தொழில்நுட்பம்
Published:Updated:

நம்ம ஊரு மெக்கானிக்

இசை ஓசை கேட்குதய்யா!

>>ஆண்டனிராஜ்  >> எல்.ராஜேந்திரன்   

 ##~##

ரு காலத்தில் புல்லட் என்பது ஆதிக்க சக்திகளின் அடையாளமாக இருந்தது. அதனால், அப்போது இந்தப் பகுதியில் புல்லட் பைக்கை யாராவது சர்வீஸுக்குக் கொண்டு வந்தாலே... எதற்கு வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் 'எனக்கு இந்த வண்டியைச் சரி பண்ணத் தெரியாதுண்ணே...’ என்றபடி மெக்கானிக்குகள் ஒதுங்கி விடுவார்கள்.

ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளாக புல்லட் பிரியர்களின் பாசத்துக்கு உரிய மெக்கானிக்காக இருந்து வருகிறார் ராஜா முகம்மது.

நெல்லை டவுனில் மாநகராட்சி அலுவலகத்துக்கு எதிரில் இருக்கும் இவரின் மெக்கானிக் ஷெட், எப்போதும் பரபரப்பாக இருக்கிறது. ஷெட்டின் வெளியே எலும்புக் கூடுகளாகக் கிடக்கும் புல்லட்டுகள், இவரின் கைவண்ணத்தில் ஓரிரு நாட்களிலேயே புத்தம் புதியதாக மிளிர்ந்து 'தடதட’வென அதிர்கின்றன. பிஸியாக வேலை செய்து கொண்டிருந்த ராஜா முகம்மதுவிடம் பேசினோம்.

நம்ம ஊரு மெக்கானிக்

''எனக்கு சின்ன வயசிலேயே பைக் மீது ஆர்வம் ஏற்படக் காரணமா இருந்தது, எங்க அப்பா முகம்மது உசேன்தான். அவர், என்ஃபீல்டு டீலரான நடேசன் கம்பெனியில் வேலை செய்தார். அவரிடமும் ஒரு பைக் இருந்தது.

அது மேலே வேறொருத்தர் நிழல்கூட விழாமல் பார்த்துக் கொள்வார். அப்போது அந்த பைக்கைப் பார்க்கையில், எனக்கு யானை போலத் தோன்றும்.

1975-ல் என் அப்பா நெல்லையில் தனியாக புல்லட் மெக்கானிக் ஷெட் ஆரம்பித்தார். அங்கே நிறைய பைக்குகள் வருவதை பள்ளிக்கூடம் முடிந்து வந்த பிறகு ஆவலாக பார்த்துக் கொண்டிருப்பேன். ஐந்தாம் வகுப்பு படித்து முடித்த பிறகு, எனக்கு பைக்குகள் மீது இருக்கும் ஆர்வத்தைப் பார்த்த எனது அப்பா, என் 12-வது வயதிலேயே எனக்கு மெக்கானிக் பயிற்சி அளித்தார். அந்தச் சமயத்தில் மேட்ச்லெஸ், குருஸேடர், பி.எஸ்.ஏ போன்ற பைக்குகளும் வரும். அவற்றை சர்வீஸ் செய்யும் போது கூடவே இருந்து அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளில்

நம்ம ஊரு மெக்கானிக்

தனியாகவே புல்லட்டுகளைப் பிரித்து சர்வீஸ் செய்ய ஆரம்பித்து விட்டேன்.

என்னுடைய மெக்கானிக் ஷெட்டுக்கு இப்போது நெல்லை மாவட்டத்தில் இருந்து மட்டு மல்லாமல், கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி போன்ற அண்டை மாவட்டங்களில் இருந்தும் நிறைய வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்.

தனியாக எந்த வாகனங்களின் இடையூறும் இல்லாத சாலையில், புல்லட்டில் பயணிக்கும் போது இதன் இன்ஜின் ஓசை இசையைப் போல தாள லயத்துடன் இருக்கும். அதைக் கேட்டு அனுபவித்தவர்கள், எத்தனை லட்சம் ரூபாய் கிடைத்தாலும் புல்லட்டை விற்க மாட்டார்கள்'' என லயித்துப் பேசினார் ராஜா முகமது.

''வாடிக்கையாளர்களின் விருப்பத்தை எப்படி நிறைவேற்றுகிறீர்கள்?'' என்று கேட்டால், ''எனக்குத் திருப்தி ஏற்படாமல் எந்த பைக்கையும் டெலிவரி செய்யவே மாட்டேன். அதோடு, பைக்கைச் சரி செய்து கொடுத்த பிறகு, ஏற்கெனவே ஏற்பட்ட பிரச்னை மறுபடியும் வரக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். அதனால்தான் என் அப்பா காலத்தில் இருந்து இந்த மெக்கானிக் ஷெட்டுக்கு வருகிறவர்கள் இப்போதும் வருகிறார்கள். அதில் பலர் குடும்ப நண்பர்களாகவே ஆகி விட்டார்கள்.

சிலர் பழைய பைக்கை வாங்கி வந்து, எல்லா பொருட்களையும் மாற்றி புத்தம் புதிதாக மாற்றித் தரச் சொல்வார்கள். இந்த பைக்குகளுக்கான சில பொருட்கள் இப்போது மார்க்கெட்லேயே கிடைக்காது. அதை எல்லாம் லேத்தில் கடைந்து எடுத்துப் பொருத்த வேண்டும். கேரளாவில் புல்லட் மெக்கானிக்குகள் அதிக கட்டணம் வசூலிப்பார்களாம். அதனால், கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் இங்கே வந்து பைக்கை சர்வீஸ் செய்து செல்கிறார்கள். அதோடு புல்லட்டை மாடர்னாக்கி ஓட்ட ஆசைப்படுபவர்களும் இருக்கிறார்கள். செல்ஃப் ஸ்டார்ட்டர், மாடர்ன் ஹேண்டில் பார், இப்போது வரக் கூடிய பைக்குகளின் ஸ்பீடோ மீட்டர், அலாய் வீல் என அவர்கள் விரும்புற மாதிரி பைக்கை மாற்றிக் கொடுப்பேன்.

இந்த தொழிலில் நேர்மையும் நாணயமும் இருந்தால் வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்துவது ரொம்ப சுலபம்'' நம்பிக்கை பொங்கப் பேசுகிறார் ராஜா முகம்மது!