ஆட்டோ ஃபோகஸ்!
 ##~##

டந்த இதழில், மோஷன் ரிக்கில் படம் எடுப்பது குறித்து பேசியிருந்தேன். நிறைய பேர் போட்டோகிராபியை முறையாக எப்படிக் கற்றுக் கொள்வது; யாரிடம் உதவியாளராகச் சேரலாம்; என்னிடம் உதவியாளராகச் சேர முடியுமா என்றெல்லாம் இ-மெயில் மூலம் கேட்டு இருந்தீர்கள். நிச்சயமாக போட்டோகிராபியை முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் சர்வதேச அளவில் மிகச் சிறந்த போட்டோகிராபராக அடையாளம் காணப்படுவீர்கள். 

தெருவுக்குத் தெரு ஐடி கம்பெனிகள் இருப்பது போலத்தான் போட்டோகிராபர்களும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளில் படித்துவிட்டு, பல ஹைடெக் கேமராவோடு நம் ஊரில் வலம் வருகிறார்கள். அதனால், இந்தத் தொழிலில் இறங்கினால், சட்டென முன்னுக்கு வந்துவிடலாம் என நினைக்க முடியாது. போட்டிகள் அதிகம்.

எல்லா கிரியேட்டிவ் வேலையைப் போலவே, போட்டோகிராபிக்கும் நம் ஊரில் சரியான மரியாதை கிடையாது. போதுமான பட்ஜெட் இருக்காது; நேரம் இருக்காது. ஆனால், உலகத் தரத்துடன் வேலையை எதிர்பார்ப்பார்கள். அதனால், நம் ஊர் சூழ்நிலைக்கு ஏற்ப அடாப்ட் பண்ணி எடுக்க வேண்டும். அந்த பட்ஜெட்டுக்குள், அந்த நேரத்துக்குள் படம் எடுத்துக் கொடுத்தால்தான் உங்களைத் தேடி வருவார்கள். அதனால், டைட் ஷெட்யூலில் கிரியேட்டிவாக படம் பிடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆட்டோ ஃபோகஸ்!

ஒரு ஷூட்டிங்கில் சொதப்பினால் கூட, வாய்ப்பு அடுத்த போட்டோகிராபருக்குப் போய்விடும். அதனால், தொடர்ந்து ஷூட்டிங்கில் ஈடுபட்டுக்கொண்டே இருங்கள். பெரிய ஷூட், சின்ன ஷூட் என்றெல்லாம் வித்தியாசங்கள் பார்க்காதீர்கள். என்ன  மாதிரியான வேலையோ, அதைத் தரமாகச் செய்து கொடுப்பவர்தான் சிறந்த போட்டோகிராபர் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

நம் நாட்டைப் பொறுத்தவரை, ஆட்டோமொபைல் போட்டோகிராபியைக் கற்றுத் தரும் பெரிய கல்லூரிகள் எதுவும் இல்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில்தான் ஆட்டோமொபைல் போட்டோகிராபிக்கு என, தனி பயிற்சிக் கல்லூரிகள் உள்ளன. ஆனால், நம் ஊட்டியில், இந்தியாவின் மிகச் சிறந்த புகைப்பட வல்லுனர் இக்பால் உசேன் நடத்தும் 'லைட் அண்டு லைஃப் அகாடமி’ பயிற்சி பெற சிறந்த மையம்.

ஆட்டோ ஃபோகஸ்!

இங்கு, பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு போட்டோகிராபியில் முதுகலை டிப்ளோமோ படிக்கலாம். இளங்கலை பட்டப் படிப்பு முடிக்கவில்லை என்றாலும், போட்டோகிராபியில் அதிக ஆர்வம் கொண்டவர்களுக்கும், சில சமயம் வாய்ப்பு கிடைக்கும். 1 வருட டிப்ளமோ படிப்புக்கு, 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இந்த ஆண்டில் இருந்து ஆட்டோமொபைலுக்கு எனச் சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க இருக்கிறார்கள். இது, மூன்று மாதங்கள் பயிற்சிக் காலமாக இருக்கும். இதற்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

இது தவிர, அஹமதாபாத்தில் உள்ள 'நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்’ மற்றும் கொல்கத்தாவில் உள்ள 'நேஷனல் அகாடமி ஆஃப் போட்டோகிராபி’ போன்ற போட்டோகிராபி பயிற்சி மையங்களும் உள்ளன. ஆனால், இங்கெல்லாம் எந்த அளவுக்கு பிராக்டிகலான பயிற்சி இருக்கும் என்று சொல்ல முடியாது.

போட்டோகிராபியை முழுவதும் கற்றுத் தெரிந்துகொண்ட பிறகு, நேரடியாக போட்டோகிராபராக ஃபீல்டில் நுழைந்துவிட முடியாது. சீனியர் போட்டோகிராபர்களிடம் ஜூனியராக இருக்க வேண்டும். 1 அல்லது 2 வருடங்கள் ஜூனியராக இருந்தால், ஒரு முழுமையான போட்டோகிராபராக மார்க்கெட்டில் நுழைய முடியும்.

ஆட்டோ ஃபோகஸ்!

முறையாகப் படித்து, ஜூனியராக இருந்து, முழுமையான போட்டோகிராபராகிவிட்டால் மட்டும் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை. தொடர்ந்து உங்களை அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டும். இப்போது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அதி நவீன கேமராக்களும், தொழில்நுட்பமும் வந்துகொண்டே இருக்கிறது. டெக்னாலஜியுடன் அப்டேட் ஆக இருந்தால்தான், போட்டோகிராபி துறையில் நிலைத்து நிற்க முடியும்.

தொடர்ந்து படியுங்கள். போட்டோகிராபி துறையில் புதுசு என்ன எனத் தேடிக்கொண்டே இருங்கள்!

(படம் பேசும்)