தொழில்நுட்பம்
Published:Updated:

24 மணி நேரம் 1851கி.மீ!

துரதிருஷ்டத்தை துரத்திய சூப்பர் நண்பர்கள்!

>>சார்லஸ்  >> சொ.பாலசுப்ரமணியன்  

 ##~##

ம்மூரில் 24 மணி நேர செய்தி சேனல்கள்தான் இப்போது டிஆர்பியில் ஹிட்! செய்தி சேனல்கள் போல, இடைவிடாமல் 24 மணி நேரம் தொடர்ந்து பைக்கில் பயணம் செய்து சாதனைப் படைப்பதில், சாதனை மன்னனாகி வருகிறார் சென்னையைச் சேர்ந்த செந்தில்குமார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 24 மணி நேரத்தில் 1,600 கி.மீ தூரம் கடந்து 'ஐயர்ன் பட்’ சாதனை படைத்த செந்தில், இப்போது 1,851 கி.மீ தூரம் கடந்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆனால், சென்றமுறை போல புத்தம் புது பைக்கில் செந்தில் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை என்பதுதான் ஹை-லைட்! விபத்துக்குள்ளாகி, ஓட்டை உடைசலாக இருந்த பழைய கரீஸ்மாவில், திராட்டிலை முறுக்கி முறுக்கி இந்த சூப்பர் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

24 மணி நேரம் 1851கி.மீ!

''மோட்டார் விகடனில் என்னுடைய ஐயர்ன் பட் சேடில்சோர் சாதனையைப் பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு பலர் பேசினார்கள். அப்படி பேசியவர்களில் ஷா குறிப்பிடத்தக்கவர். 'எம்.பி.பி.எஸ் படித்து முடித்துவிட்டு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் டாக்டராக வேலை பார்த்து வருகிறேன். பைக்

24 மணி நேரம் 1851கி.மீ!

என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். பைக் ட்யூனிங்தான் என்னுடைய ஹாபி’ என்று தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொள்வோம். ஒருநாள், அதாவது மார்ச் 3-ம் தேதி ஷாவிடம் இருந்து போன். 'நான் ட்யூன் செய்திருக்கும் பைக்கை வந்து டெஸ்ட் செய்து பாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தார். யமஹா திஞீ16 மற்றும் அப்பாச்சி பைக்குகளை ட்யூன் செய்து வைத்திருந்தார் ஷா. பைக்கை ஓட்டி முடித்தவுடன் ஷாவைக் கட்டிப்பிடித்துப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. மிகவும் பர்ஃபெக்ட்டாக ட்யூன் செய்திருந்தார் ஷா. எல்லோரும் சொல்வது போல டாக்டர் ஷா பைக் காதலர் மட்டும் அல்ல... பைக் வெறியர் என்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது.

இரண்டு பைக்குகளையும் ஓட்டி முடித்த பிறகு, ஒரு கரீஸ்மா பைக்கைக் காட்டி என்னிடம் சொன்னார். 'ஆக்ஸிடென்ட் ஆன பைக். அதிர்ஷ்டம் இல்லாத பைக்’ என்ற அவப் பெயர்களுடன் இந்த பைக் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்தது. இதை வாங்கி ரிப்பேர் செய்து பக்காவாக ட்யூன் செய்து வைத்திருக்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, ஷாவின் நண்பர் ஒருவர் அந்த பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்ய எடுத்துக் கொண்டு போனார். மிகவும் வேகமாக பைக்கை ஓட்டிக்கொண்டு போன அவர் எதிரே வந்த காரின் மீது மோதி பெரிய கல்லின் மேல் இடித்துக்கொண்டு கீழே விழுந்தார். நல்லவேளையாக அந்த நண்பருக்கு அடிபடவில்லை என்றாலும், பைக்கின் இன்ஜின் கிராங்கேஸ் காலி! சேஸியும் உடைந்து 'அதிர்ஷ்டம் இல்லாத பைக்’ என்று  மேலும் அழுத்தமாக அதன் மீது முத்திரை விழுந்தது.

ஆனால், கரீஸ்மாவை விடுவதற்கு எங்கள் இருவருக்குமே மனதில்லை. 'கரீஸ்மாவை நான் சிறப்பாக ட்யூன் செய்து தருகிறேன். இதில் ஏதாவது சாதனை செய்கிறீர்களா?’ என்று என்னிடம் கேட்டார் ஷா. பைக்கின் மேல் உள்ள காதலிலும், ஷாவின் திறமை மீதும் நம்பிக்கை வைத்து ஓகே சொன்னேன்.

24 மணி நேரத்தில் 2,000 கி.மீ. தூரம் சுற்றி வர வேண்டும். இப்படி ஒரு திட்டம் வகுத்தோம். 'செந்தில், ஒரிஜினில் கியர் பாக்ஸ் கிடைக்கவில்லை. என்ன செய்யலாம்?’ என்பது போல ஷாவிடமிருந்து அடிக்கடி போன் வரும். ஏப்ரல் இறுதியில் பைக் முழுவதுமாக ரெடியாகி விட்டது. நானும் எனது ரோட் ராக்கர்ஸ் கிளப் நண்பர்களும் பைக்கை டெஸ்ட் செய்யச் சென்றோம். நான் அதிகபட்சமாக 140 கி.மீ வேகம் வரை சென்றேன். பைக் சூப்பராக ட்யூன் செய்யப்பட்டு இருந்தது. நிச்சயம் இந்த சாதனை சாத்தியம் என்ற நம்பிக்கை வந்தது. ஆனால், விதி விடவில்லை. கடைசியாக பைக்கை டெஸ்ட் செய்த என் நண்பன் விவேக், பைக்கை எடுத்துக் கொண்டு போய் 15 நிமிடங்களுக்கு மேலாகியும் வரவில்லை. என்னவென்று தேடிச்சென்று பார்த்தால், பைக் ஆக்ஸிடென்ட். கிளட்ச் லீவர், கியர் ஷிஃப்ட், ஃபேரிங் எல்லாம் உடைந்து விட்டன.

24 மணி நேரம் 1851கி.மீ!

புது ஃபேரிங் தேடிப் பார்த்து ஷா அலுத்து விட்டார். 'பரவாயில்லை நான் சமாளித்துக் கொள்கிறேன். பேட் லக் பைக் என்ற 'மித்’தை முதலில் உடைக்க வேண்டும்’ என்று இருவரும் முடிவு செய்து, 2,000 கி.மீ பயணத்தை ஏப்ரல் 30-ம் தேதி நடத்துவது என நாள் குறித்தோம்.

2 லிட்டர் ஆரஞ்ச் ஜூஸ், பிளாக் சாக்லேட்ஸ், ஜூஸீ ஃப்ரூட் சுயிங்கம், வாட்டர் பாட்டில், ஸ்னிக்கர்ஸ் சாக்லேட் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பாரத் பெட்ரோலியம் பங்க்கில் அதிகாலை நான்கரை மணிக்கு ஆஜரானேன். வழியனுப்ப ஷா மற்றும் நான் பணிபுரியும் ஹெச்.சி.எல் கம்பெனி நண்பர்களும் வந்திருந்தனர்'' என உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்த செந்தில் தொடர்ந்து, ''சென்னை டு கன்னியாகுமரி - கன்னியாகுமரி டு சென்னை - சென்னை டு சேலம்- சேலம் டு சென்னை; இதுதான் ரூட் மேப். பெட்ரோல் பங்க்கில் 700 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு ஆதாரத்துக்கு பில் வாங்கிக்கொண்டு பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது மணி காலை 6.47. ட்ரிப் மீட்டர் ரீடிங் 0 கி.மீ!

வண்டலூர் அருகே வேகமாகப் பறந்து கொண்டிருந்தபோது, பின்னால் ஒரு இனோவா என்னைத் துரத்திக் கொண்டே வந்தது எரிச்சலூட்டியது. என்ன காரணம் என்றே புரியாமல பைக்கை ஓரங்கட்டினேன். இனோவாவுக்குள் இருந்தவர்கள் 'சார் பின்னால் நீங்கள் கட்டி வைத்திருக்கும் பேக் விழப் போகிறது’ என்று சொல்ல, 'ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்’ என்றேன் வழிந்துகொண்டே! வேறு வழியே இல்லாமல் பேக்கை முதுகில் சுமந்துகொண்டே போக வேண்டிய நிலை. பேட் லக் ஒர்க் அவுட் ஆகுதோ என மனதுக்குள் ஃபீலிங்க்ஸ் ஓட ஆரம்பித்தது.

மணி 8.49. உளுந்தூர்பேட்டை அருகே கன்னியாகுமரி 509 கி.மீ என்ற சைன் போர்டு தெரிந்தது. பைக்கில் இருந்து இறங்கி ஒரு படம் எடுத்துவிட்டு கரீஸ்மாவை விரட்டினேன். ஆனால், மனதுக்குள் கால்குலேஷன் ஓட ஆரம்பித்தது. போனமுறை இதே 24 மணி நேரத்தில் அதுவும் புது பைக்கில் 1665 கி.மீ செல்ல முடிந்தது. இப்போது எப்படி பழைய பைக்கில் அதே நேரத்தில் அதைவிட 335 கி.மீ கூடுதலாக ஓட்ட முடியுமா? அதுவும் ட்ரிப் மீட்டரைப் பார்க்கும்போது 171 கி.மீ மட்டுமே அதுவரை நான் ஓட்டி இருப்பது புரிந்தது. ஆனால், நம்பிக்கையை விடவில்லை. திருச்சியைக் கடந்தேன். பிறகு 1 மணி நேரத்தில் 118 கி.மீ. தூரம். கிட்டத்தட்ட மதுரைக்கு வந்துவிட்டேன். அடுத்து கன்னியாகுமரி போய்விடலாம் என்று பைக்கை விரட்டியபோது தவறான ரூட் பிடித்துவிட்டேன் என்பது புரிந்தது. 15 கி.மீ. தூரத்தைக் கடக்க 50 நிமிடங்களானது. சரியான டிராஃபிக் ஜாம். சரி, பெட்ரோல் போடலாம் என்று சென்றால் 30 ரூபாய், 40 ரூபாய், ஆயில் தனியாக போடவேண்டும் என்று பலவிதமான கண்டிஷன்க«ளோடு க்யூவில் நிறைய பேர் நின்று பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தனர்.

இறுதியாக, கன்னியாகுமரி செல்லும்போது மணி 3.13. அதுவரை மொத்தம் 689.9 கி.மீ-தான் பைக் ஓட்டியிருக்கிறேன் என்று ட்ரிப் மீட்டர் அலாரம் அடித்தது. இன்னும் 15 மணி நேரம் 24 நிமிடங்களில் 1310 கி.மீ பயணம் செய்ய வேண்டும். ஆதாரத்துக்கு பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் பில் வாங்க பெட்ரோல் நிரப்பினேன். பெட்ரோல் நிரப்பாமல் பங்க்கில் இருந்த பெரியவர் ஒருவர் 'சார். எங்கிருந்து வருகிறீர்கள்? சென்னையில் இருந்து பைக்கிலேயேவா? கன்னியாகுமரியில் ரூம் போடவா சார்? திரும்பி பைக்கிலேயே சென்னை செல்கிறீர்களா?’ என பேட்டி எடுக்க ஆரம்பித்து நேரத்தைக் குறைத்துக் கொண்டே இருந்தார். அவரிடம் இருந்து பில்லை வாங்கிக் கொண்டு தப்பிப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது. ஆனால், விடைபெறுவதற்கு முன்பு அந்த பெரியவர் 'தம்பி சென்னைக்குப் போவதற்கு எப்படியும் காலை எட்டு அல்லது ஒன்பது மணியாகி விடும். நிதானமா பாத்துப் போப்பா. லாரிக்காரங்க ரொம்ப ஸ்பீடா வருவாங்க’ என்று அவர் கொடுத்த அட்வைஸ், என் அப்பா எனக்கு அட்வைஸ் கொடுத்தது போலவே இருந்தது.

24 மணி நேரம் 1851கி.மீ!

ஏப்ரல் மாதம் அதுவும் நான் பயணம் செய்யும்போதா மீண்டும் மழை வர வேண்டும்? மதுரையை நெருங்கியபோது மழை பயங்கரமாகக் கொட்ட ஆரம்பித்தது. மதுரை வந்த போது மீண்டும் சோதனை. ஹெல்மெட்டை பெட்ரோல் டேங்க்கில் மீது வைத்துவிட்ட 'பிஸ்’ அடிக்க பைக்கைவிட்டு கீழே இறங்கினேன். கொஞ்ச நேரத்தில் 'படால்’ என ஹெல்மெட் கீழே விழுந்து வைஸர் உடையும் சத்தம் கேட்டது.

வைஸர் இல்லாமல் வேகமாகப் பயணிப்பது ஆபத்து. இருந்தாலும் வழியில்லை என்பது புரிந்தது. இன்னும் 12 மணி நேரம்தான் இருக்கிறது. சென்னை போய்விட்டு மீண்டும் அங்கிருந்து சேலம் போய் மீண்டும் சென்னை திரும்ப வேண்டும். அப்போதுதான் 2,000 கி.மீ தூரத்தை முடிக்க முடியும். ஆனால், 12 மணி நேரத்துக்குள் 1056 கி.மீ தூரம் போக வேண்டும். சென்னை வண்டலூர்தான் ஒரே டார்க்கெட் என வேகம் பிடித்தேன்.

வண்டலூர் வரும் போது மணி 11.31. ட்ரிப் மீட்டர் ரீடிங் 1357 கி.மீ. வண்டலூரில் இருந்து தாம்பரம்

24 மணி நேரம் 1851கி.மீ!

பைபாஸ் பிடித்து மதுரவாயல் வந்தேன். மதுரவாயலில் இருந்து சரியான டிராஃபிக் ஜாம். ஸ்ரீபெரும்புதூர் வருவதற்கு 1 மணி நேரம் பிடித்தது. தூக்கம் சொக்க ஆரம்பித்துவிட்டது. ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ் ஸ்டாண்ட் சிமெண்ட் பலகையில் கொஞ்ச நேரம் படுத்தேன். 2000 கி.மீ. வாய்ப்பே இல்லை என்பது புரிந்தது. 2000 கி.மீ தூரம் முடிக்க முடியவில்லை என்றாலும், லிம்கா சாதனையான 1814 கி.மீ தூரத்தை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. முகம் கழுவி விட்டு கிருஷ்ணகிரி போய்விட்டு மீண்டும் சென்னை அம்பத்தூர் திரும்ப முடிவெடுத்து பைக்கை விரட்டினேன். கிருஷ்ணகிரியை அடையும்போது மணி அதிகாலை 3.30.

இன்னும் மூன்று மணி நேரத்துக்குள் 230 கி.மீ தூரத்தைக் கடக்க வேண்டும். இதுதான் கடைசி லேப் என முடிவெடுத்து பைக்கின் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினேன். அன்று மே 1. நேரம் அதிகாலை 6.35. ட்ரிப் மீட்டர் தூரம் 1851 கி.மீ. அம்பத்தூரில் ஷா உள்பட நண்பர்கள் படை வரவேற்கக் காத்திருந்தது. 2,000 கி.மீ முடிக்க முடியவில்லை என்றாலும், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்ததில் நண்பர்கள் முகத்தில் சந்தோஷம். ஷாவின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

பழைய பைக்கில் அதுவும் துரதிருஷ்டமான பைக்காக இருந்த கரீஸ்மாவை, சூப்பர் பைக்காக ட்யூன் செய்து கொடுத்து, இந்தச் சாதனை படைக்க எனக்குக் காரணமாக இருந்த ஷாவுக்கு நன்றி. ஷாவை அறிமுகப்படுத்திய மோட்டார் விகடனுக்கு நன்றி'' என்று கை குலுக்குகிறார் செந்தில்குமார் 24/7.