தொழில்நுட்பம்
Published:Updated:

அப்பாச்சி கேங்!

அப்பாச்சி கேங்!

>>  மோ.கிஷோர்குமார் >> சொ.பாலசுப்ரமணியம்  

 ##~##

ரே பள்ளியில், ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்த மாணவர்கள் பிரியும் போது... ஆண்டுதோறும் ஏதாவது ஒருநாள் சந்தித்துக்கொள்ள சபதமேற்பார்கள்! ஆனால், மதுரை டால்பின் பள்ளி பழைய மாணவர்களின் சபதம் கொஞ்சம் வித்தியாசமானது. அதாவது, 'ஆளுக்கொரு அப்பாச்சி பைக் வாங்கிய பிறகு ஒன்று கூடுவோம்’ என்பதுதான் இவர்களின் சபதம்!

'நாங்க எல்லாரும் டால்பின் ஸ்கூல்ல ஆறாம் வகுப்புல இருந்து ஒண்ணா படிச்சவங்க. எங்களோட வீடும் ஸ்கூல் பக்கத்துலதான். ஆனாலும், அப்பவே வீட்ல அடம்பிடிச்சு, 'சைக்கிள் வாங்கித் தாங்க! அதுவும் ரேஞ்சர்தான் வேணும். கியர் சைக்கிள் வேணும்’னு சாதிச்சவய்ங்க! கிரிக்கெட் விளையாட, டியூசன் போக... இப்படி எல்லாத்துக்குமே எங்க சைக்கிள் கான்வாய் கிளம்பிடும்.

அப்பாச்சி கேங்!

ப்ளஸ் ஒன் படிச்சுக்கிட்டு இருந்தப்போ, கிரிக்கெட் விளையாட கிரவுண்டுக்கு சைக்கிள்ல போனோம். அப்போ, எங்களோட சீனியர்ஸ் பைக்ல வந்திருந்தாங்க. எங்களுக்கு ஒரே பொறாமையா போச்சு. அவ்வளவு நாள் எங்களோட இருந்த சைக்கிள் எங்களுக்குப் பெருசா தெரியலை. சீனியர்கள் வெச்சு இருந்த பைக்தான் எங்களுக்குப் பெருசா தெரிஞ்சது. விளையாடும்போது பந்து எடுக்குற மாதிரி போய் பைக்கையும் தொட்டுப் பார்த்துட்டு வருவோம். அதுல ஒரு அண்ணன் அப்பாச்சி பைக் வெச்சு இருந்தாரு. அந்த புது பைக் ரொம்ப தோரணையா இருந்துச்சு! ஆனா, பைக் பக்கத்துல போய் நின்னாலே ஓரமாப் போங்கடான்னு திட்டுவாங்க. அப்பவே எங்களுக்குள்ள ஒரு ஃபயர்! எப்படியாச்சும் நாமளும் பைக் வாங்கணும்' என்று ஒரு மினி ப்ளாஷ் பேக்கை சிவக்குமார் கூற, தொடர்ந்தார் சந்துரு.

அப்பாச்சி கேங்!

'ப்ளஸ் ஒன் படிக்கும்போதே வீட்ல பைக் கேட்டோம். திட்டு தான் கிடைச்சது. பைக் எல்லாம் காலேஜ் போனதுக்கு அப்புறம்தான்னு சொல்லிட்டாங்க. எங்களுக்கு ரொம்ப வருத்தம்தான். எங்களோட சீனியர்ஸ் எல்லாம் பைக்ல எங்களை கிராஸ் பண்றப்போ, அதுவும் அந்த அப்பாச்சி பைக் அண்ணன் கிராஸ் பண்ணும் போது எங்களுக்குள்ள திகுதிகுன்னு இருக்கும். என்ன பண்றதுன்னு பொறுத்துக்கிட்டோம். ஒரு வழியா ப்ளஸ் டூ எக்ஸாம் எல்லாம் முடிஞ்சது. நாங்க எல்லாம் பிரிய வேண்டிய நேரம்... மத்த ஸ்டூடண்ட்ஸ் எல்லாம், 'ஒரே காலேஜ்ல சேருவோம்; ஒரே கம்ப்யூட்டர் கிளாஸ் போவோம்; வருஷா வருஷம் கெட் டு கெதர் பார்ட்டி வச்சு மீட் பண்ணலாம்’னு பேசிக்கிட்டாங்க. அப்பதான் எங்க கேங்குல ஒரு சபதம் போட்டோம். நம்ம எல்லாரும் பைக் வாங்கிட்டுதான் அடுத்த வருஷம் மீட் பண்றோம். அதுவும் அந்த அண்ணன் வெச்சு இருந்த அப்பாச்சி ஆர்.டி.ஆர் பைக்தான் வாங்கணும் முடிவு பண்ணிட்டுப் பிரிஞ்சோம்.

சில பேர் வீட்டுல சொன்ன மாதிரி காலேஜ் முதல் வருஷத்துல பைக் வாங்கிக் குடுத்துட்டாங்க. ஆனா, சில பேர் வீட்ல வாங்கித் தராம இருந்தாங்க. அதனால, போன வருஷம் நாங்க ஒண்ணா மீட்

அப்பாச்சி கேங்!

பண்ணினாலும் அவ்வளவு சிறப்பா இல்லை. 'அடுத்து மீட் பண்ணும்போது கண்டிப்பா எல்லாரும் பைக்கோடதான் மீட் பண்ணணும்; அன்னைக்கு எல்லாரும் பைக்லேயே எங்கயாச்சும் லாங் டிராவல் போகணும்’னு பேசி முடிவெடுத்தோம். சொன்ன மாதிரியே எங்க கேங்ல எல்லாரும் அப்பாச்சி பைக் வாங்கியாச்சு. இன்னைக்கு எல்லாரும் கொடைக்கானல் போகப் போறோம். இந்த நாளுக்கான சந்தோஷம் இதுதான்!' என விவரித்தார் சந்துரு.

அந்த அதிகாலையில், பைக்குகளோடு காத்துக் கொண்டிருந்த நண்பர்கள் அனைவரும், தாங்கள் படித்த டால்பின் பள்ளி வாசலில் இருந்தே பேரணியைத் துவக்கினார்கள்! மொத்தம் ஒன்பது அப்பாச்சி பைக்குகள். ஹெல்மெட், டூல்ஸ் பாக்ஸ் சகிதம் கலக்கல் காஸ்ட்யூமில் யுவராஜ், சிவக்குமார், ஜெகன், ஆசிப், பாலு, செல்வா, சந்துரு, பழனி, கார்த்தி என ஒன்றுகூடிய நண்பர்கள் பைக்கை ஸ்டார்ட் செய்ய, கூடவே நாமும் கேமராவைத் தூக்கிக் கொண்டு கொஞ்ச தூரம் சென்று வரலாம் எனக் கிளம்பினோம்.  

சிட்டியில் இருந்து சிட்டாக சில நிமிடங்களில் திண்டுக்கல் பைபா ஸைப் பிடித்தனர். மிதமான வேகத்தில் சென்ற சிறிது நேரத்திலேயே ஒரு மரத்தடியில் எல்லா பைக்குகளையும் ஓரங்கட்டினார்கள். ''மச்சான்... ஓடையில தண்ணி போகுது... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டுப் போலாமா?' என பழனி சொன்னதுதான் தாமதம், ஜெகனும், சிவாவும் ஓடையில் இறங்கி விளையாட ஆரம்பித்து விட்டார்கள்.

ஹைவேஸில் மித வேகத்தில் மீண்டும் பயணம். மாணவர்கள் மிக ஜாக்கிரதை உணர்வுடன் ஓட்டுவது புரிந்தது. இதைப் பற்றிக் கேட்டதும், ''நாங்கதான் பைக் வேணும்னு அடம்பிடிச்சு கேட்டோம்; லாங் டிராவலுக்கு பர்மிஷன் கேக்குறோம். நம்மளை நம்பி வீட்ல அனுப்புறாங்க. நாங்க பாதுகாப்பாக போயிட்டு வருவோம்கிற நம்பிக்கையோட வீட்ல இருப்பாங்க. எத்தனையோ நியூஸ் படிக்கிறோம்; பார்க்கிறோம். அதனால, எப்பவுமே சேஃப் டிரைவிங்தான்!'' என பொறுப்பாகவும் நிதானமாகவும் சொல்கிறார்கள் இந்த கல்லூரி இளசுகள்!