Published:Updated:

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுச்சேரி to தளி

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுச்சேரி to தளி

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுச்சேரி to தளி

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுச்சேரி to தளி

Published:Updated:
ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுச்சேரி to தளி

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் செல்வதற்காக புதுச்சேரியில் இருந்து அழைத்தார் (044 - 66802926)வாசகர் கே.பாலசுப்ரமணியன் என்கிற பாலா. 

 ##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவரது கார் ஆடி க்யூ-3. கடந்த ஆண்டு செப்டம்பரில்தான் வாங்கியுள்ளார். நம்முடைய பயணங்கள் பெரும்பாலும் நான்கு வழிச் சாலையாகவே அமைவதால், ஒரு மாறுதலுக்காக இரு வழிச் சாலையைத் தேர்ந்தெடுக்கலாம் எனத் திட்டமிட்டோம். ஆடி க்யூ-3, கிட்டத்தட்ட ஒரு எஸ்யூவி தான் என்பதும் ஒரு காரணம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் தளி என்ற ஊர், கர்நாடக எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது. இதை குட்டி இங்கிலாந்து என்றும் சொல்கிறார்கள். காரணம், இங்குள்ள தட்ப வெப்பம் இங்கிலாந்தில் இருப்பதைப் போலவே இருந்திருக்கிறது. அதனால், இப்படி ஒரு புனைப் பெயரை 'தளி’ என்ற கிராமத்துக்குச் சூட்டி இருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.

ஆனால், காடுகள் அழிந்து விளை நிலங்களும், கான்க்ரீட் கட்டடங்களும் முளைத்துள்ள இந்தக் காலகட்டத்தில், அப்படி எல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பது எதார்த்தம். தர்மபுரி தாண்டியதும் மலை மீது ஏறிதான் இந்த ஊருக்குச் செல்ல முடியும். எனவே, எஸ்யூவிக்கு ஏற்ற இடம்தான்.

திட்டமிட்டபடி புதுச்சேரியில் இருந்து காலை 10 மணிக்குப் புறப்பட்டோம். சென்னையில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்யும் பாலாவின் இளைய மகன் கணேஷ் பயணத்தில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் வந்திருந்தார். ஆடி க்யூ-3யில் ஃபுல் டேங்க் டீசலை நிரப்பிவிட்டு, திண்டிவனம் நால் வழிச் சாலையில் சீற ஆரம்பித்தது கார். திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை, தண்ட்ராம்பட்டு, அரூர், தர்மபுரி, தேன்கனிக்கோட்டை வழியாக தளி செல்வது என்று முடிவெடுத்தோம்.   

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுச்சேரி to தளி
ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுச்சேரி to தளி

பாலாவின் சொந்த ஊர் கோவை அருகே இருக்கும் புஞ்சைப்புளியம்பட்டி. புதுச்சேரியில் கடந்த 35 ஆண்டுகளாக வசிக்கிறார். புதுச்சேரி நேரு வீதியில் 'பாரதி காதி’ என்ற பெயரில் கைத்தறி ஷோ ரூம் வைத்திருக்கிறார். புதிதாக ஒரு கார் அறிமுகம் ஆகிறது என்றால், அதை உடனே அவரது வீட்டில் காண முடியும். அந்த அளவுக்கு ஆட்டோமொபைல் பிரியர் பாலா. இவரின் முதல் கார், அம்பாஸடர். அதன் பின்பு டாடா சுமோ, மாருதி 800, ஜென், ஃபோர்டு எஸ்கார்ட், மிட்சுபிஷி லான்ஸர், டொயோட்டா கரோலா, ஃபோர்டு ஐகான், வேகன் ஆர், ஸ்விஃப்ட், சான்ட்ரோ, ஹோண்டா சிட்டி, இனோவா, நிஸான் மைக்ரா, ஆடி என்பது தான் இவர் கடந்து வந்த கார் பட்டியல். ஆனால், எந்த காரையும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வைத்துக்கொள்வது இல்லையாம். ஆனால், எப்போதும் வீட்டில் மூன்று கார்கள் இருக்கும் என்கிறார். தற்போது இருக்கும் கார்கள் இனோவா, மைக்ரா மற்றும் ஆடி.  

ஆடி க்யூ-3 வாங்க என்ன காரணம் என்பதை அவரே சொன்னார். ''லக்ஸ¨ரி செக்மென்டில் ஒரு கார் வாங்கலாம் என தீர்மானித்தேன். பென்ஸ் வாங்கலாம் என்றால், அதற்காக ஒதுக்கும் தொகை மிக மிக அதிகம். பிஎம்டபிள்யூ, வால்வோ, ஆடி ஆகிய கார்களில் ஏதாவது ஒன்றை வாங்கலாம் எனத் தீர்மானித்து கோவையில் மூன்று கார்களையும் டெஸ்ட் செய்து பார்த்தேன். அதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஆடி க்யூ-3தான். ரைடிங் கம்போர்ட், பெர்ஃபாமென்ஸ், பவர், விலை என எல்லாமே எனக்குத் திருப்தியாக இருந்தது. அதானால்தான் இந்த காரைத் தேர்ந்தெடுத்தேன்'' என்றார்.

கார், திண்டிவனத்தை 25 நிமிடங்களில் எட்டி இருந்தது. இங்கிருந்து இனி இரு வழிச் சாலைதான். மேம்பாலத்தில் ஏறி திருவண்ணாமலை சாலையில் திரும்பியது கார். செஞ்சியில் ஒரு டீ பிரேக்; திருவண்ணாமலையில் பூஜை. இங்கிருந்து கிருஷ்ணகிரிக்கு சாலை இருக்கிறது. ஆனால், சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. தண்டராம்பட்டு சாலையில் சென்று அரூர் வனப் பகுதியை நோக்கிச் சென்றது ஆடி.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுச்சேரி to தளி

தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் அரூர் வனப் பகுதியில் பல அபூர்வ வகை மரங்கள் இருக்கின்றன. வெப்ப மண்டலக் காடான இங்கு, அடிக்கடி யானைகள் நடமாட்டம் உண்டு. நாம் சென்றபோது யானைகளைக் காண முடியவில்லை. ஏற்றமும் இறக்கமும், வளைவு நெளிவுகளும் கொண்ட அந்தச் சாலையில் ஆடியின் அபாரமான ஸ்டீயரிங் செயல்பாடு கார் ஓட்டும் ஆவலைத் தூண்டியது. அரூர் கடந்து தர்மபுரி நகரில் நுழைந்தபோது மதியம் ஆகி இருந்தது. அங்கேயே மதிய உணவை முடித்துக் கொண்டு தேன்கனிக்கோட்டை சாலையைப் பிடித்தோம்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுச்சேரி to தளி

பாலக்கோடு, மாரண்டஹள்ளி தாண்டியதும் பஞ்சபள்ளி அணை. அணையில் சுத்தமாக நீர் இல்லை. அதன் பின்பு மலைச் சாலை ஆரம்பிக்கிறது. குறுகலான சாலையில் மேலே கொஞ்சம் கொஞ்சமாக ஏற ஆரம்பித்தது ஆடி க்யூ-3. சின்னச் சின்ன மலைக் கிராமங்கள் கடந்து தேன்கனிக்கோட்டையை எட்டியபோது சூரியன் இறங்கத் துவங்கி இருந்தது. இங்கிருந்து 16 கி.மீ தூரத்தில் இருக்கும் தளியை அடைந்தோம். தளியின் கடைவீதி பரபரப்பாக இருந்தது.

தட்பவெப்ப நிலை சுமார்தான். ஜூலை முதல் டிசம்பர் வரை கிளைமேட் அருமையாக இருக்கும் என்றார்கள். தளி, தேன்கனிக்கோட்டை பகுதியில் பூக்கள் நிறைய விளைகின்றன. அதேபோல் ராகி, அவரை, துவரை, நிலக்கடலை போன்றவை முக்கியமான பயிர்கள். பெரும்பாலும் இங்கு இயற்கை விவசாயம்தான். உரம் தேவையில்லை என்பது இந்த மண்ணின் வளத்தைக் காட்டுகிறது. தளிர் பூக்கள் மாலை வெயிலில் மின்னுகின்றன.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுச்சேரி to தளி
ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - புதுச்சேரி to தளி

இரவு ஒகேனக்கலில் தங்குவது திட்டம். ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை 25 கி.மீ. அங்கிருந்து சுமார் 63 கி.மீ தூரத்தில் இருக்கிறது ஒகேனக்கல். பெங்களூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தச் சாலைதான் குறுக்கு வழி.

இருட்டத் துவங்கிய வேளையில், மீண்டும் மலைச் சாலையில் இறங்கத் துவங்கினோம். புதிதாகப் போடப்பட்ட குறுகலான சாலை, மலையில் இருந்து வழிந்து இறங்கும் நீர் போல பாய்கிறது. அதில், ஆடி க்யூ-3 காரின் சிறப்பான செயல்பாடு நம்மைப் பிரம்மிக்க வைத்தது. ஆட்டோமொபைல் ஆர்வலர்கள், அட்வென்ச்சர் பிரியர்களும் இந்தச் சாலையில் அவசியம் பயணித்துப் பார்த்து அந்தப் பரவசத்தை உணரலாம்.

ஒகேனக்கல்லில் இரவு தங்கி விட்டு, காலையில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளின் அழகை ரசித்துவிட்டு மீண்டும் தேன்கனிக் கோட்டைக்கு மலைச் சாலையில் ஏறினோம். ஓசூர் வழியாக ஆறு வழிச் சாலையாக மாற்றப்படும் சென்னை நோக்கிய சாலையில் சீறியது ஆடி!