கார்ஸ்
Published:Updated:

வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே..

முதலில் நல்ல செய்தி: கடந்த ஒன்பது மாதங்களாக கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் விற்பனை, கடந்த ஆகஸ்ட் மாதம் மேல்நோக்கி நகர்ந்தது. அதுவும் கொஞ்சநஞ்ச முன்னேற்றம் அல்ல. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டைவிட, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத கார் விற்பனை, 15.37 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேபோல, டூவீலர் விற்பனையிலும் ஏழு சதவிகிதம் முன்னேற்றம். 'இது மாயை’ என்று ஒரு சிலர் எச்சரித்தாலும் தொடர்ந்து சரிந்துவந்த ரூபாயின் மதிப்பு, திடீரென சமாளித்துக்கொண்டு மீண்டும் பலம் பெற்றது. இன்னொருபுறம், சரிந்துகொண்டுவந்த தொழில்துறையின் உற்பத்தியும் மேல்நோக்கி உயர்ந்தது. இதெல்லாம், 'ஆல் இஸ் வெல்’ என்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இதழில் இடம்பெற்றிருக்கும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 டெஸ்ட் டிரைவுக்காக ஜெய்ப்பூர் சென்றபோதும், ஸ்கோடா ஆக்டேவியாவை ஓட்டிப் பார்க்க சிம்லா சென்றபோதும், நிஸான் டெரானோவை டெஸ்ட் செய்ய உதய்பூர் சென்றபோதும்... அங்கு சந்தித்த இந்தத் துறையின் ஜாம்பவான்கள் அனைவரும் இதேபோன்ற உற்சாகமான மனநிலையில் இருந்ததை உணர முடிந்தது.

அடுத்ததும் இனிப்பான செய்திதான். சென்ற இதழில் புதிதாக ஆரம்பித்த 'ஷோரூம் ரெய்டு’ படித்துவிட்டு, வாசகர்களும் வாடிக்கையாளர்களும் நமக்கு போன் செய்து, 'கார், பைக் பற்றி நல்லது கெட்டது எல்லாத்தையும் சொல்ற நீங்கதான், ஷோரூம்கள் பற்றிய நல்லது கெட்டதையும் சொல்லணும். இந்தப் பகுதியைத் தொடர்ந்து செய்யுங்க!’ என்று நமக்குக் கட்டளையே இட்டிருக்கிறார்கள்.

புகைப்படப் பிரியர்களின் ஆர்வப் பசிக்கு, 'ரெடி.. ஸ்டார்ட், க்ளிக்’ பகுதி நல்ல தீனியாக அமைந்திருப்பது நமக்கு வரும் புகைப்படங்களின் எண்ணிக்கையில் இருந்தே தெரிகிறது. வாசகர்கள் ஆட்டோமொபைல் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து எடுத்து அனுப்ப வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

கடந்த இதழில் நாம் கொடுத்திருந்த மெகா 'ப்ளோ-அப்’ உங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. அதேசமயம், 'ஏன், டூ வீலர் கொடுத்திருக்கக் கூடாதா?’ என்று பல பைக் பிரியர்கள் ஏக்கத்துடன் கேட்டார்கள். அதனால், அவர்களின் மகிழ்ச்சிக்காக, இந்த இதழுடன் இளைஞர்களின் இதயத் துடிப்பான 'டுகாட்டி டயாவெல் கார்பன்’ என்ற 30 லட்ச ரூபாய் விலைகொண்ட 1,200 சிசி பைக்கின் ப்ளோ-அப் கொடுத்திருக்கிறோம்.

என்றும் உங்களுக்காக

ஆசிரியர்