Published:Updated:

ரேபிட்டில் ராக்கெட் பயணம்!

ரேபிட்டில் ராக்கெட் பயணம்!

ரேபிட்டில் ராக்கெட் பயணம்!

ரேபிட்டில் ராக்கெட் பயணம்!

Published:Updated:
ரேபிட்டில் ராக்கெட் பயணம்!
 ##~##

''என்எல்சி(Neyveli Lignite Corporation)  நிறுவனத்தின் 5 சதவிகிதப் பங்குகளை, தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அறிக்கை விட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. 'ஐந்து சதவிகிதப் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனத்துக்கே விற்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் அறிக்கைக்கு மத்திய அரசு பரிசீலனை செய்தது'' என்று விகடன் இ-மேகஸினில் நியூஸ் வாசித்துக்கொண்டு இருந்தபோதுதான், அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என்எல்சி-யிலிருந்து சம்பத்குமார் பேசுறேன். கோர்ட், கேஸ், போராட்டம்னு டயர்ட் ஆயிட்டேன். மைசூருக்கு எஸ்கேப் ஆகலாம்... வர்றீங்களா?'' என்றது எதிர்முனை. அடுத்த ஐந்து மணி நேரத்தில், நெய்வேலியில், சம்பத்குமாரின் ரேபிட் கார் முன் ஆஜரானோம்.

''என் காரைப் பார்த்த உடனே பிடிக்காது; பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்!'' என்று தனுஷ் பாணியில் பஞ்ச் பேசியபடி, ஸ்கோடா ரேபிட் காரின் கேபினுக்குள் நம்மை வரவேற்றார் சம்பத்குமார். நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவில், அடிஷனல் சீஃப் மேனேஜராக இருக்கும் சம்பத்குமார், இந்த மாத ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்புக்கு, தனது மனைவி மற்றும் ஐந்து வயது மகன் அபிஷேக்குடன் தயாராகி இருந்தார். ''ஹை... டூர்.... அப்பா ஃபாரெஸ்ட் போலாம்ப்பா...!'' என்று அபிஷேக்கின் முகத்தில், சந்தோஷம் தாறுமாறாக ஏறியிருந்தது.

ரேபிட்டில் ராக்கெட் பயணம்!

ஃபேபியாவின் உடன்பிறந்த அண்ணன் போன்ற தோற்றத்தில் கம்பீரமாக நின்றிருந்த ரேபிட்டை உயிர்ப்பித்தோம். ஆர்பிஎம் மீட்டரின் முள், 'சீக்கிரம் கிளம்புங்கப்பா’ என்கிற தொனியில் அடங்காமல் எகிறிக் குதித்தது. காரின் ஜிபிஎஸ் சிஸ்டத்தை ஆன் செய்து, மைசூருக்கு செட் செய்தோம். ''டீசல் கார்னாலே கியர்பாக்ஸ் கொஞ்சம் ரஃப்பா இருக்கும். ஆனா, என் ரேபிட்ல அப்படிக் கிடையாது!'' என்று சம்பத் சொன்னது போலவே, வெண்ணெய்போல வழுக்கும் 'பட்டர் ஸ்மூத்’ கியர்களைப் போட்டு ஓட்டுதல் உற்சாகத்தை அனுபவித்ததில், அடுத்த இரண்டரை மணி நேரத்தில் சேலம் வந்ததே தெரியவில்லை.

பவானி, சத்தியமங்கலம், குண்டல்பேட், நஞ்சங்கூடு வழியாக மைசூர் ரூட் மேப், ஜிபிஎஸ்ஸில் படபடத்தது. சேலம் டு பவானி பைபாஸில், ரேபிட்டின் டீசல் இன்ஜின், தன் வேலையைக் காட்டிக்கொண்டிருந்தது. பவர் 105 தீலீஜீ என்பதால், ஹைவேஸில் பெர்ஃபாமென்ஸ் ஒன்றே குறியாக இருந்தது ரேபிட். ''இதுவே ரேபிட்டின் பெட்ரோல் ஆட்டோமேட்டிக்கில் இந்த ஓட்டுதல் தரம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்!'' என்று சொன்னார் சம்பத். பவானி ரோட்டில் இருந்து வலதுபுறம் திரும்பி சத்தியமங்கலத்துக்குச் செல்லும் வழியில், ரேபிட்டின் பொறுமையைச் சோதிப்பது போலவே செம டிராஃபிக். ஆனால், டிராஃபிக்கில், முதல் கியருக்குக்கூட வேலையே வைக்காமல், லோ எண்ட் ஆர்பிஎம்-மில்கூட ராக்கெட் வேகத்தில் சீறுகிறது ரேபிட்.

பவானிசாகர் அணையின் மேல்புறம், திறந்தவெளிக் காடான சத்தியமங்கலத்தை ஒட்டிய காடுகளில் பயணிப்பது ஆபத்தில்லாத, ஆனால், கொஞ்சம் த்ரில்லான விஷயம். ''என்னங்க.. சத்தியமங்கலம்னாலே வீரப்பன் ஞாபகம்தாங்க வருது. அவன் கிரிமினலா இருந்தாலும், ரொம்ப நல்லவன்கிறாங்களே... எதுங்க உண்மை?'' என்று அப்பாவியாகக் கேட்டார் சம்பத்தின் மனைவி ஜெயந்தி.

ரேபிட்டில் ராக்கெட் பயணம்!

''வீரப்பன், யானைத் தந்தங்கள் - சந்தன மரங்களைக் கடத்திய ஒரு குற்றவாளி; ஆனால், அவன் மீது ஒரு பாலியல் புகார்கூட யாராலும் சொல்ல முடியாது; மலைவாழ் மக்களிடம் அராஜகம் செய்த கர்நாடக காவல் துறையைத் தட்டிக் கேட்டான்; மசியாதவர்களைச் சுட்டான்; அவன் ஒரு தமிழ் வீரன்!'' என்று மனைவியிடம் வீரப்பன் புராணம் பாடிய சம்பத், ''சொல்ல முடியாது சார்... வீரப்பன் உயிரோட இருந்திருந்தா, ஈழப் போரை நிப்பாட்ட, ராகுல் காந்தியைக் கடத்தினாலும் ஆச்சரியமில்லை! காவிரி நீர் கேட்டு கர்நாடக முதல்வரைக் கடத்தினாலும் ஆச்சரியமில்லை!'' என்று நம்மைப் பார்த்தார்.

''வீரப்பனோட தீவிர ஃபேனா இருப்பார்போல!'' என்று கமென்ட் அடித்தார் நம் புகைப்பட நிபுணர். வழியில் ஆங்காங்கே நின்று புகைப்படம் எடுத்தபோதும், ''வீரப்பன் இருந்திருந்தா, நாம இப்படி ஜாலியா போட்டோ எடுக்க முடியுமா?'' என்று மீண்டும் ஞாபகப்படுத்தினார் சம்பத்.

சரியாக 12 கி.மீ. தொலைவில் பன்னாரி அம்மன் கோவிலை வந்தடைந்தோம். தென்னகத்தில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில்களில் இதுவும் ஒன்று. வருடா வருடம் நடக்கும் பங்குனி குண்டம் திருவிழா செம ஃபேமஸ்! 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புடைசூழ, சுயம்பு மூர்த்தியாக அம்மன் அருள் பாலிக்கிறார். இங்கு இன்னொரு ஸ்பெஷல், விபூதிக்குப் பதில் புற்று மண்தான் பிரசாதம்.

ரேபிட்டில் ராக்கெட் பயணம்!

இந்தக் கோவிலின் வரலாறு ரொம்ப சுவாரஸ்யம். 300 ஆண்டுகளுக்கு முன்பு, கால்நடைகளை மேய்க்க மக்கள் இந்த வனப் பகுதிக்கு வருவார்களாம். ஒருநாள் ஒற்றைப் பசு மட்டும் தனியாக, கூட்டத்திலிருந்து விலகிச் சென்று, தனியே ஒரு வேங்கை மரத்தின் அடியில் அடிக்கடி சென்று வருவதைக் கவனித்தாராம் ஒரு மேய்ப்பர். என்ன ஆச்சரியம்! அங்கே பசுவின் மடிக் காம்பிலிருந்து தானாகவே பால் கறந்து, புற்களுக்குப் பாய்ச்சப்படுவதைப் பார்த்து வியந்துபோனார். விஷயம் மக்களுக்குப் பரவி, புற்களை விலக்கிப் பார்க்கையில், அங்கே மேலும் ஒரு ஆச்சரியம்! புற்கள் சூழ்ந்த ஒரு புற்றும், சுயம்பு லிங்கத் திருவுருவமும் வேங்கை மரத்தடியில் இருந்ததாம். கேரளாவில் இருந்து பொதிமாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூருக்குச் செல்லும் மக்களுக்கு வழித் துணையாக, தான் வந்து இங்கேயே தங்கிவிட்டதாகவும், தன்னை பண்ணாரி அம்மன் என்று போற்றி வழிபடுமாறும் சாமி அருள் வந்த ஒரு பெருசு சொல்ல, வெறும் குடிலாக இருந்த பண்ணாரி அம்மன் கோவில், இன்று மிகப் பெரிய கோவிலாக ஜொலிக்கிறது.

''ஹை சூப்பர் அங்கிள்... 'கௌவ்’ கதை போதும்... எலிஃபன்ட் கதை வேணும்...'' என்று நச்சரிக்க ஆரம்பித்தான் அபிஷேக். 'எலிஃபன்ட் கதையா?’ என்று நாம் திகைத்து நின்றபோது, சத்தியமங்கலம் ரோட்டுப் பகுதியில் நிஜமாகவே யானைகள் கூட்டமாக சாலையைக் கடந்துகொண்டிருந்தன. சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூர் தாண்டி, மைசூர் காட்டுப் பகுதி வரையிலும் யானைகளும், மான்களும் ஹாய் சொல்லின. ''டைகர், சீட்டா எல்லாம் சீக்கிரமாவே தூங்கிடுமா டாடி?'' என்றான் அபிஷேக். நாம் ஏற்கெனவே சொன்னபடி, ஆபத்தில்லாத... ஆனால், த்ரில்லிங்கான பயணத்துக்கு ஆசனூர் மலைப் பகுதியும் கேரன்ட்டி தந்தது.

ரேபிட்டில் ராக்கெட் பயணம்!

ஹேர்பின் வளைவுகளின்போது, ரேபிட்டின் பவர் ஸ்டீயரிங்கும், இன்ஜினும் பார்ட்னர்ஷிப் வைத்துக்கொண்டு நம்மை உற்சாகப்படுத்தின. எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங் என்பதால், விரல்களின் சொற்ப அசைவுகளுக்கே வளைந்து கொடுக்கிறது ஸ்டீயரிங். சில ஹேர்பின் வளைவுகளைத் தாண்டி கர்நாடகக் காட்டுப் பகுதியின் எல்லைக்கு வந்தடைந்தபோது, வெளியே 21.2 டிகிரி என்று ரேபிட்டின் டெம்ப்ரேச்சர் மீட்டர் காட்டியது. கொஞ்ச நேரத்தில் லேசான மழைத் தூறல் ஆரம்பித்ததும், டெம்ப்ரேச்சர் மீட்டர் தானாக 17.3-க்கு இறங்கியது. ''செமயாக் குளிருதுல்ல?'' என்று பவர் விண்டோஸ் ஸ்விட்ச்சை ஆன் செய்து, கண்ணாடியை ஏற்றிவிட்டார் ஜெயந்தி.

நஞ்சங்கூடு தாண்டி கபினி ஆற்றில் நீர் சலபுலவென்று செம உற்சாகமாய் கரை புரண்டு சிரித்தது. ''நைல் நதி, கங்கை, தாமிரபரணி என நதிக் கரைகளில்தான் மனித நாகரிகம் கரை புரண்டு வளர்ந்தது. அந்த நதியை வைத்தே நாம் சண்டையிட்டுக் கொள்வது வெட்கக்கேடான விஷயம்!'' என்று சீரியஸானார் சம்பத்.

மண், பெண், பொன் - இவை மூன்றுக்காக மட்டுமே சண்டையிட்ட மனித இனத்தை, தண்ணீருக்காகவும் தகராறு பண்ணவைத்த பெருமை கொண்ட காவிரி நீர், ஆங்காங்கே நம்மைப் பொறாமைப்பட வைத்துக் கொண்டிருந்தது. மீன் பிடிப்பது, பைக் கழுவுவது, துணி துவைப்பது என்று சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் ஜிலேபி தேசத்தில் காவிரியை 'கைமா’ பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

''நாஸிக்ல நோட்டு அடிக்கிறாங்க. அதுக்காக, எங்களுக்குப் போகத்தான் மீதியை அனுப்புவோம்னு அந்த ஊர்க்காரங்க சொல்றாங்களா? நாங்ககூட நெய்வேலியில் நிலக்கரியைத் தோண்டி அனல் மின் நிலையம் மூலமா மின்சாரம் தயாரிக்கிறோம். எங்களுக்குத்தான் எல்லாம்னா சொல்றோம்? மொத்தத்துல, கர்நாடகா, நமக்கு நல்லா தண்ணி காட்டுது! என்ன கொடுமை சார் இது?'' என்றார் சம்பத்.

ஒரு வழியாக மைசூர் வந்தடைந்திருந்த போது, லேசான இருள் துவங்கியிருந்தது. சூப்பர் குளிருக்கு மைசூரில் ஃபேமஸான ஸ்வெட்டர்கள் வாங்கி அணிந்தபோது, லேசாக வெதுவெதுப்பு கூடி உடலுக்கு இதமாக இருந்தது. மைசூரில் 'நான் ஏ.சி’ ரூம் புக் செய்து, குளுகுளுவென்று இரவைக் கழித்துவிட்டு, அதிகாலை மறுபடியும் ரேபிட்டை உசுப்பினோம்.

'அரண்மனை நகரம்’ (சிவீtஹ் ஷீயீ றிணீறீணீநீமீ) என்று செல்லமாக அழைக்கப்படும் மைசூரில், எந்தப் பக்கம் திரும்பினாலும் குட்டிக் குட்டி அரண்மனைகளும், கோட்டைகளுமாக இருக்கின்றன. ஜகன்மோகன் பேலஸ், லலிதா மஹால் பேலஸ் என்று வின்டேஜ் கட்டடங்களால் வழிகிறது மைசூர். சில்லென்ற அந்தக் காலை வேளையில், மைசூர் அரண்மனையின் முன்பு ஜாலியாக புறாக்களுடன் விளையாட ஆரம்பித்திருந்தான் அபிஷேக்.

இன்னும் சில மாதங்களில் 100 வயதை எட்டவிருக்கும் மைசூர் அரண்மனை, அந்தக் காலத்திலேயே 42 லட்சம் செலவில் கட்டப்பட்டதாம். உள்ளே 200 கிலோ தங்கம் மற்றும் விலை மதிப்பற்ற கற்களால் ஜொலிக்கும் தர்பார் ஹால், கிளாஸ் சீலிங், கண்ணாடிச் சுவர்கள், காஸ்ட்லியான மொசைக் தரைகள், சந்தன மரக் கதவுகள் என்று பிரமிக்கவைக்கிறது.

இன்னும் சில-பல பேலஸ்களில் புகைப்படங்களை 'க்ளிக்’கிவிட்டு, மைசூர் என்கிற பெயர்க் காரணம் உருவான சாமுண்டீஸ்வரி கோவிலை நோக்கி ரேபிட்டைச் செலுத்தினோம். இங்கும் மலைப் பயணம்தான். கி.பி. 1794 முதல் 1868 வரை மைசூரை ஆண்ட கிருஷ்ணராஜ உடையார் என்னும் அரசரால் எழுப்பப்பட்ட இந்தக் கோபுரம், கடல் மட்டத்திலிருந்து 1073 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. மகிஷாசுரனை வதம் செய்த தேவி சாமுண்டீஸ்வரி நினைவாக இந்தக் கோவில் உருவானது. மலையில் இருந்து இடதுபுறம் செல்லும் பாதையில் பிரிந்தால், பிரம்மாண்டமான நந்தி கோவில் வருகிறது. சாமுண்டீஸ்வரியையும், நந்தியையும் தரிசித்துவிட்டு, மலையின் கீழ் மூன்றாவது கியரிலேயே இறங்க ஆரம்பித்தோம். இனிமேல், ஆரம்ப செடான் கார்களிலும் 'ஹில் டிசென்ட் கன்ட்ரோல்’ இருந்தால் நல்லதோ என்று தோன்றியது.

ரேபிட்டில் ராக்கெட் பயணம்!

மலையில் இருந்து இறங்கி, அடுத்ததாக ரேபிட்டை நாம் நிறுத்திய இடம் மைசூர் சாண்டல்வுட் ஃபேக்டரி. 100 ஆண்டுகள் பழைமையான ஃபேக்டரியாக, சந்தன மணம் கமழ்கிறது தொழிற்சாலை. சந்தன மரங்களை ஏலம் எடுத்து, நடுவில் இருக்கும் சந்தன வேரை மட்டும் பிரித்தெடுத்து, எண்ணெய், தைலம், சோப் போன்ற பொருட்கள் தயாரிக்கும் இடம் இது. 5 கிராம் தூய்மையான சந்தன எண்ணெய் 1,500 ரூபாய் வரை ஆகிறதாம். வீட்டுக்கு சில சந்தன அயிட்டங்களை பர்சேஸ் செய்தார் ஜெயந்தி.

சுமாரான லஞ்ச் முடித்துவிட்டு, 'டைகர் பார்க்கணும்’ என்ற சிறுவன் அபிஷேக்கின் அடம்பிடித்தலுக்குப் பணிந்து, நேராக மிருகக் காட்சி சாலையில் ரேபிட்டை பார்க் செய்தோம். சுற்றுலா மூலம் கர்நாடக அரசுக்கு வருமானம் தரக்கூடிய விஷயங்களில் ஒன்று - மைசூர் மிருகக்காட்சி சாலை. கிட்டத்தட்ட 1500-க்கும் மேற்பட்ட மிருகங்களை இங்கு கண்டுகளிக்கலாம். ஒவ்வொரு விலங்கினத்தையும், ஒவ்வொரு பணக்கார வி.ஐ.பி.யும் வருடத்துக்கு ஒருமுறை தத்தெடுத்து, அதற்கான செலவை ஏற்று, இலவச விளம்பரம் பெற்றுக்கொள்கிறார்கள். ''இது நல்ல ஐடியாவா இருக்கே? நம்மூர்லகூட இதை ஃபாலோ பண்ணலாம்!'' என்று வியந்தார் ஜெயந்தி.

புலி, சிங்கம், கரடி, காண்டாமிருகம், மயில், கொரில்லா என்று என்ஜாய் பண்ணிவிட்டு, திரும்பவும் டிரைவர் சீட்டில் அமர்ந்தோம். ஆர்பிஎம் மீட்டர் முள் துடிக்க ஆரம்பித்து அடங்குவதற்குள் வெளியே பார்த்தபோது, 'சேலம் 15 கி.மீ’ என்று பெயர்ப் பலகை சிரித்தது. கொஞ்சம்கூட டயர்டு ஆகாமல், இருள்வதற்குள் சீரான வேகத்தில் ரேபிட் நெய்வேலியை கிராஸ் செய்திருந்தது. ஆனால், எங்கள் அனைவரின் முகத்திலும் ஆரம்பத்தில் தங்கம், பெட்ரோல் விலைபோல் ஏறியிருந்த சந்தோஷம், டூர் முடிந்த சோகத்தில் தமிழ்நாடு மின்சாரம் போல் காணாமல் போயிருந்தது.