கார்ஸ்
Published:Updated:

ஆச்சரிய அமேஸ்!

திருவனந்தபுரம் to சென்னை

 ##~##

ஹோண்டா நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் 'டிரைவ் டு டிஸ்கவர்’ எனும் பயணத்தை ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களைக் கொண்டு நடத்துகிறது. நீண்ட தூரம் காரை ஓட்டும்போது, காரைப் பற்றி பல விஷயங்கள் புரியும். மேலும், 'இது இப்படி இருந்தால், நன்றாக இருந்திருக்குமே... இந்த பாகத்தை அங்கே வைத்திருக்கலாமே.... சஸ்பென்ஷன் இன்னும் கொஞ்சம் இறுக்கமாக செட் செய்திருக்கலாமே’ என்று பத்திரிகையாளர்களுக்குத் தோன்றும் விஷயங்கள், ஹோண்டாவுக்குக் கிடைக்கும் போனஸ் தகவல்கள். 

அதேபோல், காரை பிரபல சுற்றுலாத் தலங்கள் வழியாக ஓட்டிச் செல்லும்போது, அனைத்துத் தரப்பு மக்கள் கூடும் இடத்திலும் காரைக் காண்பிக்கலாம். இது ஒருவகையில் மார்க்கெட்டிங் உத்தி என்றாலும், காரைப் பற்றிய நுணுக்கமான விஷயங்களை அறிந்துகொள்ள உதவும் என்பதும் உண்மை.

ஹோண்டா அமேஸில் இருக்கும் புதிய 1.5 லிட்டர் 'எர்த் ட்ரீம்ஸ்’ டீசல் இன்ஜின் எப்படி இருக்கிறது என்பதை அறிய, இது ஒரு நல்ல வாய்ப்பாகவே எனக்கு அமைந்தது. திருவனந்தபுரத்தில் இருந்து கொல்கத்தா வரை நடந்த டிரைவ் டு டிஸ்கவர் பயணத்தில், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரை அமேஸை ஓட்டிய என் அனுபவம்...

ஆச்சரிய அமேஸ்!

டீசல் இன்ஜின்களுக்கே உரித்தான சத்தம் மற்றும் அதிர்வுகளுடன் அமேஸின் டீசல் இன்ஜின் உயிர் பெற... திருவனந்தபுரம் ஹோண்டா ஷோரூமில் இருந்து துவங்கியது பயணம். மொத்தம் நான்கு அமேஸ் டீசல் கார்கள் இந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்தன. கேரளாவில் இருந்து தமிழ்நாடு எல்லை வரை செம டிராஃபிக். ஹோண்டா அமேஸின் டீசல் இன்ஜின், இது போன்ற டிராஃபிக் மிகுந்த நகரச் சாலைகளுக்கு நன்றாக ட்யூன் செய்யப்பட்டு இருக்கிறது. கிளட்ச் கொஞ்சம் டைட்டாக இருப்பதுபோலத் தோன்றியது. மேலும், குறைந்த ஆர்பிஎம்-ல் டார்க் மிகவும் அதிகமாக வெளிப்படுவது, நகரத்துக்குள் ஓட்டும்போது வசதியாக இருந்தாலும், டிராஃபிக்கில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆச்சரிய அமேஸ்!

கேரள எல்லை வரை நன்றாக இருந்த சாலை, களியக்காவிளையை நெருங்கியதும் குண்டும் குழியுமாக மாறியது. நான் அலுத்துக்கொண்டாலும், அமேஸ் அலுத்துக்கொள்ளவில்லை. மேடு பள்ளங்களை நன்றாகவே சமாளித்தது. நாகர்கோயிலைக் கடந்து கன்னியாகுமரியை நெருங்கியபோது, மதியம் மணி மூன்று. 'வெறும் 100 கி.மீ தூரம் ஓட்டுவதற்கு நான்கு மணி நேரமா?’ அவ்வளவு டிராஃபிக் பாஸ்!

கன்னியாகுமரியில் போட்டோ ஷூட்டையும் மதிய உணவையும் முடித்துவிட்டு, ராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டோம். திருவனந்தபுரம் முதல் சென்னை வரை நாங்கள் ஓட்டப் போகும் ஒரே நான்கு வழிச் சாலை, கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை இருந்த தேசிய நெடுஞ்சாலை மட்டுமே! காரை வேகமாக ஓட்டிப் பார்க்க இதை விட்டால் வேறு வாய்ப்பு இல்லை. எனவே, ஆக்ஸிலரேட்டரை மிதித்தேன்.

ஆச்சரிய அமேஸ்!

குறைந்த ஆர்பிஎம்-ல் நன்றாகவே சக்தியை அளித்த டீசல் இன்ஜின், அதிக ஆர்பிஎம்மிலும் சீரான சக்தியை வெளிப்படுத்தியது. மூன்று இலக்க வேகங்களிலும் 'ஈக்கோ’ விளக்கு ஒளிர்வது மிகப் பெரிய ப்ளஸ்! கார், அதிக வேகங்களில் தேவையில்லாத குலுங்கல்கள் ஏதும் இல்லாமல் சீராகச் சென்றது.

திருநெல்வேலி வரை நெடுஞ்சாலையில் பயணித்து பின்னர், தூத்துக்குடியில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக ராமநாதபுரம் அடைந்து, பின்னர் ராமேஸ்வரம் சென்று சேர்ந்த போது இரவு 11 மணி ஆகியிருந்தது. டீசல் அளவு இரண்டு பார்கள் இருப்பதாக ஒளிர்ந்தது. ட்ரிப் மீட்டர், லிட்டருக்கு 19.2 கி.மீ மைலேஜ் எனக் காட்டியது. நாங்கள் ஓட்டிய விதத்துடன் ஒப்பிடும்போது, இது உண்மையிலேயே நல்ல மைலேஜ்தான்.

அடுத்த நாள் காலை தனுஷ்கோடிக்குச் சென்று அங்கு போட்டோ ஷூட் முடித்தோம். பின்னர், கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரிக்குப் பயணம் துவங்கியது. நாகூரைத் தாண்டும்போது இரவு மணி 8.30 ஆகியிருந்தது. ஹோண்டா அமேஸ் காரின் ஹெட்லைட் வெளிச்சம் லோ-பீமில் போதவில்லையோ என்று நினைத்து ஹெட்லாம்ப் செட்டிங்குகளை உயர்த்தி அமைத்தேன். அப்போதும், வெளிச்சம் போதவில்லை. ஆனால், ஓட்ட முடியாத அளவுக்கு இல்லை எனலாம். சிதம்பரம் புறநகர்ப் பகுதியில் ஒரு கும்பகோணம் டிகிரி காபி குடித்துவிட்டு, புத்துணர்ச்சியோடு புதுச்சேரியை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தோம்.

புதுச்சேரியை அடைந்தபோது இரவு மணி 10.30. அடுத்த நாள் காலை, சென்னையை நோக்கிப் பயணம். கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுங்கவரி வசூலிக்கப்படும் ஒரே பகுதி சென்னை டு புதுச்சேரி தான். ஆனால், இந்தச் சாலையின் தரம், கிழக்குக் கடற்கரைச் சாலையின் மற்ற பகுதிகளைப்போல அல்லாமல், மிக அருமையாக இருந்தது. வெகு விரைவில் சென்னையை அடைந்தோம். 'ஹோண்டா அமேஸ், சிட்டி டிராஃபிக்குக்கு மட்டும்தான் சரிப்பட்டு வரும்; நெடுஞ்சாலைப் பயணங்களுக்கு எல்லாம் சரிப்பட்டு வராது’ என்று யாராவது சொன்னால், நம்பவே நம்பாதீர்கள்.

'டிரைவ் டு டிஸ்கவர்’ பயணத்தில் என்ன 'டிஸ்கவர்’ செய்தேன் என்பதையும் சொல்ல வேண்டும் அல்லவா?

ஆச்சரிய அமேஸ்!

ஹோண்டா அமேஸில் இருக்கும் டீசல் இன்ஜின்தான், நம் நாட்டில் ஹோண்டா அறிமுகப்படுத்திய முதல் டீசல் இன்ஜின் என்பதை எத்தனையோ முறை படித்திருப்பீர்கள். இனி, இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அமேஸில் இருக்கும் 1.5 லிட்டர் 'எர்த் ட்ரீம்ஸ்’ டீசல் இன்ஜின், நிச்சயம் நம் நாட்டுச் சந்தையில் வெற்றிபெற்றுவிட்டது. மைலேஜிலும் சரி, பெர்ஃபாமென்ஸிலும் சரி, எர்த் ட்ரீம்ஸ் டீசல் இன்ஜின் வியக்கவைக்கிறது. இதன் போட்டியாளரான மாருதி டிசையரில் இருப்பது, 1.3 லிட்டர் ஃபியட்டின் மல்டிஜெட் டீசல் இன்ஜின். இதன் மிகப் பெரிய குறை, டர்போ லேக். அமேஸில் டர்போ லேக் நாம் உணரும் அளவுக்கு இல்லை. குறைந்த ஆர்பிஎம்-ல் சிறப்பாகச் செயல்படும் இன்ஜின், 4500 ஆர்பிஎம்-க்கு மேல் சிறப்பாக இல்லை என்றாலும், நிச்சயம் மோசம் இல்லை. அமேஸ், அதிகபட்சமாக மணிக்கு 150 கி.மீ வேகம் வரைதான் செல்லும். அதற்கு மேல் என்ன முயற்சித்தாலும், வேகம் அதிகரிக்கவில்லை. நம் ஊர்ச் சாலைகளுக்கு மணிக்கு 150 கி.மீ வேகம் என்பதே அதிகம்தான்.

மைலேஜைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். 'ஈக்கோ’ பச்சை விளக்கு எரியும்படி உங்கள் ஓட்டுதல் இருந்தால், தாராளமாக லிட்டருக்கு 21 கி.மீ-க்கு மேல் மைலேஜ் கிடைக்கும். ஆனால், ஃப்யூல் டேங்க் கொள்ளளவு வெறும் 35 லிட்டர்கள்தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அமேஸ் ஆச்சரியப்படுத்திய இன்னொரு விஷயம், பின்னிருக்கை இட வசதி. எப்படி 4 மீட்டருக்குள் இருக்கும் காரில், உள்பக்கம் இவ்வளவு இட வசதியைக் கொண்டுவந்தார்கள் என்று தெரியவில்லை. கால் வைக்க இடம் தாராளமாகவே இருக்கிறது. கேபினில் புழங்க இடம் விசாலமாக இருந்தாலும், டேஷ் போர்டு அமைந்திருக்கும் விதம் எல்லாருக்கும் பிடிக்காது.ஸ்டீயரிங் ஆடியோ கன்ட்ரோல்கள் நன்றாக இயங்கியது. ஆனால், டிரைவிங் பொசிஷன் எல்லாருக்கும் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஓட்டுநர் இருக்கையில் தொடைகளுக்கு சப்போர்ட் இல்லை என்பதால், சில சமயம் எனக்கு முதுகு வலி ஏற்பட்டது.

நான் ஓட்டிய க்ஷிஙீ வேரியன்ட் காரில் 'ஹீட் அப்ஸார்பிங் விண்ட் ஷீல்டு’ இருந்தாலும், அது இருப்பதற்கான பயனை உணர முடியவில்லை. சிறிது நேரம் வெயிலில் நிறுத்திவிட்டு காருக்குள் ஏறினாலும் அனல் பறக்கிறது.

ஹோண்டா அமேஸின் டீசல் இன்ஜின் சற்று எடை அதிகம் என்பதால், முன்பக்க சஸ்பென்ஷன் சற்று இறுக்கமாக அமைத்திருக்கிறார்கள். காரின் கையாளுமையும், ஓட்டுதல் தரமும் நன்றாகவே இருக்கிறது. அதிக வேகங்களில் திடீரென்று ஏதாவது பள்ளத்தின் மீது ஏறி இறக்கினால், ரொம்பவே ஆட்டம் போடுகிறது. என்றாலும், பின்பக்க சஸ்பென்ஷன் சற்று சாஃப்ட்டாக இருப்பதால், இது நார்மல்தான்.

அப்படி என்றால், அமேஸில் பெரிய குறை எதுவுமே இல்லையா? இருக்கிறது. டீசல் இன்ஜினின் சத்தம் மற்றும் அதிர்வுகள்தான் அது. காரை ஸ்டார்ட் செய்யும்போதே மொத்த கேபினும் குலுங்குகிறது. இத்தனைக்கும் 'லிக்விட் ஃபில்டு’ இன்ஜின் மவுன்ட் பயன்படுத்தப் பட்டு இருக்கிறது. இது, அதிர்வுகளைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால், என்னவோ தெரியவில்லை, காரை ஆன் மற்றும் ஆஃப் செய்யும்போது, ரொம்பவும் குலுங்குவதாக ஓர் உணர்வு. ஒட்டு மொத்தமாக, அமேஸை ஹோண்டா பேக்கேஜ் செய்திருக்கும் விதம் மிக அருமை.

மொத்தத்தில், ஹோண்டா அமேஸ் - Driven, Discovered and Amazed!

ஆச்சரிய அமேஸ்!