கார்ஸ்
Published:Updated:

டெஸ்ட் டிரைவ் - நிஸான் டெரானோ

டெஸ்ட் டிரைவ் - நிஸான் டெரானோ

 ##~##

ந்தியாவில் ரீ-பேட்ஜிங் எனும் புதிய கான்செப்ட்டை அறிமுகப்படுத்திய நிறுவனம் ரெனோ - நிஸான். நிஸானின் மைக்ரா, சன்னி கார்களை ரெனோ நிறுவனம் பல்ஸ், ஸ்காலா என ரீ-பேட்ஜிங் செய்து வெளியிட்டது. இப்போது ரெனோவின் வெற்றிகரமான காரான டஸ்ட்டரை, 'டெரானோ’ எனும் பெயரில் ரீ-பேட்ஜ் செய்து வெளியிடுகிறது நிஸான். ரெனோ - நிஸான் கூட்டணியில் ரீ-பேட்ஜ் செய்து வெளிவரும் கடைசி கார் இதுவாகவே இருக்கலாம். 

நிஸானின் காப்பிகேட்டாக வெளிவந்த ரெனோவின் பல்ஸ், ஸ்காலா ஆகியவை பெரிதாக வெற்றிபெறாத நிலையில், டஸ்ட்டரின் காப்பியான டெரானோ மட்டும் வெற்றி பெறுமா? டிசைனை மட்டும் மாற்றிவிட்டால், அதே இன்ஜின்கொண்ட காரை அதிக விலை கொடுத்து மக்கள் வாங்குவார்களா? பல கேள்விகளுடனேயே டெரானோவை உதய்பூரில் டெஸ்ட் செய்தேன்.

டெஸ்ட் டிரைவ் - நிஸான் டெரானோ

டிசைன்

டெரானோவை முன் பக்கத்திலிருந்து பார்க்கும் யாரும், இதை டஸ்ட்டரின் காப்பி என்று சொல்ல முடியாத அளவுக்கு, புத்தம் புதிய காராகவே டிசைன் செய்திருக்கிறது நிஸானின் டிசைன் டீம். அகலம் மற்றும் வீல்பேஸில் டஸ்ட்டருக்கும், டெரானோவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், நீளத்தில் டஸ்ட்டரைவிட 16 மிமீ அதிகமாகவும், உயரத்தில் டஸ்ட்டரைவிட 14 மிமீ குறைவாகவும் இருக்கிறது டெரானோ. முன் பக்க டிசைனைப் பொறுத்தவரை டஸ்ட்டரைவிட டெரானோ கம்பீரமாக இருப்பதோடு, ஒரு முழுமையான எஸ்யூவி என்ற எண்ணத்தைத் தருகிறது. அகலமான பம்பரும், பெரிய ஹெட்லைட்டுகளும் காரின் பிரமாண்டத்தைக் கூட்டுகின்றன. பின் பக்க டெயில் லைட் டிசைனும் டஸ்ட்டரில் இருந்து மாறுபடுவதால், பின் பக்கமும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கிறது. ஆனால், பக்கவாட்டிலிருந்து பார்க்கும்போது டெரானோ, டஸ்ட்டரை நினைவுப்படுத்திவிடுகிறது. ஸ்டைலான அலாய் வீலும் டெரானோவின் கூடுதல் கவர்ச்சிக்கு முக்கியக் காரணம். ஆனால், இது விலை உயர்ந்த வேரியன்ட்டில் மட்டுமே இருக்கும்.

உள்ளே

காருக்கு உள்ளே சின்னச் சின்ன மாற்றங்கள் இருந்தாலும் சட்டெனப் பார்க்கும்போது, டஸ்ட்டராகவே இருக்கிறது டெரானோ. புதிய ஆடியோ சிஸ்டம் மற்றும் பட்டன்கள், டெரானோவின் சென்டர் கன்ஸோலைப் புதிதாகக் காட்டுகின்றன. டஸ்ட்டரில் வட்ட வடிவில் இருந்த சென்டர் கன்ஸோல் ஏ.சி வென்ட்டுகள், இதில் செவ்வக வடிவத்துக்கு மாறியிருப்பதோடு, சென்டர் கன்ஸோலுக்கு மேல் சின்னச் சின்னப் பொருட்கள் வைக்க, மூடியுடன் கூடிய இட வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டில் ஆங்காங்கே க்ரோம் மற்றும் சில்வர் ஃபினிஷ், புதிய ஸ்டீயரிங் வீல் என மாற்றங்கள் தெரிகின்றன.

டெஸ்ட் டிரைவ் - நிஸான் டெரானோ

காருக்குள் போவதும் வெளியே வருவதும் மிகவும் சுலபம். ஆனால், டஸ்ட்டரைவிட கூடுதல் விலைக்கு வரப்போகும் இந்த காரில், சில முக்கியமான விஷயங்களைச் சேர்க்காமல் கோட்டைவிட்டுவிட்டது நிஸான். டஸ்ட்டரில் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லாமல், ஆடியோ கன்ட்ரோல் ஸ்டீயரிங் வீலின் பின் பக்கத்தில் இருக்கும். அந்த ஏடாகூடம் இதில் இல்லை என்று ஆறுதலடைந்தால், டெரானோவின் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோலே இல்லாமல் செய்துவிட்டது நிஸான்.

டஸ்ட்டரில் பெரிய குறையாகச் சொல்லப்பட்டதே, காருக்குள் தண்ணீர் பாட்டில், காபி கப் போன்ற பொருட்கள் வைக்க இடம் இல்லை என்பதுதான். இந்தக் குறையைக்கூட டெரானோவில் சரிசெய்யவில்லை. காரை ஓட்டுபவர் போனை வைக்கக்கூட கேபினில் சரியான இடம் இல்லை. சைடு வியூ கண்ணாடிகளை உள்ளே இருந்தே அட்ஜஸ்ட் செய்யும் கன்ட்ரோல், டஸ்ட்டரைப் போலவே டெரானோவிலும் ஹேண்ட் பிரேக்குக்கு அடியில் ஒளித்து வைத்திருக்கிறது நிஸான். இது பயன்படுத்துவதற்கு வசதியாக இல்லை. டஸ்ட்டரைப் போலவே இதிலும் பார்க்கிங் சென்ஸார் மட்டுமே. கேமரா இல்லை. அதேபோல், பார்க்கிங் சென்ஸார் சுவிட்ச்சில் லைட் இருந்தால் அது 'ஆஃப்’ ஆகி இருக்கிறது; விளக்கு ஒளிரவில்லை என்றால், 'ஆன்’ செய்யப்பட்டிருக்கிறது என்கிற தலைகீழ் ஃபார்முலா, டஸ்ட்டரைப் போலவே டெரானோவிலும் தொடர்கிறது. மேலும், பின் பக்க பவர் விண்டோ பட்டன்கள், கதவுக் கைப்பிடிக்குக் கீழே வைக்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவர் சீட் மிகவும் சொகுசாக இருப்பதோடு, கம்பீரமான டிரைவிங் பொசிஷனையும் கொண்டிருக்கிறது. முழு சாலையும் தெளிவாகத் தெரிவதோடு, கன்ட்ரோல்கள் கைகளுக்கு எட்டும் தூரத்தில் கச்சிதமாக இருக்கிறது. டிரைவர் சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதியும் இருக்கிறது. முன் பக்கம் கால்களை நீட்டி மடக்கி வசதியாக உட்கார அதிக இட வசதி உண்டு. பின் பக்கத்திலும் மூன்று பேர் உட்கார முடியும். டிக்கியில் 475 லிட்டர் இடம் இருப்பதால், பெரிய பெரிய சூட்கேஸ்களை வைக்கலாம்.

டெஸ்ட் டிரைவ் - நிஸான் டெரானோ

இன்ஜின்

இன்ஜின், கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன் என காரின் பேஸிக் இன்ஜினீயரிங்கில் கை வைக்கவில்லை நிஸான். உண்மையிலேயே இங்கே கை வைக்க வேண்டிய தேவையும் இல்லை. டஸ்ட்டரைப் போலவே 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வருகிறது டெரானோ. இதிலும் டீசல் மாடலில் 85 bhp மற்றும் 110 bhp என இரண்டு பவர் ஆப்ஷன்கள் கொண்ட வேரியன்ட்டுகள் உள்ளன. நான் டெஸ்ட் செய்தது 110 bhp டீசல் மாடல். 1462 சிசி திறன்கொண்ட இந்த இன்ஜின், 25.3kgm டார்க்கை அதிகபட்சமாக 2,250 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்துகிறது.

டஸ்ட்டரைப் போலவே இதிலும் டர்போ லேக் உண்டு. கார் 2,000 ஆர்பிஎம் தாண்டும் வரை ஆக்ஸிலரேட்டரிலும், கிளட்ச்சிலும் கால் வைத்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும். கிளட்ச்சும் கொஞ்சம் கடினமாக இருப்பதால், சீக்கிரத்தில் சோர்வாகிவிடுகிறது. ஆனால், 2,000 ஆர்பிஎம் முதல் 4,000 ஆர்பிஎம் வரை ஓட்டுவதற்கு சிறப்பாக இருக்கிறது நிஸான் டெரானோ. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்துவதற்கு எளிதாகவே இருக்கிறது. 0 - 100 கி.மீ வேகத்தை 12 - 13 விநாடிகளில் கடந்துவிடுகிறது டெரானோ. மிட் ரேஞ்சில் மட்டுமே பவர்ஃபுல்லாக இருக்கும் இந்த கார், அதிக மைலேஜ் தருவதற்காக ட்யூன் செய்யப்பட்டிருப்பது புரிகிறது.

டெரானோவில் அதிகபட்சம் 180 கி.மீ வேகம் வரை செல்லலாம் என்கிறது நிஸான். ஆனால், உதய்ப்பூர் சாலைகளில் ஆடு, மாடு, ஒட்டகம் முதல் மனிதர்கள் வரை எந்த நேரமும் குறுக்கே வரும் சூழல் இருந்ததால், அதிகபட்சம் 140 கி.மீ வேகத்தைத் தாண்டவில்லை.  

டெஸ்ட் டிரைவ் - நிஸான் டெரானோ

கையாளுமை

டெரானோவின் செல்லிங் பாயின்ட்டுகளில் முக்கியமானது, ஓட்டுதல் தரம். மேடு பள்ளம், குண்டும் குழியுமான சாலைகளை மிகவும் ஈஸியாக சமன் செய்கிறது டெரானோவின் சஸ்பென்ஷன். இதனால், எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணமே எழவில்லை. டெரானோவில் எம்ஆர்எஃப், அப்பல்லோ என இரண்டு நிறுவனத்தின் டயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. நான் ஓட்டிய காரில் இருந்தது அப்பல்லோ டயர்கள். ஸ்டீயரிங் செம ரெஸ்பான்ஸிவாக இருப்பதால், கையாளுமை சூப்பர். ரோடு கிரிப்பும் ஓகே!

மைலேஜ்

110 bhp சக்திகொண்ட டெரானோ, லிட்டருக்கு 19.01 கி.மீ மைலேஜ் தரும் என்கிறது நிஸான். இதை முழுமையாக டெஸ்ட் செய்த பிறகுதான் உறுதி செய்ய முடியும்.

முதல் தீர்ப்பு

ரெனோ டஸ்ட்டரைவிட நிஸானின் டெரானோ பார்ப்பதற்கு பிரமாண்டமாகவும், முழுமையான எஸ்யூவி கார் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது. பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், ஓட்டுதல் தரம் என எதிலும் எந்தக் குறையும் பெரிதாகச் சொல்ல முடியாது. ஆனால், டெக்னிக்கல் விஷயங்களில் எந்த மாற்றமும் இல்லாத இந்த காரை, வெறும் ஸ்டைலுக்காக கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டுமா? டஸ்ட்டரில் குறையாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் எதையுமே நிஸான் கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்? டிசைனில் வேறுபடுத்திக் காட்டப் போராடியவர்கள், சில குறைகளையும் நிவர்த்தி செய்திருக்கலாமே?

டஸ்ட்டர் வாங்கலாமா, டெரானோ வாங்கலாமா எனக் குழப்பத்தில் இருப்பவர்கள், ஸ்டைலான எஸ்யூவி வேண்டும் என்றால் மட்டுமே... டெரானோவை வாங்கலாம்.

டெஸ்ட் டிரைவ் - நிஸான் டெரானோ