தொழில்நுட்பம்
Published:Updated:

வீரப்பன் காட்டில் ராணுவ ஜீப்!

ரீ - டிசைன் ஜீப்!

>>வீ.கே.ரமேஷ்  >> க.தனசேகரன்  

 ##~##

துருப்பிடித்த பழைய ஜீப்புக்கு 6 லட்ச ரூபாய் வரை செலவழித்து, அதை ராணுவ ஜீப் போல அசத்தலாக மாடிஃபை செய்திருக்கிறார் கோபியைச் சேர்ந்த கார்த்திக். ஈரோடு மாவட்டத்தில் கார்த்திக் ஜீப்புக்கென்றே நிறைய ரசிகர்கள் இருப்பார்கள் போல! கார்த்திக்கின் ஜீப்பில் ஏறி சத்தியமங்கலம் காட்டுக்குள் ஒரு ரவுண்டு வரலாம் எனப் புறப்பட்டோம். வழி நெடுக எதிர்ப்பட்ட இளைஞர்கள் எல்லாம், ஜீப்பை பார்த்தவுடன் உற்சாகமாகி விசிலடித்து வழியனுப்பி வைத்தனர்.

'கேப்டன் பிரபாகரன்’ படத்தில் காட்டப்படும் இருட்டுப் பள்ளம் பாதையில் உள்ள தரைப் பாலத்தில் ஜீப்பை நிறுத்தி, ஜீப்பின் அழகை ரசித்துக் கொண்டு இருக்க... அருகிலேயே யானைகளின் பிளிரும் ஓசை கேட்கவும் மிரண்டு போனோம். ''இந்த இடத்தை விட்டு சீக்கிரம் எஸ்கேப் ஆயிடலாம். விலங்குகள் ஏதாவது வந்துறப் போகுது'' எனப் பரபரக்க... ''சார் பயப்படாதீங்க, யானையே வந்தாலும் சிங்கம் மாதிரி நிக்கிற நம்ம ஜீப்பைப் பார்த்து சிரிச்சிட்டுப் போயிடும்'' என்று டைமிங் ஜோக் அடித்தார் கார்த்திக்.

வீரப்பன் காட்டில் ராணுவ ஜீப்!
வீரப்பன் காட்டில் ராணுவ ஜீப்!

''எனக்கு சின்ன வயசுல இருந்தே கார்கள் மேல ஆர்வம். எங்க குடும்பம் விவசாயக் குடும்பம்.

வீரப்பன் காட்டில் ராணுவ ஜீப்!

அதனால, படிப்பு முடிச்சதும் நானும் விவசாயத்துல இறங்கிட்டேன். நான் நடிகர் சூர்யாவோட ரசிகன். அவர் 'காக்க காக்க’ படத்துல ஜீப்பில் உக்கார்ந்து வர்ற கம்பீரத்தைப் பார்த்ததும் ஜீப் மேல ஒரு காதலே வந்துருச்சு. அப்புறம் எங்க தோட்டத்திலதான் விஜயகாந்தோட 'சக்கரைத் தேவன்’ ஷூட்டிங் நடந்தது. ஷூட்டிங்குக்கு வரும்போது ஜீப்புலதான் விஜயகாந்த் வருவார். இதை எல்லாம் பார்த்து தான் ஜீப் மேல எனக்கு கிரேஸ் அதிகமாயிடுச்சு. நானே சூப்பரா ஒரு ஜீப் தயாரிச்சு, எங்க ஏரியாவுக்கு சூர்யா வந்தா, அதை ஓட்ட வைக்கணும்ங்கிறதுதான் என்னோட ஆசை! அதற்காக முயற்சி பண்ணிட்டு இருக்கும்போது, நம்ம மோட்டார் விகடனில் ஒரு வருஷத்துக்கு முன்னாடி, 'ஓமண ஜீப்’ தலைப்புல நவீனோட ஜீப்  சூப்பரா ரீ-டிசைன் செய்திருக்கிறதைப் பார்த்தேன். அதுக்குப் பிறகுதான் நான் ஒரு மஹிந்திரா வில்லீஸ் 93-ம் மாடல் ஜீப்பை 89 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினேன். கோபியில் இருக்கும் வி.என்.வி வொர்க் ஷாப்பில எல்லாத்தையும் பிரிச்சுப் போட்டோம். அஞ்சு மாசம் சரியாக வீட்டுக்குக்கூட போகாம, ஷெட்டுலயே இருந்து ஒவ்வொரு பாகத்தையும் என் ஆசைக்குத் தகுந்த மாதிரி மாத்துனோம். மெக்கானிக் நண்பர்கள் கலீலும், தேவராஜனும் சிரமம் பார்க்காம, முகம் சுழிக்காம எனக்கு உதவி செஞ்சாங்க. ஸ்பேர் பார்ட்ஸுங்க எல்லாம் டில்லிக்குப் போய் வாங்கி வந்தேன்.

ஜீப்போட முன் பகுதியில் ஆட்டோமேட்டிக் எலெக்ட்ரானிக் ரிமோட் விஞ்ச், மங்கி லேம்ப், ஆர்ட் லேம்ப், பெரிய பனி விளக்குகள், எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் கவுல், கன் ஸ்டாண்ட், ஹை பவர் ஒயர்லெஸ் ஆன்டெனா, பவர் ஸ்டீயரிங், டிஸ்க் பிரேக், மேப் லைட், மிலிட்டரி பம்பர், ஆக்ஸிஜன் பிளக், 15 இன்ச் இம்ப்போர்டட் டயர்... இப்படி எல்லாத்தையும் மாத்திட்டு கணக்குப் பார்த்தபோது மொத்தம் 6 லட்ச ரூபாய் செலவு ஆயிருந்துச்சு. அதனாலென்ன... இப்போ, இந்த ஏரியாவில என்னோட ஜீப்தான் ஹீரோ!'' என்கிறார் கார்த்திக் பெருமிதத்தோடு!