கார்ஸ்
Published:Updated:

புல்லட் கிஸ்ஸிங்கர் - மெக்கானிக் கார்னர்

புல்லட் கிஸ்ஸிங்கர் - மெக்கானிக் கார்னர்

 ##~##

''என் புல்லட்டுக்கு ஏதாவது பிரச்னை என்றால், கம்பெனியில்தான் விடுவேன். என்ன, செலவு கொஞ்சம் அதிகமாகும். ஒருமுறை மாறுதலுக்காக, கோவை சித்தாபுதூரில் இருக்கும் கிஸ்ஸிங்கரிடம் சர்வீஸுக்கு விட்டேன். கம்பெனி சர்வீஸை மிஞ்சும் அளவுக்கு என் பைக்கின் மைலேஜ் மற்றும் டைமிங் பிரச்னையைச் சரி செய்தார். அன்று முதல் நான் அவரது வாடிக்கையாளன்!'' என்கிறார் கோவையைச் சேர்ந்த எட்வின். 

இப்படி தன்னிடம் முதன்முறையாக வருபவரைக்கூட தனது வாடிக்கையாளராக மாற்றுவதில் கை தேர்ந்தவராக இருக்கிறார் புல்லட் கிஸ்ஸிங்கர்.

கோவை சித்தாபுதூரில் இருக்கும் வொர்க்ஷாப்பில் கிஸ்ஸிங்கரைச் சந்தித்தேன். 'படிப்பில் அவ்வளவாக விருப்பம் இல்லாமல் இருந்த எனக்கு, தமிழக அரசின் அறிவொளி இயக்கம் மூலம் தொழிற்கல்வி பயிலும் வாய்ப்புக் கிடைத்தது. எனக்கு ஏற்கெனவே புல்லட் மீது கிறக்கம் உண்டு. அந்தப் பயிற்சியில் புல்லட்டைப் பழுது பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததும், மிக மகிழ்ச்சியாகச் செய்தேன்.

புல்லட் கிஸ்ஸிங்கர் - மெக்கானிக் கார்னர்

அதைத் தொடர்ந்து புல்லட் மெக்கானிசம் கற்றுக்கொண்டு, நண்பர்கள் உதவியுடன் 1991-ல் வொர்க்ஷாப் தொடங்கினேன். முதலில் நண்பர்களின் புல்லட் பைக்குகள் மட்டுமே சர்வீஸுக்கு வரும். பின்னர், படிப்படியாக மற்ற வாடிக்கையாளர்களும் வர ஆரம்பித்தனர்.

புதிதாக ஒருவர் பைக்கைக் கொண்டு வந்தால், அந்த பைக்கின் குணங்கள் எனக்குத் தெரிந்துவிடும். எனவே, வாடிக்கையாளரின் பிரச்னையைத் தீர்த்து, திருப்தியை ஏற்படுத்துவதும் சுலபம். இப்படித்தான் சுமார் 3,000 புல்லட் பைக்குகளையாவது சர்வீஸ் செய்து இருப்பேன்'' என்றவர் புல்லட்டின் தனித்தன்மை பற்றிக் கூறினார்.

''புல்லட்டின் கம்பீரமான தோற்றம் அதன் தனி அடையாளம். மற்ற பைக்குகளை நீங்கள் எவ்வளவு நாட்கள் ஓட்டினாலும், அதற்கு நீங்கள் ஒரு ஓட்டுனர் மட்டுமே! ஆனால், புல்லட்டைப் பொறுத்தவரை நீங்கள் அதனுடன் பழகிவிட்டால், அது ஒரு குதிரை. அதுவே உங்களை வழிநடத்தும். அதுதான் இதன் சிறப்பு!

பழைய மாடல் புல்லட்டுக்கும் தற்போது வரும் புல்லட்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நீங்கள் எந்த புல்லட் பிரியரைக் கேட்டாலும் பழைய மாடல் புல்லட்தான் சிறந்தது என்பார்கள். காரணம், கரடுமுரடான சாலையில் எவ்வளவு தூரம் பயணித்தாலும் களைப்பு என்பதே இருக்காது. அதுவே ஒரு சுகமான அனுபவமாக இருக்கும்.

புல்லட்டுக்கு தலைமுறை தலைமுறையாக ரசிகர்கள் தொடர்கிறார்கள். எனது வாடிக்கையாளர்கள் பலரும், தனது தாத்தா ஓட்டிய பைக்கை அப்பாவிடம் இருந்து வாங்கி ஓட்டுபவர்களாகவும், அதனை தனது மகன் நாளை ஓட்ட வேண்டும் எனப் பாதுகாப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

மேலும், பழைய மாடல் புல்லட் பைக்கைப் பழுதுபார்ப்பதும், மாற்றி அமைப்பதும் எளிது. காரணம் அதில் கியர், கிளட்ச், இன்ஜின் சிலிண்டர் ஆகியவை தனித் தனியாக இருக்கும்.

மற்ற பைக்குகளை ஒப்பிடும்போது, சற்று பராமரிப்புச் செலவு அதிகம்தான். சில மாடல்களில், இன்ஜினில் சற்று அதிர்வுகள் இருக்கும். இதனை இன்ஜினுக்கு சரியான 'பெட்’ போட்டுச் சரிசெய்யலாம். புல்லட்டில் அதிகமாக வரும் பிரச்னை என்றால்... மைலேஜ், டைமிங் குறைபாடுகளாகத்தான் இருக்கும்.

புல்லட்டை 3,000 கி.மீ-க்கு ஒருமுறை சர்வீஸ் செய்துவிட வேண்டும். அடிக்கடி ஆயில் மற்றும் செயின் செக் செய்வது பைக்குக்கும், சுகமான பயணத்துக்கும் நல்லது' என முடித்தார் கிஸ்ஸிங்கர்.

இவரது வாடிக்கையாளரான சுரேஷ் கார்த்திக், ''கிஸ்ஸிங்கரிடம் கடந்த ஏழு வருடங்களாக பைக் சர்வீஸ் செய்கிறேன். புல்லட்டில், எனக்குத் தெரிந்த பிரச்னைகளைத் தான் சொல்வேன். ஆனால், இவர் அதனையும் தாண்டி அதில் உள்ள நுணுக்கமான பிரச்னைகளைச் சரிசெய்து, புல்லட்டை புது பைக்காக மாற்றிக் கொடுப்பார். அதுதான் கிஸ்ஸிங்கர்!'' என்றார்.

புல்லட் கிஸ்ஸிங்கர் - மெக்கானிக் கார்னர்