக்காமல் ஓட்டுவது. இதுதான் உண்மையில் மிகச் சிறந்த டிரைவிங் திறன். இது, உங்களை மட்டுமல்ல, சாலையில் செல்லும் மற்றவர்களையும் காக்கும்.  

முன்னே செல்லும் வாகனத்தை மிக நெருக்கமாகப் பின்தொடர்வது; கவனக்குறைவாக ஓட்டுவது; சூழ்நிலைக்கேற்ப ஓட்டும் ஸ்டைலை மாற்றிக்கொள்ளாமல் இருப்பது; டிரைவிங்கில் போதுமான முன் அனுபவம் இல்லாதது; ஒழுங்கில்லாமல் ஓட்டுவது; வாகனத்தைச் சரியாகப் பராமரிக்காமல் இருப்பது என விபத்துகள் ஏற்படுவதற்கான நிறையக் காரணங்கள் உள்ளன.

விபத்தைத் தடுப்பது எப்படி?  

டிஃபென்ஸிவ் டிரைவிங்கில் மிக முக்கியமானது, திட்டமிடுதல். காரை எடுத்தோம், போக வேண்டிய இடத்துக்குப் போனோம் என்று இல்லாமல், காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பு எவ்வளவு தூரம் பயணிக்க இருக்கிறோம்; கார் நல்ல நிலைமையில் இருக்கிறதா என ஒரு சின்ன செக் லிஸ்ட்டை மனசுக்குள் பூர்த்தி செய்துகொள்வது அவசியம்.

அதிக வேகம் எப்போதும் வேண்டாமே!

செய்தித் தாள்களில் படித்திருப்பீர்கள். 'அதிக வேகத்தில் சென்ற கார், திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது!’ அதிக வேகத்தால்தான் 90 சதவிகித விபத்துகள் நடக்கின்றன. நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும்போது, ஓர் ஆடு குறுக்கே வந்தால்கூட தடுமாறிவிடுவோம். காரணம், வாகனத்தின் வேகம் கட்டுப்படுத்த முடியாதபடி அதிகமாக இருப்பதுதான்.

விழிப்பான நிலையில் இருங்கள்:

பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம், மோசமான சாலையோ அல்லது வாகனத்தின் தரமோ அல்ல; ஓட்டுபவரின் கவனக் குறைவே! விபத்து நடந்த பிறகு 'அந்த மினி வேன் எப்படிக் குறுக்க வந்ததுன்னே தெரியலை சார்!’ என்பது போன்ற அங்கலாய்ப்புகள் நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்வதுதான்.

விபத்துகளிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி!

பொதுவாக, இது போன்ற விபத்துகள் ஓட்டுபவர்களின் கவனக் குறைவால்தான் ஏற்படுகின்றன. எதையாவது மனதில் நினைத்துக்கொண்டே ஓட்டினால், கவனக் குறைவுதான் ஏற்படும். எனவே, களைப்பைப் போக்கிவிட்டு புத்துணர்வுடன் வாகனத்தை ஓட்ட வேண்டும்.

யாரையும் நம்பாதீர்கள்:

உங்களைத் தவிர, வேறு யாருக்குமே சாலை விதிகள் தெரியாது என நினைத்துக்கொள்ளுங்கள். எதிரே வரும் இன்னொரு வாகனத்தால் வரும் பிரச்னைகளை, முன்கூட்டியே யூகித்துத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், எதிரில் வரும் வாகனத்தின் ஓட்டுனர் என்ன மன நிலையில் இருப்பார் என்பது உங்களுக்குத் தெரியாது.

யார் கண்டது... அவர் குடி போதையில்கூட இருக்கலாம்; அரைத் தூக்கத்தில்கூட வாகனத்தை ஓட்டிக்கொண்டு வரலாம்; ஓட்டப் பழகிக்கொண்டு இருக்கும் ஒரு சிறுவனாகக்கூட இருக்கலாம். அவர்களை நம்பாமல், அவர்களால் எது வேண்டுமானாலும் நடக்கும் என நினைத்துக்கொண்டு எச்சரிக்கையுடன் ஓட்டுவது நம் அனைவருக்குமே நன்மை!

ர.ராஜா ராமமூர்த்தி

அடுத்த கட்டுரைக்கு