கார்ஸ்
Published:Updated:

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்

நிஸான் சன்னி டீசல்

 ##~##

''பொள்ளாச்சியில் இருந்து பேசுறேனுங்... என் சில்வர் கலர் 'கா......ர்’ல குமரகம் போட் ஹவுஸ் போகோணும்னு ஆசைங்... ஒரு ஜாலி டூர் போலாம். வாறீங்களா?'' என்று உரிமையுடன் வாய்ஸ் மெசேஜ் செய்திருந்தார் ராகவன். பொள்ளாச்சியில் இருக்கும் ராகவனின் கராஜுக்குச் சென்று இறங்கியபோது, நம் அனுமானம் உறுதியானது. ஆம், ஆடி க்யூ-3 மற்றும் அம்பாஸடருக்கு இடையே அந்த நிஸான் சன்னி பெரி..ய்ய காராக நின்றிருந்தது. 

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில், பழைமை மாறாமல் இருக்கும் அசோக் ஹோட்டல் உரிமையாளர் ராகவனைத் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். ''நானும் பழசு... என் ஹோட்டலும் பழசு... என்னோட சன்னிதானுங்க இப்போ லேட்டஸ்ட்!'' என்று சொன்ன ராகவனுக்கு, ஹோட்டல் தொழிலிலும், கார் ஓட்டுவதிலும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அனுபவம்.

''அம்பாஸடர், கான்டஸா, ஃபியட், மாருதி, ஆடி கார்களுக்கு அப்புறம் நிஸான் சன்னி, எங்க சித்தப்பாவுக்கு ஒன்பதாவது காருங்க!'' என்றார், நம்முடன் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த ராகவனின் அண்ணன் மகன் சேகர்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்

''மைக்ரா தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் சன்னி, நிஸானின் 10-வது ஜெனரேஷன் கார். டிசம்பர் 2010-ல் சீனா ஆட்டோ ஷோவில் இந்த சன்னியை பார்வைக்கு வெச்சாங்க. இந்தியன் சன்னியை, சென்னை தொழிற்சாலையில்தான் தயாரிக்கிறாங்க. அமெரிக்காவுல இதுக்குப் பேரு, வெர்ஸா. ஆனா, இந்தியாவுல மாருதி அந்தப் பெயருக்கு ரைட்ஸ் வாங்கிட்டாங்க! ரெனோவின் ஸ்காலாவும், நிஸானின் சன்னியும் ஒண்ணு. ஆகஸ்ட் மாசத்தில் ஸ்காலா டீசல் 300 கார்களும், பெட்ரோல் 40 கார்களும் சன்னி டீசல் 637 கார்களும், பெட்ரோலில் 286 கார்களும் விற்பனையாகி இருக்கு!'' என்று 'ரமணா’ விஜயகாந்த் பாணியில் புள்ளி விவரம் பேசி மிரளவைத்தார் ராகவன்.

''சித்தப்பா, உங்க ஆட்டோமொபைல் அறிவை எப்படியோ மோட்டார் விகடன் வாசகர்களுக்குத் தெரியப்படுத்திட்டீங் போங்க!'' என்றார் சேகர் ஜாலியாக. ஓட்டல் அதிபர்கள் என்பதால், மதிய உணவை பார்சல் செய்து, டிக்கியில் அடுக்கிஇருந்தார்கள்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்

அகலமான கேபின் ஸ்பேஸுடன் நம்மை வரவேற்ற சன்னியை ஸ்டார்ட் செய்தோம். 1,500 சிசியும், 4 சிலிண்டர்களும், காமென் ரயில் டைரக்ட் இன்ஜக்ஷனும் கொண்ட சன்னியின் 1.5 DCi இன்ஜின், டீசல்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சில பல சத்தங்கேளாடு உறுமியது. நாம் முதல் கியரைத் தட்டி, கிளட்ச்சில் இருந்து காலை எடுத்ததும், சுமாராகச் சீறியது சன்னி. ''2012 ஆகஸ்ட் மாத மோட்டார் விகடன்ல சொன்ன மாதிரியே, சன்னியில் டர்போ லேக் இருக்குறது உண்மைதானுங்!'' என்றார் ராகவன். தேனி, குமுளி வழியாக குமரகம் போகலாமா அல்லது வடக்கஞ்சேரி, பாலக்காடு வழியாகப் போகலாமா? என ஆலோசனை செய்தோம்.

''தேனி வழியாப் போனா சுத்திக்கிட்டுப் போகோணும். பொள்ளாச்சி, கொல்லங்கோடு, வடக்கஞ்சேரி, பாலக்காடு, சாலக்குடி, எர்ணாகுளம், சேர்த்தலா வழியா குமரகம் போயிரலாமுங் சித்தப்பா!'' என்று ரூட் மேப்பைக் காட்டினார் சேகர்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்

ரெனோவின் டீசல் இன்ஜின், ஆரம்பத்தில் திணறினாலும், நெடுஞ்சாலைகளில் சீறுகிறது. 84bhp என்பது ஒரு மிட் சைஸ் காருக்குக் குறைவு தான் என்றாலும், மைலேஜுக்காக இன்ஜினை, ரெனோ நன்கு ட்யூன் செய்தது தெரிகிறது. 2000 ஆர்பிஎம் வரை, நாம் சன்னியின் சொல்படிதான் கேட்க வேண்டும். கொஞ்சம் டர்போ லேக், சில பல டோல்கேட்டுகள் கடந்து நாம் வடக்கஞ்சேரி தாண்டி, திருச்சூரை நெருங்கினோம். கேரளா என்றாலே சேச்சிகள், புட்டு, மீன் வறுவல் போன்றவற்றோடு, இனிமேல் மோசமான சாலைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். அந்தளவு சாலைகளோடு கடுமையாகப் போராடியது சன்னி. எல்லா மிட் சைஸ் கார்களுக்குமே உரித்தான கிரவுண்ட் கிளியரன்ஸ் (161 மிமீ), சன்னியிலும் பாடாகப்படுத்தியது. இது ஹோண்டா சிட்டியைவிட 1 மிமீ மட்டுமே அதிகம். புகைப்பட நிபுணரையும் சேர்த்து நாம் மொத்தம் நான்கு பேர் மட்டுமே பயணித்ததால், மேடு பள்ளங்களில் அவ்வளவாக அடி வாங்கவில்லை சன்னி. 'கடவுளின் தேசத்தில் மேடு-பள்ளங்களை ட்யூன் செய்திருக்கலாம்’ என்று ராகவன் ஐடியா சொன்னபோது, ''அதுக்குப் பதிலா நிஸான், சன்னியின் சஸ்பென்ஷனைக் கொஞ்சம் ட்யூன் பண்ணியிருக்கலாம்!'' என்றார் சேகர்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்
ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்

திருச்சூர் பைபாஸில் (அதாவது, நகரச் சாலை!) ஓரமாக ஒரு மரத்தடியில், கொண்டு வந்த மதிய உணவை அருந்தி விட்டுக் கிளம்பினோம். பொள்ளாச்சியில் இருந்து திருச்சூருக்குச் சென்று சேர மூன்று மணி நேரம் ஆனது. ஆனால், திருச்சூரில் இருந்து வெளியேறவே இரண்டு மணி நேரம் பிடித்தது. அதுவரை இன்ஜினும், கியரும் ஏற்படுத்தி இருந்த பார்ட்னர்ஷிப், கேரள எல்லையை நுழைந்ததும் தொய்வடைந்திருந்தது. ஒவ்வொரு பள்ளத்துக்கும் கியரை மாற்றி, கிளட்சை ரிலீஸ் செய்து என்று நாமும் தொய்வடைந்திருந்தோம். ஆனால், கேரள மக்கள், குடும்பத்துடன், காதலியுடன், நண்பர்களுடன் என்று உற்சாகமாக பைக்குகளிலும், கார்களிலும் டிரைவிங் பண்ணிக் கொண்டிருந்தார்கள். 'பாலைவனத்தைக் கடப்பவர்கள்தான் கதறி அழுகிறார்கள்; வசிப்பவர்கள் அல்ல!’ என்று என்றோ 'வலைபாயுதே’வில் படித்தது ஞாபகம் வந்தது.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்

'திருச்சிவபேரூர்’ என்னும் மலையாள வார்த்தையில் இருந்து மறுவி வந்ததுதான் திருச்சூர். சேர மன்னர்கள் காலத்தில் இதை 'தென் கயிலாயம்’ என்று அழைப்பார்களாம். அதாவது, சிவன் பள்ளி கொண்ட இடம். திருச்சூரைச் சுற்றி அதிரப்பள்ளி அருவி, சாவக்காடு பீச், சக்தன் தம்புரான் அரண்மனை, விலாங்கன்குன்னு என்று ஏகப்பட்ட சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. புன்னத்தூர் கோட்டா, யானைகளின் சரணாலயத்துக்கு ஃபேமஸ். இங்கு 70-க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றன. யானைகள் அனைத்தும், கோடீஸ்வர குருவாயூரப்ப பக்தர்களால் உபயம் செய்யப்பட்டவையாம். வருடத்துக்கு ஒரு முறை யானைகளுக்கான ரேஸ், சாப்பாட்டுப் போட்டி என்று ஏரியாவே அதகளப்படுகிறது.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்
ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்

திருச்சூரில் இருந்து இடதுபுறம் திரும்பி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கரடுமுரடான சாலைகளில் பயணித்தால் சாலக்குடி வருகிறது. கேரளாவில், சாலக்குடிக்கு வரலாற்று முக்கியத்துவம் அதிகம். திப்புசுல்தான் மைசூருக்குப் படையெடுக்கும் போது, சாலக்குடியில்தான் தனது படை பரிவாரங்களுடன் படையெடுப்பைத் துவங்கத் திட்டம் போட்டார் என்கிறார்கள். சாலக்குடி ஆறு, கேரளாவுக்கு ஒரு வரப்பிரசாதம்.

கேரள மாநிலத்தில் நான்கு வழிச் சாலைகளைப் பார்ப்பதே அரிது. ஆனால், சாலையே இல்லாத சாலைகளிலும் டோல்கேட்டில் வசூல் செய்து கொண்டிருந்தனர். ஒன்றிரண்டு டோல்கேட்டுகள் தாண்டி எடப்பள்ளி... பிறகு சேர்த்தலா என்னும் நகரத்துக்கு வந்தடைந்தோம். இங்கு மீன் வறுவல் செம ஃபேமஸ். நம்மூர் கானாங்கத்தை மீன் இங்கே அயிலா என்றும், வஞ்சரம் - நெய் மீன் என்றும், பாறை - கறி மீன் என்றும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. நெய் மீன் மற்றும் கறி மீன் மசாலாவுக்கு சேர்த்தலாவில் ரொம்ப டிமாண்ட். மாலை ஸ்நாக்ஸாக ஒன்றிரண்டு கறி மீன்களை லவட்டி விட்டு, இருட்டுவதற்குள் குமரகம் செல்லத் திட்டம் போட்டோம்.

குமரகம் போகும் வழியில் இருந்து... சொர்க்க வாசல் ஆரம்பிக்கிறது என்று சொல்லலாம். காரணம் - வேம்பநாடு ஏரி. நினைத்த மாதிரியே நாம் செல்வதற்குள் குமரகம் இருள் சூழ்ந்திருந்தது. அழகான வேம்பநாடு ஏரி, இருளில் பயமுறுத்தியது. குமரகத்தில் தங்க வேண்டுமென்றால், நீங்கள் ஒரு லட்சாதிபதியாக இருந்தால் நலம். 'KTDC’ ’ எனும் கேரள டூரிஸத்தின் அரசு காட்டேஜ்களில் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ''சைட் சீயிங், மோட்டார் போட்டிங், லேக் வியூ ரூம், ப்ரேக்ஃபாஸ்ட் காம்ப்ளிமென்ட்ரி சார்... சிங்கிள் ரூம் ஃபார் ஒன்லி 15,000'' என்று மிடில் கிளாஸ்காரர்கள் வயிற்றில் புளி கரைப்பார்கள் ஹோட்டல்வாசிகள். ஓணம் பண்டிகைக்கு, பெரும் பணக்காரர்கள் குமரகத்தை டார்கெட் செய்வதே இதற்குக் காரணம். குமரகம் தாண்டி கோட்டயம் போனால் 2,000, 3,000 ரூபாய்க்கு அறை கிடைக்கிறது. சின்னதாக ஒரு லேக் சைடு ரிசார்ட்டில் தங்கிவிட்டு, வேம்பநாடு ஏரியைப் பார்க்கும் அவசரத்தில் காலையில் காம்ப்ளிமென்ட்ரி ப்ரேக்ஃபாஸ்ட்டை பரபரவென முடித்துவிட்டுக் கிளம்பினோம்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்

வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டு பரந்து விரிந்திருந்தது வேம்பநாடு ஏரி. ''வாவ்.. சித்தப்பா, போட்டிங் போலாமா!'' என்று  சின்னப் பையனாக அடம்பிடித்தார் சேகர். இங்கு மோட்டார் போட்டிங், ஸ்பீடு போட்டிங், போட் ஹவுஸ் என்று மூன்று வகையான போட்டிங் பயணங்கள் உள்ளன. ஒரு மணி நேரத்துக்கு மோட்டார் போட்டில், நான்கைந்து பேர் கொண்ட குழுவுக்கு 450 ரூபாய். இதுவே, அரை மணி நேரம் எக்ஸ்டெண்ட் செய்து, ஏரி வழியாகவே ஆலப்புழை பார்டரைத் தொட்டுவிட்டு வர வேண்டுமென்றால்

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்

650. ஸ்பீடு போட்டிங் என்றால், ஒரு மணி நேரத்துக்கு

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்

1,200. போட் ஹவுஸ் கதையே தனி! பிரம்மாண்டமான அறைகளுடன் கூடிய, வீட்டில் உள்ள அனைத்து வசதிகளும் கொண்ட கப்பல் போன்ற போட்டில்,

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்

9,000 சார்ஜ் பண்ணுகிறார்கள். மதிய உணவுக்கு தலைக்கு

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்

350 என்றார்கள்.

சன்னியில் இருந்து தாவி, சின்னதாக ஒரு மோட்டார் போட்டில் பயணத்தைத் தொடர்ந்தோம். ஏரிக் கரையோரத்தில் இள வயது சேச்சிகள் சிலர், தங்கள் மகன்களோ, கணவரோ ஏரியிலேயே தூண்டிலைப் போட்டு மீன் பிடித்துத் தர, ஆன் தி ஸ்பாட்டிலேயே மீனைச் சுத்தம் செய்து சமைத்துக்கொண்டு இருந்தார்கள். ஆனால், கரணம் தப்பினால் மரணம்தான். ஏனென்றால், ஏரியின் ஆரம்ப ஆழமே 25 மீட்டராம். வேம்பநாடு ஏரியின் வடக்குப் பகுதிக் கரையோரத்தில், காலியாக 'தேமே’ என்றிருந்த இடத்தைக் கவனித்தபடி, ''இந்த இடத்தில அசோக் ஹோட்டலோட பிராஞ்ச் ஓப்பன் பண்ணோணும்...!?'' என்று ஆசைப்பட்டார் ராகவன். ''ஈ எடத்தில கட்டாம் பற்றில்லா... நேரத்தே ஈ 40 ஏக்கரும் நிங்கள்ட ஒரு ராஜ்யசபா எம்.பி. மேடிச்சிட்டுண்டு... அவெரு கட்டாம் போகுண்ணு!'' என்று அசால்ட்டாக மலையாளத்தில் ஒரு ஸ்கூப் நியூஸ் சொன்னார் படகோட்டி போஸ். ''இந்தியாவுல ரூபாயோட மதிப்பு இறங்குது. ஆனா, நம்ம எம்.பி.க்களோடு (சொத்து) மதிப்பு ஏறுது!'' என்று டைமிங்காக அரசியல் கமென்ட் அடித்தார் ராகவன்.

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்

வேம்பநாடு ஏரியின் ஏதோ ஒரு ஏரிக் கரையை ஒட்டியுள்ள ஒரு டீக்கடையில், லேசான மழைத் தூறலுக்கு இடையே, சுவையான டீயை உறிஞ்சி விட்டு மீண்டும் படகில் ஏறினோம். 'பெண்ணுரிமை இல்லாத நாடு... காற்று இல்லாத வீடு’ என்பார்கள். கேரளாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும அனைத்திலும் முன்னுரிமை வகிக்கிறார்கள். ஹோட்டல் உரிமையாளராக, படகு ஓனர்களாக, டூரிஸ்ட் கைடுகளாக என்று பெண்கள் வாசம் காற்றில் எந்நேரமும் வீசுகிறது. ''டீ 25 ரூபாய்னா கொஞ்சம் காஸ்ட்லிதான்! ஆனா, விலைக்கேற்ற தரம்!'' என்றார் சேகர். வேம்பநாடு ஏரியிலிருந்து ஒன்றரை மணி நேரம், மேற்குப் பக்கம் நீர் வழியாகவே பயணித்தால் ஆலப்புழை வருகிறது. மழை சற்று வலுக்க ஆரம்பித்ததால் திட்டத்தைக் கைவிட்டு, திரும்ப மனமில்லாமல் ஏறிய இடத்தில் வந்திறங்கினோம். கரைகளில் ஆங்காங்கே நின்றிருந்த ஹவுஸ் போட்கள்தான் குமரகத்தின் அழகே! ஒரு ஹவுஸ் போட்டின் விலை 12 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறதாம். கிட்டத்தட்ட நிஸான் சன்னியின் ஆன்-ரோடு விலை!

படகிலிருந்து திரும்ப சன்னிக்குத் தாவி, சன்னியின் டர்போ லேக்குடன் மீண்டும் தமிழகம் நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம். எர்ணாகுளம் தாண்டி பாலக்காடு ஹைவேஸில் ஹெவி டிராஃபிக். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம்... எதிர்பார்க்கவே இல்லை. ஒரு வழிச் சாலை... அதுவும் ஏறத்தாழ மலைப் பாதை என்பதால், இங்கு டிராஃபிக் ஏற்பட்டால், சாமான்யமாக மீள முடியாது என்றார்கள். அதுவும் செக் போஸ்ட்டில் லாரிகள் நாட்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்குமாம். ஒருவழியாக இருளத் துவங்குவதற்குள் கேரள எல்லையை விட்டு வெளியேறினோம். எல்லையை விட்டுப் போனாலும், குமரகம் தந்த அழகுத் தொல்லை மனசை விட்டு இன்று வரை நீங்கவே இல்லை!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - பொள்ளாச்சி to குமரகம்