கார்ஸ்
Published:Updated:

டிவிஎஸ் ஜூபிட்டர் - இது ஆண்களுக்கு!

அறிமுகம்

 ##~##

ந்திய ஆட்டோமொபைல் சந்தை என்ன ஆட்டம் கண்டாலும், எப்போதும் சூப்பர் ஹிட் செக்மென்ட்...ஸ்கூட்டர் மட்டுமே! பெண்கள் வேலைக்குச் செல்ல ஸ்கூட்டர் வாங்க ஆரம்பித்து இருப்பது, நகர டிராஃபிக்கில் ஓட்ட ஸ்கூட்டர் வசதியாக இருப்பது என நிறையக் காரணங்கள். 

டிவிஎஸ் நிறுவனம் ஸ்கூட்டர் செக்மென்ட்டில் ஒரு முக்கியமான தயாரிப்பாளர். ஏற்கெனவே பெண்களுக்கென ஸ்கூட்டி பெப் , ஸ்ட்ரீக், இருபாலரும் ஓட்ட வீகோ என மூன்று ஸ்கூட்டர்களை விற்பனை செய்துவந்தாலும், முழுக்க முழுக்க தன்னிடம் ஆண்களுக்கான ஸ்கூட்டர் ஒன்று இல்லாமல் இருந்ததை 'ஜூபிட்டர்’ மூலம் பூர்த்தி செய்துள்ளது டிவிஎஸ்.  இந்த விஷயத்தில் டிவிஎஸ் கொஞ்சம் லேட்தான். 'ஜூபிட்டர்’ ஓர் ஆண்டுக்கு முன்பே விற்பனைக்கு வந்திருந்தால், இந்த நேரம் அது வெற்றிப் பாதையில் வெகுதூரம் பயணித்திருக்கும்.

போட்டிகள் பலமாக உள்ள இந்தச் சூழ்நிலையில், ஜூபிட்டரால் இப்போது வெற்றி பெற முடியுமா?

டிவிஎஸ் ஜூபிட்டர் - இது ஆண்களுக்கு!

டிசைன்

டிவிஎஸ் ஜூபிட்டரை நேரில் பார்த்தால், உடனே நினைவுக்கு வருவது ஹோண்டா ஆக்டிவாதான். ஸ்கூட்டர் செக்மென்ட்டில் ஆக்டிவாதான் பெஞ்ச் மார்க் என்பதை டிவிஎஸ் நன்றாகவே உணர்ந்திருக்கிறது என்பது, ஜூபிட்டரின் வடிவமைப்பிலேயே தெரிகிறது. ஆனால், ஆக்டிவாவைப் போன்று ரொம்பவும் கொழுக் மொழுக் வடிவமைப்பாக இல்லாமல், சீரான கோடுகளுடனும், ஸ்மார்ட்டான வளைவுகளுடனும் பார்க்கக் கச்சிதமாக இருக்கிறது ஜூபிட்டர். முன் பக்கம் இரண்டு இண்டிகேட்டர் விளக்குகளும் பெரிதாக இருப்பது, இரவில் பயனுள்ளதாக இருக்கும். நடுவே மூக்கு போன்று இருக்கும் அம்புக்குறியை ஒரு கோணத்தில் பார்த்தால், நன்றாக இருக்கிறது. இன்னொரு கோணத்தில், மோசமாக இருக்கிறது. ஜூபிட்டரின் முன் பக்க டிசைனின் அழகு பார்ப்பவரின் பார்வையையும், கண்ணோட்டத்தையும் பொறுத்தது.

இதில், கால் வைக்க தாராளமாக இடம் இருக்கிறது. இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்றும் உண்டு. இதன் போட்டியாளரான ஹோண்டா ஆக்டிவாவில், கால் வைக்கும் இடத்தில் உள்ள ஃபுட்மேட்டுக்குக் கீழே மழை பெய்தாலோ, ஸ்கூட்டரைக் கழுவினாலோ தண்ணீர் தேங்கி, அங்கிருக்கும் உலோக பாகம் துருப்பிடிக்கும் வாய்ப்பு உண்டு. இதே பிரச்னை ஜூபிட்டரிலும் ஏற்படுமா என்பது போகப் போகத்தான் தெரியும். இருக்கையில் ஓட்டுநர் அமரும் இடம் நீளமாகவும் அகலமாகவும் இருக்கிறது. ஆனால், பில்லியன் இருக்கை சற்று சிறிதாக இருப்பதுபோல இருக்கிறது. இருக்கைக்கு அடியில் 17 லிட்டர் கொள்ளளவு இடம் (ஸ்டோரேஜ் ஸ்பேஸ்) உள்ளது. இதில், ஒரு ஹெல்மெட்டை வைக்க முடியும். மேலும், இருக்கைக்குக் கீழ் உள்ள இடத்தில், செல்ஃபோன் சார்ஜ் செய்ய வசதியாக ஒரு பவர் ஷாக்கெட் உண்டு.

சைலன்ஸருக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கார்டு கொடுத்திருப்பது இந்த செக்மென்ட்டில் (110சிசி) ஜூபிட்டரில் மட்டும்தான். இதன் 5.3 லிட்டர் பெட்ரோல் டேங்க்கை நிரப்புவதற்கு ஸ்கூட்டரை ஆஃப் செய்துவிட்டு, இருக்கையைத் தூக்கிச் சிரமப்பட வேண்டியது இல்லை. மாறாக, ஃப்யூல் கேப், டெயில் லாம்புகளுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஜூபிட்டர் - இது ஆண்களுக்கு!

ஜூபிட்டரின் மொத்த எடை 108 கிலோ. 'ஹை ரிஜிடிட்டி அண்டர்போன் டைப் ஃப்ரேம்’ கொண்ட இதில், முன் பக்கம் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின் பக்கம் கேஸ் ஃபில்டு ஷாக் அப்ஸார்பரும் கொடுத்திருக்கிறார்கள். இதன் அலாய் வீல்கள், நிச்சயம் பெரிய ப்ளஸ் பாயின்ட். டிவிஎஸ் வீகோவில் இருக்கும் அதே அலாய் வீல் டிசைன்தான் இதிலும்.  மொத்தமாக ஸ்டைலிங் விஷயத்தில் ஜூபிட்டர் வெற்றியும் பெறவில்லை, தோல்வியும் அடையவில்லை.

இன்ஜின்

டிவிஎஸ் ஜூபிட்டரில் 4 ஸ்ட்ரோக், ஓவர்ஹெட்கேம் கொண்ட 109.7 சிசி இன்ஜின் இருக்கிறது. 7,500 ஆர்பிஎம்-ல் 8 bhp சக்தியையும், 5,500 ஆர்பிஎம்-ல்  0.82 Kgm டார்க்கையும் அளிக்கிறது. கிக் ஸ்டார்ட் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் என இரண்டு ஆப்ஷன்களும் உள்ளன. அனைவரும் 125 சிசிதான் ஜூபிட்டரில் இருக்கும் என எதிர்பார்த்திருந்த வேளையில், வீகோவில் இருக்கும் அதே இன்ஜினை எந்த மாற்றமும் செய்யாமல் ஜூபிட்டரில் பொருத்தி இருக்கிறது டிவிஎஸ். இந்த இன்ஜின் லிட்டருக்கு 62 கி.மீ மைலேஜ் தரும் என்று டிவிஎஸ் சொன்னாலும், டெஸ்ட் டிரைவ் செய்யும் போதுதான் இதன் மைலேஜ் விபரம் தெரியும். இதில் 'ஈக்கோ’ மற்றும் 'பவர்’ என இரண்டு மோடுகள் உள்ளன.

டிவிஎஸ் ஜூபிட்டர் - இது ஆண்களுக்கு!

சிறப்பம்சங்கள்

மற்ற ஸ்கூட்டர்களில் இருந்து தன்னுடைய ஜூபிட்டரைத் தனித்துக் காட்டுவதற்காக, டிவிஎஸ் ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறது. அதில் ஒரு விஷயம்தான், இதன் சிறப்பம்சங்கள். ஸ்கூட்டர் செக்மென்ட்டிலேயே முதன்முறையாக 'பாஸ்-பை’ சுவிட்ச் ஜூபிட்டரில் பொருத்தியிருக்கிறது டிவிஎஸ். ஓவர்டேக் செய்யும்போது, தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது இதன் மூலம் குறையும் என்று எதிர்பார்க்கலாம். இரவில் பேருதவியாக இருக்கும் இந்த வசதி. பெட்ரோல் அளவு குறையும்போது எச்சரிப்பதற்குத் தனி விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ட்யூப்லெஸ் டயர்களும் பெரிதாக இருக்கின்றன. ஆல்-பிளாக் அலாய் வீல்கள் ஜூபிட்டருக்கு ஒரு தனி கேரக்டரைக் கொடுக்கிறது. நடுவே கால் வைக்கும் இடத்தில் 1,275 மிமீ அளவுக்கு இடம் உள்ளது. ஒரு கேஸ் சிலிண்டரை இதில் படுக்கவைத்து ஓட்ட முடியும் என்று சொல்கிறது டிவிஎஸ் வலைதளம். (கேஸ் சிலிண்டரைப் படுக்கவைத்து எடுத்துச் செல்வது தப்பாயிற்றே!)

இதில் உள்ள பை மாட்டும் கொக்கியை, தேவைப்பட்டால் வெளியே இழுத்துக் கொள்ளலாம், தேவையில்லை எனில், அதை உள்ளே தள்ளிவிடலாம். இதன் டர்னிங் ரேடியஸ் 1,910 மிமீ. இந்த செக்மென்ட்டிலேயே மிகக் குறைந்த டர்னிங் ரேடியஸ் டிவிஎஸ் ஜூபிட்டரில்தான் உள்ளது. 35 வாட்ஸ் மல்ட்டி - ரிஃப்ளெக்டர் டைப் ஹெட்லைட் அதிக வெளிச்சத்தைத் தருகிறது. இதுவும் செக்மென்ட் ஃபர்ஸ்ட் என்கிறது டிவிஎஸ். டெயில் லைட்ஸ் எல்இடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இருக்கையில் உட்கார்ந்துகொண்டே கிக் ஸ்டார்ட் செய்ய முடிவது மிகப் பெரிய ப்ளஸ். நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது டிவிஎஸ் ஜூபிட்டர்.

டிவிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டு முழுக்க, தனது தயாரிப்புகளின் தரத்தை உயர்த்துவதற்காக செலவிட்டு இருக்கிறது. ஜூபிட்டர் ஒரு சவாலான முயற்சி. முழு டெஸ்ட் டிரைவில்தான் டிவிஎஸ் நிறுவனத் தயாரிப்பின் தரம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது... ஸ்கூட்டர் செக்மென்ட்டில் ஜூபிட்டர் வெற்றிக் கொடியை நாட்டுமா போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும். வெல்கம் ஜூபிட்டர்!

டிவிஎஸ் ஜூபிட்டர் - இது ஆண்களுக்கு!