Published:Updated:

கமர்ஷியல் ஸ்டைல்!

அசோக் லேலாண்ட் - நிஸான்

கமர்ஷியல் ஸ்டைல்!

அசோக் லேலாண்ட் - நிஸான்

Published:Updated:
 ##~##

சோக் லேலாண்ட் - நிஸான் கூட்டணியின் இரண்டாவது வாகனம்தான் - ஸ்டைல். நிஸானின் எவாலியா, உலக அளவில் பிரபலமான ஒரு எம்யூவி. ஆனால், இது நம் நாட்டில் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. காரணம், வேன் போன்ற தோற்றம்; பின் பக்கக் கண்ணாடிகளைத் திறக்க முடியாதது; ஸ்லைடிங் டோர் எனப் பல விஷயங்கள் இந்த காருக்கு எதிராக இருந்தன. 

நிஸானுடன் கமர்ஷியல் வாகனத் தயாரிப்புக்குக் கூட்டணி வைத்திருக்கும் அசோக் லேலாண்ட், நிஸான் கூட்டணியின் முதல் வாகனமாக 'தோஸ்த்’ என்ற கமர்ஷியல் எல்சிவி மாடலைத் தயாரித்து வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, இப்போது அசோக் லேலாண்ட் 'ஸ்டைல்’ என்னும் மல்ட்டி யுட்டிலிட்டி வாகனத்தைக் களமிறக்குக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்படி இருக்கிறது ஸ்டைல்?

கமர்ஷியல் ஸ்டைல்!

எவாலியாதான் என்றாலும், டிசைனில் பல மாற்றங்களைச் செய்திருக்கிறது அசோக் லேலாண்ட். புதிய ஹெட்லைட்ஸ், ஸ்டைலுக்குப் புத்தம் புதுத் தோற்றத்தை அளிக்கிறது. படிக்கட்டுகள் போல அமைந்திருக்கும் க்ரில், பானெட் மீது வைக்கப்பட்டுள்ள லோகோ, அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் பம்பர், பனி விளக்குகள் என புதிய கார் போன்ற தோற்றத்தில் அமைந்திருக்கிறது ஸ்டைல். எவாலியாவில் முக்கியப் பிரச்னையாகச் சொல்லப்பட்ட திறக்க முடியாத பின் பக்கக் கண்ணாடிகளுக்கு, அருமையான தீர்வைத் தந்திருக்கிறது அசோக் லேலாண்ட். கண்ணாடிக்குள் கண்ணாடியை அழகாக வடிவமைத்து, காரின் அழகுக்கு எந்த பங்கமும் வராமல் பொருத்தி இருக்கிறது. இப்போது, பின் பக்கக் கண்ணாடிகளைத் திறக்க முடியும். ஸ்டீயரிங் வீல், முன் பக்க இருக்கைகளுக்கு நடுவே இருக்கும் ஏ.சி வென்ட் போன்றவை புதுசு. க்ளோவ் பாக்ஸ் கொஞ்சம் ஆழமாக மாறி இருக்கிறது. இன்டீரியரிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதால், கார் விசாலமாகத் தோற்றமளிக்கிறது. ஆனால், பின் பக்கம் பெரிதாக மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. எவாலியா போலவே இருக்கிறது.

கமர்ஷியல் ஸ்டைல்!

கமர்ஷியல் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் நன்றாகவே டிசைன் செய்திருக்கிறது அசோக் லேலாண்ட். எலெக்ட்ரிக்கல் பவர் ஸ்டீயரிங், டூயல் ஏ.சி, 7 மற்றும் 8 இருக்கைகள் ஆப்ஷன், பாதுகாப்புக்கு ஏர் பேக் என எல்லாம் இதில் இருக்கின்றன. பக்கெட் சீட் இரண்டு வரிசைக்கும் உண்டு.  

ரெனோவின் வெற்றிகரமான 1.5 லிட்டர் டிசிஐ டீசல் இன்ஜின்தான் இதில் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த இன்ஜினை ட்யூனிங் செய்து Diet என்று பெயர் சூட்டி இருக்கிறது லேலாண்ட். இதனால் 'சத்தம், அதிர்வுகள் குறைந்து, மைலேஜ் அதிகமாகி இருக்கிறது’ என்கிறார்கள். ஆனால், இதை முழுமையாக டெஸ்ட் டிரைவ் செய்யும்போதுதான் இது உண்மையா என்பது தெரியவரும்.

ஸ்டைல், சென்னை ஒரகடத்தில் இருக்கும் நிஸான் தொழிற்சாலையில், எவாலியாவின் பிளாட்ஃபார்மில்தான் தயாரிக்கப்பட இருக்கிறது. ஆனால், எவாலியாவைவிட 1 லட்ச ரூபாய் வரை விலை குறைவாக ஸ்டைல் காரின் விலை இருக்கும் என்கிறார்கள்.

ஸ்டைலின் அறிமுகத்தின்போது, ''கூட்டணி மூலம்தான் வெற்றிகளைப் பெற முடியும் என்ற எங்கள் நிறுவனத்தின் கொள்கையை உறுதிப்படுத்தியது தோஸ்த். அந்த வெற்றி ஸ்டைலிலும் தொடர்கிறது. இதன் மூலம் நிஸானுடனான உறவு வலுப் பெற்றிருக்கிறது என்று பூரித்துப் பேசினார் இந்துஜா குழுமத்தின் தலைவரான ஜி.பி.இந்துஜா. அதேபோல், நிஸான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கார்லோஸ் கோன் பேசும் போது, ''லேலாண்டின் கூட்டணி மூலம் இந்திய மக்களுக்கு ஏற்ற வகையில் வாகனத்தை வடிவமைப்பதிலும், சிக்கனமாகத் தயாரிப்பதிலும் முன்னேறி இருக்கிறோம்'' என்றார்.

 கா.பாலமுருகன்