தொழில்நுட்பம்
Published:Updated:

முட்டி மோதும் இந்திய அணி!

ஏசியன் ஜீபி

 ##~##

விறுவிறு, பரபர ரேஸிங் சேஸிங் காட்சிகளுடன் துவங்கிவிட்டது இந்த ஆண்டுக்கான ஆசிய பைக் ரேஸ் பந்தயம்! இந்தியா, இந்தோனேசியா, துருக்கி, ஜப்பான், சீனா, மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் நடைபெறும் பைக் ரேஸ் பந்தயமான 'ஏசியன் ரோடு ரேஸிங் சாம்பியன்ஷிப்’ பந்தயத்தின் முதல் ரேஸ், மே 1-ம் தேதி மலேசியாவின் செப்பாங் ரேஸ் மைதானத்தில் துவங்கியது. இந்த ஆசிய பைக் ரேஸ் பந்தயத்தில், இந்தியா சார்பில் கலந்துகொள்ளும் ஒரே அணி மோட்டோ ரெவ் இந்தியா. கடந்த ஆண்டு ஜப்பான் ரேஸ் வீரர்களுடன் களம் இறங்கி சாம்பியன்ஷிப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த மோட்டோ ரெவ் இந்தியா அணி, இந்தமுறை ஜப்பான் வீரர் ஹமாகுச்சியுடன் நம்மூர் வீரர்கள் கிருஷ்ணன் ரஜினி மற்றும் கௌதம் மயில்வாகனனையும் சேர்த்து களம் இறங்கியிருக்கிறது! 

முட்டி மோதும் இந்திய அணி!

ஆசிய பைக் -மலேசியா

ஏப்ரல் 29 மற்றும் 30-ம் தேதிகளில் முதல் சுற்றுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. ஆசிய பைக் ரேஸ் பந்தயத்தில் இரண்டு தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் கவாஸாகி ரேஸிங் அணியின் கட்ஸுவாக்கி ஃபுஜிவாரா முதல் இடத்தையும், யமஹா தாய்லாந்து அணியைச் சேர்ந்த போலாமாய் இரண்டாவது இடத்தையும்,

முட்டி மோதும் இந்திய அணி!

பெட்ரோனாஸ் யமஹா அணியைச் சேர்ந்த எட்வர்ட் ஜோன்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மோட்டோ ரெவ் இந்தியா அணியின் வீரரும், ஆறு முறை ஆசிய பைக் ரேஸ் சாம்பியன் பட்டம் வென்றவருமான ஹமாகுச்சி நான்காவது இடம் பிடித்தார். மொத்தம் 20 ரேஸர்கள் தகுதிபெற்ற இந்தச் சுற்றில் கிருஷ்ணன் ரஜினி 18-வது இடத்தையும், கௌதம் மயில்வாகனன் 19-வது இடத்தையும் பிடித்தனர். இரண்டாவது தகுதிச் சுற்றிலும் ஃபுஜிவாரா முதலிடம் பிடிக்க, மோட்டோ ரெவ் இந்தியா அணியின் ஹமாகுச்சியால் எட்டாவது இடமே பிடிக்க முடிந்தது. இதில் கிருஷ்ணன் ரஜினி 20-வது இடத்தையும், கௌதம் 23-வது இடத்தையும் பிடித்தனர். இரண்டு சுற்றுகளின் முடிவும் சராசரி எடுக்கப்பட்டு ஃபுஜிவாரா முதல் இடத்தில் இருந்தும், யமஹா தாய்லாந்து அணியின் டெச்சா இரண்டாவது இடத்தில் இருந்தும், யமஹா தாய்லாந்து அணியின் மற்றொரு வீரர் போலாமாய் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்க தகுதி பெற்றனர். 23 பேர் தகுதி பெற்ற ரேஸ் போட்டிக்கு, மோட்டோ ரெவ் இந்தியா அணியின் ஹமாகுச்சி ஐந்தாவது இடத்தில் இருந்தும், கிருஷ்ணன் ரஜினி 20-வது இடத்தில் இருந்தும், கௌதம் 22-வது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்க தகுதி பெற்றனர்.

ஞாயிற்றுக்கிழமை ரேஸ் துவங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாக நடைபெற்ற ஃப்ரீ பிராக்டீஸின்போது, கௌதமின் யமஹா ஆர்-6 பைக்கின் 'இன்ஜின் ப்ளோ’வாக... முதல் அடியைச் சந்தித்தது மோட்டோ ரெவ் இந்தியா! ஆனால், மோட்டோ ரெவ் இந்தியா அணியின் ட்யூனரும், மலேசிய ட்யூனருமான மோகன் நாற்பதே நிமிடங்களில் முழு இன்ஜினையும் சரி செய்து கொடுக்க... உற்சாகமானது மோட்டோ ரெவ் இந்தியா டீம்.

முட்டி மோதும் இந்திய அணி!

ரேஸ்-1

கவாஸாகி பைக் மிகவும் பவர்ஃபுல்லாக இருந்ததால், ஆரம்பத்திலேயே மற்ற எல்லா ரேஸர்களையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் சீறிப் பறக்க ஆரம்பித்தது. இரண்டாவது லேப்பின்போது ஐந்தாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய ஹமாகுச்சியின் பைக், மூன்றாவது இடத்தில் சென்றுகொண்டு இருந்த போலாமாயின் பைக் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார் ஹமாகுச்சி. ஆனால், சிறிது நேரத்தில் சுதாரித்த ஹமாகுச்சி, மீண்டும் பைக்கை கிளப்பிக்கொண்டு பறக்கத் தயாரானார். ஆனால், அதற்குள் 22 ரேஸ் வீரர்கள் அவருக்கு முன்னால் சென்றுவிட்டனர். ஆசிய பைக் ரேஸில் பழம் தின்று கொட்டை போட்டவரான ஹமாகுச்சி வெறிகொண்டு துரத்த ஆரம்பித்தார்.

முட்டி மோதும் இந்திய அணி!

மொத்தம் 25 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியின் 17, 18, 19-வது சுற்றுகளின்போது ரேஸ் டிராக்கின் நான்காவது வளைவில் ஆயில் கொட்டியிருந்ததால், ரேஸ் வீரர்கள் மாறி மாறி விபத்துக்குள்ளாகினர். தொடர்ந்து ஐந்து ரேஸ் வீரர்கள் அந்த இடத்திலேயே விபத்தில் சிக்க, 20-வது லேப்பின்போது ரேஸில் இரண்டாவது இடத்தில் இருந்த போலாமாயும் விபத்துக்குள்ளானார். தொடர்ந்து ஆறு வீரர்கள் விபத்தில் சிக்கியதால், ரேஸ் சிவப்புக் கொடி காட்டப்பட்டு நிறுத்தப்பட்டது. இந்த விபத்துக்கு முன்பாக ஹமாகுச்சி 12-வது இடத்திலும், கிருஷ்ணண் ரஜினி 13 இடத்திலும் இருந்தனர். 20-வது லேப்பின்போது போலாமாய் விபத்துக்கு முன்பு வரை ரேஸ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 36 வயதான கட்ஸுவாக்கி ஃபுஜிவாரா முதலிடத்தையும், போலாமாய் இரண்டாவது இடத்தையும், ஹோண்டா மலேசியா அணியின் அஸ்லான் ஷா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மோட்டோ ரெவ் இந்தியா அணியின் கௌதம் மயில்வாகணன் 14-வது லேப்பின்போது இன்ஜின் ஓவர் ஹீட் காரணமாக ரேஸைவிட்டு வெளியேறினார்.

ரேஸ் -2

இரண்டாவது ரேஸில் வெறி கொண்டு கிளம்பினார் மோட்டோ ரெவ் இந்தியா அணியின் ஹாமர் என்று செல்லமாக அழைக்கப்படும் ஹமாகுச்சி. ஃபுஜிவாரா வழக்கம் போல மற்ற எல்லா வீரர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தில் பறக்க... இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்துக்கு கடுமையான போட்டி நிலவியது. ஐந்தாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்துக்கு முன்னேறிய ஹமாகுச்சி, மூன்றாவது இடத்தில் சென்று கொண்டு இருந்த அஸ்லான் ஷாவை முந்திச் சென்று மூன்றாவது இடத்துக்கு முன்னேறி, அடுத்த சில லேப்புகளில் இரண்டாவது இடத்தில் சென்று கொண்டிருந்த டெச்சாவையும் முந்திச் சென்றார். ஆனால், ஹமாகுச்சியை விடாமல் துரத்திக் கொண்டிருந்தனர் டெச்சாவும், அஸ்லான் ஷாவும். இதனால், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்கள் மாறிக் கொண்டே இருந்தன. ஹமாகுச்சியின் யமஹா ஆர்-6 பைக்கின் வேகம், டெச்சாவின் யமஹா மற்றும் அஸ்லான் ஷாவின் ஹோண்டா பைக்கை விட குறைவாக இருந்ததால், நேர் கோட்டில் வேகமாகச் செல்ல முடியவில்லை. இருந்தாலும், வளைவுகளின்போது கடுமையான போட்டியை ஏற்படுத்தி டெச்சாவுக்கும், அஸ்லானுக்கும் நெருக்கடி கொடுத்தார் ஹாமர். ஆனால், வெற்றிக் கோட்டைத் தொடுவதற்கான கடைசி லேப்பில், நீளமான ஸ்ட்ரெயிட் டிராக்கில் ஹமாகுச்சியால் டெச்சாவையும், அஸ்லானையும் முந்த முடியவில்லை. ரேஸின் இறுதியில் ஃபுஜிவாரா முதலிடம் பிடிக்க, டெச்சா இரண்டாவது இடத்தையும், அஸ்லான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். ஹமாகுச்சி நான்காவது இடம் பிடிக்க, கிருஷ்ணன் ரஜினி 15-வது இடத்தையும், கௌதம் 20-வது இடத்தையும் பிடித்தனர்.

முதல் சுற்றின் முடிவில் 50 புள்ளிகளுடன் ஃபுஜிவாரா முதலிடத்தில் இருக்க, 17 புள்ளிகளுடன் ஹமாகுச்சி எட்டாவது இடத்தில் இருக்கிறார்!

ஆசிய ரேஸில் ஒரே இந்திய அணி!

முட்டி மோதும் இந்திய அணி!

மோட்டோ ரெவ் இந்தியா அணி, கடந்த 2010-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ரேஸ் வீரர் பாலவிஜய், எஸ்பிகே இந்தியா நிறுவன உரிமையாளர் அபிஷேக் ராஜு ஆகியோரால் துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஹமாகுச்சி, இனாகாக்கி என இரண்டு ஜப்பான் வீரர்களுடன் களம் இறங்கிய மோட்டோ ரெவ் இந்தியா அணியில், இந்த ஆண்டு ரஜினி மற்றும் கௌதம் ஆகிய இரண்டு இந்திய வீரர்களைச் சேர்த்து உண்மையான இந்திய அணியாக மாறி இருக்கிறது. 6 முறை ஆசிய பைக் ரேஸில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் ஹமாகுச்சி, 10 முறை இந்திய தேசிய பைக் ரேஸ் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் கிருஷ்ணன் ரஜினி, கடந்த ஆண்டு தேசிய பைக் ரேஸ் போட்டிகளில் பல வெற்றிகள் பெற்ற 19 வயது இளம் வீரர் கௌதம் மயில்வாகனன் என திறமையான அணியாக தோற்றம் அளிக்கும் மோட்டோ ரெவ் அணி, ஆசிய பைக் ரேஸில் இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்யும் என நம்புவோம்!