Published:Updated:

ரீடர்ஸ் ஸ்கேப் - சென்னை to தேக்கடி

ரீடர்ஸ் ஸ்கேப் - சென்னை to தேக்கடி

ரீடர்ஸ் ஸ்கேப் - சென்னை to தேக்கடி

ரீடர்ஸ் ஸ்கேப் - சென்னை to தேக்கடி

Published:Updated:
ரீடர்ஸ் ஸ்கேப் - சென்னை to தேக்கடி
 ##~##

செங்கல்பட்டு டோல் பிளாசாவில் இருந்து திருச்சி செல்ல, ஒரு டீ பிரேக்கையும் சேர்த்து மொத்தமே நான்கு மணி நேரம் ஆனது. ஆனால், சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்ல இரண்டு மணி நேரம் ஆகிறது. மனைவி கிளம்ப, பிரத்யேகமாக இரண்டு மணி நேரம். பிளான்படி காலை 9 - 10 மணிக்குக் கிளம்ப வேண்டும். ஆனால், கிளம்பியது மதியம் 3 மணிக்குத்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 நண்பர்களும் வேண்டாம். மனைவி மட்டும் போதும் என்று முடிவு எடுத்ததற்குக் காரணம் உண்டு. என் நண்பர்களோடு டூர் போனால்... மியூசிக் சிஸ்டத்தில் நான்கு பாட்டு ஓடும் வரை உற்சாகமாக இருப்பார்கள். பிறகு, சிறிது நேரமானதும் உற்சாக பானத்தின் உந்துதலால், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி சொல்லி, 'புரியிதா?’ எனக் கேட்டு வெறுப்பேற்றுவார்கள்.

அதனால், மனைவியுடன் சேர்ந்து ஓர் அதிரடி பிளான் போட்டேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் தாத்தா - பாட்டி வசம் ஒப்படைத்துவிட்டு மேகமலை, தேக்கடி மற்றும் வாகமன் ஆகிய இடங்களுக்கு காரில் சென்று வருவதுதான் திட்டம். திட்டமிடாத பயணம் என்பதால், தேக்கடியில் ஹோட்டல் ரூம் முன்பதிவு செய்ததைத் தவிர, வேறு எந்தப் பயண ஏற்பாட்டையும் செய்யவில்லை.

ரீடர்ஸ் ஸ்கேப் - சென்னை to தேக்கடி

ஹூண்டாய் ஆக்ஸென்ட் டீசல் கார். 2007 ஸ்பெஷல் எடிஷன். கோயம்புத்தூர் 'கிட்-அப்’ வொர்க் ஷாப்பில் கொஞ்சம் டகால்டி வேலை செய்திருப்பதால், பார்ப்பதற்கு டக்கென ஆக்ஸென்ட் போலத் தெரியாது. இதுவரை ஓடிய கிலோ மீட்டர் 96,000 (சென்னை சிட்டிக்குள் நத்தை போல நகர்ந்து சென்றதையும் சேர்த்து). லாங் டிரைவ் செல்வதற்கு முதல் நாள், காரை டெஸ்ட் செய்யச் சொல்லிக் கொடுத்தேன்.

டிக்கியில் வழக்கமான லக்கேஜ்களுடன் ஒரு எமர்ஜென்ஸி எல்ஈடி லைட், பெரிய குடை, ஸ்நேக் பைட் சாக்ஸ், ஸ்விம்மிங் டிரெஸ், பெட் ஷீட், சினிமாவில் அடியாட்கள் உபயோகிப்பதைப் போல ஒரு உருட்டுக்கட்டை எடுத்துக்கொண்டேன்.

காருக்கு உள்ளே தமிழ், ஆங்கில ஹை பீட் பாடல் சிடி. இதுவரை ரத்தம் பார்க்காத, கைக்கு அடக்கமான ஒரு கத்தி. அவ்வளவுதான். நானும் என் மனைவியும் ஒரு டீலுக்கு வந்தோம். நான் அவளைத் திட்டவே கூடாது. அவள் என்னை எந்த விஷயத்திலும் கன்ட்ரோல் செய்யக் கூடாது. ஒரு வாரத்துக்கு ஃப்ரெண்ட்ஸ் போல நடந்துகொள்ள வேண்டும். டீல் ஓகே! மாலை 4 மணிக்கு செங்கல்பட்டு டோல் பிளாசா தாண்டி, ஒரு வழியாக ஐந்தாவது கியரைப் போட்டேன்.

ரீடர்ஸ் ஸ்கேப் - சென்னை to தேக்கடி

பாட்டைப் போட்டேன். 'யாரென்று தெரிகிறதா... இவன் தீயென்று புரிகிறதா....?’ - மனைவி சீட்டை லேசாக பின் பக்கம் சாய்த்தாள். இருவரும் சீட் பெல்ட்டைப் போட்டுக் கொண்டோம். ஒரே மிதி, 8 மணிக்கு திருச்சி. அங்கிருந்து திண்டுக்கல் செல்ல 30 நிமிடங்கள் சாதாரண ரோட்டில் பயணம் செய்ய வேண்டும். இதுவரை எவ்வளவு சொகுசான ரோட்டில் வந்திருக்கிறோம் என்பதை உணரவைத்து, டோல் கேட்டில் காசு கொடுத்த வருத்தம் ஏதேனும் இருந்தால் போக்கிவிடுகிறது. சரேலென நான்கு வழிச் சாலை ஆரம்பிக்கிறது. திரும்பத் தூக்கு ஐந்தாவது கியரை. திருச்சிக்கு முன்பே ரொமான்ஸ் பேச்சுப் பேசி முடித்து விட்டதால், இந்த நேரத்தில் மனைவிக்கு லேசாகத் தூக்கம். 10 மணிக்கு திண்டுக்கல்.

வத்தலக்குண்டு செல்ல, திண்டுக்கல்லில் இருந்து நான்கு வழி பைபாஸை விட்டுப் பிரிந்து, தனி ரோட்டில் செல்ல வேண்டும். அந்த ரோட்டில் வேலை நடந்துகொண்டு இருந்தது, நான்கு மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் போனபோது தெரியும். அதனால், காரை நிறுத்தி வத்தலக்குண்டு நண்பரிடம் போனில் விசாரித்தேன்.

ரீடர்ஸ் ஸ்கேப் - சென்னை to தேக்கடி

'ஆமாம் பாஸ், இன்னும் வேலை நடந்துட்டுதான் இருக்கு (அதாவது நடக்காமலே பல நாள் இருக்கு). நைட் டிரைவிங் கஷ்டமா இருக்கும். ரொம்ப நேரம் ஆகும். நீங்க மதுரை ரோட்டிலேயே கொடை ரோடு வரை போயி, அங்கே ரைட் எடுத்து வத்தலக்குண்டு வந்துடுங்க’ என்றார். அப்படியே செய்தேன்.

மனைவிக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க எண்ணி, கொடைரோட்டில் வண்டியை நிறுத்தினேன். ரோட்டோரக் கடைக்கு அழைத்துச் சென்று இட்லி ஆர்டர் செய்தேன். ஈரமான கையோடு ஒரு ஆள் இட்லியை ஆலிங்கனம் செய்து எடுத்து வைக்க... அவளுக்குக் கண்ணீரே வந்துவிட்டது. ஆனால், இட்லி நன்றாக இருந்தது.

காரைக் கிளப்பி வத்தலக்குண்டு வந்தேன். பெரியகுளம், தேனி வழியாக போடியை அடைந்து என் தங்கை வீட்டில் வந்து படுக்கும்போது, இரவு மணி 12.30. தங்கை அங்கே அரசு டாக்டராகப் பணிபுரிகிறாள். தங்கையின் நண்பர்கள் மூலமாக விசாரித்ததில், 'மேகமலை ரூட் கொஞ்சம் மோசம்தான். எஸ்யூவி செல்வதில் பிரச்னை இல்லை. கார் என்றால், பார்த்துச் செல்ல வேண்டும்’ என்றார்கள்.

காலையில் போடியில் இருந்து சின்னமனூர் சென்று டிஃபன் சாப்பிட்டுவிட்டு, இலையை எடுத்துப் போட்டுவிட்டு, மேகமலை நோக்கிப் பயணம். மலை அடிவாரம் வரை ஒற்றை ரோடு சுமாராக உள்ளது. அடிவாரத்தில் ஃபாரஸ்ட் செக் போஸ்ட்.

மலைப் பாதை ஏற ஆரம்பித்தது. கடா முடாதான். சில இடங்களில் நிறுத்தி யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். லெஃப்ட் பள்ளத்தில் இறக்கி, நகர்த்தி பின் மேலே ஏறலாமா, ரைட்டில் ஜல்லி மீதே நகர்த்தி மரத்தின் வேர் மேலே ஏத்தி லெஃப்ட் இறக்கலாமா என! அந்த அளவுக்கு இருந்தது ரோடு. பிறகு, இதையே ஒரு விளையாட்டு ஆக்கிக்கொண்டேன்.

ரீடர்ஸ் ஸ்கேப் - சென்னை to தேக்கடி

ரோடு மோசமாக இருந்ததால், ஆவரேஜாக மணிக்கு 12 கி.மீ வரைதான் வேகம் செல்ல முடிந்தது. ரோடு மோசமாக இருந்தாலும், மலை மற்றும் மரங்கள் படு புத்துணர்ச்சியைத் தந்தன. அவ்வளவாக புகழ் பெறாத சுற்றுலாத் தலம் என்பதால், எதிரேயும் பின்னாலும் ஒரு வாகனமும் இல்லை.

மேகமலையை அடைந்து, சிறிது நேரம் சுற்றிப் பார்த்தோம். சில போட்டோக்கள். ஒரு கப் டீ. மிக மிகச் சின்ன ஊர். தங்குவதற்கு பேரூராட்சி சார்பில் இரண்டு விடுதிகள். முன் பதிவு அவசியம். சுற்றிப் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இல்லை. நாங்கள் சென்றிருந்தபோது கிளைமேட், நம் ஊர் போலத்தான் இருந்தது. ஆளரவமில்லாத இடத்தில் காரை ஓரங்கட்டி, மதிய உணவு. சாப்பிடும்போது ஏதோ சத்தம் கேட்டது. 'யானை கத்துவதுபோல இருக்கு!’ என பயமுறுத்திக் கொண்டே சாப்பிட்டாள். சிறிது நேரம் ரெஸ்ட்.

மாலை 6 மணிக்குக் கீழே இறங்கிவிட்டோம். ஏற்றத்தைவிட இறக்கம் சுலபமாக இருந்தது. மேகமலையில் மொத்தப் பயணத்தையும் முதல் மற்றும் இரண்டாவது கியரிலேயே ஓட்டினேன். இரவு போடியிலேயே தங்கிவிட்டோம். காலையில் தேக்கடி நோக்கிப் பயணம். குமுளி நெருக்கத்தில் மலை ஏற ஆரம்பித்ததும் கேரள வாடை வீச ஆரம்பித்துவிட்டது. தமிழ்நாடு பார்டர் முடிந்ததுமே, எப்படியோ வேறு உலகம் போல மாறிவிடுகிறது.

தேக்கடி வன விலங்கு சரணாலயத்துக்குள் 'ஆரண்ய நிவாஸ்’ என்ற கேரள அரசின் நட்சத்திர விடுதி உள்ளது. அதற்கு மட்டும் முன் பதிவு செய்திருந்தேன். அதில் தங்கினோம். அரசாங்க விடுதி போலவே இல்லை. பக்கா ப்ரொஃபஷனல்ஸ். அங்கு தங்கினால் உறுதியான படகு சவாரி நிச்சயம். இதை ஏன் சொல்கிறேன் என்றால், டூர் என்ற பெயரில் தேக்கடி வருபவர்கள் எல்லாம் வருவதால், இந்தப் படகு சவாரி செய்ய 2 கி.மீ நீளத்துக்கு வரிசை நிற்கிறது.

மாலை முதல் இருட்டும் வரை வாக்கிங் சென்றோம். காலை 7 மணிக்கு படகுப் பயணம். பல குடும்பத் தலைவர்கள் சேல்ஸ் ரெப் போல பக்காவாக பேன்ட் அணிந்து இன் செய்து ஷூ போட்டு வந்தனர். ஷார்ட்ஸில் வந்த என்னை படகோட்டி போலப் பார்த்தனர். சென்னையிலேயே தென்படும் சில கொக்குகளைப்  பார்த்ததுமே பலரும் எழுந்து போட்டோ எடுக்க ஆரம்பித்துவிட்டனர். ஒருமுறை பைசனைப் பார்க்கத்தான் அனைவரும் படகின் ஒரு ஓரமாக திரண்டு, படகு கவிழ்ந்து செத்துவிட்டனர் என்ற ஸ்தல வரலாறைச் சொன்னார் போட் மேன். யானைக் கூட்டம் பார்த்தோம். டைகர் டிரையல், டிரெக்கிங்க், ராஃப்டிங் பின்பு ஒரு கூடாரத்தில் இரவு தங்கினோம். புலி பார்க்கவில்லை. புலி எங்களைப் பார்த்திருக்கலாம். இப்போதும் யானை, காட்டெருமை பார்த்தோம். இரவு அடர் கானகத்தில் தங்கி இருந்தது தனி அனுபவம். யானைச் சவாரியும் அட்டகாசம்.

ரீடர்ஸ் ஸ்கேப் - சென்னை to தேக்கடி

தேக்கடியில் இருந்து வாகமன் வழி கேட்டோம். பலரும் சொன்னது, 'வண்டிப் பெரியார் சென்று, ரைட் எடுத்து ஏலப்பாறை சென்று பின் வாகமன் செல்லுங்கள்!’ அப்படியே செய்தேன். அட்டகாசமான ஒற்றை ரோடு. வளைந்து நெளிந்து செல்லும் மலை ரோடு. ஆனால், வேறு ஒரு பெரிய ரோட்டில் இந்தக் குட்டி ரோடு இணைகிறது. 'இடதுபுறம் செல்ல வேண்டுமா, வலதுபுறம் செல்ல வேண்டுமா’ எனத் தெரியவில்லை. சைன் போர்டும் இல்லை; ஈ, காக்கா இல்லை. ரிஸ்க் எடுத்து லாஜிக் படி (!)இடதுபுறம் சென்றேன்.

குட்டிக்கானம் என்றொரு ஊர் வந்தது. வாகமன் போக வழி விசாரித்ததில், 'எதிர்புறம் தான் போக வேண்டும்’ எனச் சொன்னார்கள். வந்த வழியே மீண்டும் திரும்பினேன்.  

வாகமன் ஊர் வந்ததற்கான அறிகுறியே இல்லை. அவ்வளவு சின்ன ஊர். இங்கு ரெசார்ட் புக் செய்யவில்லை. இன்டர்நெட்டில் சில ரெசார்ட்களைப் பார்த்து வைத்திருந்தேன். அவைகளை ஒவ்வொன்றாக விசாரிக்கக் கிளம்பினோம். ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று 10 கி.மீ தூரத்தில் இருந்தன.

இன்டர்நெட்டில் நம்பர் ஒன் ரேங்க் கொடுத்திருந்த வாகமன் ஹைட் அவுட்டை, ஊத்தி மூடிவிட்டார்கள். இரண்டாவது ரேங்க் கொடுத்திருந்த வாகமன் கிரீன் மெடோஸ், சின்ன கெஸ்ட் ஹவுஸ். யாரும் இல்லை. இதைப் பார்க்க 3 கி.மீ ஆஃப் ரோடிங் செய்தேன். கார் ஒரு முறை ஏற முடியாமல் மாட்டிக் கொண்டது. மரப்பட்டை, கையில் கிடைத்த சிமென்ட் பலகை எனக் கிடைத்ததை வைத்து மேலே ஏற்றினேன். சுற்று வட்டாரத்தில் யாரும் இல்லை.

இன்டர்நெட்டை மட்டுமே நம்பக் கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறேன். ஆனால், வாகமன் பகுதியை நன்றாகச் சுற்றிப் பார்க்க இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. வாகமன் ஹைட்ஸ் என ஒரு நல்ல ரெசார்ட். காட்டுக்குள் தனியாக அமைந்திருந்தது. பிரைவேட் போட்டிங் உண்டு. செம பிரைவஸி. இங்கே ஒருநாள் தங்கினேன். சம்மர் ஸேண்ட் என மற்றொரு ரெசார்ட். இங்கே ஒருநாள் தங்கினேன். ஒரு அருவியைப் பார்க்கச் சென்றோம். வழியில் ஊர், குடியிருப்பு என எதுவும் இல்லை. 15 கி.மீ தூரம் அட்டகாசமான ரோடு. மலையில் ரோடு போடுவது கடினம். ஆனால், கேரளாவில் சின்னச் சின்ன ஊர்களுக்கும் அட்டகாசமாக ரோடு போட்டு இருக்கிறார்கள்.

அருவி வந்ததும் ரோடு முடிந்துவிட்டது. 2 கி.மீ மலையில் நடந்து சென்றால், அருவியிடம் செல்லலாம். கிட்டத்தட்ட டிரெக்கிங். அருவியில் குளித்தோம். அக்கம் பக்கம் யாருமே இல்லை என்பதால், பதட்டமாக இருந்தது. அவள் ஜாலியாக கத்திக்கொண்டு குளித்தாள். திரும்பி நடந்து வருகையில் ஒரு தோட்டக்காரர், 'இப்படி தனியாகப் போகலாமா?’ என கோபித்துக்கொண்டார்.

மறுநாள், ஒரே அடியாக சென்னை அடித்துவிடலாம் என பிளான். காலையில் காரின் கண்ணாடியை மட்டும் நன்கு கழுவினேன். 10 மணிக்கு கிளம்பி, கட்டப்பனை ரோடு வழியாக ஆனைவிலாசம் வழியாக குமுளி வந்தேன். இந்த ரூட்டில் வந்தால் 20 கி.மீ குறைவு.

கேரளாவுக்கு பை பை சொல்லிவிட்டு, கம்பம் நுழைந்து வண்டி ஸ்பீடு எடுத்தது. அதே வத்தலகுண்டு, கொடைரோடு, திண்டுக்கல் வழியாக திருச்சி தாண்டி, 30 நிமிடங்கள் காரை நிறுத்தி குட்டி ரெஸ்ட். உளுந்தூர்பேட்டையில் டீசல், திண்டிவனத்தில் ஒரு டீ அடித்து காரை விரட்டினால், இரவு 8 மணிக்கு கூடுவாஞ்சேரி. அதற்கு முன்பிருந்தே ஜாம். நத்தைபோல நகர்ந்தது டிராஃபிக்.

டூர் முடிந்துவிட்டதே என்ற சோகத்தை நொடியில் போக்கினான், கார் கதவைத் திறந்து இறங்கும் முன்னே ஓடி வந்து என் மேல் ஏறிக்கொண்ட ஒன்றரை வயது மகன்!