Published:Updated:

இங்கு பஞ்சர் போடப்படும்!

இங்கு பஞ்சர் போடப்படும்!

இங்கு பஞ்சர் போடப்படும்!
 ##~##

வாகனங்களின் மூலமாக வாழ்க்கையில் பல்வேறு விதமான காமெடிகளை நாம் சந்தித்து இருப்போம். அந்த நேரத்துக்கு அது நமக்குக் கடுமையான மன உளைச்சலைத் தந்திருந்தாலும், அந்தக் கதையை வேறு யாரிடமாவது சொன்னால், விழுந்து விழுந்து சிரிக்கக்கூடியதாக இருக்கும். அது, கவர்ந்திழுக்கும் விளம்பரங்கள் வாயிலாக நடந்திருக்கலாம்; வண்டியை சர்வீஸ் விடும்போது நேர்ந்திருக்கலாம்; வேறு யாருக்காவது லிஃப்ட் கொடுக்கையில் சந்தித்திருக்கலாம்; வாகனத்தை இரவல் கொடுக்கையில் அனுபவித்திருக்கலாம். இந்த ரியல் லைஃப் காமெடிகளைப் பகிர்ந்துகொள்வதே இந்த ஜெட் வேக கட்டுரைத் தொடரின் நோக்கம்.

 ன்றைய நடுத்தட்டு மற்றும் மேல்தட்டு இளைஞர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வாங்குவது எவ்வளவு கடினம்; பழங்குடியினர் என சாதிச் சான்றிதழ் வாங்குவது எத்தகைய சிரமங்கள் நிறைந்தது; இதற்கு எல்லாம் எத்தனை முறை அலைய வேண்டும்; எப்படி எல்லாம் அலைக்கழிப்பார்கள்; எவ்வளவு அலட்சியமாகப் பதில் சொல்வார்கள் என்றெல்லாம் தெரியாது அல்லவா? நாளைய இந்தியாவை ஆளும் இளைஞர்கள், இப்படி நம் நாட்டில் நடக்கும் கொடுமைகளைத் தெரிந்து கொள்ளாமல் வளரலாமா? வளரக் கூடாது. எனவே, இந்த அவலங்கள் அவர்களுக்கும் தெரிய வேண்டும் என்ற நல்ல எண்ணம் மற்றும் சமூகப் பொறுப்போடு செயல்பட்டு வரும் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம்தான் ராயல் என்ஃபீல்டு.

இங்கு பஞ்சர் போடப்படும்!

நிகழ்ந்த அக்டோபர் மாதம் 2011 வருடம், புத்தி சுவாதீன யோகம், சித்தம் கலங்கிய தினத்தில்... ராயல் என்ஃபீல்டு புல்லட் வாங்கலாம் என முடிவு எடுத்தேன். எனக்கே தெரியாமல் என் உள்மனம் வேலை செய்யும். ஏதாவது டார்ச்சரில் மாட்டப் போகிறேன் என்றால், தனியாகச் சிக்க மாட்டேன். இரண்டு பேரோடு சேர்ந்துதான் சிக்குவேன். இரு நண்பர்களிடம் போனில் பேசினேன். ''மூணு பேரும் சேர்ந்து ராயல் என்ஃபீல்டு பைக் புக் பண்றோம். எப்படியாவது பேசி டிசம்பர் 25-க்குள் டெலிவரி எடுக்குறோம். நியூ இயருக்கு பைக்லயே கோவா போறோம். ரஷ்யா பொண்ணுங்களோட டான்ஸ், டேட்டிங்னு பின்றோம்'' என என்ஃபீல்டுக்கு சம்பளம் இல்லா சேல்ஸ் பர்ஸன் போல மார்க்கெட்டிங் செய்தேன். 'ரஷ்யப் பொண்ணுங்க... டேட்டிங்’ என்றதும் இரண்டு விக்கெட்டுகள் உடனே காலி. அடுத்த அரை மணி நேரத்தில் இரு நண்பர்களும் என் அலுவலகத்துக்கே வந்துவிட்டனர்.

புக்கிங் செய்தால் உடனே கொடுக்க மாட்டார்கள் எனக் கேள்விப்பட்டு இருந்ததால், சென்னையில் உள்ள அனைத்து டீலர்களுக்கும் போன் அடித்தேன்.

''ஹலோ!''

''என்ஃபீல்டு பைக் வாங்கணுங்க.''

''ஓகே. ஷோ ரூம் வாங்க சார், உடனே புக் பண்ணிடலாம்.''

''வர்றேன். ரெடி கேஷ் இருக்கு, பைக் எப்ப கிடைக்கும்?''

''ஹி... ஹி கொஞ்ச நாள் வெயிட் பண்ணணும் சார், ஒரு ஆறு மாசம்...''

''ஆறு மாசமா?''

''இல்லை இல்லை, ஆக்ச்சுவலா எட்டு மாசம். நம்ம கிட்டன்னா ஆறு மாசம்தான். உங்களுக்காக (ஏன்னா நான் மச்சான்!?) நாலு மாசத்துல குடுக்க ட்ரை பண்ணலாம் சார்.''

மனதைத் தளரவிடாமல், புதுவை, வேலூர், ஓசூர் என மாறி மாறி போன் அடித்துப் பார்த்தேன். இதே ஸ்டீரியோ டைப் ஆன்ஸர்தான்.

சரி, நேரா மோதிப் பார்த்துடுவோம் என மூன்று பேரும் பெசன்ட் நகரில் என்ஃபீல்டு நிறுவனமே நடத்தும் ஷோ ரூமுக்குப் படை எடுத்தோம். 'ஆசைப் பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம். என்ஃபீல்டை வாங்க முடியுமா’ என்ற பாடல் மனசுக்குள் கேட்டது.

தாசில்தாரைப் பார்ப்பதுபோல சிறிது நேரக் காத்திருப்புக்குப் பின், ஷோ-ரூம் மேனேஜரைச் சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ''நாங்க மூணு பேர் இப்பவே மூணு பைக் புக் பண்றோம். டிசம்பர் 25-ம் தேதிக்குள் வேணும். நாங்க நியூ இயருக்கு பைக்கில் கோவா போவதாக பிளான்!'' என்று படபடவெனச் சொல்லி முடித்தேன்.

''ஆக்ச்சுவலா எட்டு மாசம் வெயிட்டிங் டைம். ஆனா, உங்களுக்காக நிச்சயம் முயற்சி பண்ணலாம். உடனே புக் பண்ணுங்க, டச்சுல இருங்க, பெஸ்ட் பண்ணித் தரேன்'' என்று என்னைவிட பட்பட பட்பட எனச் சொல்லி முடித்தார்.

ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக் புக் செய்ததே ஒரு பெரும் சாதனை போலத் தோன்றியதால், அன்று இரவு பார்ட்டி. ஆறு ரஷ்யப் பெண்கள் என்னுடன் புல்லட்டில் வருவது போலவும், அவர்களுடன் ஸ்கூபா டைவிங் அடிப்பது போலவும் இரவு கனவு கண்டேன்.

இங்கு பஞ்சர் போடப்படும்!

புக்கிங் வைபவம் நடந்து முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து, 'டெஸர்ட் ஸ்டார்ம்’ பைக்கின் விளம்பரம் கண்டேன். புது ரிலீஸ்! அடித்துப் பிடித்து ஷோ ரூம் ஓடி, ''மாடல் மாற்ற வேண்டும்'' என்றேன். அப்போது மேனேஜர் இல்லை. ரிலீவ் ஆகிச் சென்றுவிட்டார் என்றார்கள். ''நீங்கள் மாடல் மாற்றினாலும் பைக் விரைவில் கிடைத்துவிடும். ஏனென்றால், விளம்பரமே இப்போது தானே கொடுக்கிறார்கள். அதற்குள் நிறைய புக்கிங் ஆகி இருக்காது. உங்களுக்கு விரைவில் கிடைத்துவிடும்'' என்று சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ் கூறினார். நானும் மாடல் மாற்றிவிட்டு வந்துவிட்டேன்.

2011 டிசம்பர் மாதம் போன் செய்தேன். செய்தோம். புதிதாக யாரோ பேசினார்கள். நாங்கள் பழைய மேனேஜரிடம் பேசியதை எல்லாம் சொன்னோம். அதற்கு, ''அவரு இல்லைங்க. எங்களுக்குத் தெரியாது'' என்று பொறுப்போடு பதில் சொன்னார்கள்.

இடைப்பட்ட காலத்தில், நண்பர்களில் ஒருவர் ராயல் என்ஃப்லீட் பைக்கை கேன்சல் செய்துவிட்டு கார் வாங்கி விட்டார். இன்னொருவர் வேறு பைக்கையே வாங்கி விட்டார். டிசம்பர் கழிந்து, ஜனவரி பிறந்து மாதங்கள் பல உருண்டன. நான் மட்டும் திக்குத் தெரியாத காட்டில் கன்னிப் பெண் போல் காத்திருக்க ஆரம்பித்தேன்.

2012 மே மாதம் மீண்டும் போன் அடித்தேன்.

''வரிசையா எல்லாருக்கும் கொடுத்துட்டு இருக்காங்க. உங்களைக் கூப்பிடுவாங்க, வெயிட் பண்ணுங்க!'' என்றனர்.

வேறு வேலையில் பிஸியாக இருந்தபோது, ஆகஸ்ட் மாதம் கால் வந்தது. ''என்ஃபீல்ட்ல இருந்து பேசுறோம்'' என்றார்கள். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

''சொல்லுங்க மேடம்...''

''சார், நீங்க பைக் புக் பண்ணி இருக்கீங்களா?''

''ஆமா!''

''என்ன மாடல்?''

''டெஸர்ட் ஸ்டார்ம்...''

''ஓகே சார், தேங்க் யூ'' எனச் சொல்லி கட் செய்யப் பார்த்தார்.

''ஹலோ, விளையாடறீங்களா? பைக் எப்ப டெலிவரி?''

''இல்லை சார். தெரியலை...'' என்றார்.

நான் கத்தியவுடன், ''இந்த மாத இறுதிக்குள் பைக் கொடுத்துவிடுகிறோம்'' என்றார்.

காத்திருக்க ஆரம்பித்தேன். 2012 டிசம்பர் 15-ம் தேதி வாக்கில் திரும்ப நேரில் சென்றேன். ''நாங்க கால் பண்ணி இருப்போம், நீங்க அட்டெண்ட் பண்ணி இருக்க மாட்டீங்க'' என அசால்டாகச் சொன்னார் மேனேஜர்.

''ஹலோ நான் ரெகுலர் டச்ல இருக்கேன். கதை விடாதீங்க'' என்றேன்.

கடைசியாக மேனேஜர் சொன்னார், ''சார், இப்போ டிசம்பர். இந்த வருஷம் 2012 மேனுஃபேக்சர் ஆன பைக் எல்லாத்தையும் சேல்ஸ் பண்ணிட்டோம். எந்த டீலர்கிட்டேயும் 2012 பைக் இருக்காது. ஒரு மாசம் வெயிட் பண்ணுங்க. ஜனவரி 10 தேதி நேர்ல வாங்க, 2013 மேனுஃபேக்சர் பைக் கொடுத்துடலாம்'' என்றார்.

கரெக்டாக 2013 ஜனவரி 10 அன்று, தண்டையார்பேட்டை என்ஃபீல்டு டீலரிடம் இருந்து போன் வந்தது. ''சார், உங்க புக்கிங்கை இங்கே டிரான்ஸ்ஃபர் செஞ்சிருக்காங்க. பணம் மொத்தத்தையும் கொடுத்தா ரெண்டு நாள்ல பைக் எடுத்துக்கலாம்'' என்றனர். பணம் 1.7 லட்சம் மொத்தத்தையும் அவர்கள் அக்கவுன்ட்டில் கட்டிவிட்டேன். திரும்பவும் கிணற்றில் போட்ட கல்.

நானே 2103 ஜனவரி 20 தேதி கூப்பிட்டேன். ஒருவர் என்னிடம் என்ன ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் வேண்டும் எனக் கேட்டு எழுதிக் கொண்டார். ஜனவரி கடைசியில் மீண்டும் ஒருவர் அழைத்தார். ''சார், 2012 மேனுஃபேக்சர் பைக்தான் இருக்கு. 2013-க்கும் 2012-க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை'' என ஏதோ சித்தர் போலப் பேசினார்.

சும்மா ஒரு பேச்சுக்காக, ''அப்படின்னா எப்ப பைக் கிடைக்கும்?'' என்று கோபமாக கேட்டேன். ''நாளை கால் பண்ணி, என்ன டாகுமென்ட்ஸ் அனுப்பணும்னு சொல்றேன்'' எனக் கூறி கட் செய்தார். வழக்கம் போல கால் வரவில்லை.

ஷோ ரூமுக்குப் படையெடுத்து, விடுவிடுவென விட்டதில்... அடுத்த அரை மணி நேரத்தில் ஏரியா சேல்ஸ் மேனேஜர் எனச் சொல்லிக் கொண்டு ஒருவரிடம் இருந்து போன் வந்தது. இங்கேதான் ஒரு ட்விஸ்ட். இவர் யார் என்றால், நான் புக் செய்தபோது இவர்தான் மேனேஜர். அவர் ஷோ ரூம் மேனேஜராக இருந்து பல ப்ரமோஷனைத் தாண்டி சீஃப் ஏரியா மேனேஜராகவே ஆகிவிட்டிருந்தார். ஆனால், எனக்குத் தான் பைக் டெலிவரி ஆகவில்லை.

ரொம்பவும் டிப்ளமாட்டிக்காகப் பேசினார். நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். இரண்டு நாட்கள் காத்திருக்கும்படி சொன்னார். தண்டையார்பேட்டை டீலரை என்ன சுளுக்கு எடுத்தாரோ, அவர்கள் அடித்துப் பிடித்து போன் செய்து, ''2012-ம் ஆண்டு பைக் ரெடியா இருக்கு. எடுத்துக்கோங்க...'' என்றனர்.

''எனக்கு 2103 பைக்தான் வேணும்'' என்றேன். கம்பெனி ஷோ-ரூமில் இருந்து என் புக்கிங்கை இங்கே டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டு, தன் மேல் பழி இல்லாமல் பார்த்துக்கொண்ட நிர்வாகத்தை நினைத்து வியப்புதான் மேலிட்டது. ''பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடுகிறோம். 2013 மாடல் பைக் வந்ததும் கொடுக்கிறோம்'' என்றனர்.

''பணத்தை நீங்களே வச்சுக்கோங்க, பைக் வந்ததும் குடுங்க'' எனச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். பத்து நாட்களுக்குள் தண்டையார்பேட்டை டீலரிடம் இருந்து கால். ''பைக் ரெடி சார்!''

அதே நாளில் இன்னொரு திடுக்கிடும் சம்பவம். பெசன்ட் நகர் கம்பெனி ஒரிஜினல் ஷோ ரூமில் இருந்து, ''பைக் ரெடி, கேஷ் பேமென்ட்டா, லோனா?'' என்று போன். கம்பெனி, சிஸ்டமாக இயங்குவதை நன்கு பாராட்டினேன்.

பிப்ரவரி 14-ம் தேதி பைக் ரிஜிஸ்ட்ரேஷனுக்காக ஆர்டிஓ அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கேயே பைக்கை டெலிவரி எடுத்தேன். ஆனால் எனக்கே டெலிவரி ஆனது போல டயர்டாகிவிட்டேன்.

உங்களுக்குப் பிடிக்காத பெண்ணை வீட்டில் கட்டி வைக்கப் பார்க்கிறார்கள் என்றால், ''என்ஃபீல்டு புல்லட் வாங்கி கொடுத்தால்தான் கல்யாணம் பண்ணுவேன்'' எனச் சொல்லிவிடுங்கள். கழுத்துக்கு வந்தது என்ஃபீல்டோடு போய்விடும்.

(கியரை மாத்துவோம்)

அடுத்த கட்டுரைக்கு