Published:Updated:

ரீடர்ஸ் ரிவியூ - ஹார்லி டேவிட்சன் - அயர்ன் 883

ரீடர்ஸ் ரிவியூ - ஹார்லி டேவிட்சன் - அயர்ன் 883

திருச்சிக்கு அந்தச் சத்தம் ரொம்பப் புதுசு. ஆம், திருச்சி நகர வீதிகளில் வித்தியாசமான ஒலியுடன் சீறும் அந்த பைக்கை எல்லோருமே வேடிக்கை பார்த்தனர். 'திருச்சியில் ஹார்லியா?’ என லேசான ஆச்சரியத்துடன் அந்த பைக் ஒலியைப் பின்தொடர்ந்தோம்.

துறையூரில் வசிக்கும் ரியல் எஸ்டேட் அதிபரான ஷங்கர்தான் ஹார்லியின் ஓனர் என்பதை அறிந்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை சந்தித்தோம். ''அதுக்குள்ள கண்டுபிடிச்சுட்டீங்களே! நானும் மோட்டார் விகடன் ரீடர்தான்'' என்று சிரித்தவர், தனது பைக் அனுபவத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

ரீடர்ஸ் ரிவியூ - ஹார்லி டேவிட்சன்  - அயர்ன் 883
ரீடர்ஸ் ரிவியூ - ஹார்லி டேவிட்சன்  - அயர்ன் 883

''சின்ன வயசுல இருந்தே பைக் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தக் கால ஹாலிவுட் படங்களைப் பார்க்கும்போது, இந்த பைக்கை எல்லாம் நாம எப்ப ஓட்டுவோம்னு மனசுக்குள்ள கேள்வி அலையடிக்கும். இப்போதான் அது சாத்தியம் ஆயிருக்கு. எனக்கு ஒரு பழக்கம்... எந்த பைக்கா இருந்தாலும், காரா இருந்தாலும் என்னைச் சுத்தி இருக்கிறவங்களுக்கு நான்தான் அறிமுகப்படுத்தணும். தியேட்டர்ல ஓடுறது நல்ல படமோ, மொக்கைப் படமோ... முதல்நாள் முதல் காட்சி பார்த்துட்டு விமர்சனம் எழுதுற மாதிரியான ஆள் நான். என்னைப் பொறுத்தவரை, ஒரு பொருள் தரமா இருந்தா, அதுக்கு எவ்வளவு வேணும்னாலும் காசு கொடுக்கலாம். 1990-களில் ஹோண்டா ஸ்லீக். பிறகு, ஹீரோ ஹோண்டா சிபிஸீ வெச்சுருந்தேன். என்னோட மூணாவது பைக் இந்த ஹார்லி டேவிட்சன். இந்த மூணு பைக்கையும் திருச்சியில வாங்கிய முதல் ஆள் நானாத்தான் இருப்பேன்னு நெனைக்கிறேன்.

ஷோ ரூம் அனுபவம்... எனக்கு ஹார்லியை அமெரிக்காவுல இருந்து இறக்குமதி செஞ்சு வாங்கணும்னு அவசியம் ஏற்படலை. ஆனா, இந்தியாவுக்கு எப்ப வரும்னு காத்துக்கிட்டு இருந்தேன். பைக் புக்கிங் ஆரம்பிச்ச உடனே, சென்னை ஹார்லி டேவிட்சன் ஷோ ரூம்ல புக் செய்தேன். சென்னையில ஹார்லியை புக் பண்ணுனதுல நான் ஏழாவது ஆள். அப்போ, என்னை மாதிரி ஹார்லியோட ரசிகர்கள் தமிழ்நாட்டுல நிறைய இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். புக் செய்த பிறகு மூணு மாசம் காத்திருக்கச் சொன்னாங்க. ஆனா, நாற்பது நாள்லயே டெலிவரி பண்ணிட்டாங்க. ஷோ ரூமைப் பொறுத்தவரை எல்லா விஷயத்திலுமே ரொம்ப பெர்ஃபெக்ட்! அதுவே அவங்க மேல இருந்த நம்பிக்கையைப் பல மடங்கு அதிகமாக்கி இருக்கு!

ரீடர்ஸ் ரிவியூ - ஹார்லி டேவிட்சன்  - அயர்ன் 883

பிடிச்ச விஷயம்... ரோட்டுல போறவங்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஸ்டைல், சிறுத்தை மாதிரியான வடிவத்துல இருக்குற இன்ஜின், உட்கார்ந்து ஓட்ட வசதியான சீட், இன்ஜினோட பீட் சவுண்ட், ரைடிங் ஸ்மூத்னெஸ், டூயல் சைலன்ஸர், இண்டிகேட்டர் - இது எல்லாமே ரொம்ப ரசிச்ச, பிடிச்ச விஷயங்கள்.

பிடிக்காத விஷயம்... ஹார்லி பைக்ஸ் காஸ்ட்லிதான். ஆனாலும், மற்ற நாடுகளைவிட இந்தியாவில் மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுதுன்னு நினைக்கிறேன். நான் ஹார்லியோட தீவிர ரசிகன். அதனால, விலை பற்றிக் கவலைப்படலை. ஆனா, இன்னும் கொஞ்சம் விலையைக் குறைச்சா நிறைய பேர் வாங்குவாங்கன்னு நினைக்கிறேன். பைக்கோட எடை 288 கிலோ. அதனால், பார்க்கிங் பண்றது கொஞ்சம்  சிரமமா இருக்கு!

ரீடர்ஸ் ரிவியூ - ஹார்லி டேவிட்சன்  - அயர்ன் 883

ஏன் 883 மாடல்? மற்ற ஹார்லி மாடல்களைவிட இதுதான் ஸ்டைலிஷ், செம அட்ராக்ட்டிவ்! அதான் இந்த மாடல் எடுக்க முதல் காரணம். இதோட உறுமல் சத்தமே இதுக்குப் போதும். ஹார்ன் தேவை இல்லை. இந்த பைக்குக்குக் கிட்டத்தட்ட 4.5 லட்சம் வரைக்கும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குக்காக செலவு பண்ணி இருக்கேன். மொத்தம் பைக்கோட விலை 11.5 லட்சம் ஆயிடுச்சு.

பெர்ஃபாமென்ஸ்... இந்த விஷயத்துல ஹார்லியைக் குறை சொல்லவே முடியாது. ஹைவேஸ்ல இந்த பைக்கை ஒரு தடவை ஓட்டிப் பார்த்துட்டா பிறகு வேற பைக்கை ஓட்டுறதுக்கு மனசு வராது. நான் கிட்டத்தட்ட எல்லா வகை பைக்குகளையும் ஓட்டிப் பார்த்துட்டேன். ஆனா, ஹார்லியை ஓட்டும்போது ஏற்படுற திருப்தி, வேற எந்த பைக்குலேயும் இல்லை. நான் ரொம்ப தூரம் இதுவரைக்கும் போனது இல்லை. திருச்சி - சென்னைதான் என்னோட அதிகபட்ச லாங் டிரைவ். மைலேஜைப் பொறுத்தவரைக்கும் எனக்கு லிட்டருக்கு 10 - 15 கிலோ மீட்டர் வரை கிடைக்குது.

நம்பர் ஃபேன்சியாக இருக்கிறதே...? நான் தனித்துவமாகத் தெரியணும்னு நெனைப்பேன். மொபைல் நம்பர் 99999ன்னு முடியும். என் பிஎம்டபிள்யூ எக்ஸ்-6 கார் நம்பர் 1000. ஹார்லியை மட்டும் விட்ருவேனா? இதுக்காகவே 40,000  ரூபாய் செலவு செஞ்சு இந்த 10 நம்பர் வாங்கினேன்.

சர்வீஸ் தரம் எப்படி... சர்வீஸ் தரத்தைப் பொறுத்த வரை நல்லாவே இருக்கு. இந்த பைக்ல ஏதாவது பிரச்னைன்னா சென்னைக்குத்தான் போகணும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, ஒரு போன் அல்லது இ-மெயில் அனுப்பினாலே, சர்வீஸ் செய்ய ஆள் வந்துடுறாங்க. ஒவ்வொரு 1,000 கிலோ மீட்டருக்குப்  பிறகும் அவங்களே வந்து ஒரு செக் பண்ணிடறாங்க. அதனால, இது வரைக்கும் எந்தப் பிரச்னையும் வரலை!

ரீடர்ஸ் ரிவியூ - ஹார்லி டேவிட்சன்  - அயர்ன் 883

பைக் காஸ்ட்லியாக வாங்க வேண்டும் என்று மட்டும் நினைக்காமல், முழுத் திருப்தி கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த பைக்கைத் தேர்வு செய்யலாம். முதலில், இந்த பைக்குக்கு நீங்கள் ரசிகராக இருந்தால் மட்டும் வாங்குங்கள். அப்போதுதான் இதன் அனுபவத்தை உணர முடியும். பைக் வாங்கும்போது, நீங்கள் நினைக்கும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளை அப்போதே சேர்த்து வாங்கிவிடுங்கள். அப்போதுதான் ஒரு முழுமை கிடைக்கும்!

ரீடர்ஸ் ரிவியூ - ஹார்லி டேவிட்சன்  - அயர்ன் 883
அடுத்த கட்டுரைக்கு