ஆட்டோ ஃபோகஸ்!
 ##~##

போட்டோகிராஃபி பற்றிய தொடரில் இதுவரை கேமரா பற்றிப் பேசவில்லையே என பலர் யோசித்துக் கொண்டு இருப்பீர்கள். அதனால், இந்த இதழில் முழு ஃபோகஸும் கேமரா மீதுதான். நான் முதலிலேயே சொன்னது போல, கண்களால் படம் எடுத்துப் பழகியவர்களுக்கு, எந்த கேமராவாக இருந்தாலும் படம் எடுப்பது ரொம்ப ரொம்ப ஈஸி. லட்ச ரூபாய் கேமரா, அதைவிட அதிக விலை கொண்ட லென்ஸ் என எதை வாங்கிப் படம் எடுத்தாலும் சரியான லைட்டிங்கில், சரியான கோணத்தில் படம் எடுக்கும் திறமை இல்லை என்றால், அந்த ஹை-ஃபை கேமராவை வைத்திருப்பதே வேஸ்ட்.

 அப்பாக்களை டார்ச்சர் செய்து, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கேமரா - லென்ஸ் வாங்கி, படம் எடுக்க வருபவர்களை நான் பார்த்து இருக்கிறேன். நம்மிடம் பெரிய கேமரா இருக்கிறது என்ற பெருமிதத்தில், சரியான ஐடியா இல்லாமல், அவர்கள் வாங்கி இருக்கும் கேமராவின் தொழில்நுட்பம் பற்றியும் தெரியாமல் படம் எடுத்து பரிதாபகரமான நிலையை எட்டியவர்கள் பலர். சிலர், கேமராவில் எப்படி வேண்டுமானால் எடுக்கலாம். பிறகு, அதையே போட்டோ ஷாப்பில் சரிசெய்துகொள்ளலாம் என்று நினைப்பார்கள். அவுட் ஆஃப் ஃபோகஸில், தவறான லைட்டிங்கில் படம் எடுத்தால், அதை எந்த எடிட்டிங் சாஃப்ட்வேர் கொண்டும் சரிசெய்ய முடியாது.

ஆட்டோ ஃபோகஸ்!

உங்கள் போட்டோகிராஃபி திறமை, நீங்கள் வாங்கும் கேமராவின் தொழில்நுட்பத்தை மிஞ்சியதாக இருக்க வேண்டும். உங்களின் திறமையை கேமராவின் தொழில்நுட்பம் சப்போர்ட் செய்ய வேண்டுமே தவிர, உங்களின் திறமையை மூழ்கடித்துவிடக் கூடாது. கேமராவின் தொழில்நுட்பத்தை நீங்கள் மிஞ்சினால்தான், ஒவ்வொரு ஆண்டும் புதுப் புது தொழில்நுட்பங்களோடு வரும் கேமராக்களோடு நீங்களும் உங்களை அப்டேட் செய்துகொள்ள முடியும்.

கார் நான்கு பக்கமும் கண்ணாடி மற்றும் மெட்டல் பாகங்களால் ஆனது. அதனால், ஒளி அதிகம் எதிரொலிக்கும் என்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். அதனால், கார் - பைக்குகளை படம் எடுக்க நல்ல தரமான கேமரா அவசியம். நீங்கள் எடுக்கும் படம்தான் அந்த வாகனத்தின் தரத்தை மக்களுக்குச் சொல்லப் போகிறது. அந்த படம் தரமாக இல்லை என்றால், அந்தப் பொருளும் தரமானதாக இருக்காது என்கிற எண்ணம் பார்ப்பவர்களுக்கு வந்துவிடும். அதேபோல், அந்த படம்தான் வெவ்வேறு பத்திரிகைகளில் விளம்பரமாக வெளிவரப் போகிறது. மேலும், படம் எடுப்பதற்கான பட்ஜெட்டும் அதிகம். உங்கள் படம் தரமாக இல்லை என்றால், உங்களுக்கு அடுத்த ஆர்டர் கிடைக்காது.

நான் டிஜிட்டல் போட்டோகிராஃபியில் இறங்கியபோது, 'கேனான் 1-டிஎஸ் மார்க்-1’ என்ற கேமராவைத்தான் வாங்கினேன். இது 11 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா. அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு அப்கிரேடு வரும். அதை வாங்கிப் படம் எடுப்பேன். ஆனால், நான் முன்பு சொன்னதுபோல, ஆட்டோமொபைல் போட்டோகிராஃபிக்கு மிகவும் ஹை-எண்ட் கேமரா இருந்தால், நீங்கள் எடுக்கும் படத்தின் தரத்தைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். வெறும் கேமரா மட்டும் இருந்தால் போதாது; டிஜிட்டல் பேக் ரொம்ப முக்கியம். டிஜிட்டல் பேக் என்பது உங்கள் கேமராவின் பின்னால் பொருத்தப்பட வேண்டிய எலெக்ட்ரானிக் இமேஜ் சென்ஸார் கொண்ட டிஜிட்டல் டிவைஸ். இதன் விலை ரொம்ப அதிகம். டிஜிட்டல் பேக்கை எல்லா கேமராக்களுடனும் பொருத்த முடியாது. மீடியம் ஃபார்மட் கேமராக்களில் இருந்துதான் பொருத்த முடியும்.

ஆட்டோ ஃபோகஸ்!

நான் சமீபத்தில் வாங்கி இருக்கும் 'ஃபேஸ் 1 டிஜிட்டல் பேக்’ விலை மட்டும் 20 லட்சம் ரூபாய்.  இது 80 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா. இப்போது 'லின்ஹாப்’ கேமரா வைத்திருக்கிறேன். இதில், லென்ஸை மூவ் பண்ண வேண்டும் என்றால், லென்ஸை மட்டும் மூவ் பண்ணலாம். அதேபோல், டிஜிட்டல் பேக்கையும் தனியாக மூவ் பண்ண முடியும்.

ஆட்டோமொபைல் போட்டோகிராஃபிக்கு 16 எம்.எம் முதல் 200 எம்.எம் ரேஞ்ச் சரியாக இருக்கும். நீங்கள் படம் எடுக்கும்போது ஒவ்வொரு காரையும் ஒவ்வொரு பெர்சனாலிட்டியாகப் பார்க்க வேண்டும். முதலில் லென்ஸ், கேமரா எதுவும் இல்லாமல், எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தால் அந்த கார் அல்லது பைக் கம்பீரமாகத் தெரிகிறது என்று பார்த்து, அதற்கு ஏற்றபடி லென்ஸைப் பொருத்த வேண்டும். பொதுவாக, எஸ்யூவி கார்கள் 100 எம்.எம் ரேஞ்சில் நன்றாக இருக்கும். அதிக வளைவு, நெளிவுகள் கொண்ட கார் என்றால், உதாரணத்துக்கு ஃப்ளூயிடிக் வெர்னா என்றால், 20-24 எம்.எம் ரேஞ்சுக்குள் எடுத்தால், படங்கள் நன்றாக வரும். இதேபோல், ஒவ்வொரு வாகனத்துக்கும் நீங்கள் பார்க்க வேண்டும். இந்த ரேஞ்சில் படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்ற முன் முடிவுடன் போய் படம் எடுக்கக் கூடாது.

ஹைஃபை கேமராக்களில் படம் எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் படங்களில் நிறைய டீட்டெயில் தெரியும். அதாவது, 80 மெகா பிக்ஸல் கொண்ட டிஜிட்டல் பேக் வைத்துப் படம் எடுக்கும்போது, சின்னச் சின்ன விஷயங்கள்கூடத் தெரியும். டயரில் சின்ன அழுக்கு இருந்தால்கூட அப்பட்டமாகத் தெரியும். சின்ன கேமராவில் படம் எடுக்கும்போது, அந்த அழுக்கு டயரோடு மழுங்கிவிடும். ஆனால், பெரிய கேமராவில் அசிங்கமாகத் தெரிந்துவிடும் என்பதால், படம் எடுக்கும் முன் வாகனம் 100 சதவிகிதம் சுத்தமாக இருக்க வேண்டும். போட்டோஷாப்பில் எடுக்கலாம் என்றால், குவாலிட்டி அடி வாங்கிவிடும். போட்டோஷாப்பில்தான் எடுத்தாக வேண்டும் என்ற நிலை வந்தால், இதற்கு ஷூட்டிங்குக்குச் செலவிட்ட நேரத்தைவிட இரண்டு மடங்கு நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த மாதம் உங்களுக்கான அசைன்மென்ட் என்ன என்றால்... உங்களுடைய கேமராவின் தொழில்நுட்பத்தை முழுவதுமாகத் தெரிந்து கொள்வதுதான். முதலிலேயே பெரிய கேமரா தேவை இல்லை. நான் சொன்னது போல, சின்ன கேமராவாக இருந்தாலும், கேமராவின் முழுமையான தொழில்நுட்பத்தைத் தெரிந்து கொண்டு சரியான ஆங்கிளில், சரியான லைட்டிங்கில் படம் எடுத்து அனுப்புங்கள். உங்கள் படங்களைப் பார்க்க நான் ஆவலோடு இருக்கிறேன்.

(படம் பேசும்)