##~##

ஆட்டோமொபைல் சர்வீஸ் துறையில் ஏராளமான கிளைத் தொழில்கள் உள்ளன. இதில், ஒவ்வொன்றுக்கும் பிரத்யேகமான வல்லுனர்கள் இருப்பார்கள். மெக்கானிக், இன்ஜின் ஓவர்ஹாலிங், எலெக்ட்ரீஷியன், டிங்கர், வெல்டர், பெயின்டர், அப்போல்ஸரி ஒர்க்கர், டயர் ரீ-கண்டிஷனிங், பேட்டரி சர்வீஸ் என நீளும் இந்தப் பட்டியலில், எலெக்ட்ரிஷியன் பிரிவில் வரும் டைனமோ மற்றும் செல்ஃப் மோட்டாருக்கு எனத் தனியாக மெக்கானிக்குகள் உண்டு. இதில், 45 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் பிரமன். இவரை காரைக்குடியில் சந்தித்தேன். 

தொழிலுக்கு வந்த கதையை ஒரு, ஃப்ளாஷ்பேக்  போல சொன்னார் பிரமன். ''காரைக்குடி பக்கத்துல கானாடுகாத்தான்தான் என் சொந்த ஊர். வறுமை காரணமா 13 வயசுலயே படிப்பை நிறுத்திட்டு, தொழில் கத்துக்கலாம்னு காரைக்குடிக்கு வந்தேன். என் சொந்தக்காரர் ஒருத்தர், எலெக்ட்ரிஷியன் ரங்கநாதன்கிறவர்கிட்ட வேலைக்குச் சேர்த்துவிட்டார். தங்குறதுக்கு இடம் இல்லாம தவிச்சப்போ, அவர் வீட்லயே தங்கவெச்சு மகன் போல நடத்தினார். எனக்கு குரு, தெய்வம் எல்லாம் அவர்தான். அப்போ, எனக்கு தினசரி பேட்டா 10 பைசா.

மெக்கானிக் பிரமன்!

பிளைமவுத், ஹில்மேன், ஆஸ்டின், ஸ்டாண்டர்டு, ஹெரால்டு, அம்பாஸடர், பிரீமியர் பத்மினி, மோரீஸ், வாக்ஸ்ஹால் - இப்படி எல்லா மாடல் காரும் எங்ககிட்ட சர்வீஸுக்கு வரும். புதுப் புது கார்கள் சர்வீஸுக்கு வரும்போது ஆசை ஆசையா வேலை செய்வேன். தொழில் நுணுக்கத்தை எனக்குப் புரியுற மாதிரி அவ்வளவு அழகா சொல்லிக் கொடுப்பார் என்னோட குருநாதர். 1956 தொடங்கி 1964-ல் அவர் இறந்து போறவரைக்கும் அவரோடதான் இருந்தேன்.

அதுவரைக்கும் தனியாப் போய் தொழில் செய்றதைப் பத்தி நெனைச்சதே இல்லை. கையில ஒரு ரூபாய்கூட இல்லாம, திக்குத் தெரியாம நின்னேன். என் நிலைமையைப் பார்த்து சொர்ணம்கிறவர் அவரோட கடையில வேலை கொடுத்தார். கொஞ்ச நாளுக்கு அப்புறம் கருப்பையாங்கிற நண்பர் டூல்ஸ் வாங்கிக்கன்னு சொல்லி 500 ரூபாய் கொடுத்தார். அப்புறம் மூணு வருஷம் அவரோட கடையில வேலை பார்த்தேன். 1974-ம் வருஷம் என்னோட தம்பி கொடுத்த காசை வெச்சு, சின்னதா ஒரு மெக்கானிக் ஷெட் ஆரம்பிச்சேன். நான் பட்ட கஷ்டமெல்லாம் அதுக்கப்புறம் சரியாயிடுச்சு'' என்று நிகழ்காலத்துக்கு வந்தார்.

''இப்போது நவீனத் தொழில்நுட்பங்களுடன் வருகிற எலெக்ட்ரிகல் பாகங்களை எப்படி சர்வீஸ் செய்கிறீர்கள்?'' என்று கேட்டபோது, ''பழைய காலம் மாதிரி இப்போ இல்லை. தொழில்நுட்பம், டெக்னாலஜி எல்லாம் வளர்ந்திருச்சுங்கிறதை நானும் ஏத்துக்கிறேன். ஆனா, அப்போ இருந்த தரம் இப்போ வர்ற பொருட்கள்ல பார்க்க முடியலையே. புதுப் புது மாடல் ஆல்டர்னேட்டர் டைனமோ, செல்ஃப் மோட்டார் வரும்போது, அதோட மெக்கானிசம் பத்தி தெரிஞ்சுக்குவேன். அந்தக் காலத்துல இருந்து இந்தக் காலம் வரைக்கும் எப்படிப்பட்ட டைனமோவாக இருந்தாலும் சரி பண்ணிடுவேன். பழைய டைனமோ ஆர்மச்சர்க்கு ஒரு கிலோ காப்பர் ஒயர் வேணும். ஆனா, இப்ப 200 கிராம்தான் இருக்கு. அப்போ, இதுல தரத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? கம்பெனிகளும் இப்போ யூஸ் அண்டு த்ரோவா இருக்கிறதைத்தான் விரும்புது. அப்பத்தானே அவங்களுக்கும்  அடுத்தடுத்து வியாபாரம் ஆகும்.

ஒரு தடவை பிரபலமான தமிழ்நாட்டுக் கம்பெனியில் இருந்து செல்ஃப் மோட்டார் டெவலப் பண்றது சம்பந்தமா பேச வந்தாங்க. 'நீங்க தரமான பொருளைத் தயாரிக்கலை. உங்களுக்கு என்னால உதவ முடியாது’னு சொல்லி அனுப்பிச்சுட்டேன். அவங்க தயாரிக்கிற வண்டியில செல்ஃப் மோட்டார் தப்பான டிசைன். செல்ஃப் மோட்டார்ல இருக்கும் ஆர்மச்சர் ஒயர் அளவை குறைச்சதால், ஆர்மச்சர் வைண்டிங்க்கு எலெக்ட்ரிகல் வெல்டிங் கொடுக்கும்போது, அந்த ஒயர் உடைஞ்சு போகுது. எல்லாரும் மோட்டார் போச்சுன்னு காசு செலவு பண்ணி புதுசு மாத்திக்கிட்டு இருக்காங்க. இது, கம்பெனி பண்ணுற தப்பு. அதனால்தான் அவங்க ஐடியா கேட்டு வந்தபோது மறுத்துட்டேன்'' என்றார் ஆவேசமாக.

தன்னுடைய கிளாஸிக் கார் கலெக்ஷன் பற்றியும் அவர் பேசினார். ''ஒவ்வொரு மெக்கானிக்குக்கும் சொந்தமா ஒரு கார் வாங்குவதுதான் கனவா இருக்கும். நான் தொழில் தொடங்கிய காலத்துல புது ஃபியட் கார் 12,500 ரூபாய். அம்பாஸடர் 12,500, டாட்ஜ்/பிளைமவுத் எல்லாம் ரூ. 23,000 ரூபாய்தான். அப்போ நான் வாங்கின சர்வீஸ் சார்ஜ் டைனமோ ரிப்பேருக்கு 3 ரூபாயும், வைண்டிங் போட 18 ரூபாயும்தான். அதை வெச்சுக்கிட்டு என்னால கனவு மட்டும்தான் காண முடிஞ்சது. உழைப்புதான் நம்மோட கனவை நிறைவேத்தும். கார் வாங்குறதுக்குன்னு தனியா கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து, 1999-ம் வருஷம்தான் 1988 மாடல் ஃபியட் கார் வாங்கினேன். பலப் புது காருங்க வந்திருந்தாலும், சின்ன வயசுல இருந்து பார்த்து வந்த காருங்களை வாங்கணும்கிற எண்ணம் மனசுக்குள்ள இருந்தது.

2004-ம் வருஷம். ஒருநாள் கோவையில் இருக்கிற என் மருமகன், '1956 மாடல் டாட்ஜ் கார் நல்ல கண்டிஷன்ல மில் ஓனர் ஒருத்தர்கிட்ட இருக்கு.  வாங்குறீங்களா?’னு கேட்டாரு. 50,000 ரூபாய்க்கு காரை வாங்கிட்டு வந்தேன். பெயின்ட் அடிச்சது, சீட் மாத்துனதுன்னு சில்லறை செலவுகள் மட்டும்தான் இருந்தது. டேஷ்போர்டுல இருந்த எதையும் மாத்தலை.  லிட்டருக்கு 15 கி.மீ மைலேஜ்  கொடுக்குது. ஹேண்ட் கியர்தான். ரிவர்ஸ் கியரையும் சேர்த்து மொத்தம் நாலு கியர். ஓட்டிட்டுப் போகும்போது கப்பலில் போற மாதிரி இருக்கும். அந்தக் காலத்துலயே 170 கி.மீ வேகத்துல போன கார்னா சும்மாவா?'' என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிறார் பிரமன்.

மெக்கானிக் பிரமன்!
மெக்கானிக் பிரமன்!

''1965-ம் வருஷம் பெரியார் காரைக்குடி வந்திருந்தார். பெரியார் பயணித்த பெட்ஃபோர்டு வேனில் டைனமோ பிரச்னை. அதனால் ஸ்டார்ட் ஆகவில்லை. என்னை அழைத்துச் சென்றார்கள். நானும் வண்டியை ரெடி செய்து கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். 'காரை யார் சரி செய்தது’ என பெரியார் கேட்டிருக்கிறார். அதனால் மீண்டும், என்னை அழைத்துச் சென்றார்கள். 'நல்லபடியா வேலை பார்த்துருக்க’ என்று பாராட்டி இடுப்பில் இருந்து வெள்ளை சுருக்குப் பையை எடுத்து, அதில் இருந்த சில்லறைகளை அப்படியே கொடுத்தார் பெரியார். அதில் 15 ரூபாய் இருந்தது. பெரியார் சிக்கனக்காரர் என்று யார் சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்'' என்றார் இந்த அனுபவசாலி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு