கார்ஸ்
Published:Updated:

கவாஸாகி நின்ஜா 300 Vs கேடிஎம் டியூக் 390

பெர்ஃபாமெர் யார்?

 ##~##

ந்தியாவின் மினி பெர்ஃபாமென்ஸ் பைக் மார்க்கெட்டில் மோதும் இரண்டு பைக்குகளும், பஜாஜ் நிறுவனத்தின் பைக்குகள் என்பது மட்டுமே ஒரே ஒற்றுமை. ஆனால், இரண்டுமே வெவ்வேறு கேரக்டர்கள் கொண்ட அதிரடியான பைக்குகள். மினி சூப்பர் பைக்கான கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் பெர்ஃபாமென்ஸுக்கு ஈடுகொடுக்குமா நேக்கட் பைக்கான கேடிஎம் 390? 

கையில் 3-4 லட்சம் ரூபாய் இருக்கிறது. அதிரடியான சூப்பர் பெர்ஃபாமென்ஸ் பைக் வேண்டும் என்பவர்களுக்கு, இந்தியாவில் கடந்த ஆண்டு வரை பெரிதாக சாய்ஸ் எதுவும் இல்லை. இதைச் சரியாகக் கணித்த பஜாஜ் நிறுவனம், நின்ஜா 300 பைக்கை ஒரு பக்கமும், கேடிஎம் 390 பைக்கை அதன் எதிர் திசையிலும் நிறுத்தியிருக்கிறது.

கவாஸாகி நின்ஜா 300 Vs கேடிஎம் டியூக் 390

டிசைன்

ஃபுல்ஃபேரிங், இரட்டை ஹெட்லைட்ஸ், குனிந்து ஓட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ரைடிங் பொசிஷன் என ரியல் ரேஸிங் பைக் போல அசத்துகிறது கவாஸாகி நின்ஜா 300. எந்த திசையில் இருந்து பார்த்தாலும் பிரம்மாண்டமாகத் தெரிவது நின்ஜா 300 பைக்கின் ஸ்பெஷல். நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான கேடிஎம் 390 முன்பக்க 'பிகினி’ டிசைன், ஒற்றை ஹெட்லைட், நிமிர்ந்து ஓட்டும் ரைடிங் பொசிஷன் என தினந்தோறும் நகரச் சாலைகளில் பயன்படுத்தவதற்கு ஏற்ற பைக்காக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. முன் பக்க இண்டிகேட்டர் விளக்குகள், முன் பக்க ஃபேரிங்கின் கீழ் பகுதியில் வைக்கப்பட்டிருப்பது, டிசைன் ஸ்பெஷல். ஹேண்டில்பாருக்குக் கவசம் கொடுத்திருப்பது கேடிஎம் 390 ஸ்பெஷல்.

நின்ஜாவின் அகலமான வைஸர், வேகமாகச் செல்லும்போது ஓட்டுனரின் முகத்தில் காற்று வேகமாக அறைவதைத் தடுக்கும். அனலாக், டிஜிட்டல் என இரண்டு மீட்டர்களுமே உண்டு. எந்த ஆர்பிஎம்-ல் பயணிக்கிறோம் என்பதைக் காட்டும் அனலாக் டேக்கோ மீட்டரோடு, ஸ்பீடோ, ஓடோ மற்றும் 2 ட்ரிப் மீட்டர்கள் டிஜிட்டல் டயலுக்குள் இடம் பிடித்திருக்கின்றன. ஃப்யூல் இண்டிகேட்டர், நேரத்தைக் காட்டும் கடிகாரம் மற்றும் பைக் எவ்வளவு மைலேஜ் தருகிறது என்பதைக் காட்டும் மைலேஜ் இண்டிகேட்டரும் இந்த டிஜிட்டல் மீட்டரில் இடம் பிடித்திருக்கின்றன.

கவாஸாகி நின்ஜா 300 Vs கேடிஎம் டியூக் 390

இன்ஜின்

ஸ்டைலைப் பார்த்து முடிவு செய்வதைவிட, இந்த செக்மென்ட்டில் பெர்ஃபாமென்ஸ்தான் முக்கிய அளவுகோல். இன்ஜினிலும் இரண்டு பைக்குகளுமே ஒன்றுக்கு ஒன்று எதிராக முரண்பட்டிருக்கின்றன. நின்ஜா 300 பைக்கில் 296 சிசி பேரலல் ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்க, ட்யூக்கில் 373.3 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு பைக்குகளுமே லிக்விட் கூல்டு, ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தில் இயங்குகின்றன. இரண்டு பைக்குகளில், கேடிஎம் ட்யூக் பைக்கின் இன்ஜினே அதிக சக்தியை வெளிப்படுத்துகிறது. அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்-ல் 43.5 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது ட்யூக். இதன் அதிகபட்ச டார்க் 7,000 ஆர்பிஎம்-ல் 3.57 kgm. நின்ஜா 300 அதிகபட்சமாக 11,000 ஆர்பிஎம்-ல் 38.5 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. அதிகபட்ச டார்க் 10,000 ஆர்பிஎம்-ல் 2.8 kgm.

பெர்ஃபாமென்ஸ்

கேடிஎம், கவாஸாகி இரண்டு பைக்குகளிலுமே 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. நகருக்குள் ஓட்டுவதற்கு ஏற்ற பைக், டியூக் 390. வேகம் போகப் போகத்தான் நின்ஜாவின் பெர்ஃபாமென்ஸ் வெளிப்பட ஆரம்பிக்கிறது.

கவாஸாகி நின்ஜா 300 Vs கேடிஎம் டியூக் 390

0 - 60 கி.மீ வேகத்தை கேடிஎம் ட்யூக் 2.47 விநாடிகளில் கடந்துவிடுகிறது. இதே வேகத்தை நின்ஜா சில மில்லி செகண்டுகள் அதிகமாக 2.89 விநாடிகளில் கடக்கிறது. 0 - 100 கி.மீ வேகத்தில் நின்ஜாவைவிட 1 விநாடி வேகமாகவே இருக்கிறது டியூக். ஆனால், வேகம் போகப் போக நின்ஜாவின் பெர்ஃபாமென்ஸ் கூடுவதால் 0-150 கி.மீ வேகத்தில், டியூக்கின் வேகத்துக்குக் கிட்டத்தட்ட இணையாகவே இருக்கிறது. கேடிஎம் டியூக் அதிகபட்ச வேகமாக மணிக்கு 162 கி.மீ வேகத்தைத் தொட, நின்ஜா 300 அதைவிட கொஞ்சம் அதிகமாக மணிக்கு 168 கி.மீ வேகத்தை எட்டுகிறது.

பிரேக்

இவ்வளவு வேகத்தில் சென்றாலும், பிரேக் விஷயத்தில் இரு பைக்குகளுமே ஏமாற்றவில்லை. 100 கி.மீ வேகத்தில் இருந்து முழுவதுமாக நிற்க கேடிஎம் பைக் எடுத்துக்கொள்ளும் தூரம் 47.59 மீட்டர். நின்ஜா 300 எடுத்துக்கொள்வதோ 50.28 மீட்டர். ஆனால், மணிக்கு 60 கி.மீ வேகத்தில் இருந்து நிற்கும்போது, 16.06 மீட்டரில் முதலில் நிற்பது கவாஸாகிதான். கேடிஎம் 16.56 மீட்டர்கள் எடுத்துக்கொள்கிறது.

விலை

பெர்ஃபாமென்ஸ் பைக்குகளுக்கான முக்கியத் தேவைகளான ஆக்ஸிலரேஷன், டாப் ஸ்பீடு மற்றும் பிரேக்கிங் ஆகியவற்றில் ஒற்றுமையாகக் காணப்பட்ட இரண்டு பைக்குகளும், விலை விஷயத்தில் பெரிய வித்தியாசத்தைக் காட்டுகின்றன. கேடிஎம் 390 டியூக்கின் சென்னை ஆன் ரோடு விலை ரூ. 2.04,135 லட்சம். ஆனால், கவாஸாகி நின்ஜா 300 ஆன் ரோடு விலை 3,93,560 ரூபாய். ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் முக்கிய விஷயமான பெர்ஃபாமென்ஸ், பிரேக்கிங் என இரண்டு விஷயங்களிலும் ஒரே போல இருந்தும், இவ்வளவு பெரிய விலை வித்தியாசம் இருந்தால்... பெரும்பாலானோரின் சாய்ஸ் எதுவாக இருக்கும் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். கொடுக்கும் காசுக்கு கேடிஎம் 390-பைக்தான் சரியான சாய்ஸ்!

கவாஸாகி நின்ஜா 300 Vs கேடிஎம் டியூக் 390
கவாஸாகி நின்ஜா 300 Vs கேடிஎம் டியூக் 390