தொழில்நுட்பம்
Published:Updated:

ஆனந்த் ராக்ஸ்!

ஜேகே டயர் ஜுனியர் சாம்பியன்ஷிப் ரேஸ்

>>மோ.அருண் ரூப பிரசாந்த்

 ##~##

ரேஸ்ன்னு வந்த பிறகு பைக் என்ன, கார் என்ன! ஜேகே டயர் ஜூனியர் சாம்பியன்ஷிப் ஃபார்முலா மாருதி, டிவிஎஸ் 'ரைடு அ பைக்’ என மாறி மாறி நடந்த ரேஸில், பரபரவென டென்ஷன் பற்றி எரிந்தது இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்...! 

முதலில் ஃபார்முலா மாருதி. மொத்தம் நடந்த 12 ரேஸும், வாலேஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கும் (WSRF), குமார்ஸ் ரேஸிங் கிளப்புக்கும் நடந்த நேருக்கு நேர் யுத்தம் என்றே சொல்லலாம். 10 ரேஸ்களில் முதலிடம் பெற்று 106 பாயின்ட்களோடு வெற்றிக் கோப்பையைப் பறித்தது மோஹித் ஆர்யன். வாலேஸ் ஸ்போர்ட்ஸைச் சேர்ந்த இவர் இன்ஜினீயரிங் மாணவர்.

ஆனந்த் ராக்ஸ்!

எந்த பொசிஷனில் ரேஸ் ஸ்டார்ட் செய்தாலும், யாராலும் நெருங்க முடியாத தூரத்தில் ரேஸை ஃபினிஷ் செய்வது மோஹித்தின் ஸ்பெஷாலிட்டி. வியர்வை வழிய வெற்றிக் களிப்போடு வந்தார் மோஹித். ''அடுத்து நடக்கப் போற நேஷனல் ரேஸிங் சாம்பியன்ஷிப்புக்குத் தயாரா கணும். இப்பக் கிடைச்ச ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தால, நேஷனல் சாம்பியன்ஷிப் ரேஸ்ல முதல் ஆறு ரவுண்டுக்கு என்ட்ரி ஃப்ரீ. இதே WSRF டீமுக்காக ஃபார்முலா ஸிவிஃப்ட் ஓட்டப் போறேன்'' என அடுத்தடுத்து நம்பிக்கை வார்த்தைகள் சொல்லும் மோஹித், மைக்கேல் ஷூ மேக்கரின் வெறித்தனமான ரசிகராம்!

ஆனந்த் ராக்ஸ்!

அடுத்தது 'ரைடு எ பைக்’ ரேஸ், டிவிஎஸ் அப்பாச்சி 160 ஆர்டிஆர் பைக்கில் மொத்தம் 14 பேர் கலந்துகொண்ட நான்கு ரவுண்டு ரேஸ். முதல் மூன்று ரவுண்டில் வெற்றி வாகை சூடியது ஆனந்த். சென்னை கிறித்துவக் கல்லூரியின் பிசிஏ மாணவர். முதல் மூன்று சுற்றிலும் வெற்றி பெற்றதால், இயல்பாகவே ஒட்டுமொத்தக் கூட்டத்தின் கண்களும் நான்காவது சுற்றில் ஆனந்தின் மேல்தான் இருந்தது. சொல்லி வைத்ததுபோல ஆனந்தும் லீட் எடுத்து முதலிடத்தில் வந்து கொண்டிருக்க... இடையிலேயே ஒரு சின்னத் தடுமாற்றம்... ஆனந்த் ஃபுல் திராட்டிலில் வளைவில் திரும்ப... ரியர் டயர் லேசாக ஸ்கிட் ஆனது. சுதாரித்துக்கொண்டு எழுவதற்குள் ஆனந்தின் உள்ளங்கையில் சின்ன சிராய்ப்பு. இருந்தும் ஐந்து லேப்பையும் முடிக்கும் போது, ஆனந்துக்கு பத்தாவது இடமே கிடைத்தது. வெற்றியின் கனம் ஏறாமல் இயல்பாக இருந்தது போலவே, தோல்வியின் தடுமாற்றமும் கொஞ்சம்கூட இல்லாமல், மேடையில் சிரித்த முகத்தோடு ஏறி கோப்பையை வாங்கினார் ஆனந்த்!