கார்ஸ்
Published:Updated:

மெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸ் Vs பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்

மெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸ் Vs பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்

 ##~##

மாருதி - ஹூண்டாய் போட்டி போடும் நம் நாட்டில், இன்னொரு பக்கம் பென்ஸும், பிஎம்டபிள்யூவும் போட்டி போடுகின்றன. பென்ஸின் ஏ- கிளாஸைத் தொடர்ந்து பிஎம்டபிள்யூ களம் இறக்கியிருக்கும் 1 சீரிஸ், இந்தப் போட்டியை மேலும் விறுவிறுப்பாக்கி இருக்கிறது. சொகுசு கார் மார்க்கெட்டில் துவக்க நிலையில் இருக்கும் இந்த இரண்டு கார்களும் மோதுவது, 30 லட்ச ரூபாய் மார்க்கெட்.

 இரண்டுமே ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் என்றாலும், இன்ஜின் தொழில்நுட்பத்தில் பென்ஸ், பிஎம்டபிள்யூ அத்துடன் ஆடி ஆகிய மூன்றுமே ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமான தொழில்நுட்பங்களையும் புதுமைகளையும் கொண்டவை. அந்த வகையில், இங்கே பென்ஸ் முன் வீல் டிரைவ் சிஸ்டத்தைக்கொண்டிருக்க... பிஎம்டபிள்யூ, ரியர் வீல் டிரைவ் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் வடிமைக்கப்பட்டு இருக்கிறது. முன் வீல் டிரைவ், பின் வீல் டிரைவ் என எதுவாக இருந்தாலும் அது, காரை ஓட்டுபவருக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாதது. ஆனாலும், உண்மையில் இந்த இன்ஜின் லே-அவுட்டில், பல சாதக பாதகங்கள் உண்டு. இதில், முதல் மிக முக்கியமான விஷயம், காரின் டிசைன்.

மெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸ் Vs பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்

டிசைன்

பிஎம்டபிள்யூவின் இன்ஜின், காரின் முன் பக்கம் இருந்தாலும் கொஞ்சம் பின் பக்கமாகத் தள்ளி அதாவது, மிட்-இன்ஜின் லே-அவுட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதனால், முன் பக்க பானெட் மிகவும் நீளமாக இருக்கிறது. பார்ப்பதற்கு எஸ்டேட் கார் போன்ற தோற்றத்துடன் இருக்கிறது பிஎம்டபிள்யூ 1 சீரிஸ். பானெட் நீண்டு விட்டதால், காருக்குள் இட வசதி மிகவும் சுருங்கிவிட்டது. முன் பக்கம் நீளமாகத் துவங்கி, பின்னால் சட்டென முடிந்துவிடுவது காரின் பிரம்மாண்டத்தைக் குறைக்கிறது.

ஸ்டைலில், ஏ-கிளாஸ் செம கிளாஸ். எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஏ-கிளாஸ் அழகாக இருக்கிறது. பிஎம்டபிள்யூ போல இங்கே மிட் இன்ஜின் லே-அவுட் இல்லை என்பதால், பானெட் சின்ன கார்களுக்கு உரிய டிசைனுடன் இருக்கிறது. அலாய் வீல் டிசைனும் கவர்ந்திழுக்கிறது.

உள்ளே

இரண்டு கார்களுமே சின்ன கார்கள்தான் என்பதால், காரின் உரிமையாளர்களே ஓட்டுவார்கள் என்பதுதான் கான்செப்ட். அதனால்தான் இரண்டு கார்களிலுமே முன் சீட்டில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். பிஎம்டபிள்யூ டிரைவர் சீட்டில் உட்கார்ந்தால், அனைத்து கன்ட்ரோல்களும் கைக்கு எட்டும் இடத்தில் வசதியாக இருக்கிறது. டிரைவர் சீட்டில் ஆட்டோமேட்டிக் அட்ஜஸ்ட்மென்ட் உண்டு என்பதால், உயரத்துக்கு ஏற்ற வகையில் இருக்கைகளை முன்னும் பின்னும், மேலும் கீழும் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும். முன் பக்க இருக்கைகள் சொகுசாகவும், டிரைவர் சீட்டில் விசிபிளிட்டி சிறப்பாகவும் இருக்கிறது. ஆனாலும், 1 சீரிஸின் உள்பக்கம் பிஎம்டபிள்யூ என்று சொல்லும் அளவுக்குத் தரமாக இல்லை.

மெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸ் Vs பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்

மாறாக, கொடுக்கும் 30 லட்ச ரூபாய்க்கு சொகுசான காரில் உட்கார்ந்துஇருக்கிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது பென்ஸ் ஏ-கிளாஸ். ஏ.சி வென்ட் வடிவ டிசைனே, காரின் உள்பக்க பிரம்மாண்டத்தைக் கூட்டுகிறது. முக்கிய மாற்றமாக, கியர் செலக்ட்டர் ஸ்டீரியங் வீலுக்குப் பின்னால் சென்றுவிட்டதால், முன்பக்க இருக்கைகளுக்கு நடுவே பொருட்கள் வைத்துக்கொள்ள அதிக இடம் இருக்கிறது. ஆனால், டேஷ்போர்டு உயரமாக இருப்பதோடு, சின்ன கண்ணாடிகளும் தடிமனான பில்லர்களும் காருக்குள் இட வசதி குறைவு என்பது போன்ற தோற்றத்தைத் தந்துவிடுகிறது. ஏ-கிளாஸ் டீசல் மாடலில், சன் ரூஃப் வசதி இல்லை.

சிறப்பம்சங்கள்

சன் ரூஃப் மட்டும்தான் இல்லை என்பது அல்ல. பிஎம்டபிள்யூ 1 சீரிஸுடன் ஒப்பிடும்போது, வசதிகள் மிகவும் குறைந்த காராகச் சுருங்கிவிடுகிறது ஏ-கிளாஸ். காருக்குள் 9 காற்றுப் பைகள், ப்ளூ-டூத், யூஎஸ்பி கனெக்ட்டிவிட்டி, பேடில் ஷிஃப்ட், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் ஆகியவைதான் பென்ஸில் இருக்கும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள். இவை அனைத்துமே இப்போது 10 - 12 லட்ச ரூபாய் கார்களில்கூட கிடைக்கிறது. லெதர் சீட் இல்லை; பார்க்கிங் சென்ஸார் இல்லை; டிரைவர் சீட்டைத் தவிர மற்ற இருக்கைகளுக்கு ஆட்டோமேட்டிக் சீட் அட்ஜஸ்ட் இல்லை என 30 லட்ச ரூபாய் காருக்கான பல சொகுசு வசதிகள் இல்லை. டிரைவர் தூங்கிவிட்டால், அலெர்ட் செய்யும் 'அட்டென்ஷன் அசிஸ்ட்’ வசதி இருக்கும் இந்த காரில் லெதர் சீட் இல்லை. மேலே சொன்ன பல சிறப்பம்சங்கள், டீசலைவிட அதிக விலைகொண்ட பெட்ரோல் ஏ-கிளாஸில் உண்டு. இதே பிஎம்டபிள்யூ பெட்ரோல் மாடலில், ஏ-கிளாஸில் இருக்கும் பல வசதிகள் இல்லை. பென்ஸ் பெட்ரோலுக்கும், பிஎம்டபிள்யூ டீசல் இன்ஜினுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை இதில் உணரலாம்.

மெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸ் Vs பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்
மெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸ் Vs பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்

8.8 இன்ச் மல்ட்டி மீடியா ஸ்கிரீன், சன் ரூஃப், ஸெனான் ஹெட்லைட்ஸ், ஆட்டோமேட்டிக் அட்ஜஸ்ட் கொண்ட முன் பக்க இருக்கைகள், பின் பக்க ஏ.சி வென்ட் எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்.

இட வசதி

இரண்டு கார்களிலும் நான்கு பேர்தான் வசதியாக உட்கார முடியும் என்றாலும், பென்ஸில் ஐந்து பேர் கொஞ்சம் அட்ஜட்ஸ் செய்து உட்காரலாம். ஆனால், இது பிஎம்டபிள்யூவில் முடியவே முடியாது. கியர்பாக்ஸ் டனல் பின் பக்கம் வரை நீள்வதால், பிஎம்டபிள்யூவின் பின் இருக்கையில் மூன்று பேர் உட்கார முடியாது. அப்படி மூன்றாவது நபர் உட்கார்ந்தால், அது அவருக்கு அளிக்கப்படும் தண்டனையாகவே இருக்கும்.

மெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸ் Vs பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்

டிக்கியைப் பொறுத்தவரை, அதிக இடம் இருந்தும் அதற்குள் ஸ்பேர் வீலை வைத்து காமெடி செய்துவிட்டது பென்ஸ். பிஎம்டபிள்யூவின் டிக்கி 360 லிட்டர் கொள்ளளவு கொண்டது என்பதால், பொருட்கள் வைக்க அதிக இடம் உண்டு. ஆனால், வழக்கம்போல பிஎம்டபிள்யூவில் ரன் ஃப்ளாட் டயர்கள் என்பதால், ஸ்பேர் வீல் கிடையாது. பஞ்சரானாலும் 50 - 100 கி.மீ தொடர்ந்து ஓட்ட முடியும் என்பதால், ஸ்பேர் வீல் தேவை இல்லை என்கிற பிஎம்டபிள்யூவின் வாதம் எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது.

இன்ஜின்

பிஎம்டபிள்யூ 1 சீரிஸில் இருப்பது 1995 சிசி, 4 சிலிண்டர், ட்வின் டர்போ டீசல் இன்ஜின். பென்ஸ் ஏ-கிளாஸில் இருப்பது சி, இ மற்றும் எம்-கிளாஸில் இருக்கும் அதே 2143 சிசி டீசல் இன்ஜின். ஆனால், சி மற்றும் இ கிளாஸ் கார்களில் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம்கொண்ட இந்த இன்ஜின், ஏ-கிளாஸில் முன் வீல் டிரைவ் சிஸ்டத்தைக் கொண்டிருக்கிறது.

பிஎம்டபிள்யூ 118டி டீசல் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்க... ஏ-கிளாஸ் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸைக் கொண்டிருக்கிறது.

பிஎம்டபிள்யூவில் ஈக்கோ ப்ரோ, கம்ஃபர்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் என நான்கு வகையான டிரைவிங் 'மோட்’கள் உள்ளன. ஒவ்வொரு டிரைவிங் மோட்-க்கு ஏற்ப திராட்டில் ரெஸ்பான்ஸும், கியர் ஷிஃப்ட் பாயின்ட்டும், ஸ்டீயரிங் வெயிட்டும் மாறுபடுகிறது. சின்ன இடத்துக்குள் பார்க்கிங் செய்ய வேண்டுமா?  கம்ஃபர்ட் மோடில் வைத்து விட்டால், ஸ்டீயரிங் மிகவும் லைட்டாக மாறி ஈஸியாக பார்க்கிங் செய்ய உதவும். காரை வேகமாக ஓட்ட வேண்டுமா? ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் மோடில் செம ஃபன் டிரைவிங் செய்யலாம். காரணம், இந்த மோட் கியர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகமாக இருக்கும் என்பதோடு, ஸ்டீயரிங்கின் உறுதியும் கூடும் என்பதால், ஆக்ஸிலரேஷனுக்கு ஏற்ப இன்ஜின் ரெஸ்பான்ஸ் கூடும்.

பென்ஸ் ஏ கிளாஸில் ஸ்போர்ட், மேனுவல், எக்கனாமி என மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளன. ஸ்போர்ட் மோட்-ல் வைத்துவிட்டால், கியர்களுக்கான இடைவெளி அதிகரித்து ஸ்போர்ட்டியான ஓட்டுதல் அனுபவத்தைத் தருகிறது. மேனுவல் மோட் என்பது, பேடில் ஷிஃப்ட்டுகளைக் கொண்டு ஓட்டுவது. எக்கனாமி என்பது, உடனுக்குடன் கியர்களை அதிகரித்து மைலேஜ் அதிகம் கிடைக்க வழி செய்யும்.

மெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸ் Vs பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்

பெர்ஃபாமென்ஸ்

இரண்டு கார்களில் எது வேகமான கார் என்பதைக் கண்டுபிடிக்க, அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏ-கிளாஸ் டீசல் காரைவிட 160 கிலோ எடை குறைவான பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் டீசல்தான் பெர்ஃபாமென்ஸில் கில்லி. பென்ஸ் ஏ கிளாஸ் வெறும் 107 bhp சக்தி மற்றூம் 25.7 kgm டார்க்கை மட்டுமே கொடுக்கிறது. ஆனால், பிஎம்டபிள்யூ 141 bhp சக்தியையும், 32.6 kgm டார்க்கையும் அளிக்கிறது. 0 - 100 கி.மீ வேகத்தை ஏ கிளாஸை விட, 1 சீரிஸ் 2.5 விநாடிகள் முன்னதாகக் கடந்துவிடுகிறது. 0 - 160 கி.மீ வேகத்தில் இந்த இடைவெளி இன்னும் அதிகரிப்பதால், பென்ஸைவிட 8 விநாடிகள் வேகமாக இருக்கிறது பிஎம்டபிள்யூ.

இன்ஜின் தரத்திலும், பிஎம்டபிள்யூவுக்கே முதல் இடம். ஆரம்பத்தில் இன்ஜின் சத்தம் காருக்குள் கேட்டாலும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க... அது மறைந்துவிடுகிறது. மாறாக, பென்ஸில் காரை ஸ்டார்ட் செய்ததுமே காருக்குள் கேட்க ஆரம்பிக்கும் இன்ஜின் சத்தம், ஆக்ஸிலரேட்டரில் கால் மிதிக்கும் வேகத்தைப் பொறுத்து கூடிக்கொண்டே போகிறது. அதிக வேகம் பிடித்து, ஆக்ஸிலரேட்டரில் காலின் சீற்றம் சீராக இருந்தால் மட்டுமே சத்தம் குறைகிறது.

மெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸ் Vs பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்

மைலேஜ்

பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் நகருக்குள் 11.5 கி.மீ, பென்ஸ் ஏ கிளாஸ் டீசல் 11 கி.மீ மைலேஜ் தருகிறது. 1 சீரிஸ் நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 18 கி.மீ வரை மைலேஜ் தர, ஏ கிளாஸ் 15 கிமீ மைலேஜ் தருகிறது.

மெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸ் Vs பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்

ஸ்டைலா? பெர்ஃபாமென்ஸா? உங்களுக்கு எது தேவை என்பதை முடிவு செய்துவிட்டால் இரண்டு கார்களில் சிறந்த கார் எது என்பதை ஈஸியாகச் சொல்லிவிடமுடியும். 30 லட்ச ரூபாய்க்குத் தகுதியான சொகுசு கார் தோற்றத்துடன், பென்ஸுக்கே உரிய கம்பீரத்துடன் இருக்கிறது ஏ கிளாஸ். ஆனால் பெர்ஃபாமென்ஸில் பிஎம்டபிள்யூவுடன் ஒப்பிடும்போது, பல அடிகள் பின்னால் நிற்கிறது. பார்ப்பவர்கள் 'வாவ்’ எனச் சொல்ல வேண்டும் என நினைப்பவர்கள் பென்ஸ் ஏ கிளாஸை வாங்கலாம். பெர்ஃபாமென்ஸில் சிறந்த கார் வேண்டும் என்பவர்கள் பிஎம்டபிள்யூ 1 சீரிஸை வாங்கலாம்.

மெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸ் Vs பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்
மெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸ் Vs பிஎம்டபிள்யூ 1 சீரிஸ்