கார்ஸ்
Published:Updated:

ப்ராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோ

ப்ராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோ

ப்ராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோ

கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது ஃப்ராங்ஃபர்ட் மோட்டார் ஷோ. ஐரோப்பிய ஆட்டோமொபைல் சந்தைக்கு, இம்முறை நடந்த மோட்டார் ஷோ மிக முக்கியமானது. காரணம், ஃப்ராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகமான கார்களில், முக்கியமான கார்கள் அனைத்தும் ஹைபிரிட், ப்ளக்-இன் ஹைபிரிட், EV என மாற்று எரிபொருளால் இயங்கக் கூடியவை.

ஆடி ஸ்போர்ட் க்வாட்ரோ கான்செப்ட்

ப்ராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோ

ஆடி நிறுவனம் 1980-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய 'ஊர் க்வாட்ரோ’ (Ur-Quattro) வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதைக் கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டு இருக்கும் கார்தான் ஸ்போர்ட் க்வாட்ரோ கான்செப்ட். 80-களில் நடந்த 'க்ரூப் பி’  ராலிகளில் 'ஊர் க்வாட்ரோ’ காரின் ஸ்போர்ட்ஸ் மாடல்தான் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது. பிரபல ஆல்-வீல் டிரைவ் தொழில்நுட்பமான 'குவாட்ரோ’ பயன்படுத்தப்பட்டு முதலில் வெளிவந்த கார் 'ஊர் க்வாட்ரோ. தற்போது வெளிவந்திருக்கும் ஸ்போர்ட்ஸ் க்வாட்ரோ கான்செப்டில் 4 லிட்டர் ட்வின்-டர்போ வி8 இன்ஜினும், 110 kv சக்திகொண்ட மின் மோட்டாரும் உள்ளது. இவை இரண்டும் இணைந்து மொத்தமாக 690.41 bhp சக்தியும், 81.55 kgm டார்க்கையும் அளிக்கிறது.

போர்ஷே 918 ஸ்பைடர்

ப்ராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோ

'மேக்ஸிமம் பெர்ஃபாமென்ஸ், மினிமம் கன்சம்ப்ஷன்’ இந்த கோட்பாட்டைப் பின்பற்றித்தான் அனைத்து ஸ்போர்ட்ஸ் கார்களையும் உருவாக்குகிறது போர்ஷே. உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர் ஸ்போர்ட்ஸ் காரான போர்ஷே 911, 50 ஆண்டுகள் கடந்து இன்னும் வெற்றிகரமாக இருக்க இதுதான் காரணம். இந்த தாரக மந்திரத்தைப் பின்பற்றி உருவாக்கப்பட்டதுதான் 918 ஸ்பைடர். போர்ஷேவின் லே-மான்ஸ் காரான LMP1 ரேஸ் காரை அடிப்படையாகக்கொண்டதுதான் 918. இதில் 600 bhp சக்தியை அளிக்கும் 4.6 லிட்டர் வி8 இன்ஜினும், 154 bhp மற்றும் 127 bhp சக்தியை அளிக்கும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களும் உள்ளன. இவை மொத்தமாக 875 bhp சக்தியை அளிக்கிறது. இதனால், 0-100 கி.மீ வேகத்தை வெறும் 2.2 விநாடிகளில் அடைந்துவிடுகிறது 918 ஸ்பைடர்.

ஜாகுவார் C-X17 ஸ்போர்ட்ஸ் க்ராஸ்ஓவர் கான்செப்ட்

ஜாகுவார் நிறுவனத்தின் புதிய C-X17 ஸ்போர்ட்ஸ் க்ராஸ்ஓவர் கான்செப்ட் கார், அட்வான்ஸ்டு அலுமினியம் மோனோகாக் பாடியைக் கொண்டது. இந்தக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட முதல் கான்செப்ட் கார் இதுதான். ஜாகுவார் நிறுவனத்தின் சொந்தத் தொழில்நுட்பமான இதன்படிதான், இனி அனைத்து ஜாகுவார் கார்களும் உருவாக்கப்படும். 2015-ம் ஆண்டு ஜாகுவார் நிறுவனம் கொண்டுவரயிருக்கும் மிட்-சைஸ் பிரீமியம் செடான் கார்தான் இந்த ஆல்-அலுமினியம் பாடியில் விற்பனைக்கு வர இருக்கும் முதல் கார்.

ப்ராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோ

2014 நிஸான் எக்ஸ்-ட்ரெயில்

நிஸான் நிறுவனத்தின் பிரபல எஸ்யூவியான எக்ஸ்-ட்ரெயில் காரின் 2014-ம் ஆண்டு மாடல், ஃப்ராங்க்ஃபர்ட்டில் அறிமுகமானது. புத்தம் புது வடிவமைப்புடன், பார்ப்பதற்கு ஸ்டைலாக இருக்கிறது எக்ஸ்-ட்ரெயில். அமெரிக்காவில் 'ரோக்’ என அழைக்கப்படும் இந்த கார், ரெனோ - நிஸான் இணைந்து உருவாக்கிய புதிய Common Module Family பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு ஜூலை புதிய எக்ஸ்-ட்ரெயில் விற்பனைக்கு வர இருக்கிறது. நம் நாட்டில் இது விற்பனைக்கு வருமா என்பது குறித்து தகவல்கள் எதுவும் இல்லை.

பிஎம்டபிள்யூ ஐ8

ப்ராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோ

'ஸ்போர்ட்ஸ் கார் ஆஃப் தி ஃப்யூச்சர்’ என பிஎம்டபிள்யூ நிறுவனம் பெருமையாக அழைக்கும் ஐ8 ஸ்போர்ட்ஸ் ப்ளக்-இன் ஹைபிரிட் கார், ஃப்ராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகமானது. 'கார்பன் ஃபைபர் ரீ-இன்ஃபோர்ஸ்டு பிளாஸ்டிக்’ மற்றும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை, வெறும் 1,490 கிலோதான். இதில் பின் சக்கரங்களை இயக்கும் 228 bhp சக்திகொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும், முன் சக்கரங்களை இயக்கும் 129 bhp சக்தியை அளிக்கும் எலெக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது. காரின் நடுவே லித்தியம்-அயான் பேட்டரியை அமைத்துள்ளது பிஎம்டபிள்யூ.

ப்ராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோ