தொழில்நுட்பம்
Published:Updated:

பஜாஜ் டிஸ்கவர் 125 மாற்றம் என்ன?

பஜாஜ் டிஸ்கவர் 125 மாற்றம் என்ன?

>>சார்லஸ், சுரேன்  >> கே.கார்த்திகேயன் 

 ##~##

ஜாஜ் தொழிற்சாலையிலிருந்து மீண்டும் மீண்டு வந்திருக்கிறது டிஸ்கவர் 125. பஜாஜின் வெற்றிகரமான 125 சிசி பைக்கான டிஸ்கவர் 125, எக்ஸீட் பைக்கின் வருகையால் நிறுத்தப்பட்டது. பிறகு, எக்ஸீட் பைக்குகளும் தயாரிப்பில் இருந்து நிறுத்தப்பட... மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது டிஸ்கவர் 125.

ஸ்டைல் மற்றும் டிசைன்

ஸ்டைலைப் பொறுத்தவரை, புத்தம் புது டிஸ்கவர் 125 பைக்கின் ஸ்டைலை மாற்றி இளைஞர்களை ஈர்க்கும் அருமையான வாய்ப்பை இழந்துவிட்டது பஜாஜ் என்றே தோன்றுகிறது. பழைய டிஸ்கவர் பைக்குகளைப் போலவே இருக்கிறது புதிய டிஸ்கவர் 125. அகலமான ஹெட் லைட் குடுவைக்குள் இரண்டு பார்க்கிங் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. டயல்களில் எந்த மாற்றமும் இல்லை. அதே இரண்டு வட்ட டயல்கள்தான். ஸ்பீடோ, ஓடோ, ட்ரிப் மீட்டர் ஆகியவை இந்த டயல்களில் அடக்கம். ரியர் வியூ கண்ணாடிகள் பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. சுவிட்சுகள் தரமாக உள்ளன. பஜாஜ் பைக்குகளில்  காணப்படும் 'ரைடு கன்ட்ரோல்’ சுவிட்ச் இதிலும் இடம் பெற்றுள்ளது.

பஜாஜ் டிஸ்கவர் 125 மாற்றம் என்ன?

8 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருந்தாலும், உயரமானவர்கள் உட்கார்ந்து ஓட்டுவதற்கு வசதியாக இல்லை. தொடைக்குப் போதுமான சப்போர்ட் இல்லாதது நீண்ட நேரம் பயணம் செய்யும்போது வலியை ஏற்படுத்துகிறது. பைக்கின் பின்பக்கத்திலும் எந்த மாற்றமும் இல்லை. ஒட்டுமொத்தமாக பைக்கின் பில்டு குவாலிட்டி சிறப்பாகவே உள்ளது.

இன்ஜின், கியர் பாக்ஸ் மற்ற்றும் பர்ஃபாமென்ஸ்

124.6 சிசி, சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு இன்ஜினைக் கொண்டுள்ளது டிஸ்கவர் 125. பஜாஜ் பல்ஸர் பைக்குகளில் உள்ளதுபோல அதிக மைலேஜ் தரும் ட்வின் ஸ்பார்க் டீடிஎஸ்-ஐ தொழில்நுட்பம் இதிலும் உண்டு. இது  அதிகபட்சமாக 8000 ஆர்பிஎம்மில் 11 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. இதன் அதிகபட்ச டார்க் 5500 ஆர்பிஎம்-ல் 1.1 kgm. காலையில் பட்டனைத் தட்டியவுடன் ஸ்டார்ட் ஆவதற்கு வசதியாக ஆட்டோ சோக் உள்ளது. ஆனால், நீண்ட நாள் கழித்து பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது பலமுறை உதைத்தும், பட்டனை பலமுறை அழுத்திய பிறகும்தான் ஸ்டார்ட் ஆகிறது 125.

பஜாஜ் டிஸ்கவர் 125 மாற்றம் என்ன?

சாவியைத் திருப்பி பைக்கை ஸ்டார்ட் செய்தவுடனேயே, சர்ரென்று குவியும் ஆரம்ப கட்ட கூடுதல் பவரால், விருட்டென வேகம் பிடிக்கிறது டிஸ்கவர் 125. பவர் டெலிவரி சீராக இருப்பதால், சரியான இடைவெளிகளில் மட்டுமே கியர் மாற்றம் தேவைப்படுகிறது. இதனால் ஓவர்டேக் செய்வதற்கு சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஐந்தாவது கியரில்கூட 30 கி.மீ வேகத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஓட்டத்தைத் தொடருகிறது இன்ஜின்.

0-60 கி.மீ வேகத்தை 6.33 விநாடிகளில் கடக்கிறது டிஸ்கவர் 125. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு சரியாக 100 கி.மீ! புதிய டிஸ்கவரின் பலமே இதன் சூப்பர் பர்ஃபாமென்ஸ் இன்ஜின்தான். 125 சிசி பைக்குகளில் சிறந்த பர்ஃபாமென்ஸ் கொண்ட பைக் என்று இதை தைரியமாகச் சொல்லலாம்.

ஓட்டுதல், கையாளுமை மற்றும் பிரேக்கிங்

டிஸ்கவர் 125 சிசி பைக்கின் இரண்டு வீல்களிலும் 17 இன்ச் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேஸ் சார்ஜ்டு சஸ்பென்ஷன்களோடு முன் பக்கம் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன், சின்ன மேடு பள்ளங்களைச் சிறப்பாகச் சமாளிக்கிறது. எடை குறைவான இந்த பைக்கை டிராஃபிக் நெருக்கடிகளில் வளைத்துத் திருப்பி ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறது. ஆனால், டயர்கள் ஒட்டுமொத்தமாக பைக்கின் கையாளுமையைக் கெடுத்து விடுகின்றன. யூரோ க்ரிப் டயர்களில் போதுமான க்ரிப் இல்லை. மேலும் வேகமாகச் செல்லும்போது, அதிர்வுகள் ஆட்டிப் படைக்கின்றன. குறிப்பாக, ஃபுட் ரெஸ்ட்டில் அதிர்வுகளை அதிகமாக உணர முடிகிறது. வேகமாகப் போகும்போது பின் சீட்டில் உட்காருபவர்களால் ஃபுட் ரெஸ்ட்டில் கால் வைக்கவே முடியாது.

பஜாஜ் டிஸ்கவர் 125 மாற்றம் என்ன?
பஜாஜ் டிஸ்கவர் 125 மாற்றம் என்ன?

முன் பக்கம் டிஸ்க் பிரேக் இருந்தாலும், க்ரிப் இல்லாத டயர்களால் பிரேக்கின் செயல்பாடு சிறப்பாக இல்லை. 60 கி.மீ வேகத்தில் சென்று பிரேக் அடித்தால், பைக் முழுமையாக நிற்க 1.97 விநாடிகள் தேவைப்படுகிறது.

மைலேஜ்

மைலேஜில் வெற்றி பெறுகிறது டிஸ்கவர் 125. நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 57.3 கி.மீ மைலேஜ் கொடுக்கும் டிஸ்கவர், நகருக்குள் லிட்டருக்கு 53.1 கிமீ மைலேஜ் தருகிறது!

பஜாஜ் டிஸ்கவர் 125 மாற்றம் என்ன?

தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாததால், கவனத்தைத் தன் பக்கம் திருப்ப மறுக்கிறது டிஸ்கவர் 125. இன்ஜின்தான் இதன் பலம். நகருக்குள் சுற்றி வர சிறந்த பர்ஃபாமென்ஸைக் கொடுக்கிறது டிஸ்கவர். ஆனால், வேகமாகச் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் சிறப்பான ஓட்டுதல் தரத்தைக் குறைத்து விடுகின்றன. ஆனால், 100 சிசி, 150 டிஸ்கவருக்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் குறைக்க வந்திருக்கும் இந்த டிஸ்கவர் 125 சிசி பைக், மிடில் கிளாஸ் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும்!