##~##

வாகனங்களில் லிஃப்ட் கேட்கலாம் என்பதை, ஜெமினி கணேசன் காலத்துப் படங்களில் ஒய்யாரமான மாது, கண்ட மேனிக்கு வளைந்து நெளிந்து கை கட்டை விரலை மேலே தூக்கி, எதிரே வரும் காரை நோக்கி ஆட்டுவதைப் பார்த்துத் தெரிந்துகொண்டு இருப்போம். லிஃப்ட் கேட்பது மற்றும் கொடுப்பது இரண்டுமே வசீகரமானதுதான். எந்த அழகான பெண்ணாவது தன்னிடம் லிஃப்ட் கேட்க மாட்டாளா என்ற ஆழ்மன ஏக்கம், அது என்ன ஆழ்மன ஏக்கம்? மேல்மன ஏக்கமே பைக் மற்றும் கார் ஓட்டும் எல்லா வயது ஆண்களுக்கும் இருக்கும். 

நானெல்லாம் பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கும்போதே சினிமாவின் தாக்கத்தால், சென்னை சென்றால் அழகான பெண்ணிடம் லிஃப்ட் கேட்டு காரில் ஏறிக்கொள்ளலாம்; நைஸாக அந்த அழகான பணக்காரியையே காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையில், தேர்வில் மதிப்பெண் குறைந்தாலும் கவலைப்பட்டது இல்லை. ரியாலிட்டி வேறு மாதிரி இருந்தது. சென்னை வந்த புதிதில் இளம்பெண்கள் அதிகம் காரை ஓட்டிப் பார்க்க முடிந்தது இல்லை. அதிகம் இளம்கிழவிகளே முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு ஓட்டினர். லிஃப்ட் கேட்கும் சூழலே இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்கு பஞ்சர் போடப்படும்!

யாரும் மறந்தும் காரில் லிஃப்ட் கேட்பது இல்லை. 'இந்த கார்காரனுங்க எங்க நிறுத்தப் போறானுங்க’ என்ற நினைப்புதான். பைக்கைத்தான் தனக்கு நெருக்கமாக உணர்ந்து, சொற்ப மக்கள் லிஃப்ட் கேட்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு, பைக்கில் லிஃப்ட் கேட்டு ஏறி, எய்ட்ஸ் ஊசி போட ஒரு கும்பல் அலைகிறது என வதந்தி கிளம்பி நடுநடுங்க வைத்தது.

உண்மையில் லிஃப்ட் கொடுப்பதை, கௌரவ டிரைவர் வேலை எனச் சொல்லலாம். தூரத்துச்

இங்கு பஞ்சர் போடப்படும்!

சொந்தங்கள், குறிப்பாக மனைவி வழிச் சொந்தங்களிடம் தேவாங்குபோல சிக்கிக்கொள்வோம். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பீச், ஷாப்பிங் என எங்காவது டிராப் செய்ய வேண்டி இருக்கும். 'கால் டாக்ஸி புக் பண்ணட்டுமா?’ எனக் கேட்க ஆரம்பிக்கும்போதே, வெங்கலக் கடையில் யானை புகுந்ததைப்போல கிச்சனில் இருந்து சவுண்ட் வரும். அதனால், சந்தடி இல்லாமல் கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்ப வேண்டியிருக்கும். சில தென் தமிழ்நாட்டுச் சொந்தங்கள், 'ரங்கநாதன் தெருவுக்குள்ள கார் போகாது’ என நாம் சொல்வதை உலக மகா பொய் என நினைத்துக்கொண்டு, அமெரிக்க எஃப்.பி.ஐ போல சந்தேகமாகப் பார்ப்பார்கள். உஸ்மான் ரோடும், ரங்கநாதன் ரோடும் சந்திக்கும் இடத்தில் காரை நிறுத்தச் சொல்லி, நிதானமாக இறங்குவார்கள். அதற்குள் பின்னாலிருந்து ஒரு லட்சம் குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் தொப்புள் கொடி அறுத்ததுபோல ஹாரன்கள் அலறும்.

உறவினர்கள் இப்படி என்றால், நண்பர்கள் வேறு வகை. ''மாப்ள, திருவான்மியூர் வழியாதானே போற? அப்படியே என்னை திருவொற்றியூர்ல டிராப் பண்ணிடு'' என்பார்கள். ஊட்டியில் இருந்து கார் ஓட்டி வந்து இருப்போம்; மணப்பாக்கம் உள்ளே வந்து குட்டியான முட்டுச் சந்துவரை ஊடுருவி, வீட்டு வாசலில் டிராப் செய்ய வேண்டும் என பிடிவாதமாக இருப்பார்கள். போன வருடம் கடன் வாங்கிய காலி கேஸ் சிலிண்டரை, ''மாப்ள கொஞ்சம் வெயிட் பண்ணு, சிலிண்டரைத் திருப்பிக் கொடுத்துடறேன்'' எனக் கூறி அரை மணி நேரம் காக்க வைப்பார்கள்.

அதேபோல, பலராலும் பாதிப்புக்குள்ளாகி இருந்த ஒரு தருணத்தில், அலுவலக விஷயமாக பெங்களூருவில் வேலையை முடித்துவிட்டு, தனியாக காரில் சென்னை திரும்பிக்கொண்டு இருந்தேன். பெங்களூருவில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களில் மழை தூற ஆரம்பித்து, வலுக்க ஆரம்பித்தது. பிறகு, கடும் மழையாக உருவெடுத்தது. ஓசூரை நெருங்கியபோது சூறாவளிக் காற்றுடன் பேய் மழை பெய்தது. தற்செயலாக இடது பக்கம் பார்த்தபோது, ஒரு குடும்பம் மழையில் தொப்பலாக நனைந்தபடி பைக்கில் ஊர்ந்துகொண்டு இருந்தது. பைக்கில் தம்பதி, ஒரு சிறுவன் மற்றும் ஒரு கைக்குழந்தை. அந்தக் காட்சியை பார்த்ததும் எனக்குள் இருந்த எம்.ஜி.ஆர் கண்ணை கசக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்தார். அடுத்த நொடி அந்த பைக்கை ஓரம் கட்டி, காரை நிறுத்தி அந்த குடும்பத் தலைவரைத் திட்டினேன். ''ஓரமா நிக்கலாம் இல்லை? ரெண்டு குழந்தைங்க நனையுதே, அறிவு இல்லை?'' என வசை பாடினேன். ''தெரிஞ்ச கடை இருந்தா பைக்கை விட்டுட்டு என் காரில் ஏறுங்க, டிராப் பண்றேன்'' எனக் கூறினேன். இடி மேளம் கொட்ட, மின்னல் மூன்று முறை மின்னி என்னை வாழ்த்தியது.

''தர்மபுரி போகணும். நீங்க சென்னை போறதால, கிருஷ்ணகிரியில இறங்கிக்கிறோம்'' என்றார் குடும்பத் தலைவர். காருக்குள் ஏறியவுடன் மனைவியின் தலையில் தட்டி, ''சாந்தி, துண்டை எடு'' என ஆர்டர் போட்டார். குடையை டிரைவர் சீட்டுக்கு பின்புறம் என் பின் மண்டையில் இடிப்பதுபோல மாட்டினார். சாந்தி தன் காலுக்கு இடையில் வைத்திருந்த விசித்திர வடிவம் உடைய போன நூற்றாண்டுப் பையை குடைய ஆரம்பித்தார். மடியில் இருந்த கைக்குழந்தை கியரை உதைத்து உதைத்து அழுதது. துண்டை எடுத்து கணவரிடம் கொடுத்தார். கு.தலைவர் சட்டையைக் கழட்டுவது சென்டர் மிர்ரரில் தெரிந்தது. துண்டைத் தலையில் வைத்துத் துவட்டுவதற்கு முன்பு குதிரைபோல தலையைச் சிலுப்பினார். கும்பாபிஷேகத் தீர்த்தம் போல எல்லோர் தலையிலும் தண்ணீர் தெறித்தது. உடம்பைத் துவட்டிக்கொண்டு, ''சாந்தி, வேட்டி எடு'' என்றார். பேன்டைக் கழட்டிவிட்டு வேட்டி மாற்றினார். வெறும் ஜட்டியோடு ஒரு மனிதன் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த அரிய காட்சியை அன்றுதான் பார்த்தேன். அதுவும் அந்த ஜட்டி பாரம்பரியம் மிக்க பரம்பரை ஜட்டி போலிருந்தது. ஈரமான துண்டை ஆற்றங்கரையோரம் பிழிவது போல நன்றாகப் பிழிந்து, பையனைத் தூக்கி மடியில் வைத்துத் துவட்ட ஆரம்பித்தார்.

இங்கு பஞ்சர் போடப்படும்!

''ஏய், ஒண்ணுக்குப் போய்ட்டான் போல இருக்குடி. டிராயர் சூடா இருக்கு'' என்று, ஏதோ 'வடை - பஜ்ஜி சூடா இருக்கு’ என்ற டோனில் சொன்னார். ''ஏண்டா, எத்தனை வாட்டிடா உச்சா போவ?'' என மென்மையான குரலில் சாந்தி அலுத்துக் கொண்டார். ''இனிமே உச்சா வந்தா சொல்லணும். அங்கிள் கண்ணாடி இறக்குவாரு. ஜன்னல் வழியா வெளியில உட்டுடணும். என்னா?'' என கண்டிப்பாகச் சொன்னார் சாந்தி.

அடுத்த கணம், ''சார், கொஞ்சம் கண்ணாடியை இறக்குங்க'' என்றார் கு.தலைவர். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. மனைவி சொன்னபடி இவர் ஜன்னல் வழியாக உச்சா போகப் போகிறாரா என மிரண்டு, ''எதுக்குங்க?'' என்றேன் சற்றே கடுமையான குரலில். ''சளி துப்பணும்'' என்று சொல்லிய படியே, தொண்டையைக் கனைத்து சளியைச் சேமிக்க ஆரம்பித்தார்.

லேசாக சென்டர் மிர்ரரில் பார்த்தேன், சிறுவன் ஆய் போவது போல சீட்டில் குத்துக் காலிட்டு அமர்ந்திருந்தான். எனக்கு பகீரென்றது. ''ஏங்க... பையன் ஆய் போறான் போலருக்குங்க, வண்டியை நிறுத்தட்டுமா?'' எனப் பதறினேன்.

''பயப்படாதீங்க, ஆய் போனா அவன் வழக்கமா அழுதுகிட்டேதான் போவான். குளுருக்கு இதமா இப்படி ஒக்காந்து இருக்கான்'' என்றார்.

இப்போது அவன் லேசாக அழ ஆரம்பித்து என் வயிற்றில் புளியைக் கரைத்தான்.  

''டேய் எதுக்குடா அழற? நிறுத்துடா'' என மிரட்டினார். அவனும் அழுகையை நிறுத்திவிட்டான். அழுகையை நிறுத்தலாம். ....யை நிறுத்த முடியுமா? என நான் பயந்தபடியே ஓட்டிக்கொண்டு இருந்தேன். கார் ஓசூரைத் தாண்டி தமிழ்நாட்டு பார்டரில் நுழைந்து ஓடிக்கொண்டு இருந்தது. நான் வழக்கமாக டீசல் போடும் பங்க் வந்தது. காரை டீசல் போட உள்ளே வளைத்தேன். ''ஏங்க, இப்பப் போய் டீசல் போடறீங்க? கிளம்பும்போதே போட வேண்டியதுதானே? மழையால ஏற்கெனவே வண்டி லேட்டா போயிட்டு இருக்கு(!), நாங்க தர்மபுரியில் ஒரு விசேஷத்துக்கு நேரத்துக்குப் போகணும்'' என சீரியசாக அலுத்துக்கொண்டார். நொந்து போய், இதெல்லாம் தேவையாடா உனக்கு என நினைத்தபடியே டீசல் டேங்கை ஃபுல் செய்தேன்.

கார் மீண்டும் ஓடத் துவங்கியது. ஒரு வழியாக கிருஷ்ணகிரி வந்தது. இறங்குவதற்கு முன் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை ஸ்டைலாகக் கையில் ஆட்டியபடி, ''பெங்களூருல பார்ட்டிய டிராப் பண்ணிட்டு ரிட்டர்ன் சவாரி போறீங்களா? கிருஷ்ணகிரியில வேற டிக்கெட் ஏத்திப்பீங்களா?'' எனக் கேட்டு என்னை ஷாக் அடைய வைத்தார் கு.தலைவர்.

அவரின் தவறு ஏதுமில்லை. வழக்கமாக கார் வைத்திருப்பவர் யாரும் லிஃப்ட் கொடுக்க மாட்டார்கள் என்ற பொது எண்ணம்; அதுவும் தானே முன் வந்து ஏற்றிக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை. நானே நிறுத்தி அழைத்து ஏற்றிக்கொண்டதால், என்னை சவாரி பிடித்த டிரைவர் என நினைத்துவிட்டார். நான் ரூபாய் வேண்டாம் என்றதும், சார் செம மகிழ்ச்சி அடைந்து விட்டார். லாட்டரிச் சீட்டில் பரிசு கிடைத்ததுபோல, அவரின் உடல் மொழியே மாறி விட்டது. ஐம்பது ரூபாய் எதிர்பாராமல் சேமிப்பு ஆகிறதே, அந்த மகிழ்ச்சி. நிறைய நன்றி சொன்னார்.

பின் சீட்டை நோட்டமிட்டேன், மொத்த லெதர் சீட் கவரும் காலி. தண்ணீர், சேறு என காரின் பின் பக்கம் டிராக்டர் போல காட்சியளித்தது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கார் ஓட்டும்போது சைடில் எங்கும் பார்க்காமல் நேரே பார்த்து ஓட்டுகிறேன்.

(கியரை மாத்துவோம்)