தொழில்நுட்பம்
Published:Updated:

முன்னேறும் லாரன்சோ!

திணறும் ராஸி!

>>சார்லஸ் 

லாரன்சோ, கேஸி ஸ்டோனர் ஆகியோரின் அதிரடி வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகிறார் வாலன்டினோ ராஸி. யமஹா, ஹோண்டா இரண்டு பைக்குகளின் வேகமும் இந்த ஆண்டு உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்க... ராஸியின் டுகாட்டியோ, வேகத்தை இழந்து வருகிறது! இதற்கிடையே கடந்த மாதம் போர்ச்சுகல் மற்றும் ஃபிரான்ஸில் நடைபெற்ற இரண்டு ரேஸ் போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது ஹோண்டா.

முன்னேறும் லாரன்சோ!

மோட்டோ ஜீபி - போர்ச்சுகல்

மோட்டோ ஜீபி பைக் ரேஸ் பந்தயத்தின் மூன்றாவது சுற்று, கடந்த மே 1-ம் தேதி போர்ச்சுகலில் உள்ள எஸ்டோரில் மைதானத்தில் நடைபெற்றது. ரேஸுக்கு முந்தைய நாள் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டிகளின் முடிவில், யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ முதலிடத்தில் இருந்தும், சான் கார்லோ ஹோண்டா கிரஸினி அணியின் மார்க்கோ சைமென்செல்லி இரண்டாவது இடத்தில் இருந்தும், ஹோண்டா அணியின் டேனி பெட்ரோஸா மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர். முன்னாள் சாம்பியன் வாலன்டினோ ராஸி ஒன்பதாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

முன்னேறும் லாரன்சோ!

ரேஸ் துவங்கிய சில விநாடிகளிலேயே இரண்டாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய மார்க்கோ சைமன்செல்லிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த சைமன்செல்லியின் ஹோண்டா, ரேஸ் டிராக்கை விட்டு வெளியே போய் விழ... சைமன்செல்லி ரேஸில் இருந்து வெளியேறினார். இதற்கிடையே ஒன்பதாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய ராஸி நான்காவது இடத்துக்கு முன்னேறினார். லாரன்சோ முதலிடத்தில் பறந்து கொண்டு இருக்க, அவரைத் துரத்திக் கொண்டிருந்தார் டேனி பெட்ரோஸா. மொத்தம் 28 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியின் 24-வது லேப் வரை முதலிடத்தில் இருந்த லாரன்சோவைப் பின்னால் தள்ளி, முதலிடத்துக்கு முன்னேறினார் டேனி பெட்ரோஸா. இறுதி லேப் முடியும் வரை முதலிடத்துக்கு முன்னேற முயன்ற லாரன்சோவின் முயற்சிகள் பலிக்கவில்லை. டேனி பெட்ரோஸா மூன்று விநாடிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஹோண்டா அணியின் மற்றொரு வீரர் கேஸி ஸ்டோனர் மூன்றாவது இடமும், வாலன்டினோ ராஸி ஐந்தாவது இடத்தையும் பிடித்தனர்.

முன்னேறும் லாரன்சோ!

ரேஸுக்கு சில வாரங்களுக்கு முன்பு டேனி பெட்ரோஸாவின் தோள் பட்டையில் வைக்கப்பட்டு இருந்த இரும்புத் தகடு அகற்றப்பட்டது. இதனால் பயங்கர வலியுடன் ரேஸ் ஓட்டி வெற்றி பெற்ற டேனி பெட்ரோஸாவை முன்னணி வீரர்கள் பலரும் பாராட்டினர்.

முன்னேறும் லாரன்சோ!

மோட்டோ ஜீபி - பிரான்ஸ்

மோட்டோ ஜீபி பந்தயத்தின் நான்காவது சுற்று, பிரான்ஸின் லீ மேன்ஸ் ரேஸ் டிராக்கில் மே 15-ம் தேதி நடைபெற்றது. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற கேஸி ஸ்டோனர் முதலிடத்தில் இருந்து ரேஸைத் துவக்க தகுதி பெற, ஹோண்டா கிரஸினி அணியின் மார்க்கோ சைமன்செல்லி இரண்டாவது இடத்தில் இருந்தும், ஹோண்டா அணியின் டோவிஸியோஸோ மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். இந்த ரேஸ் போட்டியிலும் வாலன்டினோ ராஸி ஒன்பதாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். முதல் லேப்பிலேயே கேஸி ஸ்டோனரை முந்திச் சென்று முதலிடத்துக்கு முன்னேறினார் டேனி பெட்ரோஸா. ஒன்பதாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய ராஸி, முதல் லேப்பின் முடிவிலேயே ஐந்தாவது இடத்துக்கு முன்னேறி விட்டார். இதற்கிடையே இரண்டாவது லேப்பிலேயே மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார் ஸ்டோனர். ஸ்டோனர் முதலிடத்திலும், பெட்ரோஸா இரண்டாவது இடத்திலும் சென்று கொண்டு இருக்க... 18-வது லேப்பின் போது விபத்தில் சிக்கினார் டேனி பெட்ரோஸா. இதனால், பெட்ரோஸா ரேஸை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கேஸி ஸ்டோனர் இன்னும் வேகம் பிடித்து மற்றவர்களைவிட அதிக விநாடிகள் முன்னிலை பெற்றார். ஆனால், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்துக்குக் கடும் போட்டி நிலவியது. ராஸி, சைமென்செல்லி, டோவிஸியோஸோ என மாறி மாறி இரண்டாவது இடத்துக்கு முன்னேறினர். இறுதியில் கேஸி ஸ்டோனர் வெற்றி பெற... டோவிஸியோஸோ இரண்டாவது இடத்தையும், ராஸி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

இது வரை நான்கு சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில் சாம்பியன்ஷிப் பட்டியலில் யமஹாவின் ஜார்ஜ் லாரன்சோ 78 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹோண்டாவின் கேஸி ஸ்டோனர் 66 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். டேனி பெட்ரோஸா 61 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். டோவிஸி«யாஸோ 50 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், வாலன்டினோ ராஸி 47 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

மோட்டோ ஜீபியின் அடுத்த சுற்று ஜூன் 5-ம் தேதி ஸ்பெயினில் நடைபெற உள்ளது!