கார்ஸ்
Published:Updated:

ரீடர்ஸ் ரிவியூ - டாடா சஃபாரி ஸ்டார்ம் டீசல்

ரீடர்ஸ் ரிவியூ - டாடா சஃபாரி ஸ்டார்ம் டீசல்

நான் மரைன் இன்ஜினீயரிங் முடித்து விட்டு, தற்போது லாரி  டிரான்ஸ்போர்ட் தொழிலில் இருக்கிறேன். எனது குடும்பம் 1930 முதலே லாரித் தொழிலில் இருப்பதால், எனக்கு மோட்டார் வாகனங்களின் மீதான ஆர்வமும், அனுபவமும் சிறு வயது முதலே உண்டு. 

ரீடர்ஸ் ரிவியூ - டாடா சஃபாரி ஸ்டார்ம் டீசல்

ஏன் டாடா ஸ்டார்ம்?

 ##~##

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மஹிந்திரா பொலேரோ வைத்திருந்தேன். பொலேரோவுக்குப் பதில் வேறு எஸ்யூவிக்கு மாறலாமா என யோசித்த சமயத்தில், சஃபாரி ஸ்டார்ம் விளம்பரம் பார்த்தேன். முதல் பார்வையிலேயே இதன் அழகும், நேர்த்தியும், கம்பீரமும் வசீகரித்தது. இதைப் பற்றிய தகவல்களை அறிய, கோவை டாஃபே ஷோரூமுக்கு போன் செய்து விசாரித்தேன். அவர்கள் உடனே காரை டெஸ்ட் டிரைவ் செய்யக் கொண்டுவந்தனர். டெஸ்ட் டிரைவ் செய்ததில் திருப்தி ஏற்பட்டது. இதன் விலையும் நியாயமாகப்பட்டது. எனவே, சஃபாரி ஸ்டார்ம் தேர்வு செய்தேன்.

ஷோரூம் அனுபவம்:

கோவை டாஃபே ஷோரூமில் காரைப் பற்றிய முழு விபரங்களையும் எடுத்துக் கூறினார்கள். உடனே 'பேர்ல் ஒயிட்’ கலர் புக் செய்தேன். சரியாக 15 நாளில் காரை டெலிவரி தந்தனர். அங்கு அனைத்துத் தகவல்களையும் எடுத்துச் சொன்ன விதம் என்னைக் கவர்ந்தது. ஆனால், விற்பனைக்குப் பின்பு அவர்களின் சேவை திருப்தியளிப்பதாக இல்லை. எனது சர்வீஸ் பீரியட்-ஐ நினைவுப்படுத்துவது இல்லை. குறைகள் பற்றி விசாரிப்பதில்லை என நெருடல்கள் அங்கே உண்டு.

எப்படி இருக்கிறது ஸ்டார்ம்?

காரை டெலிவரி எடுத்தவுடன் இரண்டு முறை சென்னை சென்று வந்துவிட்டோம். இரண்டு முறையும் கார் ஓட்டிய களைப்பு என்பது சற்றும் இல்லை. மைலேஜ் லிட்டருக்கு 14 கி.மீ தருகிறது. பொதுவாக, நான் மணிக்கு 90 கி.மீ வேகம் வரைதான் செல்வேன். ஆனால், இந்த கார் மணிக்கு 130 கி.மீ வேகம் வரை சாதாரணமாகச் சத்தமின்றிச் செல்கிறது. அதிக தூரம் கடினமான பயணம் செய்பவர்களுக்குக் கச்சிதமான கார் இது. ஏழு பேர் அமர்ந்து செல்லலாம்.உள்ளே இருக்கும் ஏ.சி மிக விரைவாக குளிர்ச்சியினைத் தருகிறது. வளைவுகளிலும், கரடுமுரடான சாலைகளிலும் மிக எளிதாகப் பயணிக்கிறது.

ப்ளஸ்:

டர்னிங் ரேடியஸ் சூப்பர். மிகக் குறுகிய இடத்திலும் எளிதாகத் திருப்ப முடிவது, வசதியாகவும் எளிதாகவும் உள்ளது. இந்த காரின் தோற்றம் தரும் வசீகரத்தை வேறு கார்கள் தருமா என்பது சந்தேகமே! 2.2 லிட்டர் இன்ஜினின் சிறப்பு, இதில் வரும் சத்தம் மற்ற கார்களோடு ஒப்பிடும் போது பல மடங்கு குறைவு. இதன் திறன் மிக்க, நேர்த்தியான ஹெட்லைட் வெளிச்சம் அதிக தூரம் வரை வீசுகிறது.

ரீடர்ஸ் ரிவியூ - டாடா சஃபாரி ஸ்டார்ம் டீசல்

இதன் டயர்கள் பெரிதாக இருப்பதும், ஏபிஎஸ் பிரேக்குகள் அதனைக் கச்சிதமாகக் கட்டுப்படுத்தும் அனுபவமும் அருமை. இதன் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் ரோடு வியூ. உதாரணமாக, பின் சீட்டில் அமர்ந்துள்ளவர்களுக்குக்கூட  சாலை முழுவதுமாகத் தெரிகிறது. வாங்கிய நாள் முதல் இதுவரை எந்தக் கூடுதல் செலவும் வைக்கவில்லை. இதன் எளிமையான பராமரிப்புக்கு இது நல்ல உதாரணம். ஸ்டெப்னி, மற்ற கார்களில் பின் கதவில் இணைக்கப்பட்டிருக்கும். இது வயதானவர்களும், பலம் குறைந்தவர்களும் கையாள்வது கடினமாக இருக்கும். ஆனால், இதில் கீழே இருப்பதால், சுலபமாக உள்ளது.

மைனஸ்:

இதன் முக்கிய குறை என்றால், முன் இருக்கைகளில் ஆர்ம் ரெஸ்ட் இல்லை என்பதுதான்.இதனால், நெடுந்தூரம் ஓட்டும்போது கை வலி ஏற்படுகிறது. கடைசி வரிசை பின் இருக்கைகளில் சற்று உயரம் அதிகமானவர்களால் உட்கார முடிவதில்லை. டீசல் டேங்க் லாக் மற்ற கார்களைப் போல இல்லாமல், ஓட்டுநரின் அருகில் உள்ள பட்டன் மூலம் ஆட்டோமேட்டிக்காக இருப்பது பார்க்க ப்ளஸ் போலத் தோன்றினாலும், பல நேரங்களில் கேபிள் வேலை செய்வது இல்லை. முன்னால் இருந்து பார்க்கும்போது கம்பீரமாக இருக்கும் இதன் தோற்றம், பின்பக்கம் பார்க்கும்போது சிறிதாகத் தெரிகிறது. இவ்வளவு பணம் கொடுத்து வாங்கும் இந்த காரில், ஃப்ளோர் மேட் இல்லை என்பது உறுத்தல். மேலும் ஒரு குறையாக கண்ணையும் மனசையும் உறுத்துவது, இதன் கலர் ஆப்ஷன்தான். இதன் வேரியன்ட்டில் மூன்றே மூன்று கலர் ஆப்ஷன் மட்டுமே இருப்பது வாடிக்கையாளர்களை வேறு கார் நோக்கிச் செல்ல வைக்கும்.

என் தீர்ப்பு:

உண்மையிலேயே இதன் வடிவமைப்பும், அழகும் ஒரு வெளிநாட்டு இறக்குமதி காரைக் கொண்டுவந்து நிறுத்திய உணர்வைத் தருகிறது. இது நம் நாட்டுத் தயாரிப்பு என்பதும், சரியான விலை என்பதும் திருப்தி அளிக்கிறது. கரடு முரடான சாலைகளில் பயணிப்பவர்களும், சரியான மைலேஜை எதிர்பார்ப்பவர்களும் டாடா  சஃபாரி ஸ்டார்மை நம்பி வாங்கலாம்.

ரீடர்ஸ் ரிவியூ - டாடா சஃபாரி ஸ்டார்ம் டீசல்