Election bannerElection banner
Published:Updated:

500 கி.மீ டாப் ஸ்பீடு... கார்பன் ஃபைபர் சேஸி... உலகின் வேகமான கார்கள் இவைதான்!

வேகமான கார்
வேகமான கார் ( Autocar India )

கார்ல் பென்ஸின் வாகனத்துக்குப் பிறகான 1890-களில் வெளிவந்த Stanley Steamer எனும் கார், அதிகபட்சமாக 56 கி.மீ வேகத்தை எட்டியது. இது, 16 கி.மீ வேகம் சென்ற Motorwagen விட மூன்றரை மடங்கு அதிகம்.

1885-ம் ஆண்டு, Combustion-ஆல் இயங்கும் வாகனம் பயன்பாட்டுக்கு வந்தது (Benz Patent-Motorwagen). ஆனால், அந்தக் காலகட்டத்தில் வேகமாகச் சென்ற கார்கள் எல்லாமே நீராவியால் இயங்கியவைதாம். ஏனெனில், அப்போதிருந்த ஆயில்களை எரியூட்டி இயங்கக்கூடிய இன்ஜின்கள் (ICE), நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இல்லை. மேலும், அவை நீராவியால் இயங்குவதைவிட குறைவான செயல்திறனையே கொண்டிருந்தன. கார்ல் பென்ஸின் வாகனத்துக்குப் பிறகான 1890-களில் வெளிவந்த Stanley Steamer எனும் கார், அதிகபட்சமாக 56 கி.மீ வேகத்தை எட்டியது. இது, 16 கி.மீ வேகம் சென்ற Motorwagen விட மூன்றரை மடங்கு அதிகம். இந்தச் சம்பவங்கள் நடந்து 135 ஆண்டுகள் கடந்திருக்கும் இந்தச் சூழலில், E85 எரிபொருளில் இயங்கும் சூப்பர் கார்களுக்குப் போட்டியாக எலெக்ட்ரிக் ஹைப்பர் கார்கள் கோதாவில் குதித்திருக்கின்றன (Pininfarina Battista, Lotus Evija, Tesla Roadster, Rimac Concept Two, Drako GTE, Nio EP9, Aspark Owl). எனவே, இதற்கான பதிலடியை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் எப்படி தரவிருக்கின்றன? அதற்கான ட்ரெய்லர் இதோ!

ஹென்னிஸே வெனோம் F5 - 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்

Hennessey Venom F55
Hennessey Venom F55
Autocar india

வேகப்போட்டியில் வெல்வது என்பது, ரிலே ரேஸில் பங்கேற்பது போன்றது. 435 கி.மீ வேகம் சென்ற வெனோம் GT-யிடமிருந்து, அடுத்தகட்ட ஓட்டத்தை ஓடுவதற்கு வெனோம் F5 தயாராகிவிட்டது. இதிலிருக்கும் 6.6 லிட்டர் ட்வின் டர்போ V8 பெட்ரோல் இன்ஜின், 1842bhp@8,000rpm பவர் - 161.7kgm டார்க்கைத் தருகிறது. ஃப்யூரி எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த இன்ஜின், 7 ஸ்பீடு செமி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. 0 - 100 கி.மீ வேகத்தை 2 விநாடிக்கும் குறைவான நேரத்தில் எட்டிப்பிடிக்கும், 1338 கிலோ எடையுள்ள வெனோம் F5, 500 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தைத் தொடக்கூடிய திறனைக் கொண்டிருக்கிறது. கார்பன் ஃபைபரில் கட்டமைக்கப்பட்ட இதன் சேஸியின் எடை, 86 கிலோதான்! 24 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என்ற சூழலில், இதில் 12 கார்கள் அமெரிக்காவுக்கும் (அவை விற்று முடிந்துவிட்டன) - மீதமுள்ள 12 கார்கள் சர்வதேச சந்தைகளுக்கும் பொசிஷன் செய்யப்பட்டுள்ளன.

சம்மரில் வாகனங்கள் மக்கர் பண்ணாதிருக்க, இந்த 6 செக்கிங் அவசியம் பாஸ்! #CarCare

SSC டூயடாரா - 2 மில்லியன் அமெரிக்க டாலர்

ஃபைட்டர் ஜெட்களை அடிப்படையாகக்கொண்டு ஏரோடைனமிக்காக வடிவமைக்கப்பட்டிருப்பதால், போட்டியாளர்களைவிட குறைவான Coefficient Of Drag (0.279) கொண்டிருக்கிறது டூயடாரா. 100 கார்களை மட்டுமே தயாரிக்கும் முடிவில் SSC நிறுவனம் இருந்தாலும், உலகெங்கும் இருக்கும் ஹைப்பர் கார் ஆர்வலர்கள், இதற்காகப் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். முதலில் பெரிய 6.9 லிட்டர் ட்வின் டர்போ V8 இன்ஜினைப் பொறுத்தும் முடிவு எடுக்கப்பட்டாலும், பின்னர் Mid Engine பாணி கட்டுமானத்தைக் கருத்தில்கொண்டு, இன்ஜினின் அளவு 5.9 லிட்டர் ட்வின் டர்போ V8 இன்ஜினாகக் குறைக்கப்பட்டது.

SSC Tuatara
SSC Tuatara
Autocar India

8,800rpm ரெட்லைனைக் கொண்டிருக்கும் இது, நம் ஊரில் கிடைக்கும் 91 Octane பெட்ரோலைப் பயன்படுத்தும்போது 1350bhp பவர் கிடைக்கிறது; இதுவே, திறன்மிக்க E85 எரிபொருளில் இயங்கும்போது, 1750bhp பவரைத் தருகிறது டூயடாரா. 7 ஸ்பீடு Robotic மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த Flexi-Fuel இன்ஜின், 0 - 100 கி.மீ வேகத்தை 2.5 விநாடியிலேயே எட்டிவிடுகிறது. 483 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தை எட்டிப்பிடிக்கும் இந்த ஹைப்பர் கார், 20 இன்ச் மிஷ்லின் டயர்கள் - கார்பன் ஃபைபர் கட்டுமானத்தைக் கொண்டிருக்கிறது. இதன் கேபினில் ஒரே ஸ்க்ரீன்மயம்தான் (ஸ்பீடோமீட்டர் - சென்டர் கன்சோல் - பட்டன்கள்).

கொயினிக்செக் ஜெஸ்கோ அப்சல்யூட் - 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

புகாட்டியிடமே (கிரோன் சூப்பர் ஸ்போர்ட்) வேகப் போட்டிக்கான கிரீடம் இருக்கட்டும் என கொயினிக்செக் இருந்துவிடுமா என்ன? அதற்கான தீர்வாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மோட்டார் ஷோவில், கார்பன் ஃபைபர் கட்டுமானத்தைக் கொண்ட ஜெஸ்கோ அப்சொல்யூட் ஹைப்பர்காரை, ஸ்வீடனைச் சேர்ந்த இந்த நிறுவனம் காட்சிப்படுத்தியது. கொயினிக்செக் தயாரித்ததிலேயே மற்றும் உலக அளவிலேயே வேகமான காராக அறியப்படும் இதில் இருப்பது, 5.0 லிட்டர் ட்வின் டர்போ V8 பெட்ரோல் இன்ஜின். இதுவும் Flexi-Fuel தன்மையைக் கொண்டிருப்பதால், வழக்கமான பெட்ரோலில் இயங்கும்போது 1,298bhp பவர் - 100kgm டார்க் கிடைக்கிறது;

Koenigsegg Jesko Absolut
Koenigsegg Jesko Absolut
Autocar India

E85 எரிபொருளில் இயங்கும்போது, அதிரடியான 1,625bhp பவரையும் - 150kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது ஜெஸ்கோ அப்சொல்யூட். 9 ஸ்பீடு மல்ட்டி-க்ளட்ச் கியர்பாக்ஸுடன் கூட்டணி வைத்திருக்கும் இந்த இன்ஜின், 8,500 ஆர்பிஎம் ரெட்லைனைக் கொண்டுள்ளது. 1,390 கிலோ எடையுள்ள ஜெஸ்கோ அப்சல்யூட், அதிகபட்சமாக 531கி.மீ வேகத்தைத் தொடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹைப்பர் காரின் பெயரில் இருக்கும் ஜெஸ்கோ, கொயினிக்செக் நிறுவனரின் தந்தையை நினைவுகூர்வது கவனிக்கத்தக்கது.

மெக்லாரன் ஸ்பீடு டெயில் - இந்திய மதிப்பில் 16.2 கோடி ரூபாய்

ஃப்ளோரிடாவில் இருக்கும் Kennedy Space Centre-ல் நடத்தப்பட்ட டெஸ்ட்டிங்கில், 402 கி.மீ வேகத்தைத் தொட்டுவிட்டது ஸ்பீடு டெயில். இதனால் மெக்லாரனின் வேகமான கார் என்ற பட்டத்தை, காலத்தால் அழியாத F1 காரிடமிருந்து இந்த ஹைபிரிட் சூப்பர்கார் தட்டிப் பறித்திருக்கிறது. 300 கி.மீ வேகத்தை 12.8 விநாடிகளிலேயே ஸ்பீடு டெயில் எட்டிவிடுகிறது! XP2 என்ற குறியிட்டுப் பெயரைக் கொண்ட இது, F1 போலவே 106 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது (எல்லாமே விற்றுவிட்டன). மெக்லாரனின் அனுபவம் வாய்ந்த டெஸ்ட் டிரைவரான கென்னி ப்ராக் (Kenny Brack), ஸ்பீடு டெயிலின் அதிவேகச் சோதனை ஓட்டத்தை 30-க்கும் மேலான முறை செய்திருக்கிறார். ஜெர்மனி, ஃப்ளோரிடா, ஸ்பெயின் ஆகிய இடங்களில் டெஸ்ட்டிங் நடைபெற்றிருக்கிறது. இந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் Velocity Mode, காரின் Ride Height-ஐ 35 மி.மீ குறைத்துவிடுகிறது. மேலும், அதிகபட்ச திறன் கிடைக்கும்படி எலெக்ட்ரிக் மோட்டார் செயல்படத் தொடங்கும்.

Mclaren Speedtail
Mclaren Speedtail
Autocar India

ரியர்வியூ மிரர்களுக்குப் பதிலாக கேமரா இடம்பெற்றிருக்கிறது. தனது கார்களின் எடை குறைவான கட்டுமானத்துக்கும் - சிறப்பான ஏரோடைனமிக்ஸுக்கும் பெயர்பெற்ற மெக்லாரன், 2018-ம் ஆண்டு வெளியான இந்த ஹைபிரிட் சூப்பர் காரில் புதிய உச்சத்தை எட்டியிருப்பதாகத் தெரிகிறது. F1 போலவே 3 சீட்டராக இருக்கும் ஸ்பீடு டெயில், 800bhp பவரை வெளிப்படுத்திய P1 காருக்கு அடுத்தபடியாக இந்த நிறுவனம் தயாரித்திருக்கும் ஹைபிரிட் காராகும். 1070bhp பவரைத் தரும் இதன் பெட்ரோல் - எலெக்ட்ரிக் ஹைபிரிட் அமைப்பு பற்றி மெளனமாகவே இருந்த மெக்லாரன், கடந்த மாதத்தில் அதுபற்றிய விபரங்களை அதிகாரபூர்வமாக அறிவித்தது. 747bhp பவர் - 81.52kgm டார்க்கைத் தரும் 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8 பெட்ரோல் இன்ஜின், 308bhp பவரைத் தரும் எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹைப்பர் GT ஆக ஸ்பீடு டெயில் வகைப்படுத்தப்படும் சூழலில், அது சென்ட்ரல் டிரைவிங் பொசிஷனைக் கொண்டிருக்கிறது. டிரைவரின் தலைக்கு மேலே கன்ட்ரோல்கள் இருப்பது விமான ஃபீல்தான்! கார்பன் ஃபைபர் கட்டுமானம் கொண்ட இதன் எடை 1,430 கிலோ.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு