Published:Updated:

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to பேக்கல் கோட்டை

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to பேக்கல் கோட்டை

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to பேக்கல் கோட்டை

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to பேக்கல் கோட்டை

Published:Updated:
ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் -  கோவை to பேக்கல் கோட்டை
 ##~##

ட கேரளத்தின் நீண்ட கடற்கரை, மீன்பிடித் தொழிலுக்கு மிகவும் புகழ் பெற்றது. பாரம்பரியம் மிக்க ஊர்களும், தனித்துவம் கொண்ட கலாசாரமும் வடகேரளத்துக்கு உண்டு. 'மலபார்’ எனக் குறிப்பிடப்படும் இந்த ஏரியாவுக்குச் சென்று வரலாம் எனத் திட்டமிட்டபோது, கோவையில் இருந்து அழைத்தார் வாசகர் நவீன். கோவை அருகே உள்ள கேரள எல்லையான வாளையார் பகுதியில் வசிக்கும் நவீன், மோ.வி வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். ஹிந்துஸ்தான் கார்களின் கலெக்‌ஷன் வைத்திருக்கும் நவீன், வின்டேஜ் கார் பிரியர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 நவீனிடம் வடகேரளப் பயணம் பற்றிப் பேசியபோது, ''அந்தப் பகுதிக்கு நான் இதுவரை சென்றது இல்லை. நானும் வருகிறேன்'' என்றார். பயணத் திட்டத்தை வகுத்தோம். காஸர்கோடு அருகே இருக்கும் 'பேக்கல் கோட்டை’ வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்த இடத்தைப் பயண இலக்காக வைத்துக்கொண்டு செல்லலாம் எனத் தீர்மானித்தோம்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் -  கோவை to பேக்கல் கோட்டை

திட்டமிட்டபடி கோவை சென்று காலை 10 மணிக்கு பயணத்துக்கு ஆயத்தமானோம். தயாராக நின்றது நவீனின் பிஎம்டபிள்யூ 5 சிரீஸ் டீசல் இன்ஜின் கொண்ட கார். நவீனின் நண்பரான வினோத் வந்திருந்தார். கேரளாவைச் சேர்ந்த இவர், நவீனின் வின்டேஜ் கார்களுக்கு டிங்கர் வேலை செய்யத் துவங்கி, நெருங்கிய நண்பரானவர். பிஎம்டபிள்யூவின் டேங்க்கை ஃபுல் செய்துவிட்டு பாலக்காடு நோக்கி விரைந்தோம். வாளையார் செக்போஸ்ட் தாண்டி கேரள மாநிலம் நுழைந்ததும், காரை சற்று நிதானமாகவே ஓட்டத் துவங்கினார் நவீன். நம்முடையை சந்தேகத்தை நிவர்த்தி செய்வதுபோலப் பேசினார் நவீன். ''கேரளாவில் போக்குவரத்து போலீஸ் மிகவும் ஸ்ட்ரிக்ட். மணிக்கு 70 கி.மீ வேகத்துக்கு மேல் கார் சென்றால், அபராதம் கட்ட வேண்டும்'' என்று சொல்லிக் கொண்டு இருந்தபோதே, காவல் துறையினர் கை காட்டி காரை நிறுத்தினர். காரின் அருகே வந்த போலீஸ், முன்னிருக்கையில் இருந்த எங்களைப் பார்த்த பிறகு செல்லுமாறு கைகாட்டினார். ''நாம்தான் 60 கி.மீ வேகத்தில் தானே வந்தோம். ஏன் நிறுத்தினார்கள்?'' என்று கேட்ட போது, ''சீட் பெல்ட் அணிந்து இருக்கிறீர்களா என்று பார்க்கிறார்கள்'' என்றார். அப்போது, இன்னொரு விஷயத்தையும் கூறினார் நவீன். ''சீட் பெல்ட், ஸ்பீடு லிமிட் - இது இரண்டும் கண்டிப்பாக காரோட்டிகள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயம். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ஒருமுறை அபராதம் விதித்துவிட்டால், பிறகு அதைக் காட்டியே தப்பிவிடலாம். ஆனால், கேரளாவில் எத்தனை முறை பிடித்தாலும், அபராதம் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்'' என்றார்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் -  கோவை to பேக்கல் கோட்டை

பேசிக்கொண்டே பாலக்காடு நகரின் எல்லையை அடைந்து, கோழிக்கோடு செல்லும் பைபாஸ் சாலையைப் பிடித்து அதில் விரைந்தோம். அகலமான இருவழிச் சாலைதான் என்றாலும், போக்குவரத்து அதிகமாக இருந்தது. அதனால், நிதானத்திலும் நிதானமாக ஊர்ந்தது கார். மன்னார்காடு என்ற ஊரை எட்டியதும் சைலன்ட் வேலி செல்லும் வழியைக் காட்டினார் வினோத். ''இங்கிருந்து 41 கி.மீ தூரம்தான். பொழுதுபோக்குக்கான இடங்கள் இல்லை என்றாலும், அற்புதமான இடம். ஆட்டோமொபைல் பிரியர்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஏரியா'' என்றார் வினோத்.

கேரளச் சாலைகள் பெரும்பாலும் சமமாக இருக்காது. ஏற்றமும் இறக்கமுமாக, வளைவும் நெளிவுமாகத்தான் இருக்கும். நாம் பயணித்த இந்தச் சாலையும் அப்படித்தான் இருந்தது. ''ஒருவேளை கோழிக்கோடு எட்டியதும் தேசிய நெடுஞ்சாலையில் இணைவோம். அந்தச் சாலை இதைவிட சிறப்பாக இருக்க வாய்ப்பு இருக்கிறது'' என்றார் நவீன். எனக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. ஏனென்றால், ஸ்பீடு லிமிட் 70 கி.மீ என்றாலும், பல சமயங்களில் 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்ல முடியவில்லை. காரணம், தமிழகத்தில் ஏதாவது ஊரை நெருங்கும்போது போக்குவரத்து இருக்கும். ஆனால், கேரளாவில் வழியெங்கும் ரப்பர், பாக்கு, தென்னை, பலா மரங்கள் அடர்ந்த தோட்டங்கள் தொடர்கின்றன. அதில், வீடில்லாத தோட்டத்தைக் காண முடியவில்லை. பிஎம்டபிள்யூ, தன்னுடைய சக்தியை வெளிப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டே வந்தது. பெருந்தல்மன்னா என்ற ஊரைக் கடந்து மலப்புரம் புறநகரில் இருந்த ரெஸ்டாரன்டில் காரை நிறுத்தினோம். அருமையான கேரள குத்தரி சாப்பாடு. அதை முடித்துவிட்டு கோழிக்கோடு நோக்கி பயணம் ஆரம்பமானது.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் -  கோவை to பேக்கல் கோட்டை

கோழிக்கோடு நகர் அடைந்து, பீச்சுக்கு வழி விசாரித்துக்கொண்டு சென்றடைந்தோம். கடற்கரையோரம் நிறையக் கட்டடங்கள், மும்பையை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளன. வாஸ்கோடகாமா கால் பதித்த நிலம். கடற்கரையில் போட்டோ ஷூட் முடித்துவிட்டு, காஸர்கோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நுழைந்தோம். கோழிக்கோடு நகரைக் கடக்கும் வரை நால்வழிச் சாலையாக இருந்தது, சட்டென மீண்டும் இருவழிச் சாலையாக மாறியது. சாலை, மீண்டும் வளைவும் நெளிவுமாக ஆரம்பிக்க... நவீன் சோர்ந்துபோனார். அவரிடம் இருந்து காரை வாங்கி நாம் ஓட்ட ஆரம்பித்தோம். காரணம், அப்போது மாலை 4 மணி ஆகிவிட்டது. காலை 10 மணிக்குப் புறப்பட்டு இலக்கின் பாதி தூரத்தில்தான் இருந்தோம்.

மேற்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த தேசிய நெடுஞ்சாலை, கர்நாடக மாநிலம் மங்களூர் வரை செல்கிறது. சாலையை ஒட்டியே இருவழி ரயில் பாதையும் இருக்கிறது. வழியெங்கும் ஐந்து ரூபாய் பாலங்கள் ஏராளம். மேற்குத் தொடர் மலைகளில் உருவாகும் ஆறுகள், கடலில் கலக்கும் முகத் துவாரங்கள் இருக்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ள பாலங்களுக்கான சுங்கம்தான் இந்த ஐந்து ரூபாய்.

தென்கேரளத்தில் காயல்கள் அதிகம். வடகேரளத்தில் ஆறுகள் அதிகம். ஆக தண்ணீருக்குப் பஞ்சமில்லாத மாநிலம் கேரளம். வழியெங்கும் பசுமைதான். ஓரிடத்தில்கூட வறட்சி என்பதற்கான சுவடுகூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் -  கோவை to பேக்கல் கோட்டை

கொயிலான்டி என்ற ஊரைத் தாண்டியதும் வருகிறது பய்யோளி. இதுதான் தங்கமங்கை பி.டி.உஷாவின் ஊர். பய்யோளி தாண்டியதும் புதுச்சேரி பதிவு எண் கொண்ட வாகனங்கள் சாலையில் அதிகமாகத் தென்பட ஆரம்பித்தன. குழப்பத்துடன் இருந்த வினோத்துக்கு புதுச்சேரியின் ஒரு அங்கமான மாஹி பக்கத்தில்தான் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டி இருந்தது. வடகரை என்ற ஊரை எட்டியபோது இருட்டத் துவங்கி இருந்தது. அதனால், அடுத்த ஊரில் தங்கிவிட்டுச் செல்லலாம் என முடிவுசெய்தோம். அடுத்த ஊர்தான் மாஹி.

கோவையில் இருந்து காலை 10 மணிக்குத் துவங்கி, மாலை 6 மணி ஆகியும் பயணம் செய்த தூரம் மொத்தம் 260 கி.மீ-தான். அந்த அளவுக்கு சாலையில் சதிராடிவிட்டோம். ஆனால், பிஎம்டபிள்யூ கார் என்பதால், அலுப்புத் தெரியாமல் இருந்தது என்னவோ நிஜம். மாஹி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஓர் அங்கம். சுமார் 11 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஓர் தீவு என்றும் சொல்லலாம். 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சர்ச் ஒன்று சாலையோரம் இருக்கிறது. மேலும், ஒரு கோட்டையும் அழகிய கடற்கரையும் உண்டு.

பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த இந்த ஊர், மய்யழி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. புதுச்சேரியைப் போலவே இருக்கிறது மாஹி. மிகவும் சின்ன ஊர் என்பதால், விடுதிகள் சில மட்டுமே இருக்கின்றன. அங்கிருந்த விடுதியில் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலை மீண்டும் பயணத்தைத் துவக்கினோம்.

அடுத்த நாள் தலச்சேரி, கண்ணூர், தலிப்பரம்பா கடந்து பள்ளிக்கரை என்ற ஊர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இடது பக்கமாக திரும்பினோம். சுமார் 8 கி.மீ தூரம் சென்றதும் கம்பீரமாக வரவேற்கிறது பேக்கல் கோட்டை. '1500 - 1763 காலகட்டத்தில் இந்தப் பகுதியை ஆண்ட நாயக்கர்கள் பல கோட்டைகளைக் கட்டி இருக்கிறார்கள். அதில், சிவப்ப நாயக்கர்தான் இந்த பேக்கல் கோட்டையைக் கட்டினார்’ என்று இந்திய தொல்பொருள் துறை கூறுகிறது. இன்னொரு சாரர், நாயக்கர்களுக்கு முன்னர் இருந்த கொளத்திரி ராஜாக்கள் காலத்திலேயே இந்தக் கோட்டை இருந்ததாகவும் கூறுகிறார்கள். 1763-ல் கோட்டை ஹைதர் அலி வசம் வந்தது. ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் காலத்தில் மிக முக்கியமான கோட்டையாக இது விளங்கக் காரணம், திப்பு சுல்தானின் மலபார் பகுதிகளைக் கைப்பற்ற இந்த கோட்டை பெரிதும் உதவியதுதான். திப்பு சுல்தான் மறைவுக்குப் பின்னர் ஆங்கிலேயரின் கைகளுக்குச் சென்றது இந்தக் கோட்டை. அதன் பின்பு கோட்டையின் முக்கியத்துவம் குறைந்து கைவிடப்பட்டது.

40 ஏக்கர் பரப்பளவில் நீளமான சுற்றுச் சுவர் கொண்டு கடற்கரையோரம் எழுப்பட்டு இருக்கிறது பேக்கல் கோட்டை. அரபிக் கடலோரம் உள்ள கோட்டைகளில் பெரும்பாலானவை பாறைகளால் உருவானவை அல்ல. கல்லும் அல்லாமல், மண்ணும் இல்லாமல் நிலத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் இறுகிய பாறை போன்ற மண்ணால் உருவானவை. இவ்வளவு காலம் உப்புக் காற்றைத் தாக்குப்பிடித்து கம்பீரமாக இருக்கிறது இந்தக் கோட்டை. உள்ளே இருந்த பல கட்டடங்கள் அழிந்துபோனாலும், கோட்டையின் சுற்றுச் சுவர், அதில் உள்ள மாடங்கள் இன்னும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. மத்திய தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது பேக்கல்கோட்டை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கோட்டைக்கு, கேரளாவின் பல பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்துகொண்டே இருக்கின்றனர். காரணம், கேரளாவில் பழைமையான விஷயங்களில் எஞ்சி இருப்பவற்றுள் இந்தக் கோட்டையும் ஒன்று என்பதுதான்!