Published:Updated:

இங்கு பஞ்சர் போடப்படும்!

இங்கு பஞ்சர் போடப்படும்!
இங்கு பஞ்சர் போடப்படும்!

இங்கு பஞ்சர் போடப்படும்!

 ##~##

ம் நாட்டில் ஹாரன் அடிக்கக் கூடாது’ என ஒரு நாளை சமீபத்தில் கடைபிடித்தோம்.  ஆனால், அன்றுகூட பலரும் ஹாரன் அடித்தபடிதான் இருந்தனர். வெளிநாடுகளில், 'ஹாரன் அடிக்கும் நாள்’ என ஒரு நாளைக் கொண்டாடுவதாகக் கேள்விப்பட்டேன். தன் வீட்டுக்கு எதிரே காரை நிறுத்திவிட்டு, சில நிமிடங்கள் ஜாலியாக ஹாரன் அடிப்பார்களாம். அதற்கு என்ன அர்த்தம் என்றால், வருடத்தில் மற்ற 364 நாட்களும் ஹாரன் அடிக்க மாட்டேன் என்பதாம். 

நாம் இப்படி தனித்துவமாக இருப்பது, ஹாரன் அடிக்கும் விஷயத்தில் மட்டும்தானா? அது எப்படி - காரோ, பைக்கோ எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டுக் கிளம்பி ரோட்டுக்கு வந்த அடுத்த கணம், பல தனித்துவமான குணாதிசயங்கள் நம் மூளைக்குள் புகுந்து குத்துக்கால் போட்டு குந்திக்கொண்டு டிராஃபிக்கை நாறடிக்கின்றன.

'லேன் டிஸிப்ளின்’ என ஒரு சொல் இருப்பதே...அது பலருக்குத் தெரிவதில்லையா அல்லது பெட்ரோலோ, டீசலோ போடும்போது டாஸ்மாக் சரக்கையும் கலந்து ஊத்திவிடுகிறார்களா எனக் குழப்பமாக உள்ளது. எந்த வாகனமாக இருந்தாலும், ஒரே லேனில் சீராகத் தொடர்ந்து செல்வது இங்கு அபூர்வம்!

இங்கு பஞ்சர் போடப்படும்!

அதிலும் பைக் இருக்கிறதே, அது குடிகாரன் போலவே சாலையின் இடதுபுறம் இருந்து வலதுகோடிக்குச் செல்லும். பின்பு, வலது கோடியில் இருந்து இடதுகோடிக்கு வரும். அது மட்டுமா...? காருக்குள் 'தேமே’ என உட்கார்ந்து ஓட்டிக் கொண்டு இருக்கும் ஒரு கிழவனாரை நோக்கி கை நீட்டி, உதட்டை அஷ்டகோணலாக்கி, பல்லைத் துருத்தி, கண்ணைப் பிதுக்கி, இவற்றையெல்லாம் ஒரே விநாடியில் செய்து திட்டி விட்டு மறைந்து விடுவார் பைக் ஓட்டி. 'ஏன் இப்படி ஒரு தரிசனமும் திட்டும்’ என கார் ஓட்டும் கிழவனாருக்குக் கடைசிவரை தெரியாது.

நான் போக்குவரத்துத் துறை மந்திரி ஆனால், சாலைகளில் S என்ற ஆங்கில எழுத்துபோல லேன் வரையச் சொல்லி, அதில் பைக்குகளைப் போகச் சொல்வேன். நம் மக்கள் இந்த முறையில்தான் நெடுங்காலமாகச் சென்று பழகியிருப்பதால், அவர்களுக்கு அது வசதியாக இருக்கும்.

சின்னப் பிரச்னைக்கு நடு ரோட்டில் வண்டியை நிறுத்தி டிராஃபிக்கை ஜாம் செய்து, கொள்ளுத் தாத்தா வரை வம்புக்கு இழுத்து, கெட்ட வார்த்தையில் திட்டும் ஹாபி கொண்ட ஒரு கூட்டம் எந்நேரமும் அலைந்து கொண்டு இருக்கிறது.

இந்த டிராஃபிக்கில் சூப்பர் ஹீரோ யார் எனில், 'பிரசவத்துக்கு இலவசம்’ என எழுதி வைத்திருக்கும் ஆட்டோதான். அபார்ஷன் இலவசம் என எழுதி வைத்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு வயிற்றைக் கலக்கி, ஜாயின்ட் ஸ்பேர் பார்ட்ஸை எல்லாம் லூஸாக்கி, இதயம் வெளியே வந்து உள்நாக்கைத் தொட்டுச் செல்லும் அளவுக்கு அட்வென்சர் டிராவலை அசால்ட்டாகக் காட்டுவார்கள்.

அடிக்கடி ஏதேனும் காரில் தேய்த்து,   மஞ்சள் கலரில் மாடர்ன் ஆர்ட் போட்டுவிட்டு, அதற்கு ராயல்டி  கேட்டபடி நடு ரோட்டிலோ, ரோட்டோரமாகவோ நின்று கட்டப் பஞ்சாயத்து நடத்திக் கொண்டு இருப்பது, தொன்று தொட்டு நம் நாட்டில் நடைபெற்றுவரும் சடங்கு.

ஐடி புரட்சியால் பலரும் கார் வாங்கிவிட்டனர். பைக் ஓட்டிய பழக்கத்திலேயே காரை ஓட்டினால் விளங்குமா? இங்கு ஓடும் பல கார்கள் மூஞ்சியிலும் டிக்கியிலும் குத்து வாங்கி இருக்கும். பக்கத்தில் சின்ன கேப் கிடைத்தாலும் பைக் போல சடாரெனத் திருப்ப வேண்டியது, சைடிலும் ஒரு குத்து வாங்க வேண்டியது.

மார்க்கெட், சின்ன குறுக்குச் சந்து மற்றும் சில ஜனசந்தடி மிக்க ஏரியாக்களில், இந்த கார் காரர்கள் பூந்து அடிக்கும் கூத்து சொல்லி மாளாது. இவர்களால்தான் பிரச்னை என்பதே தெரியாமல் ஹாரனை வேறு விடாமல் மலச் சிக்கல் வந்தவர் போல அடித்துக் கொண்டே இருப்பார்கள்.

மழைக் காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் காரை வேகமாகச் செலுத்தி பாதசாரிகள் மீது பாலாபிஷேகம் செய்து விட்டு, அவர்களின் திருவாயிலிருந்து தன் ரிஷி மூலத்தையே கேள்வி கேட்கும் வசை மொழிகளை வலிந்து போய் வாங்கிக் கட்டிக் கொள்வார்கள்.

இங்கு பஞ்சர் போடப்படும்!

சிக்னலில் சிவப்பு விளக்கு இருக்கும்போது தொடர்ந்து ஹாரன் அடிப்பது இவர்களின் பொழுதுபோக்கு. கடும் டிராஃபிக்கில் நடு ரோட்டில் பெரிய காரை நிறுத்தி, பின்னால் வாகனங்கள் கதறிக்கொண்டு இருக்க... தன் பெரிய குடும்பத்தையே காரிலிருந்து அன்லோடு செய்வார்கள். சில கார்காரர்கள் ஹாரன் அடித்து சைடு கேட்பார்கள்; கேட்டுக் கொண்டே இருப்பார்கள்; வழி இருக்கும். ஆனால், முந்த மாட்டார்கள். நாம் நம் காரை ரோட்டோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி வழிவிட வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் அவர்கள்!

பகல் நேரத்தில் லாரிகள் சிட்டிக்குள் நுழைய தற்போது தடை இருப்பதால், இரவில்தான் லாரிகளின் டிஸ்கோ டான்ஸ் நடக்கிறது.

எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல், 'நாங்க பார்க்காத டிராஃபிக்கா?’ என எந்த சிக்னலையும் மதிக்காமல் எந்த ரூல்ஸையும் ஃபாலோ செய்யாமல் சாதனை புரிந்து கொண்டிருப்பது டவுன் பஸ்கள் எனப்படும் மாநகரப் பேருந்துகள். யாரும் இந்த பஸ்களை ஓவர் டேக் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், 70 சதவிகிதம் ஓவர்டேக் செய்த நிலையில் பஸ்ஸைத் தேவையில்லாமல் வளைத்து நெருக்கடி கொடுப்பார்கள்.

டிராஃபிக் ரூல்ஸை மதிக்காததால், உயிர் போன பல ரியல் லைஃப் சம்பவங்கள் பலருக்கும் தெரியும். இதைப்போல சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், இது போன்ற செய்திகள் நமக்கு அதிர்ச்சி ஏதும் அளிப்பதில்லை என்பதே அதிர்ச்சியானது.

நண்பன் ஒருவனுக்கு நீண்ட நாள் கழித்து பெண் பார்க்கும் வைபவம் கூடி வந்தது. பெண் வீடு சென்னை. நண்பனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வெளியூரில் இருந்து வந்து நேரடியாக பெண் வீட்டுக்குச் சென்றுவிடுவதாகவும், என்னிடம் கார் இருந்ததால், இவன் என்னுடன் செல்வதாகவும் திட்டம். கடுமையான 'பீக் ஹவரி’ல் பெண் பார்க்க நல்ல நேரம் குறித்திருந்தார்கள். நண்பனை அழைத்துச் செல்வதற்காக அவன் தங்கி இருந்த மேன்ஷனுக்குச் சென்றேன். நண்பனைக் காணோம். கேட்டால், 'பியூட்டி பார்லரில் இருக்கிறேன்’ என்றான். 'நேரம் ஓடிட்டே இருக்கு, நீ இங்க உக்காந்துட்டு இருக்கே?’ என்று பதறினால், 'மச்சி உன் டிரைவிங் பத்தி எனக்கு நல்லா தெரியும். நேர்லயே பலமுறை பார்த்திருக்கேன். ஒரு அழுத்து அழுத்தினா, 20 நிமிஷத்துல கொண்டு போய்ச் சேத்துடுவ!’ என்றான்.

'ராசா... அது வேற, இது வேற. சிட்டியில் பீக் ஹவர்ல ஆம்புலன்ஸாலயே ஒண்ணும் பண்ண முடியாதுடா’ என எச்சரித்துவிட்டு, அவனைத் தூக்கி காரில் போட்டுக் கிளம்பினால், அவன் இருக்கும் பகுதியில் இருந்தே வெளியே வர முடியவில்லை. அப்படி ஒரு டிராஃபிக் நெரிசல்.

ஊர்ந்தும், நகர்ந்தும் மெயின் ரோட்டைப் பிடித்து ஒரு சிக்னலைத் தாண்டுவதற்குள் ஏழு முறை மொபைலில் அழைப்பு வந்துவிட்டது. ஒவ்வொரு மொபைல் அழைப்பும் இவனுக்கு 50 மில்லி வியர்வையை உண்டு பண்ணியது. டென்ஷனில், ஃபேஷியல் செய்த குரங்கைப் போல நண்பன் முகம் மாறி விட்டது. நத்தை போல நகர்ந்து நகர்ந்து பலரைத் திட்டி, பலரிடம் திட்டு வாங்கி, பெண் வீடு சென்று சேர்ந்தபோது, குறித்த நேரத்தைவிட 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாகி இருந்தது.

உள்ளே தாவி ஓடினான். அறைக்குள் இருந்த பெண்ணை அழைத்தனர். சிவனிடம் நெற்றிக் கண்ணைக் கடன் வாங்கி வந்த காளி போல பெண் வந்து அமர்ந்து முறைத்தார். மேக்கப் சற்றே உருகி வழியத் தொடங்கி இருந்தது. நண்பன், 'சாரி... டிராஃபிக்’ என்று இழுத்தான் ஈனஸ்வரத்தில். அதை காதிலேயே வாங்காமால், பெண் விருட்டென எழுந்து உள்ளே சென்றுவிட்டார். குடித்த காபிக்கு, உறவினர்கள் ஏதோ பேசி மெழுகி பின் கிளம்பிச் சென்றனர்.

காரில் திரும்ப வரும்போது சோகமாக, 'இந்த பாழாப் போன டிராஃபிக் ஒருத்தன் லைஃப்பையே கெடுத்துடுச்சே!’ என்றவன், திடீரென வெறி வந்தவன் போல, 'அடுத்த முறை பொண்ணு பார்க்கும் போது, மொத நாளே பொண்ணு வீட்டுக்குப் பக்கத்துல ரூம் போட்டுத் தங்கிடணும்டா’ என்றான்.

நல்ல யோசனைதான்!

(கியரை மாத்துவோம்)

அடுத்த கட்டுரைக்கு