கார்ஸ்
Published:Updated:

முந்தும் மார்க்யூஸ்... பிந்தும் லாரன்சோ!

முந்தும் மார்க்யூஸ்... பிந்தும் லாரன்சோ!

 ##~##

மார்க்யூஸை அவ்வளவு சீக்கிரத்தில் சாம்பியனாக விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார் ஜார்ஜ் லாரன்சோ. ஜெர்மனியின் ஷாஸன்ரிங் போட்டியில் இருந்து செக் குடியரசின் ப்ருனோ ரேஸ் வரை, தொடர்ந்து நான்கு ரேஸ்களில் வெற்றிபெற்று வந்த மார்க் மார்க்யூஸின் தொடர் வெற்றிக்கு, இங்கிலாந்தில் முற்றுப்புள்ளி வைத்தார் ஜார்ஜ் லாரன்சோ. 

யமஹாவுக்கும் ஹோண்டாவுக்குமான இந்த அதிரடி ரேஸில், வெற்றி யாருக்கு என்ற திகுதிகு கிளைமாக்ஸை நோக்கிப் பறந்துகொண்டு இருக்கிறது மோட்டோ ஜீபி 2013 சீஸன்!

செக் குடியரசு

மோட்டோ ஜீபியின் 11-வது சுற்று, செக் குடியரசின் ப்ரூனோ நகரில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற்றது. தகுதிச் சுற்றில் வெற்றிபெற்று, முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார் யமஹா அணியின் கால் க்ரட்ச்லோ. ஹோண்டாவின் அல்வரோ பட்டிஸ்டுடா இரண்டாம் இடத்தில் இருந்தும், மார்க் மார்க்யூஸ் மூன்றாம் இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள்.

முந்தும் மார்க்யூஸ்... பிந்தும் லாரன்சோ!

ஏற்கெனவே, ஹாட்ரிக் வெற்றி பெற்றிருந்த மார்க்யூஸின் கையே இந்த ரேஸிலும் ஓங்கியிருந்தது. முதல் லேப்பில் முதல் இடத்துக்கு ஜார்ஜ் லாரன்சோ முன்னேறினாலும், அவரைத் துரத்திக்கொண்டே இருந்தது மார்க்யூஸின் ஹோண்டா. மொத்தம் 22 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியில், வெல்வது லாரன்சோவோ அல்லது மார்க்யூஸா என்று கணிக்க முடியாதபடி இருவரும் மில்லி செகண்ட் இடைவெளிகளில் போட்டி போட்டுக்கொண்டு இருந்தனர். இதற்கிடையே 15-வது லேப்பின்போது லாரன்சோவின் யமஹாவைப் பின்னுக்குத் தள்ளியது மார்க்யூஸின் ஹோண்டா. அடுத்தபடியாக, டேனி பெட்ரோஸாவின் ஹோண்டாவிடமும் வீழ்ந்தது லாரன்சோவின் யமஹா. இறுதியில் 118 கி.மீ தூரத்தை மார்க்யூஸ் 42 நிமிடங்கள் 50 விநாடிகளில் கடந்து வெற்றி பெற்றார். டேனி பெட்ரோஸா இரண்டாம் இடமும், லாரன்சோ மூன்றாம் இடமும் பிடித்தனர்.

முந்தும் மார்க்யூஸ்... பிந்தும் லாரன்சோ!
முந்தும் மார்க்யூஸ்... பிந்தும் லாரன்சோ!

இங்கிலாந்து

இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் ரேஸ் மைதானத்தில், மோட்டோ ஜீபியின் 12-வது சுற்று செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. மார்க் மார்க்யூஸ் தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடிக்க, யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ இரண்டாம் இடமும், க்ரட்ச்லோ மூன்றாம் இடமும் பிடித்தனர்.

தொடர்ந்து நான்கு ரேஸ்களாக வெற்றி பெற்று வந்த மார்க்யூஸுக்கு முடிவு கட்ட, ஜார்ஜ் லாரன்சோ வெறியுடன் களம் இறங்கி இருப்பது, முதல் லேப்பிலேயே ரசிகர்களுக்குப் புரிந்தது. ரேஸ் துவங்கிய சில விநாடிகளிலேயே ராக்கெட் வேகம் காட்டிய லாரன்சோ, மார்க்யூஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்துக்கு முன்னேறினார். இறுதி வரை முயன்றும் மார்க்யூஸால் லாரன்சோவைப் பிடிக்க முடியவில்லை. 20 லேப்புகள், 118 கி.மீ தூரம்கொண்ட இந்த ரேஸ் போட்டியில், மார்க்யூஸை 0.08 மில்லி செகண்ட் விநாடிகளில் முந்திச் சென்று வெற்றி பெற்றார் லாரன்சோ. ஹோண்டாவின் டேனி பெட்ரோஸா மூன்றாம் இடம் பிடித்தார்.

முந்தும் மார்க்யூஸ்... பிந்தும் லாரன்சோ!

இத்தாலி

வாலன்டினோ ராஸியின் சொந்த ஊரான இத்தாலியின் மிஸானோ நகரில், மோட்டோ ஜீபியின் 13-வது சுற்று செப்டம்பர் 15-ம் தேதி நடைபெற்றது. ராஸி ரசிகர்கள் பெருமளவில் குவிந்திருக்க... தகுதிச் சுற்றில் மூன்றாம் இடம் பிடித்தார் ராஸி. மார்க் மார்க்யூஸ் முதல் இடத்தில் இருந்தும், லாரன்சோ இரண்டாம் இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர்.

இத்தாலியிலும் முதல் லேப்பிலேயே மார்க்யூஸை ஓரம் கட்டினார் லாரன்சோ. மொத்தம் 28 லேப்புகள்கொண்ட இந்த ரேஸ் போட்டியில், மார்க்யூஸை 3 விநாடிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் லாரன்சோ. சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட வாலன்டினோ ராஸியால், நான்காவது இடமே பிடிக்க முடிந்தது.

இதுவரை 13 சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், மார்க் மார்க்யூஸ் 253 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஜார்ஜ் லாரன்சோ, டேனி பெட்ரோஸா என இருவரும் 219 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர். இன்னும் ஐந்து ரேஸ்கள் மீதம் இருக்கும் நிலையில், மார்க்யூஸுக்கு லாரன்சோ தடை போடுவாரா, இல்லை மார்க்யூஸ் சாம்பியன் பட்டம் வெல்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன், மோட்டோ ஜீபியின் 14-வது சுற்று செப்டம்பர் 29-ம் தேதி ஸ்பெயினின் அராகான் நகரில் நடந்து முடிந்திருக்கும்.

முந்தும் மார்க்யூஸ்... பிந்தும் லாரன்சோ!