தொழில்நுட்பம்
Published:Updated:

சேலையால் வந்த சோதனை!

சேலையால் வந்த சோதனை!

>>  உ.அருண்குமார் >>  ந.வசந்தகுமார்  

 ##~##

வாகனம் ஓட்டும்போது அலட்சியம் காட்டினாலோ, கவனம் சிதறினாலோ, அது மிகப் பெரிய ஆபத்துக்கு வழி வகுத்து விடும். அப்படி ஒரு சின்ன அலட்சியத்தால், தனக்கு ஏற்பட்ட விபத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் தஞ்சையைச் சேர்ந்த இளங்கோ.

'ரொம்ப வருஷமா பைக் ஓட்டுற அனுபவம் எனக்கு இருக்கு. இதுவரைக்கும் பெரிசா எந்த விபத்துலயும் சிக்குனது இல்லை. ஆனா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்னோட ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் பைக்ல, எங்க சொந்தக்கார பெண் ஒருத்தரை 'டிராப்’ பண்றதுக்காக மாதாக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் டவுனுக்குப் போய்க்கிட்டு இருந்தேன்.

நான் எப்பவுமே வேகமா பைக் ஓட்ட மாட்டேன். நிதானமான வேகத்துலதான் போவேன். அன்னைக்கும் அப்படிதான் போய்க்கிட்டு இருந்தேன். ஆனா, திடீர்னு ஏதோ ஒரு ஃபோர்ஸ் வந்து பைக்கைத் தள்ளுன மாதிரி இருக்க... சுதாரிக்கிறதுக்குள்ள பைக்ல இருந்து தூக்கி எறியப்பட்டு கீழே போய் விழுந்தோம்.

சேலையால் வந்த சோதனை!

ஏன் விழுந்தோம்; எப்படி விழுந்தோம், என்ன நடந்துச்சுன்னு ஒண்ணுமே புரியலை. நாங்க விழுந்த இடத்துல ஒரு கல்லறை வேற இருந்துச்சு. அதைப் பார்த்ததும் நான் இன்னும் குழம்பிப் போயிட்டேன். இது ஒருவேளை ஆவிகளோட வேலையா இருக்குமோன்னு நினைச்சேன். சரி, இந்த இடத்தை விட்டு உடனே போயிடுவோம்னு, கீழே கிடந்த பைக்கைத் தூக்கும்போதுதான் கவனிச்சேன்... எனக்குப் பின்னாடி உக்கார்ந்த பொண்ணு கட்டியிருந்த சேலையோட ஒரு சின்னத் துண்டு, பைக் செயின்ல சுத்தி இருந்துச்சு. அதுக்கப்புறம்தான் தெரிஞ்சுது, இது ஆவி செஞ்ச வேலையில்லை; நாங்க செஞ்சதுதான்னு! என் பைக்குல அப்போ 'சாரி கார்டு’ இல்லை. சேலையோட தலைப்பு பறந்து செயின்ல சிக்கி செயினைச் சுத்த விடாம ஜாம் ஆனதாலதான் நாம கீழ விழுந்திருக்கோம்னு புரிஞ்சுக்கிட்டேன்.

நல்லவேளை 40 கி.மீ. வேகத்துலதான் போனேன். அதனால, விழுந்ததுல குறைவான அடியோடயும், கொஞ்சம் சிராய்ப்புக் காயங்களோடயும் தப்பிச்சோம். இதுவே நான்  வேகமா போயிருந்தா... நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு!

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையா 'சாரி கார்டு’ மாட்டினேன். இப்பெல்லாம் நிறைய பேரு ஸ்டைலுக்காக பைக்ல 'சாரி கார்டு’ 'செயின் ஸ்ப்ராக்கெட் எல்லாம் வெச்சுக்கிறது கிடையாது.

இதனால நிறைய பிரச்னை வரும்னு அவங்களுக்குத் தெரியறதில்லை. என்னை மாதிரி பட்டுத் தெரியுறதுக்குள்ளே அவங்களாவே இதை உணரணும்' என்று அக்கரையுடன் கூறி முடித்தார் இளங்கோ!