Published:Updated:

ஏபிஎஸ் பிரேக்ஸ்!

சேஃப்டி டிரைவ்!

 ##~##

கார்களுக்கு உண்டான ஏபிஎஸ், இஎஸ்பி போன்ற பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் எப்படி இயங்குகிறது என நமக்குத் தெரியும். ஆனால், கனரக வாகனங்களில் இவை எப்படிப் பயன்படுகிறது; எப்படி இயங்குகிறது? இவற்றை நம் வாகனங்களில் பொருத்துவதால் என்ன பயன்? இது பற்றி பாஷ் மற்றும் வாப்கோ நிறுவனங்கள் இணைந்து 'சேஃப்டி டிரைவ்’ கருத்தரங்கும், செயல்முறை விளக்கமும் நடத்தியது. 

ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் அறிக்கைப்படி, உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் பேர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார்கள், 50 லட்சம் பேர் காயம் அடைகிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை 19 லட்சமாக உயர வாய்ப்பு இருக்கிறது. 2011 - 2020: இந்த பத்தாண்டுகளை சாலைப் பாதுகாப்புக்கான ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு அறிவித்து இருக்கிறது. இந்த பத்து ஆண்டுகளில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை 50 சதவிகிதம் குறைப்பதுதான் நோக்கம். இதற்காக, ஐந்து முக்கியமான அம்சங்களை முன்வைக்கிறது ஐ.நா அமைப்பு. அதில் ஒன்றுதான் 'பாதுகாப்பான வாகனங்கள்.’ பாதுகாப்புக்காக வாகனங்களில் பொருத்தப்படும் தொழில்நுட்பங்கள் இதன் கீழ்தான் வருகின்றன.

ஏபிஎஸ் பிரேக்ஸ்!

ஏபிஎஸ் மற்றும் இஎஸ்பி தொழில்நுட்பம் எப்படி நம்மைக் காக்கிறது என்பதை விளக்க, வாப்கோ டெஸ்ட் டிராக்குக்கு அழைத்துச் சென்றார்கள். கார்களில் பொருத்தப்படும் தன்னுடைய ஏபிஎஸ் சிஸ்டம் எப்படி செயல்படுகிறது என்பதை செய்முறை விளக்கம் மூலம் பாஷ் நிறுவனம் அங்கே செய்து காட்டியது.

ஏபிஎஸ் பிரேக்ஸ்!

மாருதி சுஸ¨கி ஸ்விஃப்ட் டிசையரில் ஏபிஎஸ் பிரேக்ஸை ஆஃப் செய்துவிட்டு ஓட்டிவந்த டிரைவர்,

ஏபிஎஸ் பிரேக்ஸ்!

வழுக்கும் சாலையில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் வந்து பிரேக் அடித்தார். காரின் சக்கரங்கள் முழுமையாக நின்றுவிட வந்த வேகத்தில் கார் மட்டும் கன்னாபின்னாவென்று சுற்றிவிட்டு நின்றது. அடுத்தமுறை ஏபிஎஸ் சிஸ்டத்தை ஆன் செய்த நிலையில் வேகமாக வந்து டிரைவர் பிரேக் அடித்தார், கார் கொஞ்சமும் கட்டுப்பாட்டில் இருந்து விலகாமல், குறைந்த தூரத்திலேயே ஸ்கிட் ஆகாமல் நின்றது. இதேபோல், டாடா ஆரியாவிலும், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரிலும் இஎஸ்பி சிஸ்டத்தின் செயல்பாட்டைச் செய்து காட்டினார்கள்.

அடுத்து, வாப்கோ நிறுவனம் கனரக வாகனங்களில் தன்னுடைய ஏபிஎஸ், இஎஸ்பி தொழில்நுட்பம் எப்படிச் செயல்படுகிறது என்பதை இயக்கிக் காட்டியது. இதற்காக, அவர்கள் கொண்டுவந்த வாகனங்கள் ஒரு ஸ்கூல் வேன், அரசுப் பேருந்து, டிரெய்லர் டிரக், ஆர்மி டிரக் ஆகியவை. இந்த வாகனங்கள் தான் உண்மையில் அதிக பாதுகாப்பு அம்சங்களோடு வர வேண்டியவை என்பது செயல்முறை விளக்கத்தில் நன்றாகவே புரிந்தது.

நாம் அன்றாடம் பயணிக்கும் அரசுப் பேருந்து, நம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் ஸ்கூல் வேன் போன்றவற்றில் செய்து காட்டியதால், இதன் தாக்கம் பார்த்தவர்களுக்கு நன்றாகவே புரிந்தது. அரசுப் பேருந்து ஓட்டுனர் வேகமாக வந்து பிரேக் அடித்துத் திருப்ப, சக்கரங்கள் முற்றிலுமாக நின்றுவிட்டாலும், பேருந்து வழுக்கிக்கொண்டே நேராகச் சென்று டம்மி பொம்மையில் இடித்து நின்றது. பின்னர், ஏபிஎஸ் சிஸ்டத்தை ஆன் செய்துவிட்டு இதே ஸ்டன்ட்டை டிரைவர் திரும்பச் செய்தார். இப்போது பேருந்து அலுங்காமல் குலுங்காமல் டம்மியை இடிக்காமல் நின்றது.

பாஷ் சேஸிஸ் கன்ட்ரோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியனிடம் பேசினோம். ''சில நாடுகளில் இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருந்தால்தான் காரை விற்கவே முடியும் என்ற விதி உண்டு. அதுபோல, இந்தியாவிலும் எல்லா கார்களிலும் இவை பொருதப்பட்டுத்தான் விற்கப்பட வேண்டும் என்றால், கார்களின் விலை எவ்வளவு உயரும்?'' எனக் கேட்டபோது, ''நாங்கள் எடுத்த சர்வேயின்படி, குறைந்தது 15,000 முதல் 20,000 ரூபாய் வரை பாதுகாப்பு அம்சங்களுக்காகச் செலவிட  வாடிக்கையாளர்கள் தயாராக இருக்கின்றனர். உத்தேசமாகச் சொல்ல வேண்டும் என்றால், இது கண்டிப்பாக எல்லா கார்களிலும் பொருத்தப்பட்டுதான் சந்தைக்கு வர வேண்டும் என்றால், ஒரு காரின் விலை 5 சதவிகிதம் வரை மட்டுமே உயரும்'' என்றார்.

பாதுகாப்புக்காக ஐந்து சதவிகிதம் விலையை உயர்த்தினால் யார் எதிர்க்கப் போகிறார்கள்!

ர.ராஜா ராமமூர்த்தி >>  வீ.நாகமணி

அடுத்த கட்டுரைக்கு