Published:Updated:

ஜாவா தினம்... இனி மெக்கானிக் தினம்!

ஜாவா தினம்... இனி மெக்கானிக் தினம்!

ஜாவா தினம்... இனி மெக்கானிக் தினம்!

ஜாவா தினம்... இனி மெக்கானிக் தினம்!

Published:Updated:

-  த.சித்தார்த்  

 ##~##

மிகத் தனித்தன்மை வாய்ந்த பைக் ஜாவா. ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த பைக் இது. இன்றும், செங்குத்தாக இருக்கும் மலைப் பாதையில் ஏற வேண்டும் என்றால், ஜாவா தவிர மற்ற பைக்குகளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. சுமார் அரை நூற்றாண்டு காலம் விற்பனையில் இருந்த இதற்கு, நம் நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இன்னமும் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-14-ம் தேதியை இதன் ரசிகர்கள் ஜாவா பைக் தினமாகக் கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் சென்னை, கோவை, நாகர்கோயில் போன்ற இடங்களில் இதற்கென கிளப்புகள் இருக்கின்றன. கடந்த ஜூலை 14 அன்று, கோவை ஜாவா - யெஸ்டி கிளப் உறுப்பினர்கள் ஜாவா தினம் கொண்டாடியபோது, அவர்களுடன் சேர்ந்துகொண்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோவையில், இந்த கிளப்பை ஆரம்பித்த பிரனேஷ் நம்மிடம் பேசியபோது, ''ஒரு வருஷமா இந்த நாளுக்காகக் காத்துக்கிட்டு இருந்தோம். ஒரு அமைப்பாக இல்லாம, ஜாவா பைக் வைத்திருக்கும் நண்பர்கள் ஒண்ணு சேர்ந்து ஜாலியா ரைடு போறது பொழுதுபோக்கா இருந்தது. ஆனா, இப்போ உள்ள இளைஞர்களுக்கு இதோட அருமை பெருமைகளைச்  சொல்லணும்னு நினைத்தோம். அதற்காக ஆரம்பிக்கப் பட்டதுதான் இந்த கிளப்.

ஜாவா தினம்... இனி மெக்கானிக் தினம்!

ஓட்டும்போதுதான், இந்த பைக்கோட பில்டு குவாலிட்டியை உணர முடியும். பழைய பைக் என்றாலும் எவ்வளவு தூரம் வேணும்னாலும் நம்பிப் போகலாம்.

நம் நாட்டுல நிறைய ஜாவா கிளப் இருக்கு. எங்க கிளப்புல 30 உறுப்பினர்கள் இருக்காங்க. ஒரு குறுகிய காலகட்டத்துல இவ்வளவு உறுப்பினர்கள் சேர்ந்ததுக்குக் காரணம், எங்க கிளப் மெக்கானிக்ஸ் சேகரும் செந்திலும்தான். 30 வருடத்துக்கு மேல இந்தத் தொழில்ல இருக்கிற இவங்க ரெண்டு பேரும், ஜாவா ஸ்பெஷலிஸ்ட். இவங்க அனுபவம்தான் எங்க பைக்கை உயிரோட வெச்சுருக்குது.

குறுகிய காலத்திலேயே நாங்கள் இணைவதற்கு உதவியாக இருந்ததில் பெரும் பங்கு சமூக வலை தளங்களுக்கு உண்டு. இந்த தினத்தை ஜாவா தினமா மட்டும் இல்லாம, சமூகத்தில் எந்த அங்கீகாரமும் இல்லாம இருக்கும் மெக்கானிக்குகளையும் கௌரவப்படுத்தும் தினமா இந்த நாள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்'' என்று ஃபீலிங்ஸ் ஆனார் பிரனேஷ்.

மெக்கானிக் சேகர் பேசும்போது, 'புதுப் புது தொழில்நுட்பத்துல இப்போ பைக்குகள் வந்தாலும், ஜாவா பைக்குல இருக்கிற தொழில்நுட்பத்தை மிஞ்சுவது மாதிரி இன்னும் ஒரு பைக் வரலை. முப்பது வருடத்துக்கு மேல ஆச்சு. இன்னும் அதே கம்பீரத்தோடதான் ஜாவா இருக்கு. நான் ஜாவா ஸ்பெஷலிஸ்ட்டா இருக்கிறதுல ரொம்பப் பெருமைப்படுறேன்' என்றார்.

ஜாவா தினம்... இனி மெக்கானிக் தினம்!

ஜாவா தினத்தைக் கொண்டாடும் விதமாக, கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் இருந்து சூலூர் வரை சுமார் 15 கி.மீ தூரம் ராலியும் நடத்தப்பட்டது. காலை சரியாக 10.30 மணிக்குத் துவங்கிய இந்தப் பயணத்தில், கிளப்பின் ஆஸ்த்தான மெக்கானிக்குகள் முன் செல்ல... மற்ற பைக்குகள் பின் தொடர்ந்தன. ஜாவாவின் 'டுப் டுப் டுப்’ சத்தத்துடன் சாலையில் அணிவகுத்தபோது, டைம் மிஷனில் அந்தக் காலகட்டத்துக்குச் சென்றதுபோல இருந்தது.

இந்தச் சந்திப்புக்காக பெங்களூருவில் இருந்து வந்திருந்த சந்தோஷ், 'இப்போ நான் வெச்சுருக்கிற ஜாவா பைக், எங்க அப்பா வாங்கியது. அவருக்குப் பிறகு இதோட ஒரிஜினாலிட்டி மாறாம இருக்கணும்னு நான் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். எத்தனை புதிய பைக்ஸ்  வந்தாலும் ஜாவாகிட்ட நெருங்க முடியாது. ஜாவாவோட நம்பகத்தன்மையை இப்போ வர்ற எந்த பைக்கிலும் பார்க்க முடியாது. ஐ லவ் மை ஜாவா!' என்றார்.

'நானும் என் நண்பரும் ரெண்டு நாளில் 800 கி.மீ ஜாவாவில் பயணம் பண்ணி இருக்கோம். சிலர் ஜாவாவை பழைய வண்டின்னு சொல்றாங்க. பட், ஒரு தடவை இதை ஓட்டிப் பார்த்துட்டா ரசிகராயிடுவாங்க. இதில் ஒரே சிக்கல் உதிரி பாகங்கள் கிடைக்குறதுதான். ஆனா, எங்க கிளப்புல இருக்கும் உறுப்பினர்களுக்கு ஜாவா உதிரிபாகங்கள் கிடைக்கவும் நாங்க ஏற்பாடு பண்றோம். இருக்கிற உதிரி பாகங்களை எங்களுக்குள் பரிமாறவும் செஞ்சுக்குவோம். இந்தமுறை நல்ல ஒரு தொடக்கமா ஆரம்பிச்சுட்டோம். அடுத்த வருடம் இதை இன்னும் நிறைய உறுப்பினர்களோட கொண்டாடணும்ங்கிறதுதான் எங்க ஆசை'' என்று முடித்தார் பிரனேஷ்.