கார்ஸ்
Published:Updated:

தி ஒன்? - போர்ஸ் ஒன் SX

தி ஒன்? - போர்ஸ் ஒன் SX

 ##~##

நம் நாட்டில் எஸ்யூவி செக்மென்டில் ஒரு வாகனத்தை அறிமுகப்படுத்துவது, சவாலான விஷயம். ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஏற்கெனவே அறிமுகப்படுத்திய 'ஃபோர்ஸ் ஒன்’ காரில், தற்போது SX எனும் புதிய வேரியன்ட்டைக் கொண்டுவந்திருக்கிறது. பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களே தடுமாறும் எஸ்யூவி செக்மென்ட்டில், போர்ஸ் ஒன் SX வெற்றி பெறுமா? 

டிசைன் மற்றும் இன்ஜினீயரிங்

ஃபோர்ஸ் ஒன் காரின் அழகு, இதன் நீளம்தான். சாலையில் நல்ல 'பிரசென்ஸ்’ அளிக்கிறது. இதன் நீளமும் வீல்பேஸும் அதிகம் என்பதால், காரின் உள்பக்கத்தில் தாராள வசதிகள்.

காரின் முன் பக்க டிசைன், க்ரோம் க்ரில்லுடன் பெரிதாகக் காட்சியளித்தாலும், இதன் போட்டி கார்களான ஸ்கார்ப்பியோ மற்றும் சஃபாரியில் இருக்கும் கம்பீரம் இதில் இல்லை. வெளிப்புற வடிவமைப்பில் ஃபோர்ஸ் நிறுவனம் பெரிதாக ரிஸ்க் எதுவும் எடுக்கவில்லை. சீனாவில் விற்பனையாகும் எக்ஸ்ப்ளோரர்-3 என்ற எஸ்யூவியின் வடிவமைப்பை உதாரணமாக எடுத்துக்கொண்டே ஃபோர்ஸ் ஒன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தி ஒன்? - போர்ஸ் ஒன் SX

காரின் உள்பக்கம்தான் பெரிய சர்ப்ரைஸ். டிரைவர் இருக்கையின் உயரம் மிகக் கச்சிதமாக இருக்கிறது. பெரிய காரை ஓட்டுகிறோம் என்ற உணர்வே இல்லை. ஆனால், டிரைவர் இருக்கையைக் கொஞ்சம் பின்னால் தள்ளி வைத்து ஓட்டுகையில், கியர் மாற்றும்போது முழங்கை, சென்டர் ஆர்ம்ரெஸ்ட் கன்ஸோலில் இடிக்கிறது.

தி ஒன்? - போர்ஸ் ஒன் SX

காரின் டேஷ்போர்டு டிசைன் மிகச் சாதாரணம்தான். க்ளோவ் பாக்ஸில் இடம் போதவில்லை. டயல்கள் தெளிவாகத் தெரிகின்றன. ரியர்வியூ மிர்ரர் உண்மையிலேயே சூப்பர். காரைச் சுற்றி நடப்பவற்றை மிக விசாலமாகக் காட்டுகிறது.

இரண்டாவது வரிசை இருக்கைகளில் கால் வைக்க இடம் தாராளம். தொடைகளுக்குப் போதிய சப்போர்ட் இல்லை என்றாலும் மோசம் இல்லை. மூன்றாவது வரிசை இருக்கைகளிலும் இரண்டு பேர் உட்கார இடம் இருக்கிறது. ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவியில் ஏழு பேர் வரை தாராளமாகப் பயணிக்க முடியும். மூன்று வரிசை இருக்கைகளுக்கும் ஏ.சி வென்ட் இருப்பது மிகப் பெரிய ப்ளஸ். காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிளாஸ்டிக் தரம் படு சுமார்.

ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவியில் இருப்பது நம் நாட்டில் வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட லேடர் ஃப்ரேம் சேஸிதான். ரியர் வீல் டிரைவ் காரான இதில், முன் பக்கம் இண்டிபென்டன்ட் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும், பின் பக்கம் மல்ட்டி லிங் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் உள்ளன. இதன் 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், நம் ஊர் சாலைகளுக்குப் பெரிய வரம்.

தி ஒன்? - போர்ஸ் ஒன் SX

இன்ஜின்

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட 2.2 லிட்டர் காமன் ரெயில் பிஎஸ்-4 டீசல் இன்ஜின் இதில் இருக்கிறது.VGT கொண்ட இந்த இன்ஜின், 141 bhp சக்தியும் 32.6 kgm டார்க்கும் அளிக்கிறது. டர்போ லேக் இருப்பதை உணரவே முடியவில்லை. 1,400 ஆர்பிஎம்-ல் ஆரம்பிக்கும் டார்க் வெளிப்பாடு, ஒரே சீராக அதிக ஆர்பிஎம் வரை வெளிப்படுகிறது. இன்ஜின் ரொம்ப ஸ்மூத் என்று சொல்ல முடியாது. ஆனால், சீரான‌ பவர் டெலிவரி அளிக்கிறது. மைலேஜ் உத்தேசமாக, லிட்டருக்கு 11 கி.மீ கிடைக்கும்.

இன்ஜின் அளிக்கும் சக்தியை அனுபவிக்க முடியாமல் கெடுப்பது கிளட்ச்சும், கியர்பாக்ஸும்தான். கிளட்ச் ரொம்பவே டைட்டாக இருக்கிறது. மெர்சிடீஸ் பென்ஸ் G-32 கியர்பாக்ஸ், உண்மையில் ஜெர்மன் தரத்தைச் சேர்ந்ததா எனச் சந்தேகிக்க வைக்கிறது. மேலும், டைட்டாக இருக்கும் கிளட்ச்சை மிதித்து கியரைச் சரியாக மாற்ற முடியவில்லை. மிகச் சரியாக, கியர் லீவரைத் தள்ளிவைக்க வேண்டும். இல்லையெனில், கியரிலிருந்து நழுவி நியூட்ரலில் விழுகிறது. டிராஃபிக் நெரிசலில் கியர் மாற்றும்போது, இது கியரில் இருந்து விலகுவது மிகுந்த எரிச்சலைத் தருகிறது. ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவியின் மிகப் பெரிய மைனஸ், இந்த கியர் பாக்ஸ்தான்.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

ஓட்டுதல் மற்றும் கையாளுமையை டியூன் செய்துகொடுத்தது, பிரிட்டனில் உள்ள புகழ் பெற்ற லோட்டஸ் இன்ஜினீயரிங் நிறுவனம். இது டியூன் செய்த இன்னொரு இந்திய கார், டாடா ஆரியா. ஆரியாவின் ஓட்டுதல் தரமும் கையாளுமையும் அவ்வளவு சிறப்பாக இருக்கும். அதே எதிர்பார்ப்புடன் இருக்கும் நம்மை ஃபோர்ஸ் ஒன் அதிகம் ஏமாற்றவில்லை. ஆனால், டாடா ஆரியா போலச் சிறப்பாக இல்லை. சஸ்பென்ஷன் சற்று சாஃப்ட்டாக இருக்கிறது. நெடுஞ்சாலையில் ஓட்டும்போது மெல்லிய குலுங்கலுடன் செல்கிறது ஃபோர்ஸ் ஒன். வேகமாகச் செல்லும்போது, சாலையில் உள்ள மிகச் சிறிய பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, காரின் பாடியில் இருந்து சத்தம் வருகிறது.

தி ஒன்? - போர்ஸ் ஒன் SX

மோசமான சாலையில் ஓட்டும்போதுதான் இதன் இன்னொரு முகம் வெளிப்பட்டது. மேடு பள்ளங்களுக்கும் காருக்கும் நடுவே, பெரிய மெத்தையை வைத்ததுபோல காருக்குள் எந்த அதிர்வையும் குலுங்கலையும் கடத்தவில்லை. ஆனால், பெரிய பள்ளங்களில் மெதுவாக இறங்கும்போது, முன்பக்க சஸ்பென்ஷனில் இருந்து சத்தம் வருகிறது.

காரின் ஸ்டீயரிங், எல்லா வேகத்திலும் ஒரே எடையைக் கொண்டிருந்ததுபோல இருக்கிறது. அப்போலோ ஹாக் டயர்கள் காருக்கு நல்ல லுக்கைத் தருவதுடன், சிறந்த க்ரிப்பைத் தருகின்றன. ஆனால், சஸ்பென்ஷன் செட்-அப் காரணமாக, காரின் க்ரிப்பை உணருவது சிரமமாக உள்ளது. பாடி ரோல் குறைந்த அளவே இருக்கிறது. ரியர் வீல் டிரைவ் கார் என்பதால், மிதமான வேகங்களில் கார் எந்த அண்டர்ஸ்டீயரிங்கும் இல்லாமல் திரும்புகிறது. ஓட்டுதல் மற்றும் கையாளுமையில், இந்த கார் மைனஸ் மார்க் வாங்கும் இடம் பிரேக். பிரேக் பெடல் எந்தவிதமான ஃபீட்பேக்கும் தருவது இல்லை. அதனால், சில சமயங்களில் தேவைக்கு அதிகமான பிரேக்கும் அல்லது தேவைக்கும் குறைவான பிரேக்கும் தந்துவிடுகிறோம்.

விலை

ஃபோர்ஸ் ஒன் எஸ்எக்ஸ் வேரியன்ட்டின் சென்னை ஆன்ரோடு விலை 14.59 லட்சம். இது, அதிகம் என்றும் சொல்ல முடியாது. குறைவு என்றும் சொல்ல முடியாது. டூ டின் ஆடியோ சிஸ்டம், ப்ளூ-டூத் வசதி, ஸ்டீயரிங் ஆடியோ கன்ட்ரோல், ஏபிஎஸ், இபிடி, ரிமோட் கீ, ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார், க்ரூஸ் கன்ட்ரோல், லெதர் சீட்ஸ் போன்ற வசதிகள் கொண்டது ஃபோர்ஸ் ஒன் எஸ்எக்ஸ்.

தி ஒன்? - போர்ஸ் ஒன் SX

 ஃபோர்ஸ் மோட்டார்ஸின் சவாலான முயற்சி. எந்த ஒரு காரையும், இந்தியாவில் உடனே  வெற்றி பெற வைக்க முடியாது. நல்ல காராக இருப்பினும் டீலர்ஷிப், சர்வீஸ் என பல விஷயங்கள் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. தமிழகத்தில் ஃபோர்ஸ் ஒன் காருக்கு சென்னை மற்றும் கோவையில் மட்டுமே டீலர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு குறை.

'குடும்பத்தில் ஆறு பேர். டிரைவர் வைத்துத்தான் காரைப் பயன்படுத்துவோம்’ என்பவர்களுக்கு ஃபோர்ஸ் ஒன் நல்ல சாய்ஸ். இட வசதி, சிறந்த டிரைவிங் பொசிஷன் என சில நல்ல அம்சங்கள் இருந்தாலும், அடிப்படை அம்சங்களான ஃபிட் அண்டு ஃபினிஷ், கியர்பாக்ஸ் மற்றும் பிரேக் ஆகியவை இன்னும் நன்றாக இருந்திருந்தால்... போர்ஸ் ஒன் ஹிட்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

தி ஒன்? - போர்ஸ் ஒன் SX