ஆட்டோ ஃபோகஸ்!

ணக்கம் நண்பர்களே! 

##~##

கடந்த ஐந்து மாதங்களாக, ஆட்டோமொபைல் போட்டோகிராபி பற்றி நான் எழுதியது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதை, நீங்கள் எடுத்து அனுப்பிய படங்களே சொல்லிவிட்டன. கண்களால் படம் எடுப்பது எப்படி, எந்த நேரத்தில், எந்தக் கோணத்தில், எந்த லென்ஸில், எந்த கேமராவில் படம் எடுக்கலாம் என்பதை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். அதேபோல், கடந்த இதழில் எந்த கல்லூரியில் படிக்கலாம் என்றும், ஆட்டோமொபைல் போட்டோகிராபர்களிடம் ஜூனியர்களாகப் பயிற்சி பெறுவது பயனளிக்கும் என்றும் சொல்லி இருந்தேன்.

என்னிடம் ஜூனியராகப் பயிற்சி எடுக்க நிறைய இளைஞர்கள் வருகிறார்கள். வரும்போதே ஹைடெக் கேமராவோடும், அதிகம் படித்துவிட்டும் வருவார்கள். 'நாளைக்கே பிஎம்டபிள்யூ காரை படம் எடுக்க வேண்டும்; நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் துடிப்பு அவர்களிடம் இருக்கும். எல்லோருமே நல்லவிதமாக செட்டில் ஆக வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால், சீக்கிரம் உயரத்தைத் தொட்டுவிட வேண்டும் என நினைப்பதில்தான் தவறு இருக்கிறது. ஆனால், அப்படி சீக்கிரமே சிகரத்தைத் தொட்டவர்கள் அதிக நாள் சிகரத்திலேயே தாக்குப்பிடிக்க மாட்டார்கள்.

ஆட்டோ ஃபோகஸ்!

சச்சின் டெண்டுல்கர் 23 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் என கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட உலக சாதனைகளை கிரிக்கெட்டில் அவர் படைத்திருக்கிறார். ஆனால், அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 5 ஆண்டுகள் கழித்து, அதாவது, தனது 78-வது ஒருநாள் போட்டியில்தான் முதல் சதத்தை அடித்தார்.

அதனால், வேகமாக வளர்ந்துவிட வேண்டும் என்று நினைக்காமல், சீரான வளர்ச்சிதான் நீண்ட நாள் உங்களை இந்தத் துறையில் வைத்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற ரிச்சர்ட் அவடான் எனும் புகைப்படக்காரர், 78 வயது வரை படம் எடுத்துக்கொண்டிருந்தார். அந்த வயதிலும் அவர்தான் உலகத்தின் மிகச் சிறந்த ஃபேஷன் மற்றும் போர்ட்ரெய்ட் போட்டோகிராபர். வயதானாலும் போட்டோகிராபியின் வளர்ச்சிக்கு ஏற்ப, புதுப் புது ஐடியாக்களுடன் படம் எடுத்தவர் ரிச்சர்ட். அதனால், நீங்கள் எவ்வளவு பொறுமையாகக் கற்றுக்கொண்டு மேலே செல்கிறீர்களோ... அந்த அளவுக்கு நீண்ட காலம் தொடர்ந்து இந்தத் துறையில் இருப்பீர்கள்.

ஆட்டோ ஃபோகஸ்!

மேலோட்டமாகப் பார்த்தால், இந்தத் தொழில் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். நிறைய பணம் கிடைக்கும். ஆனால், ஆட்டோமொபைல் போட்டோகிராபியில் நீங்கள் ஆர்வத்தையும், கார், பைக்குகளைப் பற்றிய அறிவையும் வளர்த்துக்கொள்ளவில்லை என்றால், வளர்ச்சி இருக்காது. ஒரு காரைப் படம் எடுக்கப்போகிறீர்கள் என்றால், அதில் உங்களுக்கு டீப் ஆர்வம் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களுடன் பேசும்போது, அந்த வாகனத்தைப் பற்றி நீங்கள் பேசினால், உங்களுக்கு போட்டோகிராபி தாண்டி பல விஷயங்கள் தெரியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். தொடர்ந்து உங்களுடனேயே வேலை செய்ய விரும்புவார்கள்.

எப்போதுமே போட்டோகிராபியைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு துறையில் ஸ்பெஷலிஸ்ட்டாக இல்லை என்றால், உங்களைத் தேடி வேலை வராது. அதேசமயம், 'நான் ஆட்டோமொபைல் போட்டோகிராபி மட்டும்தான் செய்வேன்’ என்றும் இருக்க முடியாது. பேலன்ஸ் இருக்க வேண்டும். எப்போதுமே உங்கள் போர்ட்ஃபோலியோவில் ஆட்டோமொபைல், ஃபேஷன், போர்ட்ரெய்ட், ஆர்க்கிடெக்சர், ஃபுட் என்று எல்லாவிதமான படங்களும் இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒரு முழுமையான போட்டோகிராபர்.

ஆட்டோ ஃபோகஸ்!

தரம் என்பது இலவசமாகக் கிடைக்காது. நிறைய பயிற்சி எடுக்க வேண்டும். என் ஜூனியர்களிடம் நான் திரும்பத் திரும்பச் சொல்வது இதுதான். நீங்கள் ஒரு கடற்கரைக்கோ, ஷாப்பிங் மாலுக்கோ செல்கிறீர்கள் என்றால், அங்கே இருப்பவர்கள் ஒரு சின்ன கேமராவைக் கொடுத்து படம் எடுத்துத் தரச் சொன்னால், நீங்கள் எடுக்கலாம். அந்தப் படத்தை சிறந்த படமாக நீங்கள் அவர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் போட்டோகிராபியைக் காதலிக்கிறீர்கள் என்று அர்த்தம். எனக்குப் பிடித்த ஸ்டுடியோ, லைட்ஸ், கேமரா, மாடல் இருந்தால்தான் படம் எடுப்பேன் என்று சொன்னால், என்னைப் பொறுத்தவரை நீங்கள் உண்மையிலேயே போட்டோகிராபி மீது ஆர்வம் கொண்டவர் இல்லை.

இப்போது இணையதளம் இருக்கிறது. நிறைய போட்டோகிராபி பத்திரிகைகள் வந்துவிட்டன. அதைப் பார்த்து காப்பி அடிக்கலாம் என்று அதை மட்டுமே நம்பி படம் எடுக்கக் கூடாது. இணையதளத்தில் பார்க்கலாம்; படிக்கலாம். அது ஒரு தகவல் களம்தான். ஆனால், நீங்கள் களத்தில் படம் எடுக்கும்போது, அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஐடியாக்களை உருவாக்கி எடுத்தால்தான் நீங்கள் சிறந்த போட்டோகிராபர். அப்போதுதான் உங்கள் படம் உலகம் முழுவதும் செல்லும்.

கண்ணை மூடிக்கொண்டு வேகமாக ஓடாதீர்கள். போட்டோகிராபருக்கு வேகம் இருந்தால் மட்டும் போதாது. கிரியேட்டிவிட்டியும், ஐடியாவும் வேண்டும். அதனால், நிறைய செய்யுங்கள் செய்யுங்கள். போட்டோ ஷூட் இருந்தால்தான் கேமராவைத் தூக்குவேன் என்று இருக்க வேண்டாம். உங்கள் கண்ணுக்குத் தெரியும் சின்னச் சின்ன சுவாரஸ்யங்களை எல்லாம் படம் எடுத்துக்கொண்டே இருங்கள். உலகமே கொண்டாடும் போட்டோகிராபராக வருவீர்கள். வாழ்த்துகள்.

போட்டோகிராபி தொடர்பான எந்தச் சந்தேகமாக இருந்தாலும், என் மெயில் ஐடியில் (veyron_speed@yahoo.in) கேளுங்கள். தொடர்ந்து தொடர்பில் இருப்போம்!

(நிறைந்தது)