Published:Updated:

அமேஸிங்...!

அமேஸிங்...!

அமேஸிங்...!

அமேஸிங்...!

Published:Updated:
அமேஸிங்...!
##~##

2013- ம் ஆண்டின் மிக முக்கியமான கார், ஹோண்டா அமேஸ். ஹோண்டாவின் முதல் டீசல் கார் என்பதால், ஷோ ரூமை எட்டுவதற்கு முன்பாகவே புக்கிங் செய்ய மக்கள் படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்விஃப்ட் டிசையர், டொயோட்டா எட்டியோஸ், டாடா இண்டிகோ உள்ளிட்ட கார்கள் மோதும் பட்ஜெட் மிட் சைஸ் கார் மார்க்கெட்டில், இந்த ஹோண்டா அமேஸ் - மிகப் பெரிய சலனத்தை ஏற்படுத்தும் என்று பலர் கணிக்கிறர்கள். வேறு சிலரோ, இது இந்த செக்மெண்டில் டிரெண்ட் செட்டர் காராகவே இருக்கும் என்று நம்புகிறார்கள்!

குறுகலான சாலைகள், தேசிய நெடுஞ்சாலை என இரண்டுவிதமான சாலைகளிலும், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை கோவாவில் மாறி மாறி டெஸ்ட் டிரைவ் செய்தது மிக நல்ல அனுபவம்.

டிசைன்

'ஸ்மார்ட் மைக்ரோ லிமோஸின்’ என அமேஸைப் புகழ்கிறது ஹோண்டா. அதாவது, 'லிமோஸின் அளவுக்கு அதிக இடவசதிகொண்ட சொகுசான காராகவும், அதே சமயம் நகருக்குள் எளிதாக வலம் வரக்கூடியதாகவும் அமேஸ் இருக்கும்’ என்கிறது ஹோண்டா. உண்மையிலேயே கான்செப்ட் கொள்கையில் 90 சதவிகிதம் ஹோண்டாவுக்கு இது வெற்றி.

அமேஸிங்...!

டிசைனைப் பொறுத்தவரை, ஹோண்டா அமேஸை 'அமேஸிங்’ என்று சொல்ல முடியாது. எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஸ்பென்ஸர்ஸ் போன்ற இடங்களுக்கு இதை ஓட்டிச் சென்றால், 'ஹோண்டாவின் புதிய கார்!’ என்று யாரும் இனம் கண்டு இதை ஆவலோடு நெருங்க மாட்டார்கள். சாலைகளில் நாம் பார்க்கும் சராசரியான, சாதாரண ஒரு மிட் சைஸ் காராகவே இருக்கிறது. ஹோண்டா பிரியோவின் முன் பக்கம் அமேஸில் அப்படியே இருப்பதால், புது காருக்கான எந்த அடையாளமும் தனித்துவமும் இல்லாமல் இருக்கிறது.

முன் பக்கம், ஹோண்டாவின் 'லோகோ’ உடன் இணைந்திருக்கும் இரட்டை க்ரோம் கிரில் மற்றும் பக்கவாட்டுக் கண்ணாடிகளிலேயே இண்டிகேட்டர் விளக்குகளைத் தாண்டி பிரியோவுக்கும், அமேஸுக்கும் முன் பக்கம் எந்த வித்தியாசமும் இல்லை.

டிக்கி இணைந்த செடான் கார் என்பதால், பிரியோவைவிட நீளத்தில் 380 மிமீ கூடியிருக்கிறது. இது ஸ்விஃப்ட் டிசையரைவிட 5 மிமீ குறைவு. அதேபோல் அகலம், உயரம், வீல்பேஸ் அளவுகளிலும் ஹோண்டா அமேஸ் ஸ்விஃப்ட் டிசையர் மற்றும் டொயோட்டா எட்டியோஸைவிட சின்ன கார். அளவுகளில் பின்தங்கி இருந்தும் ஒரு முழுமையான செடான் காராக அமேஸ் வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான் ஆச்சரியம்.

பின் பக்கத்தைப் பொறுத்தவரை, ஹோண்டா சிட்டியை நினைவுபடுத்துகிறது அமேஸ். டெயில் விளக்குகள் கிட்டத்தட்ட சிட்டி போலவே இருக்கின்றன. கூடுதலாக இதில், டெயில் லைட்டுகளை இணைக்கும் க்ரோம் பட்டை புதிதாக இடம்பெற்று இருக்கிறது.

காரின் பின் பக்கம், ஸ்விஃப்ட் டிசையரைப் போல பாதியிலேயே முடிந்துவிடுவது போல இல்லாமல், முழுமையான 3-பாக்ஸ் காராக இருக்கிறது. அமேஸின் முக்கிய பலமே இதன் டிக்கியில் இருக்கும் இட வசதிதான். வெறும் 316 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிசையரைவிட, 400 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய டிக்கியாக இருக்கிறது. பில்டு குவாலிட்டியைப் பொறுத்தவரை ஹோண்டாவின் தரத்தை உணர முடிகிறது.

பெட்ரோலுக்கும் டீசலுக்கும் வெளித் தோற்றத்தைப் பொறுத்தவரை பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. பெட்ரோல் மாடலில் 10 ஸ்போக் அலாய் வீல் தனித் தனியாக இருக்கும் நிலையில், டீசல் மாடலில் இரண்டு இரண்டு ஸ்போக்குகளாக இணைந்து இருக்கின்றன. பெட்ரோல் மாடலின் பின்பக்கம் 'ஐ-விடெக்’ என்றும், டீசல் மாடலில் 'ஐ-டிடெக்’ என்றும் எழுதப்பட்டுள்ளது.

அமேஸிங்...!

உள்ளே...

அமேஸிங்...!

காரின் உள்பக்கத்தில், டிசைனைப் பொறுத்தவரை எந்தப் புதுமையும் கிடையாது. பிரியோவின் அதே டேஷ்போர்டு. பிரியோவில் இருப்பது போலவே சிடி ப்ளேயர் வசதி இதிலும் இல்லை. அதற்குப் பதில் ஐ-பாட், யுஎஸ்பி கனெக்ட் செய்து பாடல்கள் கேட்கும் வசதி உண்டு! முன் பக்க, பின் பக்க ஹெட் ரெஸ்ட்டுகளை அட்ஜஸ்ட் செய்யும் வசதியும் இல்லை. ஆனால், சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யலாம். ஸ்டீயரிங்கின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதியும் அமேஸில் இருக்கிறது. பக்கவாட்டுக் கண்ணாடிகளை அட்ஜஸ்ட் செய்யும் பவர் மிரர் வசதியும் உண்டு. பாதுகாப்புக்கு இரண்டு காற்றுப் பைகளும், ஏபிஎஸ் பிரேக்ஸும் இருக்கின்றன.

இட வசதி...

முன்பக்க இருக்கைகளைப் பொறுத்தவரை, 'இவ்வளவு இடமா?’ என வியக்கவைக்கிறது அமேஸ். கால்களை நீட்டி, மடக்கி உட்கார தாராளமான இடம் இருப்பதோடு, இருக்கைகள் மிகவும் சொகுசாக இருக்கின்றன. எவ்வளவு நேரம் தொடர்ந்து பயணித்தாலும் உடல் சோர்வு ஏற்படவில்லை. பின் பக்கத்திலும் தாராள இட வசதி இருப்பதுதான் அமேஸின் ப்ளஸ். ஹெட் ரூம், லெக் ரூம் எதிலும் குறைவில்லை. இரண்டு பேர் தாராளமாகவும், மூன்று பேர் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தும் உட்காரலாம்.

உள்ளே தண்ணீர் பாட்டில், ஜூஸ் கேன்கள் வைக்க அதிக இடங்கள் இருக்கின்றன. ஆனால், க்ளோவ் பாக்ஸ் மிகவும் சிறிதாக இருக்கிறது. கியர் லீவர் மிகவும் ஸ்போர்ட்டியாக இருக்கிறது. எரிபொருள் டேங்கின் கொள்ளளவு 35 லிட்டர்.

பெர்ஃபாமென்ஸ்

இந்தியாவில் முதன்முறையாக ஹோண்டா வெளியிட்டு இருக்கும் டீசல் கார் என்பதுதான், அமேஸின் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்குக் காரணம். ஹோண்டாவின் முதல் டீசல் இன்ஜின் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்கு முன்பு பெட்ரோல் இன்ஜினைப் பற்றிப் பார்ப்போம்.

பெட்ரோல்

அமேஸிங்...!

பிரியோ மற்றும் ஜாஸில் இருக்கும் அதே 1.2 லிட்டர் ஐ-விடெக் இன்ஜினுடன் வெளி வந்திருக்கிறது அமேஸ். இது 6000 ஆர்பிஎம்-ல் அதிகபட்ச சக்தியாக 88 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. அதேபோல், 4500 ஆர்பிஎம்-ல் 11.11 kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் அமேஸ் பெட்ரோல் மாடல் வர இருக்கிறது.

மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் காரின் பெர்ஃபாமென்ஸ், வியக்கவைக்கும் அளவுக்கு இல்லை. நகருக்குள் ஓட்டுவதற்குச் சிறப்பாக இருந்தாலும், நெடுஞ்சாலையில் ஓட்டும்போது பவர் இல்லாமல் திணறுகிறது. நெடுஞ்சாலையில் ஓவர்டேக் செய்ய வேண்டும் என்றால், கியர்களைக் குறைத்து, வேகம் பிடித்து... என மீண்டும் முதலில் இருந்து வர வேண்டியிருக்கிறது. பெர்ஃபாமென்ஸில் அமேஸ் சொதப்புவதற்கு மிக முக்கியமானக் காரணம் மைலேஜ். அமேஸின் பெட்ரோல் இன்ஜின் அதிக மைலேஜ் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ட்யூன் செய்யப்பட்டு இருப்பதால், பவர் மற்றும் பெர்ஃபாமென்ஸில் சமரசம் செய்துள்ளது ஹோண்டா.  

பெட்ரோல் மேனுவல் மாடலைவிட ஆட்டோமேட்டிக் பெட்ரோல் மாடல் சிறப்பாக இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் மாருதி ஸ்விஃப்ட் டிசையரைத் தவிர, வேறு எந்த காரிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் இல்லை. ஸ்விஃப்ட் டிசையரில் இருப்பது வெறும் 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ். ஆனால், அமேஸில் இருப்பது 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்பதால், பெர்ஃபாமென்ஸ் குறை சொல்ல முடியாது. மேனுவல் கியர் பாக்ஸைப் போல இன்ஜின் மந்தமாக இல்லை. நகருக்குள் பயணிக்க ஓகே!

அமேஸிங்...!

டீசல்

பெட்ரோல் காரை ஓட்டிவிட்டு டீசல் காருக்குள் உட்கார்ந்தால், அமேஸ் உண்மையிலேயே, 'அமேஸிங் கார்!’. 4 - சிலிண்டர்கள், 1498 சிசி ஐ-டிடெக் டீசல் இன்ஜினைக் கொண்டிருக்கிறது அமேஸ். ஆல் அலுமினியம் இன்ஜினான அமேஸின் டீசல் இன்ஜின், இந்த செக்மென்ட் கார்களில் குறைந்த எடை கொண்டது. நம்பவே முடியாத அளவுக்கு பவர்ஃபுல் டீசல் கார் இது. ஸ்விஃப்ட் டிசையர் 75 bhp, டொயோட்டா எட்டியோஸ் 68 bhp, டாடா இண்டிகோ 70 bhp என எல்லோருமே அடக்கி வாசிக்க, 100 bhp சக்தியை அமேஸின் டீசல் இன்ஜினுக்குள் செலுத்தியிருக்கிறது ஹோண்டா. போட்டியாளர்களைவிட கிட்டத்தட்ட 30 bhp சக்தி அதிகம் எனும்போது, இதன் பெர்ஃபாமென்ஸ் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.

ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்தால், சீறுகிறது அமேஸ் டீசல். கோவாவில் பெரிய சாலைகள் எதுவும் இல்லாதால், காரின் முழுமையான வேகத்தைச் சோதிக்க முடியவில்லை. ஆனால், சின்ன கேப் கிடைத்தாலும் ஆக்ஸிலரேட்டரை அழுத்தினால், சட்டென மணிக்கு 140 கி.மீ வேகத்தைத் தாண்டுகிறது. இதனால், நெடுஞ்சாலையில் பெரிய செடான் மற்றும் எஸ்யூவி கார்களுடன் வேகத்தில் போட்டி போடுகிறது அமேஸ். 5-ஸ்பீடு கியர்பாக்ஸில் டர்போ-லேக் எதுவும் இல்லை. பவர் டெலிவரி சீராக இருப்பதும் அமேஸ் டீசலின் பெரிய ப்ளஸ்.

பெர்ஃபாமென்ஸ் ஓகே! ஆனால், டீசல் இன்ஜின் என்றால், அதிர்வுகள் அதிகம் இருக்குமே என்று எதிர்பார்த்தால், அதிர்வுகள் அற்றதாக அமேஸ் இன்ஜினைத் தயாரித்து தனது தரத்தை நிரூபித்து இருக்கிறது ஹோண்டா. டீசல் இன்ஜினுக்கான ஆயிலை ஹோண்டாவே தயாரிக்கிறது. 'இது, குறைந்த பிசு பிசுப்புத்தன்மை கொண்டதாக இருக்கும். ஆனால், இன்ஜினின் ஆயுட்காலத்தையும் அதிகரிக்கும்’ என்கிறது ஹோண்டா.

பெட்ரோல் மாடலைவிட, டீசல் மாடலின் எடை கிட்டத்தட்ட 110 கிலோ அதிகம். ஆனால், பவர்ஃபுல் இன்ஜின் என்பதால் இது ஒரு மைனஸாகத் தெரியவில்லை.

ஓட்டுதல்

ஓட்டுதல் தரத்தைப் பொறுத்தவரை அமேஸில் குறை ஏதும் இல்லை. முன் பக்கம் மெக்ஃபர்சன் ஸ்ட்ரட், பின் பக்கம் டார்ஷன் பீம் சஸ்பென்ஷனுடன் இருக்கிறது அமேஸ். இது, மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது அலுங்கல் குலுங்கல்கள் எதுவும் காருக்குள் வராமல் பார்த்துக்கொள்கிறது. கையாளுமையைப் பொறுத்தவரை, ஸ்டீயரிங் கைகளின் அசைவுக்கு ஏற்ப காரைத் திருப்புகிறது. ஸ்டெபிளிட்டியும் சிறப்பாக இருப்பதால், அதிக வேகத்தில் பயணிக்கும்போதும் ஆட்டம் எதுவும் காருக்குள் தெரியவில்லை. ஹோண்டா அமேஸின் மற்றொரு முக்கிய பலம். இதன் டர்னிங் சர்க்கிள் ரேடியஸ். பெட்ரோல் மாடல் 4.5 மீட்டரும், டீசல் மாடல் 4.7 மீட்டரும் டர்னிங் சர்க்கிள் ரேடியஸ் கொண்டிருப்பதால், காரை சட்டென 'யு-டர்ன்’ அடித்துத் திருப்பவும், பார்க்கிங் செய்யவும் வசதியாக இருக்கிறது. முன் பக்கம் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக்குகளைக் கொண்டிருக்கும் அமேஸின் பிரேக்குகளும், பெர்ஃபாமென்ஸில் சிறப்பு.

மைலேஜ்

காரின் உண்மையான மைலேஜை இந்த இதழில் வெளியிட முடியவில்லை. ஆனால், 'அராய் சான்றிதழ்படி பெட்ரோல் - மேனுவல் அமேஸ் லிட்டருக்கு 18 கி.மீ, ஆட்டோமேட்டிக் 15.5 கி.மீ மைலேஜ் தரும்’ என்கிறது ஹோண்டா.

அமேஸிங்...!

ஆனால், நாம் டெஸ்ட் டிரைவ் செய்தபோது நகருக்குள் 12 கி.மீ, நெடுஞ்சாலையில் 15 - 16 கி.மீ மைலேஜ் தந்தது பெட்ரோல். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைப் பொறுத்தவரை 10-11 கி.மீ-தான் மைலேஜ் தந்தது. டீசல் காரை வாங்குவதே மைலேஜ் அதிகம் கிடைக்கும் என்பதற்காகத்தான். அதனால், அமேஸின் மைலேஜும் அமேஸிங்காக இருக்க வேண்டியது கட்டாயம். அந்த வகையில் அமேஸ் டாப் கிளாஸ். 'அராய் சான்றிதழ்படி லிட்டருக்கு 25.8 கி.மீ மைலேஜ் தரும்’ என்று ஹோண்டா சொன்னாலும், நமது சின்ன டெஸ்ட்டிங்கில் லிட்டருக்கு 20 கி.மீ வரை மைலேஜ் தந்தது அமேஸ். இது, இந்த செக்மென்ட்டிலேயே எந்த காரும் தராத மைலேஜ்!

அமேஸிங்...!

15 ஆண்டுகளுக்கு முன்பு, ஹோண்டாவின் சிட்டி எப்படி ஒரு செக்மென்ட் லீடராக இடம் பிடித்ததோ, அதே வகையில் இப்போது அமேஸ் இந்தியாவின் கார் மார்க்கெட்டில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கும். ஹோண்டாவின் தரத்தோடு, முழுமையான பவர்ஃபுல் டீசல் இன்ஜினைக்கொண்டு அமேஸைத் தயாரித்திருக்கிறது ஹோண்டா. பெட்ரோலைப் பொறுத்தவரை அமேஸில் வியக்கவைக்கும் விஷயங்கள் எதுவும் இல்லை. ஆனால் டீசல், பவர்ஃபுல் பெர்ஃபாமெர். ஃபியட்டின் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜினைவிட ஹோண்டாவின் இந்த ஐ-டிடெக் இன்ஜின் ட்ரெண்ட் செட்டராக அமையும் என்பதால், அமேஸ¨க்கு வெற்றி காத்திருக்கிறது!

சார்லஸ்