கார்ஸ்
Published:Updated:

ஷோ - ரூம் ரெய்டு!

டீலர் சர்வே

 ##~##

பல ஆண்டுகளுக்கு முன்பு, பஜாஜ் ஸ்கூட்டர் வாங்குவது மிகவும் கடினமான விஷயம். பதிவு செய்துவிட்டு ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டும். ஸ்கூட்டர் வாங்க மினிஸ்டர் ரெகமண்டேஷன் தேவைப்பட்ட காலம் அது. கிட்டத்தட்ட அதேபோல ஒரு சிச்சுவேஷனை, நாஸ்டால்ஜியாவாக ஹோண்டா பைக் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் உருவாக்கியிருந்தது.

 ஹோண்டா ஆக்டிவா வேண்டும் என ஷோரூமுக்குப் போனால், 'ஆறு மாதங்கள் ஆகும். எட்டு மாதங்கள் ஆகும்’ என்றெல்லாம் அலட்சியமாகக் கூறி என்ஃபீல்டு நிறுவனத்துக்கு டஃப் கொடுத்தபடி இருந்தனர். பல போட்டி நிறுவனங்கள் இதே செக்மென்ட்டில் நுழைந்ததும், இப்போது நிலைமை கொஞ்சம் தேவலாம்.

இந்த ரெய்டின்போது விசாரிக்கப் போவது ஹோண்டா ஆக்டிவா என்பதால், என் தோழியையும் உடன் அழைத்துக்கொண்டேன்.  

 மானஸரோவர் ஹோண்டா

நாள் : 03-09-2013

ஹோண்டா நிறுவனத்தின் வெப்சைட் அட்ரஸை லேப்டாப்பில் டைப் செய்துவிட்டுப் பார்த்தால்... லோடு ஆகிக்கொண்டே இருந்தது. ஃபில்டர் காபிக்கு டிகார்ஷன் போட்டு, பால் காய்த்து முடித்து, நல்ல சுவையான ஃபில்டர் காபி போட்டுக் குடித்துவிட்டு வந்து பார்த்தால்... ஒருவேளை லோடு ஆகியிருக்கலாம். அந்த அளவுக்கு ஸ்லோ! அது லோடு ஆவதற்குள் கீழே சென்று சைட் மேப் க்ளிக் செய்து, டீலர்ஷிப் நெட்வொர்க்கைப் பிடித்து, வேளச்சேரி மானஸரோவர் ஹோண்டாவுக்கு போன் போட்டேன்.

ஷோ - ரூம் ரெய்டு!

உடனே போனை அட்டென்ட் செய்தார் ஒரு பெண். நல்ல ரெஸ்பான்ஸ். ''ஹோண்டா ஆக்டிவா வாங்கப் போகிறேன். டெலிவரி எவ்வளவு நாட்களில் கிடைக்கும்?'' எனக் கேட்டதும், ''பதினைந்து நாட்களில் டெலிவரி கிடைக்கும்'' என்றார். ''ஓ... பதினைந்து நாட்கள் ஆகுமா?'' என நான் இழுத்ததும், ''இல்லீங்க சார், 15 நாளைக்குள்ள லோடு(?) வந்ததும், ஒரு வாரம் இல்லை; அஞ்சு நாள்லகூட டெலிவரி கொடுத்துடுவோம். பதினஞ்சு நாள்னு சொல்றது சும்மா ஒரு இதுக்கு(!)'' என்றார். ஆரம்பம் பாஸிட்டிவாக இருந்தது எனக்கு. போனில் பேசும் கஸ்டமரை நேரில் வரவழைப்பதே போனில் பேசும் பெண்ணின் வேலை. அதைச் சிறப்பாகச் செய்தார் இந்தப் பெண்.

என் தோழியுடன் வேளச்சேரி மானஸரோவர் ஹோண்டா வாசலில் பைக்கை பார்க் செய்தேன். வேளச்சேரி பைபாஸில் நல்ல லொக்கேஷனில் தனி பில்டிங்கில் நச்சென இருந்தது ஷோரூம். தனி பார்க்கிங் வசதி இல்லை. ஷோரூமுக்கு முன்பாக, ரோட்டிலேயே அனைவரும் பைக்கை பார்க் செய்திருந்தனர். காரில் சென்றால், பார்க்கிங் இடம் கிடைப்பது சற்று சிரமம்தான்.

ஷோரூம் முகப்பில் கும்பலாக நின்றுகொண்டு, ஏதோ மார்க்கெட்டிங் செய்துகொண்டிருந்தனர். என்ன என்று அருகில் சென்று பார்த்தால், லோன் கொடுக்கும் கம்பெனிகளைச் சேர்ந்தவர்கள்.

அவர்களை விலக்கி வழியை ஏற்படுத்திக்கொண்டு ஷோரூம் உள்ளே நுழைந்தேன். உடனே ஒருவர் வந்து அட்டெண்ட் செய்தார். மெக்கானிக் போல யூனிஃபார்ம் அணிந்து இருந்தார். வயது 22-ல் இருந்து 25 இருக்கலாம். முள் தாடியுடன் நடிகர் தனுஷ§க்கு ஒண்ணுவிட்ட தம்பி போல இருந்தார். டூ வீலர் டீலர் ஷிப்புகளில் சம்பளம் ரொம்பவும் குறைவு என்பது அவரது உடையிலும், முகத்திலும் தெரிந்தது.

''ஹோண்டா ஆக்டிவா வாங்கலாம்னு...''

''தோ இருக்கு சார்'' என, ஏதோ மேஜிக்கில் ஆக்டிவாவை வரவழைத்தவர்போல, பக்கத்தில் இருந்த ஆக்டிவாவைப் பெருமையாகச் சுட்டிக்காட்டினார். நானும் அதை ஏதோ அதிசயப் பொருள் போல ஆச்சரியமாகச் சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். என் தோழி என்ன செய்வது எனத் தெரியாமல் ஆக்டிவாவின் சீட்டை அழுத்திப் பார்த்தாள்.

''சரி, இதோட விலை எவ்ளோ?'' என்றேன். விலையை உடனே சொன்னார். ''ஆக்டிவா-ஐ னு ஒண்ணு வெப்சைட்ல பார்த்தேன். அது என்னா மேட்டர்?'' என்றேன். ''அது, இதைவிட விலை கொஞ்சம் கம்மி; வெயிட்டும் கம்மி?'' என்றார். ''பாடி ஃபுல்லா ஃபைபர்'' என்றார். ''ஸ்பீடாப் போகும்போது காத்து அடிச்சா வண்டி அலையுமா?'' என்றேன். திடுக்கிட்ட அவர், ''அலையாது சார்'' என்று இழுத்தார்.

அடுத்த கட்டமாக, ''சரிங்க, விலையை எழுதிக்கொடுங்க. டிசைட் பண்ணிட்டு வாங்க வர்றேன்'' என்றதும், ஒரு டேபிளுக்கு அழைத்துச் சென்று அமரச் செய்தார். 'கஸ்டமர் இன்ட்ராக்ஷன்’ என போர்டு போட்டு நான்கைந்து டேபிள்கள் போடப்பட்டு இருந்தன. அதே ஹாலில் இரு பக்கமும் வரிசையாக பைக்குகள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. பெரிய ஹால்தான், இருந்தாலும் கொஞ்சம் நெருக்கடியாக இருந்தது. நிறைய கஸ்டமர்கள் விசாரித்துக்கொண்டு இருப்பதைப் பார்க்க முடிந்தது. ஒரு பெண், கஸ்டமருக்கு பைக் டீட்டெயில் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரும் யூனிஃபார்ம் அணிந்திருந்தார். யூனிஃபார்ம் அணிவது பிரச்னை இல்லை. இந்த யூனிஃபார்ம், கூரியர் சர்வீஸ் ஆட்கள் அணியும் யூனிஃபார்ம் போல இருப்பதுதான் கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது.

டை கட்டிய ஒரே ஒரு சேல்ஸ்மேனையும் பார்க்க முடிந்தது. அவர் சேல்ஸ் மேனஜராக இருக்க வேண்டும் அல்லது டை கட்டிக்கொண்டு வரும் கஸ்டமரை மட்டும் அவர் கவனிப்பார் போல.

என்னை அட்டெண்ட் செய்த சேல்ஸ்மேன், ஒரு பேப்பரில் ஆக்டிவா விலையை எழுதிக் கொடுத்தார். டாக்ஸ், இன்ஷூரன்ஸ் எனப் பிரித்து எழுதிக் கொடுத்தார். அவ்ளோதான் அவர் வேலை. லோன் டீட்டெயில் கேட்ட போது, சீரியஸாக ஒரு கால்குலேட்டரை எடுத்து நெடுநேரம் ஏதோ ரிலேட்டிவிட்டி ஃபார்முலா போல கணக்குப் போட்டுக் காட்டினார். ஏன் அதை அவ்வப்போது கால்குலேட்டரில் கணக்குப் போட வேண்டும் எனப் புரியவில்லை. நான்கைந்து ஆப்ஷன்களை ஆல்ரெடி கணக்குப் போட்டு பிரின்ட் அவுட் எடுத்து வைத்து கஸ்டமரிடம் காட்டலாமே?

ஆக்டிவாவை வாங்கவைக்க அவர் கிஞ்சித்தும் முயற்சிக்கவில்லை. ஆக்டிவாவின் பேசிக் டீட்டெயில்ஸைக் கூட அவரே சொல்லவில்லை. ''மைலேஜ் எவ்வளவு கொடுக்கும்?'' என்ற தகவலைக் கூட நான் கேட்டு வாங்க வேண்டி இருந்தது. ''டெலிவரி எப்போ?'' எனத் திரும்ப நானே கேட்டதும், ''பதினைந்து நாட்கள் ஆகும். கலரைப் பொறுத்து நாட்கள் அதிகம் ஆகலாம்'' என்றார்.

நாங்கள் கிளம்ப யத்தனித்ததும், அவரின் மொபைல் நம்பரையும் பெயரையும் ஆக்டிவா விலை எழுதிக் கொடுத்த பேப்பரிலேயே எழுதித் தந்தார். நான் வலுக்கட்டாயமாக அவரின் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு வெளியே வந்தேன்.

 கேயுஎன் ஹோண்டா

நாள் : 03-09-2013

எனது அடுத்த டார்கெட், அசோக் நகரில் இருக்கும் கேயுஎன் ஹோண்டா ஷோரூம். அசோக் நகரிலேயே இரண்டு கேயுஎன் ஷோரூம்கள் இருப்பதாக வெப்சைட் தெரிவித்தது. அதில், மெயின் ரோட்டில் இருக்கும் ஷோரூமைத் தேர்ந்தெடுத்து, பைக்கை அங்கு நிறுத்தினேன். சைக்கிள்கூட பார்க்கிங் செய்ய வழியில்லாத ஷோரூம் இது. இதை ஷோரூம் எனச் சொல்வதே பாவம். பழைய பைக்குகள் விற்கும் சேட்டுக் கடை போல இருந்தது. காரில் சென்றீர்கள் என்றால், நிறுத்தக்கூட இட வசதி இல்லை. அடித்துப் பிடித்து நெருக்கி நான்கு பைக்குகள் நிறுத்த மட்டுமே இடம் உள்ளது. அதிலும் ஷோரூமில் வேலை செய்பவர்களே நிறுத்திக்கொள்கிறார்கள்.

ஷோ - ரூம் ரெய்டு!

ஷோரூம் உள்ளே நுழைந்தேன். மிகச் சிறிய இடம். கடமைக்கு நான்கு பைக்குகளை நிறுத்திவைத்திருந்தனர். கஸ்டமர் வந்தால் அமரவைக்க இடமும் இல்லை; ஸோஃபாவும் இல்லை. உள்ளே நுழைந்த என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. நான் தோழிக்கு ஆக்டிவா பைக்கைத் தடவித் தடவி ஏதோ சொல்ல ஆரம்பித்தேன். ஆஜானுபாகுவான ஒருவர் என் அருகில் வந்து நின்றார்.

''ஆக்டிவா..?'' என்றேன்.

''தோ.. இதான்!'' என்றார்.

''ஆக்டிவா ஐ?'' என்றேன்

''ம்... புதுசா வந்திருக்கு!'' என்றார்.

''ஓ...'' என்றேன்.

ஏதோ காதலியிடம் காதலைச் சொல்லத் தவிக்கும் காதலன்போல அமைந்தது எங்கள் உரையாடல்.

இந்தச் சந்தர்ப்பத்தில் அவருக்கு லேண்ட் லைனில் போன் வந்தது. போய் பேச ஆரம்பித்து விட்டார். ஷோரூமில் அவரைத் தவிர இன்னொருவரை மட்டுமே பார்க்க முடிந்தது. அந்த இன்னொருவரும் இவர் போனில் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

நான் வேறு வழியில்லாமல் ஷோரூமை நோட்டம் விட்டேன். ஏ.சி இருக்கிறதா, இல்லையா எனத் தெரியவில்லை. நான் சென்றபோது செம வெக்கை. சாவகாசமாகத் திரும்பி வந்தார் ஆஜானுபாகுவான நபர். வந்து நின்று, 'அப்புறம் என்னா...  கிளம்ப வேண்டியதுதானே?’ என்பதுபோலப் பார்த்தார்.

வந்ததுக்கு ஏதாவது கேட்டுத் தொலைவோம் என நினைத்துக்கொண்டே, ''டெலிவரி எப்போ கிடைக்கும்?'' என்றேன். ''பதினஞ்சு நாள் ஆவும். சில கலர் கிடைக்க லேட் ஆகலாம்'' என்றார். விலை விபரம் கேட்டதும், விலையை அலட்சியமாகச் சொல்லி, ''இன்னும் ரெண்டு நாளில் 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை அதிகரிக்கலாம்'' என்றார். ''நீங்க வாங்கினா அதிக விலை பில்தான் வரும்'' என கட் அண்டு ரைட்டாகக் கூறினார். 'வாங்க விட்ருவேனா’ என்பதுபோல இருந்தது அவர் சொல்லிய விதம்.

சரி கிளம்பலாம் என்பதுபோல பாடிலாங்வேஜில் நாங்கள் காட்டியதும், எங்களைவிட விரைவாக அவர் ஜகா வாங்கி உள்ளே சென்றுவிட்டார். 'எப்போ வாங்குறீங்க?’ என சம்பிரதாயத்துக்குக்கூட கேட்கவில்லை, அவரின் விசிட்டிங் கார்டைக்கூடக் கொடுக்கவில்லை. எனக்கு ஏதோ அரிசி மண்டிக்குள் நுழைந்துவிட்டோமா எனச் சந்தேகமாக இருந்தது. லோன் பற்றியோ, சர்வீஸ் பற்றியோ, வண்டியின் அம்சங்கள் பற்றியோ, ஏன் எதைப் பற்றியுமே அவர் பேசவில்லை. விலையும் மானஸரோவர் ஹோண்டா ஷோரூமில் சொன்ன விலையைவிட 500 முதல் 700 வரை அதிகமாக இருந்தது. 'ஆளை விடுடா சாமி’ என ஓட்டம் பிடித்தேன்.

ரேட்டிங்

இந்த ஷோரூமுக்கெல்லாம் ரேட்டிங் கொடுத்தால், ரேட்டிங் என்ற வார்த்தையே தூக்கு மாட்டிக்கொண்டு இறந்து, டிக்ஷனரியில் இருந்து தொலைந்துவிடும். இல்லையில்லை ரேட்டிங் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என வம்படியாக நிர்பந்தித்தால், அதிகபட்சமாக வாடிக்கையாளருக்கான மரியாதை அளித்தலுக்கு 0 அளிப்பேன். மற்றவைகளுக்கெல்லாம் நெகட்டிவ் மதிப்பெண்கள்தான் கிடைக்கும்.

 திதார் ஹோண்டா

நாள் : 03-09-2013

நல்ல ஏ.சி ஓட்டலில் மதிய உணவை முடித்துக்கொண்டு கொஞ்சம் கூலாகி, அடுத்து எந்த ஷோரூம் போகலாம் என யோசித்தேன். பாரம்பரியமான ஷோரூம்; நெடு நாட்களாக இருக்கிறார்கள்; நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும் என திதார் ஹோண்டாவைப் போய் பார்க்கலாம் என முடிவு செய்தேன்.

என் பைக், திதார் ஷோரூம் அருகே வந்ததும் குழம்பிப் போய் நின்றது. பார்க்கிங் எல்லாம் சாத்தியமே இல்லை. ஷோரூம் முன்னால் நெருக்கியடித்துக்கொண்டு பைக்குகள் நின்றுகொண்டிருந்தன. பார்க்கிங்கை விடுங்கள், நாம் ஷோரூம் உள்ளே நுழைவதற்கே சிரமப்பட வேண்டி இருந்தது. மவுண்ட் ரோட்டில் இருந்து பார்த்தால், ஷோரூம் லுக் மொக்கையாக உள்ளது.

ஷோ - ரூம் ரெய்டு!

உள்ளே நுழைந்தேன். யாரும் எங்களைச் சீண்டவில்லை. ஒரு ஆக்டிவா-ஐ ஜோடிக்கப்பட்டு நின்றுகொண்டிருந்தது. வேறு சில பைக்குகள் அசிரத்தையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ரிசப்ஷனிஸ்ட் என யாரும் இல்லை. ஹாலுக்கு நடுவே ஒரே ஒரு மேஜை போடப்பட்டு, அதில் வட்ட மேஜை மாநாடு நடந்துகொண்டிருந்தது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் உள்ளே இருந்திருப்பேன். எவரும் என்னை அட்டெண்ட் செய்யாததால், நானும் ஒன்றும் கேட்காமல் கூலாக வெளியேறிவிட்டேன். வெளியேறும்போதுகூட கடைசியாக யாரேனும் நம்மை வந்து, 'என்னா சார்?’ எனக் கேட்பார்கள் என்று ஒரு நப்பாசை இருந்தது. அவர்கள் பொது சப்வேயில் மக்கள் நடமாடினால் எப்படிப் பார்ப்பார்களோ, அப்படியே அவர்கள் ஷோரூமிலும் பார்க்கிறார்கள்.

ரேட்டிங்

ரேட்டிங் என்ன ரேட்டிங்... பைக் வாங்க நினைப்பவன் வாங்கித்தானே ஆக வேண்டும். அவனை ஏன் கவர வேண்டும்? என்ற ரேஷன் கடை ஊழியர் மனப்பான்மையிலேயே சேல்ஸ் பெர்சன்கள் இருக்கிறார்கள். காராவது லக்ஸுரி கேட்டகிரியில் வருவதால், கொஞ்சம் மெனக்கெடுகிறார்கள். பைக், அத்தியாவசியத் தேவையாகிவிட்டபடியால், 'எப்படியும் வாங்குவான்; இவனுக்கு என்ன மரியாதை’ என்ற மனப்பான்மையில் செயல்படுவதுபோலத் தெரிகிறது. ஷோரூமே இப்படி என்றால், 'சர்வீஸுக்குப் போனால்... இவர்களின் ட்ரீட்மென்ட் எப்படி இருக்கும்?’ என நினைக்கும்போதே மண்டை கிர்ர்ர்ர்... எனச் சுற்ற ஆரம்பித்துவிட்டது.

ஷோ - ரூம் ரெய்டு!