Published:Updated:

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

மோட்டார் கிளினிக் - கேள்வி பதில்

Published:Updated:
 ##~##

சரவணன், தஞ்சாவூர். 

நான் டொயோட்டா கரோலா கார் பயன்படுத்தி வருகிறேன். அடுத்ததாக, 20-25 லட்ச ரூபாய் விலையில் புதிதாக எஸ்யூவி கார் வாங்கத் திட்டமிட்டு இருக்கிறேன். என்ன கார் வாங்கலாம்?

நீங்கள் டொயோட்டா காரைப் பயன்படுத்துவதால், டொயோட்டா எஸ்யூவி காரையே வாங்கலாம். ஃபார்ச்சூனர் நீங்கள் குறிப்பிடும் பட்ஜெட்டில் கிடைக்கிறது. மிரட்டலான, எல்லா வகையான சவால்களையும் சமாளிக்கும் சிறந்த கார் ஃபார்ச்சூனர். சர்வீஸ் செலவுகளும் அதிகம் வைக்காத கார். ஆனால், காத்திருந்து வாங்க வேண்டிய கார்களில் முதலிடத்தில் இருக்கிறது ஃபார்ச்சூனர்!

காயத்ரி தேவி, ராஜபாளையம்.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

டிவிஎஸ் வீகோ, ஹோண்டா ஆக்டிவா - இரண்டில் எந்த ஸ்கூட்டரை வாங்கலாம்?

ஹோண்டா ஆக்டிவா, நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருக்கும் வெற்றி பெற்ற மாடல். பர்ஃபாமென்ஸ், மைலேஜ் ஆகியவற்றில் இது நிறைவான ஸ்கூட்டராகவே உள்ளது. ஆனால், சீட்டைத் திறக்காமலேயே பெட்ரோல் நிரப்பும் வசதி, சீட்டுக்குக் கீழே அதிகப்படியான பொருட்கள் வைக்க இடம், முன் பக்கம் பொருட்களை வைத்துப் பூட்டிக் கொள்ளும் வசதி, மொபைல் சார்ஜர் எனப் பல்வேறு வசதிகளைக் கொண்ட ஸ்கூட்டராக இருக்கிறது டிவிஎஸ் வீகோ. பர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜில் இரண்டு ஸ்கூட்டர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் டிவிஎஸ் வீகோ, ஹோண்டா ஆக்டிவாவைவிட கிட்டத்தட்ட 4 ஆயிரம் ரூபாய் விலை அதிகம். அதே சமயம், நீங்கள் ஹோண்டா ஆக்டிவா வாங்க வேண்டுமென்றால், கிட்டத்தட்ட 4 மாதங்கள் காத்திருக்க வேண்டும். வீகோவா, ஹோண்டாவா என்பதை  நீங்கள்தான் இப்போது முடிவு செய்ய வேண்டும்!

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

முத்துக்குமரன்- வாய்ஸ் ஸ்நாப்.

பஜாஜ் டிஸ்கவர் 125 அல்லது டிவிஎஸ் ஸ்டார் சிட்டி இந்த இரண்டில் எந்த பைக்கை வாங்கலாம்? டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் அவசியம்...

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

நீங்கள் குறிப்பிட்டுள்ள இரண்டு பைக்குகளிலுமே டிஜிட்டல் மீட்டர் கிடையாது. பர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்கைவிட பஜாஜ் டிஸ்கவர் 125 பைக்கே சிறந்தது. டிஜிட்டல் மீட்டர்கள் வேண்டுமென்றால், டிவிஎஸ் ஃப்ளேம் அல்லது பஜாஜ் பல்ஸர் 135 சிசி பைக்கை வாங்கலாம்!

தியாகராஜன், குன்னூர்.

விண்ட் ஷீல்டுகளில் விழும் கீறல்களை அகற்றுவது எப்படி?

சிறிய கீறல்களை பாலீஷ்களைக் கொண்டு அகற்ற அல்லது குறைக்க முடியும். மேலும், செல்போனில் இருப்பதுபோல ஸ்க்ராட்ச் கார்டுகளை காரின் விண்ட் ஷீல்டில் ஒட்டலாம். இதன் மூலம் வைப்பர் பிளேடுகளால் ஏற்படும் கீறல்களில் இருந்து தப்பிக்கலாம். அதேபோல், கண்ணாடி மீது கோட்டிங் செய்யும் முறையும் இருக்கிறது. கிளாஸ் பாலீஷ் செய்யும் நிறுவனங்களை அணுகினால், இது பற்றிய மேலும் விவரங்களை அறிய முடியும்!

ஜீவன் ஜெயராம், சென்னை-93.

மோட்டார் கிளினிக்  - கேள்வி பதில்

கேடிஎம் 200 பைக் விற்பனைக்கு வர இருப்பதாக மோட்டார் விகடனில் படித்தேன். அது எப்போது விற்பனைக்கு வரும்?

கேடிஎம் 200 சிசி பைக்கை, பஜாஜ் நிறுவனம் இந்தியா முழுக்க டெஸ்ட் செய்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்!

லோகேஷ், திருச்சி.

ஹேட்ச்பேக் கார் வாங்க வேண்டும். மாருதி ஸ்விஃப்ட் வாங்குவதா அல்லது ஃபோர்டு ஃபிகோ வாங்குவதா என குழப்பமாக இருக்கிறது. இரண்டில் எது சிறந்த கார்?

புதிய ஸ்விஃப்ட் இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்குள் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய ஸ்விஃப்ட் வெளிவந்த பிறகே அதன் சாதக பாதகங்களை அலச முடியும். நீங்கள் உடனடியாக கார் வாங்க வேண்டுமென்றால், ஸ்விஃப்ட்டைவிட ஃபிகோவை வாங்குவதே பெஸ்ட்! ஸ்டைல், மைலேஜ் மற்றும் இட வசதியில் சிறந்த காராக ஸ்விஃப்ட் விளங்கினாலும், இதைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போனவர்களுக்கு ஃபிகோவே சிறந்த சாய்ஸ்!

பெருமாள், பல்லாவரம்.

செவர்லே பீட் காரை வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். ஆனால், நண்பர்கள் செவர்லே காரை வாங்குவதற்குப் பதில் மாருதி அல்லது ஹூண்டாய் கார்களை வாங்கலாம் என அறிவுறுத்துகிறார்கள். ஆனால், எனக்கு செவர்லே பீட் பிடித்திருக்கிறது. உங்களுடைய கருத்து என்ன?

புதிய டிசைன், போதுமான பர்ஃபாமென்ஸைத் தரக் கூடிய இன்ஜின், சிறந்த ஹை-வே ஸ்டெபிளிட்டி, போதுமான மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் என சிறந்த காருக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது செவர்லே பீட். இது தவிர, 3 ஆண்டுகளுக்கு சர்வீஸ் செலவுகள் முழுக்க முழுக்க இலவசம் என்பதால், முதல் 3 ஆண்டுகளுக்கு பெட்ரோலைத் தவிர, நீங்கள் காருக்கென்று செலவு செய்ய வேண்டிய தேவையே இல்லை. பீட் பிடித்திருந்தால் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை!

சுந்தர், வாலாஜா.

150-160 சிசி பைக் வாங்க வேண்டும் என்பது என் கனவு. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160, ஹீரோ ஹோண்டா ஹங்க் என இரண்டு பைக்குகளை இறுதி செய்து வைத்திருக்கிறேன். இரண்டில் எதை வாங்கலாம்?

ஹீரோ ஹோண்டா ஹங்க்கைவிட பர்ஃபாமென்ஸ், சிறப்பம்சங்கள், ஸ்டைல் என அனைத்திலும் சிறந்த பைக் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160. மைலேஜைப் பொறுத்தவரை இரண்டு பைக்குகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஹீரோ ஹோண்டா ஹங்க்கைவிட 4 ஆயிரம் ரூபாய் அப்பாச்சி ஆர்டிஆர் பைக் விலை குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது!