Published:Updated:

பைக்கில் ஒரு கார்! - MAHINDRA CENTURO

பைக்கில் ஒரு கார்! - MAHINDRA CENTURO

பைக்கில் ஒரு கார்! - MAHINDRA CENTURO

பைக்கில் ஒரு கார்! - MAHINDRA CENTURO

Published:Updated:
 ##~##

நெகட்டிவ் விமர்சனங்களை பாஸிட்டிவாக எடுத்துக்கொண்டு, வேக வேகமாக முன்னேறுகிறது மஹிந்திரா. இரு சக்கர வாகன மார்க்கெட்டில் நுழைந்த மஹிந்திரா, கடந்த காலங்களில் கடுமையான சரிவைச் சந்தித்தது. ஸ்கூட்டர்கள் ஹிட் என்றாலும், அது அறிமுகப்படுத்திய ஸ்டாலியோ சொதப்பியது. ஸ்டாலியோவுக்கு அடுத்தபடியாக அறிமுகப்படுத்தப்பட்ட பேன்ட்டீரோவும் எடுபடவில்லை. ஆனால், இப்போது மஹிந்திரா அறிமுகப்படுத்தியிருக்கும் சென்ட்யூரோ, நிச்சயம் மார்க்கெட்டில் ஹிட் ஆகும் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும். ஹிட் ஆகுமா சென்ட்யூரோ? 

100 சிசி மார்க்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால், அது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. ஹீரோ ஸ்ப்ளெண்டர், பேஷன் ப்ளஸ், ஹோண்டா ட்ரீம் யுகா, டிவிஎஸ் ஸ்டார் ஆகிய பைக்குகளைத் தாண்டி, 100 சிசி மார்க்கெட்டில் ஒரு பைக் வெற்றி பெற வேண்டும் என்றால், அதில் நிச்சயம் ஏதாவது மாயாஜாலம் இருந்தே ஆக வேண்டும். அது என்ன என்பதைக் கண்டுபிடித்து, சென்ட்யூரோவைக் களம் இறக்கியிருக்கிறார்கள். கார் தயாரிப்பு அனுபவத்தை வைத்துக்கொண்டு, அதே யுக்திகளை பைக்கில் பயன்படுத்தியிருக்கிறது மஹிந்திரா. கார்களில் இருக்கும் பல சிறப்பம்சங்களை பைக்குக்கு கொண்டு வந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பைக்கில் ஒரு கார்! - MAHINDRA CENTURO

டிசைன்

100 சிசி பைக்குகளில் கொஞ்சம் பெரிய பைக் போல் இருக்கிறது சென்ட்யூரோ. ஹெட்லைட் ஃபேரிங் அழகாக வடிவமைக்கப்பட்டு இருப்பதோடு, பெட்ரோல் டேங்க், இன்ஜினுக்கு மேலே வைக்கப்பட்டுள்ள விலா எலும்பு வடிவிலான தங்க நிற மெட்டல் பைப், பின் பக்க எல்இடி விளக்கு ஆகியவை சென்ட்யூரோவுக்கு ஒரு புதிய தோற்றத்தைத் தருகின்றன. ஒற்றை டயல் டேக்கோ மீட்டருக்கு அடியில் டிஜிட்டல் டிஸ்ப்ளே இடம்பிடித்துள்ளது. டேக்கோ மீட்டருக்குக் கிழே டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டரும், அதன் வலப்பக்க டயலில் 'டிஸ்ட்டன்ஸ் டூ எம்ப்டி’ மீட்டரும், இடது பக்க டயலில் ட்ரிப் மீட்டரும் இடம்பிடித்துள்ளன. இது தவிர, இந்த டிஜிட்டல் டயல்களில் கடிகாரம், எப்போது சர்வீஸ் விட வேண்டும் என்பதைக் காட்டும் சர்வீஸ் இண்டிகேட்டர் ஆகியவையும் உண்டு. சென்ட்யூரோவின் டிசைனைவிட சிறப்பம்சங்கள் தான் கவரும். இதுவரை கார்களில் மட்டுமே இருந்த 'டிஸ்ட்டன்ஸ் டூ எம்ப்டி’ வசதியை பைக்கில் அறிமுகப்படுத்தி இருக்கிறது மஹிந்திரா.

பொதுவாக, ஃப்யூல் இன்ஜெக்ஷன் கொண்ட பைக்குகளில் இந்த வசதி சாத்தியம். ஆனால், கார்புரேட்டர் இன்ஜின்கொண்ட சென்ட்யூரோவில் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்திருப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது. இன்ஜினுக்குள் செலுத்தப்படும் பெட்ரோலின் அளவைக் கணக்கிட்டு இதை அமைத்திருக்கிறார்கள். பைக்கை நாம் டெஸ்ட் செய்தபோது, 'டிஸ்ட்டன்ஸ் டூ எம்ப்டி’ மீட்டர் சரியாகச் செயல்பட்டதையும் பார்க்க முடிந்தது.

பைக்கில் ஒரு கார்! - MAHINDRA CENTURO

மேலும், கார் சாவி போன்றே சென்ட்யூரோ பைக்கின் சாவியைத் தயாரித்திருக்கிறார்கள். இதில் இருக்கும் பட்டனைத் தட்டினால், உங்கள் பைக் எங்கே இருக்கிறது என்று இண்டிகேட்டர் விளக்கு ஒளிர்கிறது. சென்னை போன்ற பெருநகர பார்க்கிங் ஏரியாக்களில், இந்த வசதி நிச்சயம் உதவியாக இருக்கும். மேலும், இந்த சாவி போன்று டூப்ளிகேட் சாவியும் தயாரிக்க முடியாது என்பதோடு, டூப்ளிகேட் சாவி போட்டால் அலாரம் ஒலிக்க ஆரம்பித்துவிடும். மேலும், இருட்டில் பைக்கை நிறுத்திவிட்டுப் போனாலும் 4-5 விநாடிகளுக்கு ஹெட்லைட் ஒளிரும். இது, இருட்டில் மிகவும் உதவியாக இருக்கும்.

பைக்கில் ஒரு கார்! - MAHINDRA CENTURO

சிறப்பம்சங்கள் மட்டும் அல்லாமல், கைப்பிடி - பிடித்து ஓட்டுவதற்கு மிகவும் சௌகரியமாக இருக்கிறது. ரியர் வியூ கண்ணாடிகள் அகலமாக இருப்பதால், பின்னால் வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரிகின்றன. சுவிட்சுகள் தரமாக இருக்கின்றன. இவ்வளவு வசதிகளைக் கொடுத்த மஹிந்திரா, இதில் இன்ஜின் கில் சுவிட்ச்சையும் (ஆஃப் சுவிட்ச்) கொடுத்திருக்கலாம்.

இன்ஜின்

இன்ஜினைப் பொறுத்த வரை பேன்ட்டீரோவில் இருக்கும் அதே இன்ஜின்தான் சென்ட்யூரோவிலும் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், ஏர் கூல்டு இன்ஜின் 106.7 சிசி திறனைக் கொண்டிருக்கிறது. இது, அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 8.4 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. பெர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை போதுமானதாக இருக்கிறது. 4-ஸ்பீடு கியர்பாக்ஸ், கியர்களை உடனுக்குடன் மாற்றும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளது. இதனால், வேகமாக ஓட்டுவதுபோன்ற உணர்வைத் தருகிறது சென்ட்யூரோ.

பைக்கில் ஒரு கார்! - MAHINDRA CENTURO

ஹீரோ மற்றும் ஹோண்டா பைக்குகளுக்கு இணையாக இதன் பெர்ஃபாமென்ஸ் இருந்தாலும், இன்ஜின் சத்தம் அதிகம். மேலும், வேகமாகச் செல்லும்போது அதிர்வுகளும் அதிகமாக இருக்கிறது.

ஓட்டுதல் தரத்தைப் பொறுத்தவரை, வளைத்து நெளித்து ஓட்ட வசதியான பைக்காக இருக்கிறது சென்ட்யூரோ. இருக்கை அகலமாகவும், நீளமாகவும் இருப்பதால், இரண்டு பேர் வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும். பிரேக்குகளின் பெர்ஃபாமென்ஸ் ஓகே ரகம். மைலேஜ், லிட்டருக்கு 85.4 கி.மீ தரும் என்கிறது மஹிந்திரா. சென்ட்யூரோவை முழுமையாக டெஸ்ட் செய்தபிறகுதான் நம்முடைய மைலேஜை சொல்ல முடியும்.

முதல் தீர்ப்பு

இன்ஜின் தரம் மற்றும் டிசைன் குறை சொல்லும் அளவுக்கு இல்லை. அதேசமயம், ஹோண்டா பைக்குகளைவிட சிறப்பாகவும் இல்லை. ஆனால், இந்த பைக்கின் பலமே சிறப்பம்சங்கள்தான்.

100 சிசி பைக்கில், விலை உயர்ந்த கார்களில் இருக்கும் வசதிகளைக் கொண்டுவந்து அசத்தியிருக்கிறது மஹிந்திரா. மேலும் விலையையும் மற்ற 100 சிசி பைக்குகளைவிட குறைவான விலைக்குக் கொண்டு வந்திருப்பது நிச்சயம் வாடிக்கையாளர்களைக் கவரும்.

 சார்லஸ்  வீ.நாகமணி