Election bannerElection banner
Published:Updated:

பாடாய்ப் படுத்தும் வீல் அலைன்மென்ட்!

பாடாய்ப் படுத்தும் வீல் அலைன்மென்ட்!

 ##~##

'கல்யாணம் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்’ என்ற பழமொழியோடு, 'கார் வாங்கிப் பார்’ என்பதையும் சேர்த்திருக்கலாம். திருமணத்தில் 'அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து’ என்பது மாதிரி... பல ஷோ ரூம் மிதித்து, டெஸ்ட் டிரைவ் செய்து கார் வாங்குவதற்கும் எக்கச்சக்க சம்பிரதாயங்கள் இருக்கின்றன. பார்த்துப் பார்த்து வாங்கிய கார், நம் சொல்பேச்சுக் கேட்காமல் படுத்தி எடுத்தால்; கன்னாபின்னா வென்று செலவுகள் வைத்தால்; அதற்கும் மேலாக கார் வாங்கிய டீலர்ஷிப்பில் நம் புகாரை சட்டை செய்யவே இல்லை என்றால்? அவ்வளவுதான்... காதல் தோல்வியைவிடக் கொடுமையான சோகமாகிவிட வாய்ப்பு இருக்கிறது! 

தனது மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் பிரச்னைகள் பற்றியும், டீலர்ஷிப்பில் தனக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் நம்மிடம் சொன்னார், சென்னை கொட்டிவாக்கத்தில் பில்டிங் புரொமோட்டராக இருக்கும் ரவிச்சந்திரன்.

பாடாய்ப் படுத்தும் வீல் அலைன்மென்ட்!

''என்னை ஒரு மஹிந்திரா வெறியன்னே சொல்லலாம். பொலேரோ, ஸ்கார்ப்பியோனு என்கிட்ட இருந்த கார்கள் எல்லாமே மஹிந்திராதான். ஸ்கார்ப்பியோ காரைக் கொடுத்துட்டு, வேற கார் வாங்கலாம்னு முடிவெடுத்தப்போ, என் மனைவியோட சாய்ஸ் - டொயோட்டா ஃபார்ச்சூனர். இதன் ஆன்-ரோடு விலை, கிட்டத்தட்ட 25.5 லட்சம் வந்தது. ஆனா, என்னோட சாய்ஸ் எக்ஸ்யூவி 500தான். 'ஃபார்ச்சூனர்ல இருக்கிற வசதிகளைவிட இதில் அதிகம். எக்ஸ்யூவியோட விலையும் ஃபார்ச்சூனரைவிடக் குறைவு’னு எக்கச்சக்கமா என் மனைவியை கன்வின்ஸ் பண்ணி, வேளச்சேரியில் இருக்கிற சுலேகா மோட்டார்ஸுக்குக் கூட்டிட்டுப் போனேன். 'இந்தியர்கள் டிசைன் பண்ணின கார் சார், இப்போதைக்கு எஸ்யூவி செக்மென்ட்டில் இதுதான் நல்ல சேல்ஸ். செம பில்டு குவாலிட்டி...’ - என்ற சேல்ஸ்மேன்களின் வழக்கமான பில்ட்-அப்பில் என் மனைவி க்ளீன் போல்ட்! 2012 - நவம்பர் மாசம் ஆசை ஆசையா காரை டெலிவரி எடுத்தோம்.

பாடாய்ப் படுத்தும் வீல் அலைன்மென்ட்!

என் மனைவி, குழந்தைகளைவிட காரைப் பார்த்துப் பார்த்துப் பூரிச்சேன். இது, கொஞ்ச நாள்கூட நீடிக்கலை. கிட்டத்தட்ட 400-வது கி.மீ-லேயே தன்னோட வேலையைக் காட்ட ஆரம்பிச்சிடுச்சு என் கார். சரியா 'ஓவர்-ஹால்’ பண்ணாத சைக்கிள் மாதிரி, ஸ்டீயரிங் வீல் - இடது பக்கமா ஓவரா சாய்ஞ்சுக்கிட்டே போக ஆரம்பிச்சது. சரி; புது கார்னால அப்படி இருக்கும்னு நினைச்சேன். ஆனா, போகப் போக கார் ஓட்டவே ரொம்ப கஷ்டமாயிடுச்சு. என் இடது கையில் வலி வர ஆரம்பிச்சது. முதன்முதலா காரை சர்வீஸ் சென்டர்ல விட்டேன். அன்னைக்குப் போக ஆரம்பிச்சவன், இன்னும் சர்வீஸ் சென்டர் பயணத்தைவிட முடியலை.

என் பிரச்னையைச் சொன்னதும், சர்வீஸ் சென்டர் பிரதிநிதிகள் நோட் பண்ணிக்கிட்டாங்க. ரெண்டு நாள் கழிச்சு டெலிவரி எடுத்தேன். திரும்பவும் எனக்கு அதே ஃபீல். மறுபடியும் சர்வீஸ் சென்டர் போய் சொன்னபோது, 'அப்படியெல்லாம் இல்லை சார்...’னு சொல்லித் திருப்பி அனுப்பிட்டாங்க. சரி; ஒருவேளை நமக்குத்தான் கார் ஓட்டத் தெரியலையோ என்னமோனு, டிரைவரை விட்டு செக் பண்ணினேன். டிரைவரும் இதேதான் சொன்னார். இப்படியே 2,500 கி.மீ. ஓட்டியாச்சு. இப்போ, லெஃப்ட் சைடு புல்லிங் பிரச்னையால், காரோட முன் பக்க டயர்கள் உள்பக்கமாத் தேய ஆரம்பிச்சிடுச்சு. திரும்பவும் சர்வீஸ்...

இந்த முறை செக் பண்ணின பிரதிநிதிகள், 'டயர் சரியில்லை சார். வீல் அலைன்மென்ட் தப்பா இருக்கு, அதான்’ என்றார்கள். 'வாரன்ட்டி இருக்கிறதால ஒண்ணும் பயப்படாதீங்க. என்ன டயர் வேணும்?’னு கேட்டாங்க. 'பிரிட்ஜ்ஸ்டோன்’ டயர் நல்லா இருக்கும்னு ரெக்கமண்ட் பண்ணி, ஸ்டெப்னியோட சேர்த்து ஜே.கே. டயரைக் கழட்டிட்டு, பிரிட்ஜ்ஸ்டோன் டயர்களை மாத்தி ஃபிக்ஸ் பண்ணி, வீல் அலைன்மென்ட் செஞ்சு குடுத்தாங்க.

'இனிமே அந்த ஆண்டவன் நம்மளைக் கைவிட மாட்டான்’னு நினைச்சு ஸ்டீயரிங்கைப் பிடிச்சேன். வீல் செம டைட். முந்தி இடது பக்கம் இருந்த புல்லிங் பிரச்னை, இப்போ வலது பக்கமா மாறியிருந்தது. 'அலைன்மென்ட்கிற பேர்ல இப்படியாப் பண்ணிக் குடுப்பீங்க’னு திரும்பவும் போய் நின்னேன். 'என்னடா இந்த ஆளோட வம்பாப் போச்சு’னு நினைச்சாங்களோ என்னமோ, இந்த தடவை புனேவில் இருந்து ரெண்டு பேர் வீட்டுக்கே வந்து காரை எடுத்துட்டுப் போனாங்க!

'சர்வீஸுக்கு ஒரு வாரம் ஆகும்’னு சொல்லி, ஆல்டர்நேட்டா இன்னொரு எக்ஸ்யூவி-யை எனக்கு ஒரு வாரம் கொடுத்தாங்க. (ஆனா, என் கார் மாதிரி இல்லாம, இந்த காரோட ஓட்டுதல் சுகம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.) ஒரு வாரம் கழிச்சு, 'ஆல் ஓவர்... காரை டெஸ்ட் பண்ணணும்.. செங்கல்பட்டு வரை டெஸ்ட் ரைடு போலாம், வாங்க’னு சொல்லி என் காரில் கூப்பிட்டுப் போனாங்க. 250 கி.மீ. டெஸ்ட் டிரைவில் ஒரு தடவைகூட காரை என்கிட்டயோ, என் டிரைவர்கிட்டயோ கொடுக்கவே இல்லை. அவங்களா ஓட்டிப் பார்த்துட்டு 'எல்லாம் பக்காவா இருக்கு. ஓ.கே.வா!’னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.

பிறகென்ன? திரும்பவும் சர்வீஸ் சென்டர்தான்!'' என்று கவலையாக நம்மைப் பார்த்த ரவிச்சந்திரன், இந்த முறையும் இடது மற்றும் வலது பக்க டயரின் உள்பக்கம் தேய்ந்து வருவதை நம்மிடம் சுட்டிக் காட்டியபடி மீண்டும் தொடர்ந்தார்.

''கார் வாங்கி ஒன்பது மாசம்கூட ஆகலை. ஆனா, 10 தடவைக்கு மேல சர்வீஸ் சென்டருக்கு அலைஞ்சுட்டு  வந்துட்டேன் சார். அங்க போனாலே, 'என்ன சார் அலைன்மென்ட் பிராப்ளமா’னு ஊழியர்கள் கேட்கிற அளவுக்கு நானும் என் காரும் செம காமெடி பீஸாகிட்டோம். என் கார்ல வேற எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த அலைன்மென்ட்தான் பிரச்னை. கடைசியா பத்தாவது தடவையா சர்வீஸுக்குப் போனப்ப, மஹிந்திராவோட அனலைசிஸ்ட் ஒருத்தர், 'கார் இந்த முறை எந்தப் பிரச்னையும் பண்ணாது சார். ஆனா, நான் சொல்ற ரோட்ல ஓட்டிப் பார்த்துட்டுத்தான் செக் பண்ணுவேன்’னு சொன்னவர், இப்போ அதுவும் முடியாதுன்னுட்டார். எம்ஆர்ஐ-ல் (மஹிந்திரா ரிஸர்ச் இன்ஸ்டிட்யூட்) இருந்தெல்லாம் ஆளுங்க வந்து பார்த்தாங்க. இன்னும் இந்தப் பிரச்னை முடிஞ்சபாடில்லை. மஹிந்திராவுல எல்லா காருமே இப்படித்தானா? இல்லேன்னா என் கார் மட்டும்தான் இப்படி பிரச்னை பண்ணுதானு தெரியலை. இந்த அலைன்மென்ட் பிரச்னை, என் வாழ்நாள் பிரச்னையா மாறிடும்போல இருக்கு!'' என்று நொந்து போய்க் கூறினார் ரவிச்சந்திரன்.

பாடாய்ப் படுத்தும் வீல் அலைன்மென்ட்!
பாடாய்ப் படுத்தும் வீல் அலைன்மென்ட்!

ரவிச்சந்திரனின் எக்ஸ்யூவி 500 காரை நமது மோட்டார் விகடன் எக்ஸ்பர்ட் குழு, கிட்டத்தட்ட 60 கி.மீ. நெடுஞ்சாலையிலும், நகரச் சாலைகளிலும் டெஸ்ட் செய்ததில், அவர் சொன்னதுபோலவே ஸ்டீயரிங் தானாகவே வலது பக்கமாகத் திரும்புவது தெரிய வந்தது. ஆனால், இது புல்லிங் பிரச்னை இல்லை; 'ஸ்டீயரிங் ஆஃப் சென்டர்’ எனும் வீல் அலைன்மென்ட் பிரச்னை என்பதை, ரவிச்சந்திரனுக்கு நாம் நேரடியாக விளக்கினோம். ஸ்டீயரிங் வீலை சரியாக 90 டிகிரியில் வைத்து ஓட்டினால், வலது பக்கமாக கார் தானாகவே திரும்புகிறது. இதுவே, நாம் ஸ்டீயரிங் வீலை இடது பக்கமாக லேசாகச் சாய்த்து வைத்து ஓட்டினால்தான் கார் நேராகச் செல்கிறது. 80, 100, 120 கி.மீ. வேகத்தில் நாம் சென்றபோது, இது உறுதியானது. எனவே, நாம் உடனடியாக எக்ஸ்யூவி-யை ஒரு தனியார் வீல் அலைன்மென்ட் சென்டரில் கொடுத்து செக் செய்தோம். மஹிந்திராவின் வீல் அலைன்மென்ட் அளவீட்டு முறைக்கும், தனியார் அளவீட்டுக்கும் எக்கச்சக்க வேறுபாடுகள் இருப்பது தெரிய வந்தது. இதில் எது சரி என்பது, எக்ஸ்யூவிக்கே வெளிச்சம்!

பாடாய்ப் படுத்தும் வீல் அலைன்மென்ட்!
பாடாய்ப் படுத்தும் வீல் அலைன்மென்ட்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு