தொழில்நுட்பம்
Published:Updated:

தொடருமா வெட்டலின் வெற்றி?

தொடருமா வெட்டலின் வெற்றி?

>>சார்லஸ் 

 ##~##

'இந்த ஆண்டும் வெட்டல் சாம்பியனாகி விடுவாரோ’ எனும் கலக்கத்தில் இருக்கின்றனர் ஃபெராரி மற்றும் மெக்லாரன் அணியினர்!

இந்த ஆண்டு வேகமாக இருக்கும் கார், ரெட்புல் அணியின் கார்தான் என்றாலும் மெக்லாரன், ஃபெராரி அணிகளின் லூயிஸ் ஹாமில்ட்டன் மற்றும் ஃபெர்னான்டோ அலான்சோ ஆகிய இருவரும் தங்கள் திறமையையும், அனுபவத்தையும் பயன்படுத்தி வெற்றிக் கொடி நாட்டுவார்கள் என எதிர்பார்க்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஆனால், வெட்டல் விடுவதாக இல்லை. துருக்கியில் நடந்த ஃபார்முலா-1 ரேஸிலும் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார் வெட்டல்.

ஃபார்முலா-1 துருக்கி

ஃபார்முலா-1 போட்டிகளின் நான்காவது சுற்று, துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் மே 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்றின் முடிவின்படி, இந்த ஆண்டு நான்காவது ரேஸாக தொடர்ந்து முதலிடத்தில் ரேஸைத் துவக்க தகுதி பெற்றார் செபாஸ்ட்டியன் வெட்டல். ரெட்புல் அணியின் மற்றொரு வீரர் மார்க் வெப்பர் இரண்டாவது இடத்தில் இருந்தும், மெர்சிடீஸ் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க் மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்க தகுதி பெற்றார்கள். முன்னாள் சாம்பியன்களான மெக்லாரன் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டனும், ஃபெராரி அணியின் ஃபெர்னாண்டோ அலான்சோவும் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் இருந்து ரேஸைத் துவக்கினார்கள்.

தொடருமா வெட்டலின் வெற்றி?
தொடருமா வெட்டலின் வெற்றி?

முதலிடத்தில் இருந்து துவக்கிய 23 வயதான வெட்டலின் வேகத்துக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போட்டார் மார்க் வெப்பர். கூடவே ஃபெர்னாண்டோ அலான்சோவும் ஆக்ஸிலரேட்டரை முறுக்க... ரேஸ் விறுவிறுப்பானது. முதல் லேப்பிலேயே முதலிடத்துக்கு முன்னேறிப் பறக்க ஆரம்பித்த வெப்பரைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார் வெட்டல். இதற்கிடையே முதல் லேப்பில் பெட்ரோவின் காரோடு மோதி பிட்டுக்குள் திருப்பினார் முன்னாள் உலக சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர். மொத்தம் 58 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியில் வெட்டலின் வேகம் வியக்க வைத்தது. ஆரம்பத்தில் வெட்டல் பிடித்த முன்னணியில் இருந்து எந்த மாற்றமும் இல்லை. இதற்கிடையே இரண்டாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய மார்க் வெப்பர் பின்னோக்கிப் போக, விறுவிறுவென இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் ஃபெர்னாண்டோ அலான்சோ.

வெட்டல் முதலிடத்திலும், அலான்சோ இரண்டாவது இடத்திலும் சென்று கொண்டு இருக்க... ரேஸ் முடிய ஐந்து லேப்புகளே இருந்த நிலையில், திடீரென இன்ஜினின் ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி புயல் வேகம் பிடித்த வெப்பர், அலான்சோவை முந்திச் சென்று இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். இறுதியில் வெட்டல், 58 லேப்புகளை 1 மணி நேரம் 30 நிமிடங்கள் 17 விநாடிகளில் வெற்றிக் கோட்டைக் கடந்து வெற்றி பெற... வெப்பர் 8.8 விநாடிகள் பின்தங்கி இரண்டாவது இடம் பிடித்தார். ஃபெராரியின் அலான்சோ, வெப்பரைவிட இரண்டு விநாடிகள் பின்தங்கி மூன்றாவது இடம் பிடித்தார்.

இதுவரை நடைபெற்றிருக்கும் நான்கு ரேஸ்களில் மூன்றில் வெற்றி பெற்றிருக்கிறார் வெட்டல்.

2011-ம் ஆண்டு ஃபார்முலா-1 போட்டிகளின் நான்காவது சுற்று முடிவில், வெட்டல் 93 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். மெக்லாரன் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டன் 59 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ரெட்புல் அணியின் மற்றொரு வீரர் மார்க் வெப்பர் 55 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். சாம்பியன்ஷிப் பட்டியலில் 41 புள்ளிகளுடன் அலான்சோ ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். வெட்டலின் இந்த ஆதிக்கம் தொடருமா? ஹாமில்ட்டன், அலான்சோ இருவரும் ரெட்புல் அணியின் கனவுகளைத் தகர்ப்பார்களா என்ற விறுவிறு சஸ்பென்ஸுடன் தொடர்கிறது ஃபார்முலா-1.

தொடருமா வெட்டலின் வெற்றி?
தொடருமா வெட்டலின் வெற்றி?
தொடருமா வெட்டலின் வெற்றி?

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைப்பதற்கு முன் மே 22-ம் தேதி ஸ்பெயினில் ஃபார்முலா-1 போட்டியின் ஐந்தாவது சுற்று நடந்து முடிந்திருக்கும்!

தொடருமா வெட்டலின் வெற்றி?

ரெனோ அணியின் தலைவர் மீது மது பாட்டிலைத் தூக்கி வீசிய சுட்டில்!

ஃபோர்ஸ் இந்தியா அணியின் வீரர் ஆட்ரியான் சுட்டில் மீது, கொலை வெறி கோபத்தில் இருக்கிறார் ரெனோ அணியின் தலைவர் எரிக் லக்ஸ்! கடந்த மாதம் சீனாவில் ஃபார்முலா-1 ரேஸ் போட்டி முடிந்ததும், நைட் கிளப்புகளில் தீவிர பார்ட்டியில் இறங்கி இருந்தனர் ஃபார்முலா-1 வீரர்களும் மற்றும் அணி நிர்வாகிகளும். இதில், ஷாங்காய் நகரின் ஒரு நைட் கிளப்பில், ஃபோர்ஸ் இந்தியா அணியின் வீரர் ஆட்ரியான் சுட்டிலும், ரெனோ அணியின் தலைவர் எரிக் லக்ஸும் மது அருந்திக்கொண்டு இருந்தனர். போதை தலைக்கேற... திடீரென லக்ஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தார் சுட்டில். வார்த்தைகள் தடிக்க... தீடீரென பீர் பாட்டிலைக் கொண்டு லக்ஸைத் தாக்கினார் சுட்டில். அருகில் இருந்தவர்கள் சுட்டிலைத் தடுக்க, இதற்குள் லக்ஸின் கழுத்தில் இருந்து ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. 'சுட்டில் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ எனச் சொல்லி இருக்கிறார் லக்ஸ். 'ஃபார்முலா-1 போட்டியில் இருந்தும் சுட்டிலை நீக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை நிராகரித்திருக்கிறது ஃபார்முலா-1 நிர்வாகம். 'நைட் கிளப்பில் நடந்த சம்பவத்துக்கும், ஃபார்முலா-1 போட்டிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது தனிப்பட்ட விவகாரம் என்பதால், சுட்டில் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது’ என அறிவித்திருக்கிறது ஃபார்முலா-1 நிர்வாகம். இதற்கிடையே சீன போலீஸார், சுட்டில் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர்!