தொழில்நுட்பம்
Published:Updated:

கிரேட் எஸ்கேப் - கோவை to முதுமலை

யானையின் காதில் நுழைந்த எறும்பு!

>>கா.பாலமுருகன், எஸ்.ஷக்தி  >> வி.ராஜேஷ்  

 ##~##

சாலையில் மட்டுமல்ல... தன் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் பல மேடு-பள்ளங்களைப் பார்த்த கார் டாடா நானோ! நமது 'கிரேட் எஸ்கேப்’ ஆட்டத்தில் பங்கெடுக்காமல், பல மாதங்களாக 'எஸ்கேப்’ ஆகி வந்த நானோ, இந்த முறை நம்மிடம் கோவையில் சிக்கியது.

'சின்ன கார்... நீண்ட தூரம் பயணிக்க முடியுமா... மலையேறுமா... இன்ஜின் சூடேறிவிடுமா...’ என பல கேள்விக் கணைகளை காரில் ஏறும் முன் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்தக் கேள்விகளே நமக்குச் சந்தேகங்களாக மாறினாலும், காரில் அமர்ந்ததும் சின்ன கார் என்ற எண்ணம் முதலில் தகர்ந்தது. ஆம், வெளித் தோற்றத்தில் கோழி முட்டையைத் தட்டி வைத்தது போல மிகச் சிறிதாகத் தெரிந்தாலும், காருக்குள் அமர்ந்ததும் அந்த எண்ணம் பறந்து விடுவது உண்மை. ஒரு விசாலமான காரில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது.

கிரேட் எஸ்கேப் - கோவை to முதுமலை

கோவையிலும் 'சிஸர்’ வெயில் தாக்கிக்கொண்டு இருந்ததால், ஊட்டி வழியாக முதுமலையைக் குறி வைத்தோம். மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி, கல்லட்டி சாலை, மசினகுடி வழியாக முதுமலை சென்றுவிட்டு - திரும்பும்போது கூடலூர், ஊட்டி, கோத்தகிரி வழியாக கோவை திரும்புவது திட்டம்.

கோவையில் புத்தம் புதிய டாடா நானோவை ஸ்டார்ட் செய்தோம். கியரைத் தட்டி ஆக்ஸிலேட்டரை தொட்டதும் ரேஸ் கோர்ஸ் சாலையில் குதிரையாகப் பறக்கத் துவங்கியது நானோ. சாய்பாபா கோவில் சிக்னலின் வலதுபுறம் திரும்பி மேட்டுப் பாளையம் சாலையைத் தொட்டதும், தூசு துவம்சம் செய்ய ஆரம்பித்தது.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டாக இங்கே நடைபெறும் (!?) அகல சாலைப் பணிக்காக, ஏற்கெனவே இருந்த தார் சாலையைப் பிய்த்துப் பிடுங்கிப் போட்டிருக்கிறார்கள். விளைவு... 24 மணி நேரமும் இந்தச் சாலையில் ஸ்மோக் எஃபெக்ட்டில்தான் பயணிக்க வேண்டும். அதிலும் கவுண்டம் பாளையம் தாண்டி நரசிம்ம நாயக்கன் பாளையம் வருவதற்குள், 'வீட்ல சொல்லிட்டு வந்துட்டோமா?’ என நம்மை நாமே நடுங்கிக் கேட்டுக் கொள்ளுமளவுக்கு கடும் குழிகளும், ஒழுக்கமற்ற போக்குவரத்துமாக இருக்கின்றன. ஆனாலும் குழிகளிலும், சேற்றிலும் அநாயாசமாகப் பயணித்து வெளியேறியது நானோ!

கிரேட் எஸ்கேப் - கோவை to முதுமலை

நானோவின் ஒற்றை சைடு வியூ மிரர் மிகச் சிறிதாக இருப்பதுடன், காருக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. மேலும், வைப்ரேஷனில் தெளிவான இமேஜைக் காட்டாமல் இருப்பதும் கவனிக்க வேண்டிய குறை. காருக்குள் இன்ஜின் சத்தம் அவ்வளவாகக் கேட்கவில்லை என்றாலும், கண்ணாடியை இறக்கினால் இன்ஜின் உறுமல் காதுக்குள் இரைகிறது.

மேட்டுப்பாளையம் தொட்டு பவானியாற்றுப் பாலம் கடந்தோம். நீலகிரியில் சீசன் பீக்கில் இருப்பதால், போக்குவரத்து நெரிசலுக்காக 'ஒன் வே’ செய்திருந்தார்கள். அதன்படி குன்னூர் வழியாக ஏற வேண்டும், கோத்தகிரி வழியாக இறங்க வேண்டும். அதனால், குன்னூர் ரோட்டில் நானோவை இயக்கி பிளாக் தண்டரைத் தொட்டோம். அந்த வாட்டர் தீம் பார்க்கில் ஜாலியாட்டம் போட்டுவிட்டுத் திரும்பிய ஒரு குடும்பத்தைத் தாங்கி வந்த நானோ, நம் நானோவிடம் 'ஹாய்!’ சொல்லி விட்டுக் கடந்தது. ஒரு வாரமாக ஓடாத மலை ரயில் லெவல் கிராஸிங் அருகே ஒரு லெமன் டீ கொண்டு நம்மை ரீ-சார்ஜ் செய்துவிட்டு எகிறினோம்.

கிரேட் எஸ்கேப் - கோவை to முதுமலை

இதுவரையில் டாப் கியரில் காற்றாகப் பறந்து வந்த நானோவுக்கு அப்போதுதான் ரியல் டெஸ்ட் ஆரம்பமானது. ஆம், மலைப் பாதை துவங்குவது இங்கேதான். கியரை டவுன் செய்து ஆக்ஸிலரேட்டரில் காலை வைத்தால், தொடக்கத்தில் சற்றே அமைதி காத்து பின் ஆக்ரோஷமாக சீறி மலையேறியது நானோ. அசகாய வளைவுகளிலெல்லாம் மற்ற வாகனங்களோடு போட்டி போட்டுக் கொண்டு சர்சர்ரென மலையேறிய நானோவைப் பலரும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். பர்லியாறில் நிறுத்தியபோது, சட்டென்று அருகில் வந்து பிரேக் போட்ட ஃபார்ச்சூனர் டிரைவர், 'எங்களையே ஓவர் டேக் பண்ணிட்டீங்களே நண்பா!’ என்று சிரித்துவிட்டு நகர்ந்தார்.

குன்னூர் வழியாக அருவங்காடு கடந்தோம். அது வரையில் இருந்த வெயிலின் இறுக்கம் வெகுவாகத் தளர்ந்து குளிர் காற்று முகம் வருட ஆரம்பித்தது. அரைமணி நேரத்தில் ஊட்டி நகருக்குள் நுழைகையில் 'ஸ்டேன்ஸ்’ அருகில் வெள்ளைக் கார ஜோடி ஒன்று 'இட்ஸ் நானோவ்!’ என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்குப் பெருமையாகத் தலையாட்டிவிட்டு சரசரவென தலைகுந்தா சாலையில் பயணத்தைத் தொடர்ந்தோம்.

கல்லட்டி சாலையின் சில இடங்களில் ஏதோ தலைகீழாக இறங்குவது போல் செங்குத்தாக இறங்க வேண்டியிருக்கும்! சாலையின் இடதுபுற பாதியில் அமைக்கப்பட்டு இருக்கும் ஸ்பீடு பிரேக்கர்களைத் தொட்டுத் தழுவி சாமர்த்தியமாக இறங்கி கல்லட்டி செக்போஸ்ட் கடந்தது நானோ.

'இதென்னடா சோப்பு டப்பாவுக்கு டயர் முளைச்சா மாதிரி!?’ என்று தோட்டத் தொழிலாளர்கள் சிலர் காரைச் சூழ்ந்து கொண்டு பார்த்தார்கள்.

கல்லட்டி கொண்டை ஊசி வளைவுகளில் மிக கவனத்துடன் இறங்க ஆரம்பித்தது நானோ. 'இரண்டாவது கியரில் செல்லவும், முதல் கியரில் செல்லவும், மிக குறுகிய வளைவு’ என்று ஆங்காங்கே எச்சரிக்கை கொடுக்கும் அறிவிப்புப் பலகைகளின் வழிகாட்டுதலின்படியும் 36 கொண்டை ஊசி வளைவுகளையும் துல்லியமாகக் கடந்து தரைச் சாலையை தொட்டது நானோ.

கிரேட் எஸ்கேப் - கோவை to முதுமலை

மாலை ஆறு மணி. அந்தச் சாலையின் குறுக்கே யானை, காட்டெருமை போன்றவை கடந்து செல்லும் வாய்ப்பிருக்கிறது. சீரிய வேகத்தில் நானோவை இயக்கியபடி இருபுறமும் கண் வைத்துக் கொண்டோம். ஆனால், ஒரேயரு காட்டுப் பன்றியை தவிர வேறெந்த விலங்கும் கண்ணில் தென்படவில்லை. குன்னூர், ஊட்டியளவுக்கு முதுமலையில் அடர்த்தியான குளிரில்லை.

வனம் சுற்ற வருகிறேன் பேர்வழியென்று, விடுமுறையில் மசினகுடியில் வருகிறவர்களுக்கு இங்கே காட்டேஜ்களும், ஹோட்டல்களும் பெருத்திருக்கின்றன. விலங்குகளின் உரிமை அநியாயத்துக்கு இங்கே சிதைக்கப்படுவது, வனம் வதைக்கப்படுவது குறித்தெல்லாம் விலாவாரியாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார் நண்பர் அபித். இவர் ஒரு வனப் புகைப்படக்காரர். ''ஹோட்டல்ல பாதுகாப்பான இடத்துல காரை நிறுத்துங்க. வெளியே நிறுத்தினா சில நேரங்கள்ல யானை வந்து உருட்டி விளையாடிடும். போன வாரம் காருக்குள்ளே இருந்த பலாப் பழத்துக்காக கண்ணாடியை உடைச்சு காரைப் புரட்டிடுச்சு!'' என்று அபித் அட்வைஸ் கொடுத்திருந்ததால், அன்றிரவு நானோவைப் பாதுகாப்பாக பார்க் செய்திருந்தோம்!

மறுநாள் காலையில் குளு குளு காற்றுக்கிடையில் சுத்தமான தேயிலை டீயைப் பருகிவிட்டு நானோவை ஸ்டார்ட் செய்தோம். இரண்டாவது நாளும் தனது பணியை இனிதே துவக்கியது நானோ. இங்கே நம்மோடு இணைந்து கொண்டார் 'மோட்டார் விகடன்’ வாசகர் கண்ணன். இவர் வன விலங்குகள் ஆய்வாளரும்கூட! யானை தும்முவதற்கும், புலி வாலைக் கடிப்பதற்கும்கூட அறிவியல்பூர்வமான காரணங்களை விளக்கி அசத்துபவர். அடிக்கடி வனத்தில் வலம் வருபவர் என்பதால், பைக்கும் ஜீப்பும்தான் இவரது வாகனங்கள்.

நானோவை கணிசமான கிலோ மீட்டர் ஓட்டிப் பார்த்தவர், முகங்கொள்ளாத பெருமையுடன், ''கார் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வெளியே இருந்து பார்க்கும் நானோ வேறு. உள்ளே அமர்ந்து  ஓட்டும்போது கிடைக்கும் அனுபவம் வேறு'' என்று நானோவுக்குச் சான்றிதழ் கொடுத்தார் கண்ணன்.

அவரிடம் விடைபெற்றுக் கொண்டு முதுமலை யானைகள் முகாம் கடந்து கார்குடி, தொரப்பள்ளி வழியே பயணப்பட்டு, கூடலூர் வழியாக நடுவட்டம், பைகாரா கடந்து மீண்டும் ஊட்டியை அடைந்தோம். 'கல்லட்டியில கலக்கலா இறங்குச்சா?’ என்று உள்ளூர்வாசியருவர் ஆச்சரியக் குறி போட்டார். இந்தப் பயணம் முழுவதும் ஆங்காங்கே நானோவைக் கண்டு ஆச்சயப்பட்ட பலரில் சிலர், ''நானோ மலையேறாது... ரிஸ்க், கவனமா போங்க...'' என அட்வைஸ் மழை பொழிந்ததைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை!

கிரேட் எஸ்கேப் - கோவை to முதுமலை

கோத்தகிரி சாலையில் நானோ குதிரையைத் தட்டி விட்டோம். தொட்டபெட்டா ஜங்ஷன் வரை நெருக்கித் தள்ளிய போக்குவரத்தில் ஊர்ந்து ஏறியது. பிறகு, மின்னல் வேகத்தில் கோத்தகிரியைத் தொட்டோம். அரவேணு, குஞ்சப்பனை வழியாக மளமளவென மலைப் பாதையில் இறங்கி மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி சாலையைத் தொட்டது கார்.

மேட்டுப்பாளையம் கிழங்கு மண்டி பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், இரு பக்கமும் அரை கிலோ மீட்டருக்கு வாகனங்கள் வரிசையாக நின்றன. சர்வதேச சுற்றுலா தலமான ஊட்டிக்குச் செல்லும் ஒரே சாலையான இங்கு, பல வருடங்களாகப் படுத்தியெடுக்கும் இந்தப் பிரச்னைக்கு யார்தான் தீர்வு தரப் போகிறார்களோ தெரியவில்லை.

இருள் சூழ ஆரம்பித்த வேளையில் ஒருவழியாக ஊர்ந்துகொண்டே மேட்டுப் பாளையம் கடந்து, பின்னால் திரும்பிப் பார்த்தபோது... நீலகிரி மலை படுத்திருக்கும் யானையைப் போல கருத்திருக்க... நானோ யானையின் காதில் நுழைந்து வெளியேறிய எறும்பாக கோவையை நோக்கிச் சீறியது!