Published:Updated:

நிஸான் சேஃப்டி டிரைவ்

பக்கா பாதுகாப்புடன் விபரீத பாடம்!

நிஸான் சேஃப்டி டிரைவ்

பக்கா பாதுகாப்புடன் விபரீத பாடம்!

Published:Updated:
 ##~##

வேகமாகச் செல்லும் கார், 'மடார்’ என எதிலாவது மோதி, ஒரு குட்டிக்கரணம் அடித்து நின்றால், அந்த ஷாக்கிங் அனுபவம் எப்படி இருக்கும்? 

அதேபோல், 100  கி.மீ வேகத்தில் சென்று, ஒரு பெரிய தூணில் இடிக்கும்போது ஏர் பேக் உங்கள் காரில் இல்லாமல் போனால் என்ன ஆகும்? இதை நிஜத்தில் செய்து காட்டி விறுவிறுக்க வைத்தது நிஸான் சேஃப்டி டிரைவிங் ஃபோரம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த மாதம் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவின்யூ ஷாப்பிங் மாலில்தான் இந்த திகில் - த்ரில் விளையாட்டை நடத்திக் காட்டியது நிஸான். சீட் பெல்ட்டின் பயனும், காற்றுப் பையின் முக்கியத்துவத்தையும் பக்கா பாதுகாப்புடன் செய்து காட்டினார்கள். அதில் என்னுடைய அனுபவம்...

ரேம்ப்பில் நின்றிருந்த அந்த காருக்குள் ஏறும் முன், நம் பாக்கெட்டில் இருக்கும் அத்தனையும் வாங்கிக்கொண்டு காருக்குள் உட்கார வைத்தனர். சீட் பெல்ட்டை மாட்டியவுடன் டிரைவர், 'எல்லோரும் நேரா பாருங்க... காரு புறப்படப் போகுது...' என விண்வெளிக்கு ராக்கெட்டில் செல்வதுபோல எபெஃக்ட் கொடுத்தார். கார் நேராகப் போகும் என்று பார்த்தால், அப்படியே உருளத் தொடங்கியது.

நிஸான் சேஃப்டி டிரைவ்

'அய்யோ... அம்மா..’ என காருக்குள் இருந்தவர்கள் அலறியபோது, கார் தலைகீழாக நிற்க... சீட் பெல்ட் அணிந்து இருந்ததால், காருக்குள் அனைவரும் பத்திரமாக இருந்தோம். அப்போது டிரைவர் தலைகீழாக அமர்ந்துகொண்டே எங்களுக்கு கிளாஸ் எடுத்தார். 'பாருங்க... சீட் பெல்ட் போட்டதால, இப்போ கீழே விழாம, எந்த அடியும் படாம இருக்கோம். இதுவே சீட் பெல்ட் போடாம இருந்தா நம்ம நெலைமை..?’ எனச் சொல்லிவிட்டு ஒரு நிமிடம் கழித்து காரை நேராக்கினார். ஆனால், உண்மையில் கொஞ்ச நேரம் விண்வெளிக்குப் போய்வந்த மாதிரிதான் இருந்தது.

நிஸான் சேஃப்டி டிரைவ்

அடுத்து, ஸ்டீயரிங்கும் டிரைவர் சீட் மட்டும் கொண்ட காரில் அமர வைத்தனர். சீட் பெல்ட் அணிந்த உடன், டிரைவர் சீட் அப்படியே பின் நோக்கி நகர்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரம் நகர்ந்ததும், 'சடார்’ எனச் சத்தம் மட்டும்தான் காதில் விழுந்தது. அடுத்த கணம் கார் வேகமாக ஒரு தூணில் மோதிய எபெஃக்ட். அடுத்த விநாடியே காற்றுப் பை ஒரு பூப்போல விரிந்து எந்த அடியும் விழாமல் நம்மைக் காத்தது. வெறும் வாயால் மட்டுமே பாதுகாப்புப் பற்றி பேசாமல், செல்லமாக(!) மிரட்டி நமக்குப் பாதுகாப்பை உணர்த்தியது நிஸான்.

''சீட் பெல்ட் அணியும் முக்கியத்துவத்தை இதன் மூலம் மக்கள் எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன். பாதுகாப்பு நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். அதற்காகத்தான் இந்தப் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்கி உள்ளோம். இந்தியச் சாலைகளில் அதிகரித்து வரும் விபத்துகளின் எண்ணிக்கை கவலை அளிக்கிறது. பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த விரும்புகிறது நிஸான்'' என்று அக்கறையுடன் சொன்னார் நிஸான் நிர்வாக இயக்குனர் டகாயுகி இஷிடா.

நா.சிபிச்சக்கவர்த்தி  ப.சரவணகுமார்