கார்ஸ்
Published:Updated:

வெற்றி வெட்டல்!

வெற்றி வெட்டல்!

 ##~##

'2013 ஆம் ஆண்டின் ஃபார்முலா-1 சாம்பியன்’ என்ற பட்டத்தைக் கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டார் செபாஸ்ட்டியன் வெட்டல். கடந்த மாதம் பெல்ஜியம் மற்றும் இத்தாலியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்று, சாம்பியன்ஷிப் பட்டியலில் 53 புள்ளிகள் லீட் எடுத்து, முதல் இடத்தில் இருக்கிறார் வெட்டல்.

 பெல்ஜியம்

ஃபார்முலா-1 ரேஸின் 11-வது சுற்று, பெல்ஜியத்தில் உள்ள ஸ்பா நகரின் ரேஸ் டிராக்கில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற்றது. தகுதிச் சுற்றில் வெற்றிபெற்று, ரேஸில் கோட்டைவிடும் மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டனே இங்கும் முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார். ரெட்புல் அணி வீரர்களான செபாஸ்ட்டியன் வெட்டல் இரண்டாம் இடத்தில் இருந்தும், மார்க் வெப்பர் மூன்றாம் இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர்.

வெற்றி வெட்டல்!

44 லேப்கள் கொண்ட இந்தப் போட்டியில், முதல் லேப்பிலேயே பல அதிரடிகள் நிகழ்ந்தன. முதல் இடத்தில் இருந்த ஹாமில்ட்டனை முந்தினார் வெட்டல். கிளட்ச் பிரச்னையால் திணறிய மார்க் வெப்பர், மூன்றாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்துக்குப் பின்தங்கினார். இதனால், அலான்சோவின் வேகம் கூடியது. 25-வது லேப்பின்போது, ரெனோ காரின் பிரேக் செயலிழந்ததால், போட்டியில் இருந்து வெளியேறினார் லோட்டஸ் அணியின் கிமி ராய்க்கோனன். இதற்கிடையே, இரண்டாவது இடத்தில் இருந்த ஹாமில்ட்டனை முந்தினார் அலான்சோ. இறுதி வரை இந்த வரிசையில் மாற்றம் இல்லை. 1 மணி நேரம் 23 நிமிடங்கள் 42 விநாடிகளில் வெற்றிக் கோட்டைக் கடந்து வெற்றி பெற்றார் வெட்டல். ஃபெராரி அணியின் அலான்சோ இரண்டாம் இடமும், மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டன் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

வெற்றி வெட்டல்!

இத்தாலி

ஃபெராரியின் கோட்டையான இத்தாலியில் உள்ள மான்ஸா நகரில், செப்டம்பர் 10-ம் தேதி ஃபார்முலா-1 ரேஸின் 12-வது சுற்று நடைபெற்றது. இத்தாலியின் ஃபெராரி அணியில், ஸ்பெயினைச் சேர்ந்த அலான்சோ ரேஸ் ஓட்டினாலும், அவரை ஆதரிக்க பல லட்சம் இத்தாலி ரசிகர்கள் சிவப்புக் கொடியுடன் மைதானத்தில் குவிந்திருந்தனர். ஆனால், தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஃபெராரி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ரெட்புல் அணியின் வெட்டல், முதல் இடத்தில் இருந்து ரேஸை துவக்கத் தகுதி பெற... அதே அணியின் மார்க் வெப்பர் இரண்டாம் இடத்தில் இருந்தும், சாபர் அணியின் நிக்கோ ஹல்கன்பெர்க் மூன்றாம் இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தயாராயினர். லூயிஸ் ஹாமில்ட்டன் 12-வது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார்.

வெற்றி வெட்டல்!

ரேஸ் துவங்கிய சில விநாடிகளிலேயே, நான்காவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய ஃபெராரியின் ஃபிலிப் மாஸா, இரண்டாவது இடத்துக்கு முன்னேற... ஃபெராரி ரசிகர்கள் உற்சாகமாயினர். இதற்கிடையே, ரேஸின் ஆரம்பத்திலேயே லூயிஸ் ஹாமில்ட்டனின் கார் ஸ்லோ பஞ்சரானது. அவரது டயரில் காற்று குறைகிறது என்பதை அவரது அணியினர் ஹாமில்ட்டனுக்குத் தெரிவிக்க முடியாத வகையில், அவரது ரேடியோ (வாக்கி டாக்கி போன்றது) வேலை செய்யவில்லை. இதனால், ஒவ்வொரு முறையும் லேப்பை ஹாமில்ட்டன் நிறைவு செய்யும்போது, தகவல் பலகையில் அவருக்குத் தகவல் சொல்லிக்கொண்டிருந்தனர். இதற்கிடையே, மாஸாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார் அலான்சோ. 53 லேப்புகள் கொண்ட இந்தப் போட்டியில், வெட்டல் வெற்றி பெற... அலான்சோ இரண்டாம் இடமும், மார்க் வெப்பர் மூன்றாம் இடமும் பிடித்தனர். இந்த ஆண்டில், வெட்டல் பெற்றிருக்கும் ஆறாவது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 12 சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், ரெட்புல் அணியின் செபாஸ்ட்டியன் வெட்டல் 222 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அலான்சோ 169 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், லூயிஸ் ஹாமில்ட்டன் 141 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன்பு, சிங்கப்பூரில் ஃபார்முலா-1 ரேஸின் 13-வது சுற்று செப்டம்பர் 22-ம் தேதி நடந்து முடிந்திருக்கும்.

வெற்றி வெட்டல்!

 பெராரியில்  மீண்டும் கிமி ராய்க்கோனன்!

 ராய்க்கோனன் எந்த அணியில் இருக்கிறாரோ, அந்த அணிக்கு அலான்சோ தாவுவார் என்று சொல்வார்கள். ஆனால் இப்போது, அலான்சோ இருக்கும் அணிக்குள் குதித்திருக்கிறார் கிமி ராய்க்கோனன். எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஃபெராரி அணியில் இருந்த ஃபிலிப் மாஸா, அங்கிருந்து வெளியேற, கிமி ராய்க்கோனன் ஃபெராரிக்குள் வந்திருக்கிறார். அதேபோல், வெட்டலுடன் முட்டிக்கொண்டு இருந்த மார்க் வெப்பர், ரெட்புல் அணியில் இருந்து மட்டும் அல்லாமல், ஃபார்முலா-1 ரேஸில் இருந்தே விலகியிருக்கிறார். இவர் அடுத்த ஆண்டு போர்ஷே அணிக்காக, 'வேர்ல்டு என்ட்யூரன்ஸ் ரேஸ்’ போட்டியில் பங்கேற்க இருக்கிறார். வெப்பருக்குப் பதிலாக அடுத்த ஆண்டு வெட்டலுடன் ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிகார்ட்டோ இணைய இருக்கிறார். டேனியல் ரிகார்ட்டோ, தற்போது, ஃபார்முலா-1 ரேஸில் ரெட்புல் அணியின் சகோதர அணியான டோரோ ரோஸோ அணிக்காக ரேஸ் ஓட்டி வருகிறார்.

வெற்றி வெட்டல்!