பிரீமியம் ஸ்டோரி
 ##~##

மெரிக்காவில் சொந்த வீடு, கை நிறைய சம்பளம் என எந்தக் குறையும் இல்லை. அவருக்கு என்ன தோன்றியதோ,   'பயணங்களில்தான் என் வாழ்க்கை இருக்கிறது!’ என்று, தான் பார்த்த வேலை, வீடு எல்லாவற்றையும் உதறிவிட்டு, சிகாகோ நகரில் இருந்து கிளம்பி, ஒரு நாடோடிபோல பல நாடுகளுக்கு பைக்கிலேயே சுற்றிவிட்டு தன் தாய்நாடான நம் நாட்டுக்குத் திரும்பி இருக்கிறார். சென்னை வந்து இறங்கியவரிடம் பேசினேன்.

எப்படி ஆரம்பித்தது இந்தப் பயணம்?

சின்ன வயதிலேயே என்னுடைய பயணம் துவங்கி விட்டது. பிறந்தது ஹைதராபாத். அப்பாவுக்கு கிழக்கு ஆஃப்ரிக்காவில் உள்ள ஜாம்பியாவில் வேலை கிடைக்க, என் குழந்தைப் பருவம் அங்கேதான் கழிந்தது. அதன் பின்பு, கொடைக்கானல் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். இங்கு பள்ளிப் படிப்பை முடித்த பின், அமெரிக்காவில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தேன். பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது. இருந்தாலும் ஏதோ ஒன்று என்னைப் பயணங்களை நோக்கியே தள்ளிக்கொண்டு இருந்தது. அதனால், சுஸ¨கி DR650 பைக் ஒன்றை வாங்கி, அமெரிக்கா முழுக்கச் சுற்றினேன். என் பைக்கை 'சாண்ட்ரினா’ எனச் செல்லமாக அழைப்பேன்.

அப்போதுதான் அமெரிக்காவில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது. இதுதான் சமயம் என இருந்த வேலையை உதறிவிட்டு, வீடு சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு, 'எப்படியும் இந்தியாவுக்குத்தான் போகப் போகிறோம். பைக்கிலேயே போகலாம்’ என்று கிளம்பிவிட்டேன். வீட்டில்கூட முதலில் நல்ல திட்டு. பிறகு வேறு வழியில்லாமல், 'சரி பத்திரம்’ என வழியனுப்பினார்கள். இப்படித்தான் ஆரம்பித்தது என் பயணம்.

94,933 கி.மீ... 1,134 நாட்கள்... 32 நாடுகள்!

எந்தெந்த நாடுகள் வழியாக இங்கே வந்தீர்கள்? நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்குமே?

மார்ச் 2010-ல் அமெரிக்காவில் இருந்து கிளம்பி மெக்ஸிகோ, வெனிசுலா, பொலிவியா, பிரேசில் என தென் அமெரிக்கா முழுக்கச் சுற்றினேன். பிறகு, அர்ஜென்டினாவில் இருந்து கப்பலில் என் செல்ல சாண்ட்ரினாவை ஏற்றிக் கொண்டு ஐரோப்பா சேர்ந்தேன். அங்கு ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், செக் குடியரசு, சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் சுற்றிவிட்டு, ஆஃப்ரிக்காவின் எகிப்து நாட்டை கப்பல் மூலம் அடைந்தேன்.

அங்கிருந்து கிழக்கு ஆஃப்ரிக்க நாடுகள் வழியாக தென் ஆஃப்பிரிக்க நாடுகள் முழுவதும் சுற்றிவிட்டு, இந்தியா நோக்கிப் பயணப்பட்டேன். இந்த முறை என்னால் கப்பலில் பயணிக்க முடியவில்லை. அதனால், நான் விமானத்தில் கிளம்பி வந்து விட்டேன். ஆனால், சாண்ட்ரினா - கப்பலில் வந்துகொண்டு இருக்கிறது.

அமெரிக்காவில் கிளம்பிய நாள் துவங்கி மொத்தம் 1,138 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, அதாவது, 32 நாடுகளைக் கடந்து, 94,933 கிலோ மீட்டர்கள் பயணப்பட்டு, கடைசியாக இந்தியா வந்துள்ளேன்.

94,933 கி.மீ... 1,134 நாட்கள்... 32 நாடுகள்!
94,933 கி.மீ... 1,134 நாட்கள்... 32 நாடுகள்!

இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் நேசித்தேன். எந்த ஊருக்குப் போனாலும், முடிந்தவரை அங்கு ஹோட்டல்களில் தங்குவதைத் தவிர்ப்பேன். ஏதாவது வீட்டில்தான் தங்குவேன். அவர்களுக்கு என் கையால் சிக்கன் கறி சமைத்துக் கொடுப்பேன். எங்கோ இந்தியாவில் இருந்து வந்திருக்கும் ஒருவர், நமக்குச் சமைத்து தருகிறார் என்றதும், அவர்களுக்கு தயக்கம் எல்லாம் போய்விடும். இந்தப் பயணத்தின் ஆரம்பத்தில் Masters in Sustainable Development தொலைதூரப் படிப்பையும் ஆரம்பித்திருந்தேன். இதை வெறும் படிப்பு என்பதைவிட, மனிதகுலத்துக்கான பாடம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

இந்தப் படிப்பின் முக்கியத்துவமே, மக்களுக்கான நீர் ஆதாரங்களைப் பற்றி ஆராய்வதுதான். அதற்காக, கென்யாவில் இந்தப் பயணத்தின் நடுவில் ஒரு வருடம் தங்கிப் படித்தேன்.

இந்தப் பயணத்தின் முக்கியமான பகுதியான 2,000 கி.மீ நீளம் கொண்ட ட்ரான்ஸ் - அமேசான் நெடுஞ்சாலை பயணம் செம த்ரில். காடுகளுக்குள் 2,000 கி.மீ ஓட்டுவது சவாலான விஷயம். நடுவில் ஆறே ஊர்கள்தான். ஏதாவது ஒரு வீட்டின் வாசலில் டென்ட் அடித்து இரவில் தங்கிவிடுவேன். எல்லாவற்றையும்விட மிகச் சவாலான பயணமாக அமைந்தது, பொலிவியா நாட்டில் இருக்கும் சலேர் தெ யூனி (Salar de Uyuni) என்ற பாலைவனம். இதை பாலைவனம் என்பதைவிட உப்பு நீர்ப்படுகை என்று சொல்லலாம். 400 கி.மீ நீளம் கொண்ட இந்தச் சாலையில் நான் பயணித்தபோது, மனிதர்கள் உட்பட எந்த உயிரினமும் எதிர்படவில்லை. எந்தத் திசையில் பார்த்தாலும் உப்புப் படுகைதான். அது செம அனுபவம்!

94,933 கி.மீ... 1,134 நாட்கள்... 32 நாடுகள்!

இந்தப் பயணத்தில் நான் ரசித்த இன்னொரு இடம், ஜாம்பியா. என் குழந்தைப் பருவத்தைக் கழித்த வீட்டுக்குச் சென்றபோது, மகிழ்ச்சியில் மீண்டும் குழந்தையானேன். நான் விளையாடிய வீடு, இப்போது விடுதியாகிவிட்டது. நான்  வாழ்ந்த அறையில், இப்போது கட்டணம் செலுத்தித் தங்கினேன்.

பயணங்கள் ஓய்ந்துவிட்டனவா?

இன்னும் முடியவில்லை. உலகத்தையே சுற்றிவிட்டு, நம் நாட்டைச் சுற்றாவிட்டால் எப்படி? சாண்ட்ரினா பைக் கப்பலில் வந்து கொண்டிருக்கிறது. வந்ததும் கொடைக்கானலில் நான் படித்த பள்ளிக்குச் செல்ல இருக்கிறேன். பின்பு, மணாலி - லே பயணம். முடிந்த பின், டெல்லியில் கொஞ்ச நாள் வேலை பார்த்து காசு சேர்ப்பது திட்டம். பிறகு சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா என ஊர் சுற்றக் கிளம்ப வேண்டியதுதான்'' - ஆச்சரியப்பட வைக்கிறார் கண்ணையன்!

 ர.ராஜா ராமமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு