Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்

ஃபெராரியைத் தொடர்ந்து மஸராட்டி!

மோட்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோட்டார் நியூஸ்

இந்தியாவில் ஃபெராரி தனது விற்பனையைத் துவக்க இருக்கும் நிலையில், மஸராட்டி கார்களையும் இந்தியாவில் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது ஃபியட். க்வாட்ரோ போர்ட்டே செடான், கிரான் டூரிஸ்மோ கூபே, கிரான்காப்ரியோ கன்வர்ட்டிபிள் என இந்தியாவில் மொத்தம் மூன்று மாடல் மஸராட்டி கார்கள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இதில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கும். 400 bhp சக்தி கொண்ட 4.2 லிட்டர் க்ஷி8 இன்ஜின் மற்றும் 430 bhp சக்தி கொண்ட 4.7 லிட்டர் க்ஷி8 இன்ஜினையும் அறிமுகப்படுத்த இருக்கிறது மஸராட்டி. 4.7 லிட்டர் க்வாட்ரோ போர்ட்டே அதிகபட்சமாக மணிக்கு 280 கி.மீ வேகத்தைத் தொடும். அதிக எடை கொண்ட இந்த கார், 0-100 கிமீ வேகத்தை 5.4 விநாடிகளில் கடந்துவிடும். 4.2 லிட்டர் மாடலின் விலை 1.5 கோடி ரூபாயில் இருந்து ஆரம்பம்!

சுனாமியால் விலை ஏறும் கார் மார்க்கெட்!

மோட்டார் நியூஸ்

கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி, பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால், ஆசியாவின் ஆட்டோமொபைல் தலைநகரான ஜப்பான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா, டொயோட்டா, சுஸுகி, நிஸான், யமஹா என பல்வேறு கார், பைக் நிறுவனங்களும் குடி கொண்டிருக்கும் ஜப்பானில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இன்ஜின் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு இருக்கிறது.இதனால், கார்களின் விலை கூடும் என்பதோடு, டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட கார்களின் டெலிவரி இன்னும் கடுமையாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது!

ஸ்தம்பித்தது ஸ்டாலியோ!

மோட்டார் நியூஸ்

மஹிந்திரா 2 வீலர்ஸ் நிறுவனத்தின் முதல் மோட்டார் சைக்கிளான ஸ்டாலியோ 100 சிசி பைக்கின் விற்பனை  நிறுத்தப்பட்டு இருக்கிறது. கியர் பாக்ஸ் உள்ளிட்ட முக்கிய பாகங்களில் பல பிரச்னைகள் வர, டீலர் ஷிப்புகளில் இருந்தும் பைக்குகளை வாபஸ் பெற்றிருக்கிறது மஹிந்திரா நிறுவனம். அக்டோபர் 2010 முதல் இதுவரை 5,135 ஸ்டாலியோ பைக்குகளை விற்பனை செய்திருக்கிறது மஹிந்திரா. விற்பனை செய்யப்பட்டு இருக்கும் அத்தனை பைக்குகளும் திரும்பப் பெறப்பட்டு பிரச்னைகள் சரி செய்யப்படும் என அறிவித்திருக்கிறது மஹிந்திரா. ஜூன் மாதத்துக்குள் பிரச்னைகள் சரி செய்யப்பட்டு மீண்டும் ஸ்டாலியோ விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது!

உலக நாயகனிடம் ஆடி ஏ8!

மோட்டார் நியூஸ்

பாதுகாப்பான கார் என்று பெயர் பெற்ற ஆடி ஏ8, இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. ஆடி ஏ8 காரில் இருப்பது கீ12 இன்ஜின். ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது இந்த ஏ8. 'கையெறி குண்டு வீசப்பட்டாலும் காருக்கு எந்தச் சேதமும் ஏற்படாது’ என்கிறது ஆடி நிறுவனம். இந்த காரை தமிழகத்தில் முதலில் புக் செய்திருப்பது யார் தெரியுமா? உலக நாயகன் கமல்ஹாசன்தான் அந்த முதல்வர்!

ஹோண்டாவின் ஸ்கூட்டர் படை!

மோட்டார் நியூஸ்

ஆக்டிவா, ஏவியேட்டர், டியோ என மூன்று வகையான ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஹோண்டா நிறுவனம், மேலும் புதிய ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்யத் திட்டமிட்டு இருக்கிறது. கிராமம் மற்றும் சிறு நகரங்களில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்து வருவதுதான் இதற்குக் காரணம், 2012-ம் ஆண்டு மத்தியில் டிவிஎஸ் ஸ்கூட்டி மார்க்கெட்டைக் குறிவைத்து லைட் வெயிட் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது ஹோண்டா. ''இந்தியாவில் தற்போது ஸ்கூட்டர் மார்க்கெட்டில் எங்களது ஷேர் 40 சதவிகிதம். இதை 60 சதவிதமாக உயர்த்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்'' என்று புது ஸ்கூட்டருக்கான ஹின்ட் கொடுத்தார் ஹோண்டா மோட்டார் சைக்கிள்ஸ் அண்ட் ஸ்கூட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஷின்ஜி அயோமா!

தொடர்ந்து வரும் டிஸ்கவர் 125

மோட்டார் நியூஸ்

ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் டிஸ்கவர் 125 பைக்கை விற்பனைக்குக் கொண்டு வருகிறது பஜாஜ். டிஸ்கவர் 100 மற்றும் 150 பைக்குகளுக்கு இடையே இருக்கும் இடைவெளியைக் குறைப்பதற்காகவே மீண்டும் டிஸ்கவர் 125 சிசி-யை வெளியிட இருப்பதாகக் கூறுகிறது பஜாஜ். 124.6 சிசி திறன் கொண்டு 10.8 bhp சக்தியை வெளிப்படுத்தும் இன்ஜினோடு விற்பனைக்கு வருகிறது டிஸ்கவர் 125. டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் வேரியன்ட்டுகளுடன் விற்பனைக்கு வர இருக்கும் டிஸ்கவர் 125 சிசி பைக்கின் டிரம் பிரேக் மாடலின் விலை, டிஸ்கவர் 100 சிசி பைக்கைவிட சுமார் ஆயிரம் ரூபாய் கூடுதலாகவும், டிஸ்க் பிரேக் மாடலின் விலை டிஸ்கவர் 150 சிசி பைக்கைவிட 1,000 ரூபாய் குறைவாகவும் இருக்கும் எனத் தெரிகிறது!

கண்காணிப்பு வளையத்தில் ஹோண்டா, ஹூண்டாய், போக்ஸ்வாகன்!

மோட்டார் நியூஸ்

தி காம்பெட்டிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா (சிசிமி) நிறுவனம் ஹோண்டா, ஹூண்டாய் மற்றும் ஃபோக்ஸ்வாகன் நிறுவனங்களை தங்களது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது. சிசிமி நிறுவனம் என்பது பொருட்கள் அதற்கான சரியான விலையில் விற்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் நிறுவனமாகும். ''ஹோண்டா, ஹூண்டாய் மற்றும் ஃபோக்ஸ்வாகன் நிறுவனங்கள் தங்களது உதிரி பாகங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன. இம்மூன்று நிறுவனங்களும் தங்களது ஸ்பேர் பார்ட்ஸை வெளியில் விற்பனை செய்யாமல், தங்களது டீலர்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்து அதிக லாபம் பார்ப்பதாகத் தெரிகிறது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது'' என்றார் சிசிஐ-ன் உயர் அதிகாரி ஒருவர்!

காஸ்ட்ரால் கிரிக்கெட் ஹீரோ!

மோட்டார் நியூஸ்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் ஸ்பான்ஸரான காஸ்ட்ரால் நிறுவனம் 'வேர்ல்டு கப் ஹீரோ’ என்ற பெயரில் பல்வேறு போட்டிகளை நடத்தியது. இதில் கம்ப்யூட்டர் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் ஸ்டேடியங்களில், ராஜா சீட்டில் உட்கார வைத்து ராஜ மரியாதை கொடுத்தது காஸ்ட்ரால். சென்னையில் நடைபெற்ற தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், சென்னையைச் சேர்ந்த மொஹமது ஷராஃபுதீன்தான் காஸ்ட்ரால் ஹீரோ. சச்சின் டெண்டுல்கர் கைப்பட கையெழுத்திட்ட அழைப்பிதழோடு, வீட்டில் இருந்து சொகுசு காரில் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டார் ஷராஃபுதீன். பெவிலியன் அருகே தனியாகப் போடப்பட்டு இருந்த இருக்கையில் அமர்ந்து மேட்ச் பார்த்ததோடு, ஷராஃபுதீனுக்கு கூல் டிரிங்க்ஸ், உணவுகள் பரிமாற அருகிலேயே இரண்டு பெண்களும் உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.

சச்சின் டெண்டுல்கர் கையெழுத்திட்ட உலகக் கோப்பை நினைவுப்  பரிசோடு ஸ்டேடியத்தில் இருந்து வெளிவந்த ஷராஃபுதீனிடம் பேசினோம். ''காஸ்ட்ரால் ஆயில் வாங்கி என்னுடைய பெயரை ஆன் லைன் போட்டியில் பதிவு செய்தேன். நான் போட்டியில் வெற்றி பெறுவேன் என நினைத்துப் பார்க்கவே இல்லை. மிகவும் பரப்பரப்பான போட்டியை ஸ்பெஷலாக உட்கார்ந்து பார்த்தது வாழ்க்கையில் மறக்கவே முடியாது!'' என்றார்!

ட்விஸ்ட்டர் இன்ஷினை ஹீரோ ஹோண்டாவுக்குத் தாரை வார்த்தது ஹோண்டா!

மோட்டார் நியூஸ்

ஹோண்டா நிறுவனம், தற்போது விற்பனை செய்து வரும் ட்விஸ்ட்டரின் 110 சிசி இன்ஜினை ஹீரோ நிறுவனத்துக்குத் தாரை வார்த்துவிட்டது. 2015-ம் ஆண்டில் இருந்து தனியாகக் கடை விரிக்க இருக்கும் ஹீரோ நிறுவனம், ஹோண்டாவிடம் கடைசிக்கட்ட டீலிங்கில் இறங்கியிருக்கிறது. இதன்படி ஹோண்டா நிறுவனம், மார்க்கெட்டில் தற்போது மைலேஜில் நம்பர் ஒன் இன்ஜினாக மாறியிருக்கும் ட்விஸ்ட்டரின் இன்ஜினை ஹீரோ நிறுவனத்துக்கு விற்று விட்டது. விரைவில் ஹீரோ பைக்குகள் 110 சிசி இன்ஜினுடன் விற்பனைக்கு வரும்!

இந்தியாவின் முதல் கமர்ஜியல் ஆட்டோமால்!

மோட்டார் நியூஸ்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அருகில் உள்ள புக்கத்துறை என்ற இடத்தில் 'ஆட்டோ மால்’ என்ற பெயரில் கமர்ஷியல் வாகனங்களுக்கு நிதி உதவி மையத்தைத் துவக்கியுள்ளது ஸ்ரீராம் நிறுவனம். ஆட்டோமால் நிறுவனத்தைத் துவக்கி வைத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ''கமர்ஷியல் வாகன உரிமையாளர்களில் 70 சதவிகிதத்தினர் அவர்களே ஓட்டுனர்களாகவும், உரிமையாளர்களாகவும் இருக்கின்றனர். இப்படி, முதன்முதலாக ஒரு வாகனம் வாங்கி, அதன் மூலம் உழைத்து உயர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். முதல் வாகனங்களை வாங்க நினைப்பவர்களுக்கு நிதிதான் பெரும் பிரச்னையாக இருக்கும். அவர்களைப் போன்றோருக்கு, நிதி உதவியுடன் விற்பதற்கும் வாங்குவதற்கும் செய்துள்ள இந்த ஏற்பாடு, மிக அருமையான திட்டம். இதன் மூலம் வாகனங்கள் வாங்குவது, விற்பது ஆகிய இரண்டுமே எளிதாக இருக்கும்' என்று நம்பிக்கையூட்டினார்.

மோட்டார் நியூஸ்

ஸ்ரீராம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஸ்ரீதரன் நம்மிடம் பேசியபோது, 'இந்தியாவின் முதல் ஆட்டோ மால் இது. 2 லட்சம் சதுர அடியில் இதை அமைத்துள்ளோம். இந்த ஆண்டில் இதுபோன்ற மேலும் 50 ஆட்டோ மால்களை இந்தியா முழுவதும் திறக்க உள்ளோம். இங்கு வருபவர்களுக்கு விரைவாக வாகனங்கள் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வட்டி விகிதம் பழைய வாகனங்களுக்கு 18 சதவிகிதமும், புதிய வாகனங்களுக்கு 13-ல் இருந்து 14 சதவிகிதம் வரையும் நிதி உதவி அளிக்கிறோம். தற்போது வாகனங்களை வாங்குவது எளிது என்பதால், பழைய வாகனங்களுக்கும் தேவை அதிகமாகி விட்டது. இதில் பெரும்பாலும் டிரைவர்கள்தான் வாகனங்களை வாங்குகின்றனர். இங்கு, நாங்கள் வாகனங்களை வாங்கி விற்பதில்லை. விற்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இது ஒரு சந்தையாகத் திகழும். எங்கள் முக்கிய நோக்கமே வாகனத்துக்கான நிதி உதவி மட்டும்தான். அதற்கு உதவி புரிவதுதான் இந்தத் திட்டம்'' என்றார்.

- பா.ஜெயவேல்

உச்சத்தைத் தொடுகிறது இந்திய பைக் மார்க்கெட்!

மோட்டார் நியூஸ்

மோட்டார் சைக்கிள்களின் விற்பனை, நம்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஹீரோ ஹோண்டா நிறுவனம் மட்டும் 4,72,055 பைக்குகளை விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது. பஜாஜ் நிறுவனம் அடுத்தபடியாக 2,86,657 பைக்குகளை விற்பனை செய்திருக்கிறது. மூன்றாவது இடத்தில் டிவிஎஸ் நிறுவனம் 1,77,421 பைக்குகளை விற்பனை செய்திருக்கிறது. ஹோண்டா நிறுவனம் 1,45,819 மோட்டார் சைக்கிள்களையும், சுஸ¨கி 28,738 மோட்டார் சைக்கிள்களையும் விற்பனை செய்திருக்கிறது. யமஹா நிறுவனம் சுஸ¨கியைவிட குறைவாக 23,384 மோட்டார் சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது. மஹிந்திரா அண்டு மஹிந்திரா 2 வீலர் நிறுவனம் பிப்ரவரி மாதம் 12,682 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்திருக்கிறது!

ஹோண்டா சிட்டியுடன் மோதும் வென்ட்டோ!

பிப்ரவரி மாத கார் விற்பனையில் தொடர்ந்து மாருதிதான் கிங். டாப் டென் கார்களில் 4 கார்கள் மாருதி கார்கள்தான். மாருதி ஆல்ட்டோ தொடர்ந்து பிப்ரவரி மாதமும் 33,015 கார்கள் விற்பனையாகின. மேலும், பிப்ரவரி மாதம் மட்டும் 1 லட்சம் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்தது மாருதி. ஆல்ட்டோவுக்கு அடுத்தபடியாக ஹூண்டாய் ஐ10, 15,105 கார்கள் விற்பனையானது. மிகப் பெரிய வீழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் நானோவின் விற்பனை அதிகரித்திருப்பதால், டாப் டென் லிஸ்ட்டில் எட்டாவது இடம் பிடித்திருக்கிறது டாடா நானோ. இண்டிகா மற்றும் இண்டிகோ கார்களின் விற்பனையும் அதிகரித்திருப்பதால், டாடாவின் விற்பனையும் சூடு பிடித்திருக்கிறது. மிட் சைஸ் மார்க்கெட்டில் வென்டோவும், ஹோண்டா சிட்டியும் விற்பனையில் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. போக்ஸ்வாகன் வென்ட்டோ 3,548 கார்கள் விற்பனையாக, ஹோண்டா சிட்டி 3,668 கார்கள் விற்பனையாகின. சொகுசு கார்களைப் பொறுத்தவரை மெர்சிடீஸ் பென்ஸ் அதிகபட்சமாக 662 கார்களை விற்பனை செய்தது. இதில் சி-கிளாஸின் விற்பனை மட்டும் 362. பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் பிப்ரவரி மாதம் மட்டும் 262 கார்கள் விற்பனையாகின. மாருதி கியாஷி 25 கார்கள் விற்பனையாகி உள்ளன!

மோட்டார் நியூஸ்